Published:Updated:

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

“நான் உங்களுக்கு இணக்கமானவராகத் தான் நடந்துகொள்வேன்” என்பதைத் தனது கட்சியினருக்கு உணர்த்த சசிகலா திறமையாகக் காய் நகர்த்துகிறார் என வியந்துபோகிறார்கள் அ.தி.மு.க-வின் நிர்வாகிகள். சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவரின் அணுகுமுறையும் அதைத்தான் காட்டியது.

‘ஜெயலலிதாவின் இடத்தைத் தன்னால் நிரப்ப முடியாது. ஆனால், தனக்கென ஒரு தனித்துவம் இருப்பதை அ.தி.மு.க-வினருக்கு உணர்த்திவிட வேண்டும்’ என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது முதல், அதற்கான திட்டங்களை சசிகலா கச்சிதமாகச் செய்து வருகிறார். அதன் முதல்படியாக ‘மாவட்ட நிர்வாகிகளோடு சந்திப்பு’ என அறிவித்து, கட்சியினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கிறார். இதில் முதல் நாளான கடந்த 4-ம் தேதி காலை சென்னை மாவட்ட நிர்வாகிகளை சசிகலா சந்தித்தார்.

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

அவசரமாக வந்த ஓ.பி.எஸ்!

மாவட்ட நிர்வாகிகள் மட்டத்திலான கூட்டம் என்றாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தனர். 4-ம் தேதி காலை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 9-30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 10-30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாக நிகழ்வுகளை முடித்துவிட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓ.பி.எஸ்,  தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டு, நடந்தே அலுவலகத்துக்குள் வந்தார். பெண்கள் கூட்டம் குறைவாக இருந்ததை அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர் சுட்டிக்காட்டியதும், சசிகலா வருவதற்குள் அவசரமாக எங்கிருந்தோ ஒரு வேனில் பெண்கள் கூட்டத்தைக் கூட்டிவந்தனர்.

புரட்சித் தலைவி சின்னம்மா!


சசிகலாவின் கார் 10-45 மணிக்கு தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, சுற்றி நின்றவர்கள் ‘‘புரட்சித் தலைவி வாழ்க’’ என கோஷமிட்டனர். அவர் காரை விட்டு இறங்கியபோது, திடீரென அந்தக் கோஷம் நின்றுபோய், ‘‘சின்னம்மா வாழ்க’’ என்று கோஷம் எழுந்தது. அதைப் புன்முறுவலோடு ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் சசிகலா. எப்போதும் ஜெயலலிதா முன்பு உடலை வளைத்து குனிந்து கும்பிடு போடுவது போலவே, சசிகலா முன்பும் அதே பாணியில் ஓ.பி.எஸ் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் வணக்கம் வைத்தனர். அப்போது டைமிங்காக, “புரட்சித் தலைவி சின்னம்மா” என்று வெளியில் நின்றவர்கள் கோஷமிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

ஜெயலலிதா ஸ்டைலில் சசி!

பொதுச்செயலாளராகத் தேர்வாகி பதவியேற்க முதன்முறையாகக் கட்சி அலுவலகம் வந்தபோது கட்சியினரைப் பார்த்து சசிகலா வணக்கம் மட்டுமே வைத்தார். அன்றைக்கு அவர் நடவடிக்கைகளில் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்தபோது, அந்தத் தயக்கம் சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. கம்பீரமாக மாடிக்குச் சென்றவர், ஜெயலலிதா பால்கனியில் நின்று  தொண்டர்களைப் பார்த்துக் கையசைப்பது போல கையசைத்தார். ஜெயலலிதாவைப் போலவே, இரண்டு விரலை உயர்த்திக் காட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தினார். 

ஒன் வுமன் ஆர்மி!

கூட்ட அரங்குக்குள் சசிகலா நுழைந்ததும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வணக்கம் சொல்ல, சசிகலாவும் பதில் வணக்கம் சொன்னார். முன்பகுதியில் சசிகலா மட்டும் அமர நாற்காலி் போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். அதன் பிறகு குறிப்புகள் இல்லாமலும் சிறிது நேரம் பேசி அசத்தினார். அமைச்சர்கள் அனைவரும் ஓரமாக அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். 

கறையான்களை நுழையவிடக் கூடாது!

ஜெயலலிதா பற்றிய புகழுரையோடு பேச்சைத் தொடங்கிய சசிகலா, கட்சியின் நிர்வாகிகள் இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். “அம்மா அவர்கள் கட்சியை இரும்புக் கோட்டையாக வைத்திருந்தார். இந்தக் கட்சியில் கறையான்கள் நுழைய, நாம் இடம் தந்துவிடக் கூடாது... இரும்புக்கோட்டையாகவே இனியும் வைத்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மக்களின் மனதில் நின்று எப்படிக் கழகத்தை வழிநடத்தினார்களோ, அதைவிட அதிகமாகக் கழகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும். நமக்குள் எவ்விதப் பிரச்னையும் ஏற்படக் கூடாது. ஜெயலலிதா இருந்திருந்தால் கட்சியை எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கட்டுக்குள் வைத்திருப்பாரோ அதேபோல் நாமும் அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்” என்றார். ‘கறையான்கள் என்று அவர் யாரைக் குறிப்பிட்டார்’ என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது.

‘‘சசிகலாவின் தலைமையை கொஞ்சம் நெருடலாக நினைப்பவர்களைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். அவர்களை மெள்ள மெள்ளக் களையெடுக்க நினைக்கிறார்’’ என்று சொல்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

சசிகலா சொல்லும் ‘கறையான்’ யார்?

இளைஞர்களுக்கு அழைப்பு!

‘‘கட்சியில் தொண்டர்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர் சக்தியை கட்சிக்குள் அதிகம் கொண்டுவர வேண்டும். கல்லூரி களுக்குச் சென்று இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேருங்கள். பாசறை நிர்வாகிகள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்ய வேண்டும். அவர்கள்தான் கட்சியின் எதிர்காலம். மாவட்டம்தோறும் கட்சிக் கூட்டங்களை அதிக அளவில் நடத்துங்கள். இடைவெளி இல்லாமல், சட்டமன்றத் தொகுதிவாரியாகவும், மாவட்ட வாரியாகவும் கூட்டம் நடத்துங்கள்” என்று இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்து அசத்தினார் சசிகலா.

“தலைவர்களின் பிறந்தநாள், கட்சி தொடங்கப்பட்ட நாள் போன்ற முக்கிய தினங்களின்போது மாவட்டவாரியாக மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துங்கள். வெற்றி பெறுபவர்களுக்கு நானே பரிசு வழங்கு கிறேன். நான் இல்லாவிட்டாலும், தலைமைக் கழக நிர்வாகிகள் பரிசு வழங்குவார்கள்” என்றார். சுமார் அரை மணி நேரம் சசிகலா பேசினார். 

`போட்டோ எடுத்துக்கொள்ளலாம்!’

பேச்சை முடித்துவிட்டு சசிகலா கிளம்பத் தயாரானபோது, தென் சென்னை மாவட்டச் செயலாளர் கலைராஜன், சசிகலாவிடம் “உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள அனைவரும் ஆசைப்படுகிறார்கள்” என்று சொன்னதும், புன்முறுவல் பொங்க மாவட்ட நிர்வாகிகள் அனைவருடனும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். எல்லாம் 45 நிமிடங்களில் முடிந்துவிட்டது இந்த நிகழ்ச்சி. மாலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் இதே போன்ற சந்திப்பை நடத்திமுடித்தார்.

இந்த மக்கள் தரிசனம் முடிந்ததும் ‘முதல்வர்’ ஆகிறார் சசிகலா!

- அ.சையது அபுதாஹிர்,  ஜெ.அன்பரசன்
படங்கள்: ஆ.முத்துகுமார்