Published:Updated:

அரசு கொடுத்தது 50 ஆயிரம்... செலவானது 10 லட்சம்..! - சோமனூர் பேருந்து நிலைய விபத்து துயரம்

அரசு கொடுத்தது 50 ஆயிரம்... செலவானது 10 லட்சம்..! - சோமனூர் பேருந்து நிலைய விபத்து துயரம்
அரசு கொடுத்தது 50 ஆயிரம்... செலவானது 10 லட்சம்..! - சோமனூர் பேருந்து நிலைய விபத்து துயரம்

5 பேரின் உயிரைப் பறித்த சோமனூர் பேருந்து நிலைய விபத்து நடந்து 10 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் தருவதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியையும் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால், அரசு கொடுத்த தொகையைவிட, பல மடங்கு அதிகமாக மருத்துவச் செலவு செய்தும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள் சோமனூர் விபத்தில் காயமடைந்தவர்கள். கல்லூரித் தேர்வு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி லதாவின் ஒரு காலை, இந்த விபத்து பறித்துவிட்டது. அந்த மாணவிக்கு அரசு கொடுத்தது ரூ.50 ஆயிரம்தான். ஆனால், அவருடைய மருத்துவச் சிகிச்சை ரூ.10 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அந்தப் பகுதியில் இருக்கும் நல்ல உள்ளங்களின் உதவியால், லதாவுக்குச் செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து லதா, ``சில நல்ல மனசுக்காரங்க உதவியால படிப்பை வெற்றிகரமா முடிச்சிட்டேன். மருத்துவச் செலவுதான் அதிகம் ஆகிடுச்சு. அரசுத் தரப்புல 50 ஆயிரம் ரூபாதான் கொடுத்துருக்காங்க. இது சம்பந்தமா, கோவை, திருப்பூர் கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தோம். ஆனா, எங்க மனுவை  நிராகரிச்சிட்டதா திருப்பூர் கலெக்டர் ஆபீஸ்ல பதில் சொல்றாங்க. சி.எம் செல்லுல புகார் கொடுத்தும், இதுவரை பதில் வரலை. இதுக்கு மேல என்ன பண்றதுனே தெரியலை" என்றார் சற்றே ஆதங்கத்துடன். லதாவின் பெற்றோர் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான விஜயா, ``வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். பஸ் வரல.. நடந்து போகலாம்னு ரெண்டு அடி எடுத்து வெச்சேன். திடீர்னு பஸ் ஸ்டாண்டு இடிஞ்சு விழுந்துச்சு. நான் எந்திருச்சு பார்க்கறப்ப, என்னோட ஒரு கால் இல்ல. அரசாங்கம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாங்க. அது என் மருத்துவச் செலவுக்கே பத்தல. என்னோட வீட்டுக்காரர், 7 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு. பசங்க துணையினால வாழ்ந்துட்டு இருக்கேன். இப்பவும் என்னோட ஒரு கால்ல இருந்து சீல் வந்துட்டு இருக்கு. செயற்கைக் கால் வைக்கலாம்னு முயற்சி பண்றோம். ஆனா முடியலை" என்று புண்பட்ட தனது காலை வெறித்துப் பார்த்தபடி முடித்தார் விஜயா.

டெய்லராக இருந்த, தனது காலில் ஏற்பட்ட காயங்களால் தற்போது வேலைக்குப் போக முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார் முரளி.

தற்போது, முரளியின் மனைவி, ஹோட்டல் ஒன்றில் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இப்படி, சோமனூர் துயரத்திலிருந்து மீள முடியாமல் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, அதன் அதிகாரி ககன்தீப் சிங், முதல்வரிடம் சமர்ப்பித்து பல மாதங்கள் ஆகியும், முதல்வர் அதை வெளியிடாமல் மௌனம் காக்கிறார்.

சோமனூர் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், ``பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதற்காக, காவல் துறை எங்கள்மீது வழக்கு போட்டுள்ளனர். கேட்டால், `விபத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?' என்று கேட்கின்றனர். இது தொடர்பாக, கோவை ஆட்சியரிடம் முறையிட்டதற்கு, `அமைச்சரை வைத்து நிதியளிக்க முயற்சி செய்து வருகிறோம். இனி, அமைச்சர் கைலதான் எல்லாம் இருக்கு' என்கிறார். சோமனூர் விபத்துக்குப் பிறகு நடந்த, நாகை மாவட்டம், பொறையார் பணிமனை மேற்கூரை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதைவிட அதிக நிதி அளித்துள்ளனர். ஆனால், சோமனூர் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அரசு இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை" என்றனர்.

போராடுபவர்கள் மீதும், அதைப் பதிவு செய்யும் ஊடகங்கள் மீதும் வழக்கு போடுவது மட்டுமே அரசின் கடமை இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுதான் அரசின் முதல் கடமை.