Published:Updated:

அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!

அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!

அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!

டல்நிலை சரியில்லாமல் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருக்க... அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழுவுக்கு அன்பழகன் தலைமை ஏற்று, கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலினுக்கு முடிசூட்டியிருக்கிறார். 49 ஆண்டுகாலமாக கருணாநிதி கரத்திலிருந்த ‘தி.மு.க தலைவர்’ என்ற அதிகாரம், ‘செயல் தலைவர்’ என்ற பெயர் மாற்றத்தோடு ஸ்டாலின் கரத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!

கருணாநிதி இல்லாத பொதுக்குழு!

தி.மு.க வரலாற்றில் முதன்முறையாக கருணாநிதி வராமலேயே ‘தி.மு.க பொதுக்குழு’ கூடியிருக்கிறது. எத்தனையோ இக்கட்டான தருணங்களிலும் தி.மு.க-வின் பொதுக்குழுவைக் கூட்டி, தனது கூர்முனைப் பேச்சால் கட்சியினருக்கு உத்வேகம் கொடுத்து அனுப்பிய வரலாறு கருணாநிதிக்கு உண்டு. ஆனால், தலைமைப் பதவி அதிகாரத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றித் தரும் முக்கியமான தருணத்தில், பொதுக்குழு மேடையில் கருணாநிதி இல்லாமல் போனதில், கட்சியினருக்கு மட்டும் அல்ல... மேடையில் இருந்தவர்களுக்கும் வருத்தம்தான்!

 சட்டத்திருத்தம்!

‘செயல் தலைவர்’ என்ற பதவியை உருவாக்க, தி.மு.க-வின் சட்டதிட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டியிருந்தது. இதை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கொண்டுவந்தார். ‘‘கழக சட்ட திட்டத்தின் விதி 18-ல் ஏற்கெனவே 3 பிரிவுகள் உள்ளன. 4-வது பிரிவாக சட்ட திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன்படி, தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குப் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ, கழக பொதுக்குழு செயல் தலைவராக ஒருவரை நியமிக்கலாம். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார். இந்தச் சட்டத் திருத்தத்துக்குத் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.

அதன்பிறகு, தி.மு.க சட்டவிதித் திருத்த அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகனிடம் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்டு அன்பழகன், ‘‘கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக சட்ட திட்ட விதியின்படி செயல் தலைவராக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிகிறேன். அவர் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்’’ என்றார். உடனே, ஸ்டாலின் எழுந்து அன்பழகன் காலைத் தொட்டு வணங்கி ஆசிபெற்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!

டாக்டர்கள் போட்ட  தடை!

தான் செயல் தலைவராகப் பதவியேற்கும் நிகழ்வில் தலைவர் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்பட்டார். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, டிசம்பரிலிருந்து ஜனவரி மாதத்துக்கு பொதுக்குழு மாற்றம் செய்யப்பட்டதே, கருணாநிதியை எப்படியும் மேடைக்கு அழைத்துவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், கருணாநிதியைப் பொதுவெளியில் கூட்டிச்செல்வது அவருக்குத் தொற்று பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று டாக்டர்கள் கண்டிப்பாக மறுக்கவே, வேறு வழியின்றி அவர் இல்லாமல் பொதுக்குழு நடத்த முடிவானது. இந்த வருத்தத்தை மேடையில் தெரிவித்தார் ஸ்டாலின். “தலைவர் உடல்நிலை இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், இந்தப் பொறுப்பை ஏற்கின்றபோது என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை’’ என்றார்.

தழுதழுத்த அன்பழகன்!


செயல் தலைவர் திட்டம், பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் போன்றவற்றோடு, துரைமுருகன், பொன்முடி, வேலு உள்ளிட்ட தி.மு.க-வின் முன்னணியினர் அன்பழகனை அவரது வீட்டில் கடந்த வாரம் சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம், “தலைவர் இல்லாமல் நான் பொதுக்குழுவுக்கு வருவதே வேதனை அளிக்கிறது. நீங்களே அனைத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் பாடுபட்டு வளர்த்த கட்சி. அதை இனி நீங்கள்தான் முறையாக செயல்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்” என்று தழுதழுத்துள்ளார். ‘‘தளபதி ஸ்டாலின் ஏற்கெனவே வகித்து வந்த பதவிகளோடு செயல் தலைவர் என்னும் பதவியினையும் அவருக்கு வழங்கிட வேண்டும் என்று தீர்மானத்தை மிகுந்த மகிழ்வோடு முன்மொழிந்துள்ளேன். அதை ஏற்று நீங்கள் எழுப்பும் ஒட்டுமொத்தமான கரவொலி, கலைஞர் வீற்றிருக்கிற அவருடைய இல்லம் வரையில் கேட்க வேண்டும்’’ என்று பொதுக்குழுவில் ஸ்டாலினை வாழ்த்தினார் அன்பழகன்.

திருத்தம் சொல்லாத கருணாநிதி!

தி.மு.க-வின் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இதுவரை கருணாநிதியின் திருத்தம் இன்றி நிறைவேறியது இல்லை. முதன்முறையாக அவரது பேனா திருத்தம் ஏதுமில்லாமல், இந்தப் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க-வின் தீர்மானக்குழு உறுப்பினர்கள் இந்தத் தீர்மானங்களைத் தயார்செய்து, ஸ்டாலின் ஒப்புதலைப் பெற்றதும், கருணாநிதியிடம்  இரண்டு தினங்களுக்கு முன் கொண்டுசென்று வாசித்துக் காட்டியுள்ளார்கள்.

 உருகிய துரைமுருகன்!


தலைவராக ஸ்டாலினுக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தவர் முதன்மைச் செயலாளர் துரைமுருகன். கருணாநிதி முதல் அன்பழகன் வரை அனைவரிடமும் பேசி இதற்கு ஒப்புதல் வாங்கியவரும் துரைமுருகன்தான். அந்தக் களிப்பை மேடையில் உணர்ச்சிபூர்வமாகவே  வெளியிட்டார். “கலைஞர் இடத்தில் இருக்கின்ற அதிகாரங்களைப் பறிப்பதல்ல, இந்தத் தீர்மானத்தின் நோக்கம். அவருக்கு ஓய்வுகொடுத்து கொஞ்ச காலத்துக்கு நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற் காகத்தான்” என்று சொல்லி கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

‘‘1956-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமை ஏற்கப் போகிறார். அவரை வரவேற்றுப் பேசிய அண்ணா, ‘தம்பி,  வா... தலைமை தாங்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம்’ என்று சொன்னார். நான் அண்ணா இடத்திலே அந்த வார்த்தையை இரவல் வாங்கிச் சொல்கிறேன்... ‘தம்பி வா... தலைமை தாங்க வா... உன் ஆணைக்கு நாங்கள் கட்டுப்பட்டு நிற்கிறோம்; உன் பின்னால். இது சத்தியம். இது சத்தியம். இது சத்தியம்’’ என்று துரைமுருகன் உணர்ச்சிப்பெருக்கில் முழங்கியபோது மேடையில் இருந்த ஸ்டாலினும் கூட்டத்தில் இருந்த பலரும் கலங்கிக் கண்ணீர் சிந்தினார்கள்.

அண்ணாவாக மாறிய துரை! - அங்கும் நடந்தது ‘ஆட்சி’ மாற்றம்!

ஒரே நபர், எத்தனை பதவிகள்!

பொதுக்குழுவில் செயல் தலைவராக ஸ்டாலின் வருவார் என்பதை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கைவசம் இருக்கும் இளைஞர் அணிச் செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார்களோ என்ற எதிர்பார்ப்பு பல பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இருந்தது. தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் இப்போதைக்கு வேறு நியமனங்கள் வேண்டாம் என ஸ்டாலின் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.

பிறந்த நாள் ஏமாற்றம்!

தி.மு.க-வின் பொதுக்குழு நடைபெற்ற தினத்துக்கு மறுதினம் கனிமொழிக்குப் பிறந்த தினம். தனக்குப் பிறந்தநாள் பரிசாக ஓர்அறிவிப்பு பொதுக்குழுவில் இருக்கும் என்ற உற்சாகத்தோடு கனிமொழி வந்திருந்தார். அவருக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டதே தவிர, பதவி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த ஏமாற்றம் அவர் முகத்திலே தெரிந்தது. கூட்டம் முடிந்த பிறகு யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளாமல் விர்ரெனக் கிளம்பிவிட்டார் கனிமொழி. ஆனாலும், சிறிது நேரத்தில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அறிவாலயம் டு கோபாலபுரம்!

பொதுக்குழு முடிந்த பிறகு ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் கோபாலபுரம் சென்றனர். அங்கு நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த கருணாநிதிக்கு, செயல்தலைவராக அந்த வீட்டுக்குள் சென்ற ஸ்டாலின் சால்வை போட்டார். ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் ஆர்ப்பாட்டமாகப் பட்டாசு வெடிக்க கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் ‘இங்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்’ என்று ஸ்டாலின் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

இனி இது ஸ்டாலின் தி.மு.க.!

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: பா.காளிமுத்து