மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

1984-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுக்கோட்டை திலகர் திடலில் அ.தி.மு.க பொதுக்கூட்டம். ஜெயலலிதாதான் சிறப்புப் பேச்சாளர். ‘‘அரசியலே ஒரு நாடகம். அதில் கருணாநிதி சிரிப்பு நடிகர். பாலையாவையே மிஞ்சிவிட்டார். வில்லன் நடிப்பில் நம்பியாரை மிஞ்சிவிட்டார். கோபாலபுரத்தில் இருந்து கோர்ட் வரையில் கருணாநிதி நடத்திய நாடகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். காகிதப்பூ கதாநாயகன் வீரம் வெறும் வாய் வீரம்தான்’’ என கருணாநிதியை ஜெயலலிதா சகட்டுமேனிக்குத் திட்டியது எல்லாம் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வந்தது. உபயம், எம்.நடராஜன்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

இப்படி கவரேஜ் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க, ஜெயலலிதாவை வேவு பார்க்கச் சொன்ன எம்.ஜி.ஆரின் கட்டளையை நிறைவேற்ற ஆரம்பித்திருந்தார்கள் சசிகலாவும் நடராஜனும். அதே நேரத்தில் தனது எதிர்காலத்துக்கும் கட்டளைகளை போயஸ் கார்டனில் புகுத்தினார் சசிகலா. அதில், போயஸ் கார்டனில் அதுவரை பணியில் இருந்தவர்கள் எல்லாம் பந்தாடப்பட்டார்கள். காரணம், தன்னைத் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவை நெருங்கிவிடக் கூடாது என்பதில் சசிகலா உஷாராகவே இருந்தார். அதுதான், அப்போலோ ஆஸ்பிட்டல் வரையில் தொடர்ந்தது.

கட்சி அலுவலகத்திலும் போயஸ் கார்டனிலும் வருவதும் போவதுமாக இருந்த சசிகலா, போயஸ் கார்டனிலேயே ஒரு நாள் இரண்டு நாள் எனத் தங்க ஆரம்பித்தார். அது ஒரு வாரம், மாதம் என மாறி, நிரந்தமாகிப் போனது. அதுவரையில் வீட்டில் வேலைபார்த்து வந்தவர்களை நம்பிவந்த ஜெயலலிதா, சசிகலாவையும் நம்பினார். இந்த நம்பிக்கை எங்கே தொடங்கியது என்பதற்கான ஆணிவேர் மட்டுமல்ல, சல்லி வேர்கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சசிகலாவின் என்ட்ரிக்கு முன்பே அங்கே வேலை செய்தவர்கள் சகஜமாக வேதா இல்லத்தில் வலம்வந்து கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் சுதந்திரத்துக்கும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் வேட்டு வைக்கப்பட்டது. ஜெயலலிதாவோடு நெருங்கமாக இருந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி துடைத்தெறியப்பட்டார்கள். அந்தக் காரணத்துக்குக்(!) காரணகர்த்தா சசிகலாதான்! அதில் ஒரு சாம்பிள் இது.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

ஜெயலலிதாவின் அம்மா சந்தியா காலத்தில் இருந்தே வேலை பார்த்து வந்தார் மாதவன் நாயர். அவருடைய பணி ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. போயஸ் கார்டனின் மேனேஜர். வரவு செலவுகளையும் மாதவன் நாயர்தான் பார்த்து வந்தார். அவரின் தலைதான் முதலில் உருண்டது. பண விஷயத்தில் நேர்மையானவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. திடீரென்று அவருடைய பேங்க் அக்கவுன்டில் 36 ஆயிரம் ரூபாய் இருந்தது. அது அவர் நேர்மையாகச் சேர்த்தப் பணம். விவகாரத்தை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுபோனார் சசிகலா. ‘‘பணத்தைச் சுருட்டிவிட்டார்’’ என்ற அவப்பெயர் மாதவன் நாயர் மீது சுமத்தப்பட்டது. விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பணம் வந்த வழியை எல்லாம் ஜெயலலிதா கேட்கவில்லை. 23 ஆண்டுகள் வேலை பார்த்த மாதவன் நாயர், 36 ஆயிரம் ரூபாய்க்காக வெளியேற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் ஜெயமணி. சேடப்பட்டி முத்தையாவின் சிபாரிசு. அவர்மீது ‘ஒற்றன்’ பட்டம் சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மாள் - ஜெயலலிதா என முக்கோணப் பிரச்னை அப்போது பிணைந்துக் கிடந்தது. இதில் மூவருக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. ‘‘கார்டன் செய்திகள் ராமாவரம் தோட்டத்துக்குக் கடத்தப்படுகின்றன. உளவுப் பார்க்க சேடப்பட்டி முத்தையாவால் அனுப்பப்பட்ட ஆள்தான் ஜெயமணி’’ என உளவாளிகளே உச்சரித்தார்கள். அடுத்து ஜெயமணிக்கு மங்களம் பாடப்பட்டது. அண்ணாதுரை புது டிரைவர் ஆனார். அண்ணாதுரை மட்டுமல்ல, அப்படி நியமிக்கப்பட்ட மற்ற பணியாளர்களும் சசிகலா - நடராசன் ஆட்கள்தான்.

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்தவர் கவிஞர் எஸ்.ரவிராஜ். இவருடைய கவிதைகளை எல்லாம் ஜெயலலிதாவே பாராட்டியிருக்கிறார். ‘என் கணவர் எனக்காக வேண்டுகிறார். நான் சுமங்கலியாகத்தான் சுடுகாடு போக வேண்டுமாம்’ என்ற அவரின் கவிதையை நினைவில்வைத்து மற்றவர்களிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா.  இவர் சசிகலாவுக்கு உறவுக்காரரும்கூட. ஆனால் அவரும் விரட்டப்பட்டார்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 7 - களையெடுத்தல்

‘‘ஜெயலலிதாவுக்கு ஒரு நாயைவிட அதிக விசுவாசமாக இருந்தவர் மாதவன் நாயர். 23 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் மேலாளராக இருந்தவர். சசிகலாவின் வருகையால் முதன்முதலில் பாதிக்கப்பட்டவர் மாதவன் நாயர்தான்’’ எனச் சொல்லியிருக்கிறார் மறைந்த எழுத்தாளர் ‘வார்த்தை சித்தர்’ வலம்புரி ஜான்.

ஜெயலலிதாவின் எழுத்துத் தாகத்துக்கு உதவியவர் வலம்புரி ஜான். எழுதத் தூண்டியதோடு அவரின் எழுத்துக்களை எல்லாம் பத்திரிகைகளில் வரவைத்தார். அவருக்குத் தேவையான புத்தகங்களை எல்லாம் வாங்கிக்கொடுத்தவர். ஏன், ஜெயலலிதாவுக்கே அறிக்கை எழுதிக் கொடுத்தவர். அவருக்கு நேர்ந்த கதி என்ன?

அடுத்த இதழில்...

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி