Published:Updated:

"அரசியல் தலையீட்டால் வக்பு வாரியக் கல்லூரி நற்பெயர் இழக்கிறது!’’ - வருந்தும் மக்கள்

"அரசியல் தலையீட்டால் வக்பு வாரியக் கல்லூரி நற்பெயர் இழக்கிறது!’’ - வருந்தும் மக்கள்
News
"அரசியல் தலையீட்டால் வக்பு வாரியக் கல்லூரி நற்பெயர் இழக்கிறது!’’ - வருந்தும் மக்கள்

இந்தியாவிலேயே வக்பு வாரியத்தால் நடத்தப்படும் ஒரே கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது 

இந்தியாவிலேயே வக்பு வாரியத்தால் நடத்தப்படும் ஒரே கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது மதுரையிலுள்ள `முகையத் ஷா சிர்குரோ கல்லூரி'. தென்மாவட்டத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்த முஸ்லிம் மக்களின் உயர் கல்விக்காக 1964 இல் உருவானது இக்கல்லூரி. அரசு உதவி பெரும் இக்கல்லூரி, சமூகப் பெரியவர்களின் பங்களிப்புடன் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக இக்கல்லூரி நிர்வாகத்தில், அரசியல் புகுந்த பின்பு, கல்லூரியின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்று சொல்கிறார்கள். 

இக்கல்லூரி பற்றி நன்கறிந்தவர்கள் நம்மிடம் பேசும்போது, ``மிகவும் சிறப்பான முறையில் கல்விப்பணி ஆற்றி வந்த இக்கல்லூரி கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் தலையீடுகளால் மோசமாகி வருகிறது.  தி.மு.க ஆட்சிக்காலத்தில், அழகிரி சொல்கிற ஆட்களுக்குத்தான் போஸ்ட்டிங் என்ற நிலை உருவானது. அதைப்போலவே  அ.தி.மு.க ஆட்சியிலும் ஆளும் கட்சியினர் சொல்கிறவர்களுக்குத்தான் போஸ்ட்டிங் என்கிற நிலையைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, அமைச்சராக இருப்பவர் மீது புகார் செய்தாலும்கூட உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை இருக்கும். ஆனால், இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை புகார் கொடுத்தும்கூட இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

தற்போது வக்பு வாரிய சேர்மனாக அ.தி.மு.க-வின் ராமநாதபுரம் எம்.பி.அன்வர்ராஜா பொறுப்பேற்ற பின்பு, கல்லூரிக்குள் அவரின் தலையீடு அளவுக்கு அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். பழைய சேர்மனைவிட இவர் பொது நலத்தில் ஆர்வமாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அவரை விஞ்சிவிட்டார். வக்பு வாரிய சேர்மனாகப் பதவி ஏற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய அன்வர்ராஜா, ``வக்பு வாரிய அலுவலகங்களில் உள்ள  170 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்'' என்று தெரிவித்தார். அப்போதே பலரும் பணத்துடன் அவர் வீட்டு முன் வரிசை கட்டத் தொடங்கிவிட்டார்கள்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில் மதுரையிலுள்ள வக்பு கல்லூரியும் அவர் கட்டுப்பாட்டில் வருவதால், இங்கும் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டார். கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி அடிப்படையில் பலர் விண்ணப்பித்தாலும், பல லட்சங்களைக் கொடுத்தால்தான் காரியம் ஆகும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டனர். அதனால், போதிய தகுதி இல்லாதவர்களும் பணம் கொடுத்து பணியில் சேருகின்றனர். முறையான கல்வித்தகுதி இருந்தும் பணம் கொடுக்க முடியாதவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். 

இதில் உள்ளூர் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜு, வெளியூர் அமைச்சரான நிலோஃபர்கபில் ஆகியோரும் தங்கள் பங்குக்கு ஆட்களை உள்ளே நுழைக்கிறார்கள். சிறுபான்மை சமுதாயக்கல்லூரியை ஆளும் கட்சியினரின் கல்லூரியாக மாற்றிவிட்டார்களே என்று மக்கள் புலம்பி வருகிறார்கள். கல்லூரி நிர்வாகத்தினர் அரசியல் தலையீட்டை எதிர்கொள்ள முடியாமல் உள்ளனர்.'' என்றனர்.

இது சம்பந்தமாக நிர்வாகத்தின் கருத்தை அறிய கல்லூரியின் செயலாளர் ஜமால்முகைதீனின் அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். ``சிறிது நேரத்தில் உங்களிடம் பேசுவார்'' என்று அவருடைய உதவியாளர் நம்மிடம் கூறினார். ஆனால், வெகுநேரமாகியும் தொடர்பில் வரவில்லை.

பணம் வாங்கிக்கொண்டு போஸ்ட்டிங் போடுவதாகக் கிளம்பியுள்ள புகாரைப்பற்றி வக்பு வாரியத் தலைவர் அன்வர்ராஜா எம்.பி-யைத் தொடர்புகொண்டு கேட்டோம். ``தவறான தகவல், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அவர் அப்படிக் கூறினாலும் வக்பு வாரியக்கல்லூரி பணி நியமனங்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!