Published:Updated:

'அமைச்சர் வேலுமணியின் தனிக்காட்டு ராஜாங்கம்!' - முடங்கிக் கிடக்கும் கோவை தி.மு.க.

இந்தச் சூழலில் பதவியிலிருந்து தூக்கப்பட்டவர்கள் யார் யார்? என்ன காரணம்? இந்தப் பதவி பறிப்பு தி.மு.கவுக்குப் பலன் தருமா? என்று கொங்கு பகுதி  தி.மு.க-வின் பல்ஸ் பார்த்தோம்...

'அமைச்சர் வேலுமணியின் தனிக்காட்டு ராஜாங்கம்!' - முடங்கிக் கிடக்கும் கோவை தி.மு.க.
'அமைச்சர் வேலுமணியின் தனிக்காட்டு ராஜாங்கம்!' - முடங்கிக் கிடக்கும் கோவை தி.மு.க.

``கொங்கு மண்டலத்தில் கோட்டைவிடாம இருந்திருந்தா இந்நேரம் நாமதான் ஆட்சியில இருந்திருப்போம்'' என்று உள்ளம் குமுறாத தி.மு.க-வினர் யாரும் இருக்க முடியாது! கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அடைந்த பெருந்தோல்விதான்  தி.மு.க ஆட்சிக்கட்டிலைத்  தவறவிட்டதற்கான முழுமுதற் காரணம். விழுந்த இடத்திலிருந்து எழத் தொடங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்! 

தி.மு.க-வின் தோல்வி குறித்து நடத்திய கள ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு... கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிகள் பலரது பதவியையும் அதிரடியாக பறித்திருக்கிறார். இன்னும் பலரின் பதவி பறிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த லிஸ்ட் விரைவில் வரும் என்று மேல்மட்டத்திலிருந்து தகவல் கசிய... பல நிர்வாகிகள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறர்கள். இந்தச் சூழலில்,  பதவியிலிருந்து தூக்கப்பட்டவர்கள் யார் யார்? தூக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இந்தப் பதவி பறிப்பு தி.மு.க-வுக்கு பலன் தருமா? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்தேடி, கொங்கு பகுதி  தி.மு.க-வின் பல்ஸ் பார்த்தோம்...

அ.தி.மு.க-வுடன் 'அன்-கோ' அமைத்துக்கொண்ட கோவை தி.மு.க...!

கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் பத்மாலயம் சீனிவாசன், தாளியூர் பேரூர் கழகச் செயலாளர்  ராஜேந்திரன், கவுண்டம்பாளையம் பகுதிக் கழகச் செயலாளர் கே.எம்.சுந்தரம், சரவணம்பட்டி பகுதி கழகச் செயலாளர்  மாணிக்கம், குறிச்சி பகுதி கழகச் செயலாளர் நா.பிரபாகரன்,  பி.என்.புதூர் பகுதி கழகச் செயலாளர் மணி, காந்திபுரம் பகுதி கழகச் செயலாளர் உதயகுமார்,  பெரியகடை பகுதி கழகச் செயலாளர் செல்வராஜ் என கோவையில் உள்ள நான்கு மாவட்டத்திலிருந்தும் ஒரு பெரும்படையே பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பெரிய தலை என்று பார்த்தால்,  தமிழ்மணிதான். இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ.; இவரது உறவினர் ஒருவர் மு.க.ஸ்டாலினிடம் நெருங்கிய நட்பில் உள்ளார். இந்த சாதகங்களை வைத்தே பதவிக்கு வந்த தமிழ்மணி, கடந்த 4 ஆண்டுகளாக பதவிக்கேற்ற வேலை எதுவும் செய்யவில்லை. கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைக்க அவருக்குத் தெரியவில்லை. அவரது செயல்பாடுகள் குறித்துப் பலரும் அதிருப்தி புகார் அளித்ததையடுத்தே அவர் தூக்கப்பட்டுள்ளார்.  பகுதிச் செயலாளர்களில் பலர் பொங்கலூர் பழனிசாமியின் ஆதரவாளர்கள். இவர்களில் சிலர் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல், பிசினஸில் பிஸியாகிவிடுகிறார்கள். சிலர்  கமிஷன் வாங்கிக்கொண்டு அ.தி.மு.க-வினரோடு  அன்-கோ போட்டுக்கொள்கிறார்கள்  என்று இவர்கள் மீது  பக்கம்பக்கமாக நீள்கிறது புகார்.

'இவர்களைத் தூக்கிவிட்டதால் தி.மு.க துடிப்பாகிவிடுமா...' என்று கேட்டால், தி.மு.க-வினர் சிலரே சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு இங்கே தி.மு.க கட்டுமானம் மொத்தமும் இங்கே சிதைந்துபோயிருக்கிறது. பெரிய பதவியில் இருக்கும்  நிர்வாகிகள் சிலருக்கே தி.மு.க ஆட்சிக்கு வரணும்ங்கிறதுல விருப்பம் இல்லை. தி.மு.க ஆட்சிக்காலத்தில் இங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க-வினரின் சின்னச் சின்ன ஊழல்களையும் தேடிப்பிடித்து வெளிக்கொண்டுவந்து பூதாகரப்படுத்தினார்கள். இப்போதைய ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.. ஆனால், ஒரு தி.மு.க நிர்வாகியும் அதைக் கண்டுகொள்வதில்லை. ஒருசிலர் போராடுகிறேன் என்கிற பெயரில் மிரட்டி கமிஷன் வாங்கிக்கொண்டு சைலன்ட் ஆகிவிடுகிறார்கள். 'ஆளுங்கட்சி அமைச்சர் வேலுமணியின் செயல்பாடுகளில் இருக்கும் தவறுகளைக் கண்டறிந்து துணிச்சலாக புகார் சொல்வதற்குக்கூட ஒரு போல்டான தி.மு.க நிர்வாகி இல்லையா...' என்று மக்கள் கோபப்படக்கூடிய அளவில்தான் இருக்கிறது கோவை தி.மு.க.!  களத்தில்  இறங்கி உண்மையான மக்கள் பணி ஆற்றினால் மட்டுமே கோவையில் தி.மு.க கொடி பறக்கும்!

கோஷ்டி சண்டையில் திருப்பூர்...

திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும், முன்னாள் அமைச்சர் மு.பெ சாமிநாதனுக்கும் ஏழாம் பொருத்தம் உச்சத்தில் இருக்கிறது. மாவட்டத்துக்குள் சாமிநாதனின் ஆட்கள் யாரும் கட்சிப் பொறுப்பில் வந்துவிடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்திய செல்வராஜுக்கு தற்போதைய அறிவிப்பு ஏக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால், கட்சியினர் பலரும் உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார்கள். தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்படுவார் என்று எதிர்பார்த்த டி.கே.டி நாகராஜனுக்கு திருப்பூர் மாநகரப் பொறுப்பாளர் பதவி வழங்கியிருப்பது மிகப்பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. செல்வராஜின் வலதுகரமான டி.கே.டி நாகராஜன் ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்து அடாவடிகளில் ஈடுபட்டு கட்சியின் பெயரையே கெடுக்கிறார் என்று தலைமைக்கு ஏராளமான புகார்களை அனுப்பியிருந்தார்கள். களஆய்வுக்கு வந்தவர்களிடமும் நாகராஜன் பற்றிய  ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்கள். 

ஆனால், அவை எதுவும் எடுபடவில்லை. அதேபோல செல்வராஜின் நெருங்கிய உறவினரான நல்லூர் ரவி மீதும் இதேபோன்ற புகார்கள் குவிந்திருக்கின்றன. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக அவருடைய கார் ஓட்டுநராக வலம்வந்த கோவிந்தராஜுக்கு பதவியை வழங்கியிருக்கிறார்கள். பல்லடம் ராஜேந்திரகுமார் சாமிநாதனின் ஆதரவாளர் என்பதால், அவருக்கும் செல்வராஜுக்கும் எப்போதும் சரிப்பட்டுவராது. இப்போது அவருக்குப் பதிலாக பல்லடம் நகரக் கழகச் செயலாளராக செல்வராஜின் விசுவாசி லோகநாதனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், திருப்பூருக்கு கள ஆய்வுக்கு வந்த குழுவினருக்கே தலைமைக் கழக அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.  'நாங்கள் கொடுத்த  அறிக்கைக்கு நேர்மாறாக அறிவிப்பு வந்திருக்கிறது' என்று அவர்கள் புலம்பியதாகத்  திருப்பூர் தி.மு.க புள்ளிகள் முணுமுணுக்கிறார்கள். என்னதான் ஸ்டாலினுக்கு நெருக்கமான இடத்தில் இருந்தாலும், மாவட்டத்துக்குள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் சாமிநாதன்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத ஈரோடு...

ஒரு தொகுதிகூட வெற்றிபெறாத மாவட்டம் ஈரோடு...  அத்தனை தொகுதியையும்  அ.தி.மு.க-வே வென்றது. தேர்தல் முடிந்ததுமே நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என ஈரோடு தி.மு.க நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்தனர். மாவட்ட வாரியாக நடந்த கள ஆய்வுக் கூட்டத்தின்போது அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து...  ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் என இரண்டு ஒன்றியச் செயலாளர்களை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் பயங்கரமான களையெடுப்பு நடக்கும் என பயந்து கிடந்த நிர்வாகிகள், இந்த அறிவிப்பைப் பார்த்து கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியச் செயலாளராக இருந்த எம்.எஸ்.சென்னிமலைக்குப் பதிலாக செந்தில்குமார் என்பவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர். எம்.எஸ்.சென்னிமலை கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளை மதிக்காமல், கொஞ்சம் இடைவெளியுடன் நடந்துகொண்டதாக பல புகார்கள் தலைமைக்குப் போனதையடுத்தே இந்த மாற்றம் என்கிறார்கள். அவருக்குப் பதிலாக அமர்த்தப்பட்டுள்ள செந்தில்குமார் என்பவர் தே.மு.தி.க-விலிருந்து சந்திரகுமாருடன் வந்தவர். அவர் தே.மு.தி.க-வில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர். தி.மு.க-வில் சேர்ந்ததும் ஆக்டிவாக கட்சிப் பணிகளை செய்து வந்ததால், தி.மு.க தலைமை, ஒன்றியச் செயலாளர் பொறுப்பை பரிசாக அளித்திருக்கிறது. 

ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியச் செயலாளராக இருந்த டி.கே.சுப்பிரமணிக்குப் பதிலாக, எம்.சிவபாலன் என்பவரை ஒன்றியச் செயலாளராக தி.மு.க அறிவித்திருக்கிறது. பணத்தைப் பெரிதாக செலவு செய்யாதது, முன்பைப் போல ஆக்டிவாக இல்லாதது போன்ற காரணங்களுக்காக டி.கே.சுப்பிரமணியை ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கியதாகச் சொல்கிறார்கள். சுப்பிரமணியின் ஒன்றியச் செயலாளர் பதவியைப் பெற்றுள்ள எம்.சிவபாலன் மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருக்கிறார். ஆக்டிவாக கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைப்பது, லோக்கல் நிர்வாகிகளிடம் நல்ல பெயர் சம்பாதித்திருப்பது என்பது போன்ற பல குட் மார்க்குகளை வாங்கியிருப்பதால் தி.மு.க தலைமை சிவபாலனை ஒன்றியச் செயலாளராக நியமித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆளுங்கட்சியினரோடு சீட்டு கிளப் - சேலம் ரகளை...

சேலம் மேற்கு மாவட்டத்தில் மேச்சேரி ஒன்றியச் செயலாளராக இருந்த செல்வகுமார்,  எடப்பாடி ஒன்றியச் செயலாளராக இருந்த நல்லதம்பி, சேலம் கிழக்கு மாவட்டத்தில்  அயோத்தியாப்பட்டணம் ஒன்றியச் செயலாளராக இருந்த கெளதமன், கெங்கவல்லி ஒன்றியச் செயலாளராக இருந்த காமராஜ், தம்மம்பட்டி பேரூர்க் கழகச் செயலாளராக இருந்த ராஜா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.  சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் உள்ள போட்டியைவிட தி.மு.க-வுக்குள் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் வீரபாண்டி ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியே பெரியது. இவர்கள் இருவரும்  கோஷ்டிகளாக செயல்பட்டதால்தான் தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சேலத்தில் ஓட்டை விழுந்து கிடக்கிறது. இதில், நல்லதம்பி நீக்கப்பட்டிருப்பதற்கான காரணம்தான் பகீர் ரகம்.   அவருடைய அண்ணன் ஆளுங்கட்சியோடு கூட்டுப் போட்டு சீட்டு கிளப் நடத்துகிறார் என்பதும் முதல்வர்  ஒன்றியத்தில் இருந்துகொண்டு நல்ல தம்பி பெரிய அளவில் அரசியல் செய்யவில்லை என்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

இரண்டு ஆண்டுகள் கட்சி நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ளாதவருக்கு பதவி! - நாமக்கல் அதிர்ச்சி...

நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த பார் இளங்கோவன் நீக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே இதே பதவி வகித்த காந்திசெல்வனே மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பார் இளங்கோவன் மாவட்ட பொறுப்புகள் நியமனத்தில் கல்லா கட்டியவர். காசு ஆசைப்பிடித்த அவர் கட்சிக்காரர்களை அரவணைப்பது இல்லை என ஏகப்பட்ட புகார்கள் குவிய பார் இளங்கோவன் நீக்கப்பட்டுள்ளார்.  

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  செழியன், 'அ.தி.மு.க. வேட்பாளர் பாஸ்கரனிடம் காந்திசெல்வன் பணம் வாங்கிக்கொண்டு எனக்கு வேலை பார்க்காமல் இருந்துவிட்டார். அதனால்தான் நான்  தோற்றுப்போனேன்' என்று தி.மு.க தலைமைக்கு புகார் அனுப்பினார். அது உறுதி செய்யப்பட்டு அவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். இந்நிலையில், 'கடந்த இரண்டு ஆண்டுகள் கட்சி நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ளாமல் இருந்த காந்திக்கு மீண்டும்  பதவி கொடுத்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை' என்கிறார்கள் நாமக்கல் தொண்டர்கள்.