மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஜெயலலிதா போய்வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான், சசிகலாவின் நட்பு ஒட்ட ஆரம்பித்திருந்தது. ஜெயலலிதாவின் பி.ஏ-வாக இருந்த பிரேமாவின் இடத்தில் சசிகலா அமர்ந்தார். பிரேமாவுக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில், தன் மகனுக்கு கல்லூரியில் ஜெயலலிதா இடம் வாங்கித் தராதது போன்ற விஷயங்கள், பிரேமாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே விரிசல் ஏற்படக் காரணமாக இருந்தாலும், இதற்குப் பின்னால் சத்தமில்லாமல் சசிகலாவின் காய் நகர்த்தல்களும் இருந்தன.

அ.தி.மு.க-வில் இணைந்து, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனபோதும்  அதைவிட பெரிய பதவியை ஜெயலலிதா எதிர்பார்த்திருந்தார். கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முறையில் மாவட்டம்தோறும் விசிட் அடித்தபடியே இருந்தார். காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த முசிறி புத்தன், ‘மன்ற முரசு’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். 1984-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அந்தப் பத்திரிகையின் வெளியீட்டு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது. காரணம், அன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். ‘மன்ற முரசு’ பத்திரிகையை முதல்வர் எம்.ஜி.ஆர் வெளியிட, நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். ‘‘சினிமாவில் எனக்கு வாரிசு வேண்டும் என தேடினேன். என் வாரிசு பாக்யராஜ்தான்’’ என எம்.ஜி.ஆர் மேடையிலே சொன்னது பலருக்கு ஆச்சர்யம். சிலருக்கு அதிர்ச்சி. அடுத்த மாதமே பாக்யராஜ் - பூர்ணிமா திருமணத்தை எம்.ஜி.ஆர் நடத்தி வைத்தார். பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் தருவதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. ‘‘என் வாரிசு ஜெயலலிதா’’ என எம்.ஜி.ஆர் சொல்ல வேண்டும் என நினைத்தார் ஜெயலலிதா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

ஜெயலலிதாவுக்கு இருந்த மனவருத்தம் எம்.ஜி.ஆருக்கும் தெரியாமல் இல்லை. ஜெயலலிதா, அ.தி.மு.க-வுக்கு வந்து 3 ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், ஜெயலலிதாவை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் மனப்புண்ணுக்கு மருந்து தடவும் நிகழ்வு இது. ‘மன்ற முரசு’ நிகழ்ச்சி நடந்த மூன்றே மாதங்களில் அதாவது, 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி நாடாளுமன்றத்துக்குள் முதன்முறையாக நுழைந்தார் ஜெயலலிதா. ராஜ்ய சபா எம்.பி-யாக பதவியேற்ற செய்தி தமிழக பத்திரிகைகளில் பெரிய அளவில் ஃபோக்கஸ் ஆகவில்லை என்கிற வருத்தம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதனால், நாடாளுமன்றத்தின் தனது கன்னிப்பேச்சு மீடியாவில் பெரிதாக வர வேண்டும் என விரும்பினார். கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்தபோது டூர் நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்து கொடுத்த நடராஜன் - சசிகலா தம்பதிதான், அவருடைய நினைவுக்கு வந்தனர். மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய
எம்.நடராஜனுக்கு பி.ஆர். (Public Relations) வேலை நன்றாகவே தெரியும். நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் முதல் கன்னிப்பேச்சு 1984-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அரங்கேறியது. ‘‘கல்பாக்கம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே தர வேண்டும்’’ என முதல் பேச்சில் குறிப்பிட்டார். அவரின் பேச்சை எல்லா பத்திரிகைகளிலும் வர வைத்தார் நடராஜன். அடுத்த சில நாட்களில் ‘‘இந்தித் திணிப்பு கூடாது’’ என சொல்லி நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசினார் ஜெயலலிதா. அதற்கும் நல்ல கவரேஜ் கிடைத்தது.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 5 - நாடாளுமன்ற நாடகம்!

இவை எல்லாவற்றையும்விட ஒன்று நடந்தது.  சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் தன் மீது மீடியா வெளிச்சம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகும் சினிமாவில் கிடைத்த அளவுக்கு மீடியாவின் பார்வை தன் மேல் குவியவில்லை என ஜெயலலிதா நினைத்தார். அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் என்றுகூட நினைத்தார். அப்படிப்பட்ட சூழலில்தான், நடராஜனின் தயவு அவருக்குத் தேவைப்பட்டது. அண்ணா, ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த காலத்தில் அவருக்கு நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் 185-வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதே இருக்கைதான் ஜெயலலிதாவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இது ஏதேச்சையாக நடந்த விஷயம். ஆனால், ஊதிப் பெரிதாக்கினார்கள். ‘அண்ணா இருக்கையில் ஜெயலலிதா’ என செய்திகளை வரவழைத்தார் நடராஜன். டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்தது வரையில் நடராஜனின் கரம் விரிவடைந்தது.

நடராஜனின் மீடியா உதவி, வீடியோ கவரேஜ், கேசட் விடு தூது, பெங்களூரு மருத்துமனையில் ஜெயலலிதாவுக்கு நலம் விசாரிப்பு எல்லாம் சேர்ந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தார் சசிகலா. பிரேமாவின் இடத்தையும் பிடித்தார்.

-அடுத்த இதழில்...

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன், ர.ராம்குமார்