Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

? 2016 என்றால் எவை எல்லாம் நினைவில் நிற்கும்?


!  ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலம் பாதிப்பு, சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது,  சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பணம் பதுக்குவது தொடர்பான ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியானது, பாடலாசிரியர் முத்துக்குமார் மறைவு, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது, சேகர் ரெட்டி வீட்டில் 130 கிலோ தங்கமும் 96 கோடி பணமும் சிக்கியது, பத்திரிகையாளர் சோ மறைவு, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்ட மணிப்பூர் இரோம் சர்மிளா, விவசாயிகளின் தொடர் தற்கொலை... ஆகியவை 2016 நினைவுகளாக இருக்கும்.

கழுகார் பதில்கள்

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

? எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்க அந்தக் கட்சியின் பிரமுகர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இன்று ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே?


!   இப்போது இருப்பவர்கள் யாரும் பிரமுகர்களாக இல்லை என்கிறீர்களா? அன்று தொண்டர்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருந்தது. பிரமுகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

இன்று பிரமுகர்கள் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது. தொண்டர்கள் ஆதரவு முழுமையாகத் தனக்குத்தான் இருக்கிறது என்பதை சசிகலாதான் நிரூபிக்க வேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

?  புதுச்சேரியில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க வைகோவுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்படாதது ஏன்?


!  விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாட்டின் நோக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் பண முடக்க நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது. ஆனால், மோடியின் நடவடிக்கையைப் பகிரங்கமாக ஆதரித்து வருபவர் வைகோ. கவிஞர் இன்குலாப் மறைவின்போது, வைகோவும் திருமாவும் சந்தித்துக்கொண்டார்கள். மாநாட்டுக்கு வர வேண்டும் என்று வைகோவுக்கு அழைப்பு விடுத்தார் திருமா. ‘நான் இந்த விஷயத்தில் மோடியை ஆதரிக்கிறேன். அங்கு வந்து இதனைப் பேசுவது சரியாக இருக்காது’ என்று வைகோ சொல்லி இருக்கிறார். அதனால்தான் வைகோவுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்படவில்லை. மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ விலக இது காரணம் அல்ல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்

தாமரை நிலவன், கீழ்க்கட்டளை.

? தீபா பேட்டி சொல்வது என்ன?


! ‘அத்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை’ என்பதைத் தாண்டி அரசியல்ரீதியாக அவர் எதுவும் சொல்லவில்லை. அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் தெரியவில்லை. சில லாஜிக்குகளை அவர் முன்வைக்கிறார். ‘உங்களைச் சந்திக்க ஜெயலலிதாதான் விரும்பவில்லை என்று சசிகலாவின் உறவுகள் சொல்கிறார்களே?’ என்று கேட்கப்பட்டதும், ‘அவர் உயிரோடு இருக்கும் வரை இப்படிச் சொல்லலாம். ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகும், அவர் இறந்தபிறகும் ஏன் என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை? அப்போதும் ஜெயலலிதா இப்படிச் சொன்னாரா?’ என்று திருப்பிக் கேட்டார் தீபா. அவருக்குப் பேசத் தெரிகிறது. ஆனால், அது அரசியல் ரீதியானதாக இல்லை.

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

? அரசியலில் எது எல்லாம் நிகழலாம்? எது எல்லாம் நிகழக்கூடாது?


! பொதுநலன் சார்ந்த எதுவும் நிகழலாம். சுயநலம் சார்ந்த எதுவும் நிகழக்கூடாது.

தாமரை நிலவன், சென்னை-117.

? சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பற்றி...?


!  கொஞ்சு தமிழுக்கு உதாரணம் வண்ணதாசன் எழுத்து. அவர் சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரைகள் அனைத்துமே மனித மனங்களைப் பேசும்.  மனிதன் பேசும் விவாதங்கள், வார்த்தைகளின் உரையாடலாக இல்லாமல் மனங்களின் உரையாடலாக இருக்கும். மனிதர்களில் பெண்களே அதிகம் இருப்பார்கள். அதைவிட பூக்கள் இவரது கதாபாத்திரங்களாக அதிகம் வலம் வரும். எழுத்து என்றால் வீட்டுக்கு வெளியே இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், வண்ணதாசனின் அனைத்து எழுத்துகளும் வீட்டுக்கு உள்ளே இருக்கின்றன. வீடும், தெருவுமே அவரது நிலைக்களங்கள். அதன் வழியாக மனிதர்களின் ஈரத்தைத் தோண்டுவதே வண்ணதாசனின் எழுத்து. அவரது எந்த வாக்கியத்தையும் உச்சரித்துப் பாருங்கள். அன்பு வெளிப்படும். அவர் சொன்னது  இது:

‘‘மேலும் நான் எழுத முயல்வேன்
மேலும் நான் மனிதரை அடைவேன்.”

கழுகார் பதில்கள்

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

? புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தாக்குப்பிடிப்பாரா?


! யாரையும் தாக்கவும் மாட்டார். யாரையும் தாங்கவும் மாட்டார். அதனால் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகம்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-1.

? அ.தி.மு.க ஆட்சியின் பலமும் பலவீனமும்?


! அதன் தலைமைதான்.

கண்ணகி சின்னபிள்ளை, கருப்பம்புலம்.


? ‘அ.தி.மு.க-வையும் தமிழக அரசையும் வசப்படுத்த பி.ஜே.பி முயற்சிக்கிறது’ என்கிறதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி?


! அப்படிப்பட்ட ஆசை பி.ஜே.பி-க்கு, மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், காரிய சாத்தியம் ஆகவில்லை. எதுவும் நடக்காவிட்டாலும் எல்லாம் நடப்பதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்த பி.ஜே.பி நினைக்கிறது. அதனால், திட்டமிட்டே யாரோ சிலர் பொய்களைப் பரப்புகிறார்கள்.

பாரதி முருகன், மணலூர்பேட்டை.


? தினம் ஒரு சந்திப்பு என்று சசிகலாவுக்குப் பெருகிவரும் ஆதரவு எதைக் காட்டுகிறது?


!  ஆதரவு பெருகி வருவதாகக் காட்டப்படுகிறது. இது, அவரது பலவீனத்தையும் பயத்தையும்தான் காட்டுகிறது.

எல்லார், புதூர்.

? தமிழகத்தில் மார்ச் மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் வந்துவிடும் போல் உள்ளதே?


! முதல்வர் மாற்றம் வந்துவிடும். ஆட்சி மாற்றம் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்றால் ஆளும் கட்சியே மாறுவது. அதற்கு இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002

kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!