Published:Updated:

அப்பா - மகன் அரசியல் குஸ்தி!

அப்பா - மகன் அரசியல் குஸ்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பா - மகன் அரசியல் குஸ்தி!

அப்பா - மகன் அரசியல் குஸ்தி!

குடும்ப அரசியல் கோலோச்சும் களத்தில் மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கும் தந்தை, அதன்பின்னும் மகன்மீது அதிகாரம் செலுத்த முயன்றால் அவருக்கு என்ன கதி நேரும் என்பதற்கு முலாயம் சிங் யாதவ் பொருத்தமான உதாரணம். அப்பாவின் நிழலில் தலையெடுக்க நினைக்கும் உறவுகளின் மத்தியில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக மகன் எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு அகிலேஷ் யாதவ் உதாரணம். உத்தரப்பிரதேச ஆளும்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் நடைபெறும் இந்த தந்தை - மகன் அதிகார யுத்தம், நம் ஊருக்கும் பொருத்திப் பார்க்க முடிவதாலேயே, இங்கும் சுவாரஸ்யமாகக் கவனிக்கப்படுகிறது.

யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு குஸ்தி பயில்வானாக அறியப்பட்டு, அதன்பின் அரசியலுக்கு வந்த முலாயம், தன் சொந்த மகனிடமே அரசியல் குஸ்தியில் தோற்று அவமானகரமாக வீழ்ந்திருக்கிறார். 77 வயது முலாயம் சிங் யாதவுக்கும் 43 வயது அகிலேஷ் யாதவுக்கும் கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்கிறது யுத்தம்.

16 ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஆர்வமில்லாமல் அரசியலுக்கு வந்த அகிலேஷ், 2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் பிரசாரத்துக்குத் தலைமை ஏற்றார். இளம் தலைவர் என்ற இமேஜும், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் என கொடுத்த வாக்குறுதிகளும் இளம் வாக்காளர்களை வசீகரிக்கவே, சுலபமாக ஆட்சிக்கு வந்தது சமாஜ்வாடி கட்சி.

அப்பா - மகன் அரசியல் குஸ்தி!

ஏற்கெனவே மூன்று முறை உ.பி முதல்வராக இருந்தவர் முலாயம். இந்த முறையும் அவர்தான் முதல்வர் ஆகியிருக்க வேண்டியது. ஆனால், அப்பா மனதில் பிரதமர் கனவை விதைத்தார் அகிலேஷ். காங்கிரஸ் வலுவிழந்திருக்க, மோடி இல்லாத பி.ஜே.பி தடுமாறிக்கொண்டிருக்க, 80 எம்.பி-க்களைத் தேர்வுசெய்ய முடிகிற உ.பி மாநிலத்தில் கணிசமான வெற்றி கிடைத்தாலே, மூன்றாவது அணி என்ற மாயமானை வசப்படுத்தி பிரதமர் நாற்காலியைப் பிடித்துவிட முடியும் என நினைத்தார் முலாயம். அதனால், மகனை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

ஆனாலும், அகிலேஷுக்கு எல்லையில்லா அதிகாரம் கிடைத்துவிடவில்லை. யார் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை அப்பாவே தீர்மானித்தார். அதிகாரிகளைத் தூக்கிப் பந்தாடும் சூப்பர் முதல்வராகவும் திகழ்ந்தார்.
சாதி அரசியலும், குண்டர் ராஜ்ஜியமுமே சமாஜ்வாடியின் அடையாளங்கள். ஜெயித்தால் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடுவார்கள்; தோற்றால் எதிரியின் மார்பில் துப்பாக்கியால் சுட்டுப் பழி தீர்ப்பார்கள். இதை மாற்றி கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரு ‘க்ளீன் இமேஜ்’ கொண்டுவர அகிலேஷ் முயன்றார். ஆனால், அப்பாவின் நண்பர்களும் குடும்பத்தினரும் அதை அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் முலாயம் குடும்பத்தில் 6 பேர்
எம்.பி-க்களாக இருந்தனர். ஒரு முதல்வர், ஒரு கேபினட் அமைச்சர், இன்னும் வாரியங்களில் தலைவர் பதவிகள், உள்ளாட்சிப் பதவிகள் என சகல இடங்களிலும் குடும்பத்தினரே வியாபித்து இருந்தார்கள். இதை அகிலேஷ் எதிர்ப்பதை முலாயம் ரசிக்கவில்லை. தன் சொந்தக் கட்சியின் ஆட்சியை - சொந்த மகனின் அரசைக் கடுமையாக விமர்சனம் செய்யும் எதிர்க் கட்சித் தலைவராக மாறினார்.

முலாயமின் மறைந்த முதல் மனைவி மாலதி தேவியின் மகன்தான் அகிலேஷ். இரண்டாவது மனைவி சத்னா குப்தாவின் மகன் பிரதீக் யாதவுக்கும் அரசியல் ஆசை வந்தது. அரசியலில் மிக ஆபத்தானது சகோதர யுத்தம். அதில் தந்தையின் பாசம் எந்த நேரத்தில் எந்தப் பிள்ளையின் பக்கம் திரும்பும் என்றே சொல்ல முடியாது. அதனால், இதற்கு அகிலேஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதன்பின் முலாயமின் தம்பி சிவபால் யாதவும், முலாயமின் மனைவி சத்னா குப்தாவும் இணைந்து அகிலேஷுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தனர். முலாயமின் இன்னொரு தம்பி ராம்கோபால் யாதவ் அகிலேஷ் பக்கம் இருந்தார்; இருக்கிறார். சிவபாலுக்கு நெருக்கமான தலைமைச்செயலாளரை மாற்றி, 6 மாதங்களுக்கு முன்பு அரசியல் சதுரங்கத்தில் தன் முதல் காயை நகர்த்தினார் அகிலேஷ். சிவபால் போய் தன் அண்ணனிடம் சொல்லி அழ, உ.பி மாநில கட்சித் தலைவர் பதவியிலிருந்து அகிலேஷை நீக்கிவிட்டு, சிவபாலை தலைவராக நியமித்தார் முலாயம். அப்போது சிவபால், மாநில பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். தன் முதல்வர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பதவியிலிருந்து அவரை நீக்கினார் அகிலேஷ்.

தம்பியையும் மகனையும் கூப்பிட்டு முலாயம் சமாதானம் செய்தாலும், மீண்டும் சிவபாலுக்கு அமைச்சர் பதவியைத் தரவில்லை அகிலேஷ். சிவபால் தனது கட்சிப் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி அகிலேஷ் ஆதரவாளர்கள் பலரைக் கட்சியிலிருந்து நீக்கியபடி இருந்தார்.

எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட அகிலேஷை சீறவைத்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்தது. உ.பி சட்டமன்றத் தேர்தலுக்கான 325 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை சிவபால் வெளியிட்டார். அகிலேஷுக்குத் தெரியாமல் வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில், அவர் ஆதரவாளர்கள் சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தனர். பொங்கி எழுந்த அகிலேஷ், அப்பா வீட்டுக்குப் போய் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. ‘‘என் மீது கோபம் இருந்தால் என்னை தண்டியுங்கள். என் ஆதரவாளர்களைப் பழிவாங்காதீர்கள்’’ என சொல்லிவிட்டு வந்தார். ஆனால், அன்று மாலையே, மிச்சம் இருக்கும் 78 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை சிவபால் வெளியிட, தான் செயல்பட வேண்டிய தருணம் இதுதான் என்பதை உணர்ந்தார் அகிலேஷ்.

235 பேர் அடங்கிய போட்டி வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் அதிரடியாக வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தங்கள் சொந்தக்கட்சி முதல்வரை கட்சியிலிருந்து நீக்கிய விநோதம் நிகழ்ந்தது. ‘‘எந்த அப்பாவும் தன் மகனுடைய எதிர்காலத்தை சீரழிக்க மாட்டார். ஆனால், வேறு வழியில்லை. எனக்கு மகனைவிட கட்சி முக்கியம்’’ என்றார் முலாயம். ‘‘நான் ஏன் போக வேண்டும். கட்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன்’’ எனச் சீறிய அகிலேஷ், கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். முலாயமும் போட்டிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். வெறும்  14 எம்.எல்.ஏ-க்களும், 60 வேட்பாளர்களும் மட்டுமே முலாயம் கூட்டத்துக்கு வந்தனர். ஆனால், கட்சியின் 229 எம்.எல்.ஏ-க்களில் 202 பேர் அகிலேஷ் தலைமையை ஏற்பதாகக் கையெழுத்து போட்டுக் கொடுத்தனர்.

இந்தச் சூழலில் முலாயமின் கண்ணியத்தைக் காப்பாற்ற சீனியர் தலைவர் ஆசம் கான் முன்வந்தார். அகிலேஷை சமாதானப்படுத்தி அப்பாவிடம் கூட்டிப் போனார். அப்பாவின் காலில் விழுந்து கலங்கிய அகிலேஷ், ‘‘என் கட்சியிலிருந்து என்னை நீக்கலாம். ஆனால், அப்பாவிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது’’ என உணர்ச்சிவசப்பட்டார். ‘‘பதவி ஆசை உன் கண்ணை மறைக்கிறது. உன்னை முதல்வர் ஆக்கியதால்தான், இப்படி எனக்கு எதிராக மாறியிருக்கிறாய்’’ என்றார் முலாயம். ‘‘மகன் தவறே செய்தாலும், அப்பா அந்த மகனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’’ என ஆசம் கான் சொன்னார். 

சமாதானத்துக்கு விலையாக, தனக்கு மீண்டும் உ.பி மாநிலக் கட்சித் தலைவர் பதவியைக் கேட்டார் அகிலேஷ். சர்ச்சைகளுக்குக் காரணமான சிவபாலையும், மூத்த தலைவர் அமர் சிங்கையும் ஒதுக்கிவைக்குமாறு கேட்டார். இரண்டுமே நடக்காததால், கட்சியினர் கூடி முலாயமையே தேசியத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, அகிலேஷை தலைவராக்கிவிட்டனர். கட்சி சின்னமான சைக்கிளுக்கு இரண்டு தரப்பும் அடித்துக்கொண்டாலும் அகிலேஷ் பக்கமே காற்று வீசுகிறது.
அகிலேஷுக்கு இதில் இரட்டை ஆதாயம். 5 ஆண்டு கால ஆட்சியின் தவறுகளுக்கு அப்பா மீது பழியைப் போட முடியும்; குண்டர் அரசியலையும் சாதி அரசியலையும் எதிர்க்கும் உறுதியான தலைவராகத் தன்னை அடையாளப்
படுத்த முடியும். அப்பா தனது அரசியல் வாழ்வை இழந்து, மகனுக்கு ஒரு எதிர்காலம் கொடுத்திருக்கிறார்.

‘‘முலாயம் சிங் யாதவை நாங்கள் மதிக்கிறோம்; ஆனால், அவர் கடந்த காலம். அவர் பின்னால் போவதால் எந்த ஆதாயமும் இல்லை. அகிலேஷ் யாதவ்தான் எங்கள் எதிர்காலம். எல்லோரும் அவர் பின்னால் போவதில் வியப்பு இல்லை’’ என வெளிப்படையாகச் சொல்கிறார், சமாஜ்வாடி மூத்த தலைவர் ஒருவர்.

விசுவாசம் பூஜ்ஜியமாகிப் போன அரசியல் களத்தில், கடந்த காலம் என்பது செல்லாக்காசு; எதிர்காலத்துக்கே எப்போதும் மவுசு!

- தி.முருகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz