
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
? ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை சசிகலாவால் நிரப்ப முடியும் என்று அ.தி.மு.க-வினர் உண்மையில் நம்புகிறார்களா?
! இல்லை. அவர்களுக்கு சசிகலாவை விட்டால் வேறு வழி இல்லை. ஜெயலலிதாவுடன் இணைந்து வளர்ந்த பிம்பங்களில் ஒன்று சசிகலா. அதற்கு மாற்றாக யோசிக்க யாரும் இல்லை. யோசிப்பாரும் யாரும் இல்லை. இன்று அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. பதவி வைத்திருப்பவர்கள், பதவிக்கு ஆசைப்படுபவர்கள், பொறுப்புகளில் இருப்பவர்கள், பொறுப்புக்கு வர ஆசைப்படுபவர்கள் சசிகலாவை எதிர்த்தால் தனது நாற்காலி காலியாகி விடும் என்பதை அறிந்தே தலையாட்டுகிறார்கள்.
ஆலை இல்லாத ஊருக்கு..?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி-54.
? திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..?
! இருவருமே எதிரிகள் இருந்தால்தான் வெளியில் தெரிவார்கள். இருவருக்கும் எதிரிகள் இல்லாமல் வளர்ச்சி இல்லை.
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
? `சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக மட்டுமல்ல, தமிழக முதல்வராகவும் ஆக வேண்டும்’ என்று அ.தி.மு.க தொண்டர்கள் நினைப்பது போலத் தெரிகிறதே?
! அப்படிப்பட்ட தொண்டர்களை நேரில் சந்தித்து இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள் மிக்கேல்ராஜ். உங்களுக்கு உண்மை தெரியும்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.
? ‘நாட்டில் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பதற்கான அதிகாரபூர்வமான எந்தப் புள்ளிவிவரமும் இல்லை’ என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொல்லி இருக்கிறாரே?
! இது 70 ஆண்டுகளாகச் சேர்ந்த அழுக்கு. அதனால் புள்ளிவிவரம் திரட்டுதல் சிரமம்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.
? ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வர்தானோ?
! ஓ... நிரந்தர இடைக்கால முதல்வர்.
நெல்லோடை வசந்தா காந்த், கருப்பம்புலம்.
? தீபாவை பார்த்தால் அசப்பில் ஜெயலலிதா போல உள்ளாரே?
! அப்படி பலபேர் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் ஜெயலலிதா ஆகிவிட முடியுமா?

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.
? கனிமொழி பெரிய இடத்துக்கு வந்தபிறகும் ராசாத்தி அம்மாள் எதை நினைத்துக் கலங்குகிறார்?
! கருணாநிதி காலத்துக்குப் பிறகு கனிமொழி புறக்கணிக்கப்படுவாரோ என்ற கவலைதான் இதற்குக் காரணம்.
சம்பத்குமாரி, பொன்மலை.
? நல்லவர்களைவிட தீயவர்கள் இடையே ஒற்றுமை அதிகம் இருக்கும் என்பதை சமீபகால அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றனவே?
! நல்லவர்கள் பிரிந்தே இருப்பார்கள். தீயவர்கள் சேர்ந்தே இருப்பார்கள். நல்லவர்கள் சந்திக்கும் போது அறிமுகம் தேவை. தீயவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை.
அ.குணசேகரன், புவனகிரி.
? மன்மோகன் சிங் - ஓ.பன்னீர்செல்வம் ஒப்பிடுக?
! மன்மோகன் சிங் பொருளாதார மேதை. பன்னீர் ‘பொருள்’ மேதை. மன்மோகனை சோனியா மனப்பூர்வமாக பிரதமர் ஆக்கினார். தனக்குப் பதவி வேண்டாம் என்ற உறுதியான முடிவோடு பிரதமர் ஆக்கினார். ஆனால், பன்னீர் முதல்வர் ஆனது, ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டபோதுதான். மன்மோகன் இடத்துக்கு சோனியா வர நினைக்கவில்லை. பன்னீர் இடத்தை சசிகலா எப்போதும் பறிக்கலாம்.
அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.
? தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை யாருக்கு செக் வைக்க?
! சேகர் ரெட்டியைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு யாருக்கு இதுவரை ராம மோகன ராவ் பணம் சம்பாதித்துக் கொடுத்து வந்தாரோ அவர்களுக்கு செக் வைப்பதற்குத்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. தன்னால் பலன் பெற்றவர்கள் தன்னைக் காப்பாற்றாமல் கழற்றிவிடுகிறார்களே என்ற கோபத்தில்தான் ராம மோகன ராவ் கூச்சல் போடுகிறார். மத்திய மாநில அரசுகளுக்கு சவால் விடுகிறார். ‘ஜெயலலிதா இருந்தால் இது நடக்காது’ என்று சொல்கிறார். இதன்மூலம் என்ன சொல்கிறார்... ஜெயலலிதாதான் தன்னை இயக்கியவர் என்றா?

ப.பாலா (எ) பாலசுப்பிரமணி, பாகாநத்தம்.
? ஜெயலலிதாவைப் புதைத்த இடத்தில் ஈரம்கூட காயவில்லை. அதற்குள் ஏன் இத்தனை அவசரம்?
! ஜெயலலிதாவைப் புதைத்தாகிவிட்டது அல்லவா? அப்புறம் ஈரம் காய்ந்தால் என்ன? காயாவிட்டால் என்ன?
எம்.சி.சுப்பையா, திருத்தங்கல்.
? ஊழல் செய்து சிறை சென்றவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கலாமா?
! யாருக்கு நீங்கள் பரிந்துரை செய்யப் போகிறீர்கள்?!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
? ‘மக்கள் நலக் கூட்டணி நிரந்தரமான அமைப்பு அல்ல’ என்று திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே?
! அது தெரிந்த விஷயம்தான். வைகோ போட்ட மோதிரம் பத்திரமாக இருக்கிறதா திருமா?!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!