Election bannerElection banner
Published:Updated:

``தூத்துக்குடி ஒரு முன்னோட்டம்தான்... இனி எங்கும் துப்பாக்கி வெடிக்கலாம்" - கே. பாலகிருஷ்ணன்

``தூத்துக்குடி ஒரு முன்னோட்டம்தான்... இனி எங்கும் துப்பாக்கி வெடிக்கலாம்" - கே. பாலகிருஷ்ணன்
``தூத்துக்குடி ஒரு முன்னோட்டம்தான்... இனி எங்கும் துப்பாக்கி வெடிக்கலாம்" - கே. பாலகிருஷ்ணன்

``தூத்துக்குடி ஒரு முன்னோட்டம்தான்... இனி எங்கும் துப்பாக்கி வெடிக்கலாம்" - கே. பாலகிருஷ்ணன்

மிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகவும், அவற்றை தடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப் பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது. கடந்த ஜுன் 8 ம் தேதி தொடங்கிய இந்தப் பிரசாரம் நாளை திருச்சியில் நிறைவடைகிறது. இதில், அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உரையாற்றுகிறார். 

``போராடுவோம் தமிழகமே" என்ற பெயரிலான இந்த இயக்கத்தின் ஒரு பகுதியினர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியபோது...

`` `போராடவே கூடாது, போராடினால் தமிழகமே சுடுகாடாக மாறிவிடும். போராடுவதையே பிழைப்பாக வைத்திருந்தால் எப்படி நாடு முன்னேறும்' என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதுக்கும் மேலாகச் சிலர், `போராட்டத்துக்குக் காரணமாக இருப்பவர்களே சமூக விரோதிகள்' என்கின்றனர். நாட்டில் இருக்கும் சமூகவிரோதிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் கட்சி மத்தியில் ஆளுகிற பி.ஜே.பி தான். மக்களுக்காக, உரிமைக்காக நடத்தப்படுகிற போராட்டத்தை, கொச்சைப்படுத்துகிற இவர்களைப் போன்றவர்களுக்கு அறைகூவல் விடுக்கவே “போராடுவோம் தமிழகமே” பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம்.

மேட்டூர் அணை இந்த ஆண்டும் திறக்கப்படவில்லை. கர்நாடக மாநிலம் காவிரி நீரை கோடைக்காலத்தில் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. கர்நாடகத்தின் 4 அணைகளின் நீரையும் கோடையிலேயே முழுதும் பயன்படுத்தி அணைகளை காலி செய்துவிடுகிறது கர்நாடகா. பிறகு, தென்மேற்குப் பருவ மழை பெய்து அணை நிரம்பினால்தான் தண்ணீர் தர இயலும் என்பது எந்த வகையில் நியாயம். இந்த ஆண்டு ஜனவரியில் 30.56 டிஎம்சி இருந்தது. இப்போது ஜூன் மாதம் 10 டிஎம்சிதான் இருக்கிறது என்கிறார்கள். மே மாதம் நல்ல மழை பெய்திருக்கிறது, இப்போது ஜூன் மாதத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது. எனில், நீரின் அளவு 40 டிஎம்சி அளவாவது உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை.

தமிழக அரசு தண்ணீர் இல்லை என்பதைச் சொல்கிறது. அதைவிடுத்து, கோடைக்காலங்களில் பயன்படுத்தும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தி குறுவைக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத் தர முயல வேண்டும்.

குறுவை சாகுபடியும் இல்லை. சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை. 100 நாள் வேலைத் திட்டமும் முறையாகச் செயல்படவில்லை. இதனால், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விரைவில் முறையாக அமல்படுத்த வேண்டும்.

அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் முறைகேடாக எங்கெங்கோ செல்கிறது. மத்திய அரசாங்கத்திடம் இணக்கமாக இருக்கும், மாநில அரசாங்கம், அவர்களிடம் பேசி தமிழகத்துக்குத் தேவையான நிதியை வாங்கித் தரவேண்டியதுதானே! இவற்றை விடுத்து, போராடும் அரசு ஊழியர்களை வஞ்சிப்பது போல அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

தமிழகத்துக்கு வளர்ச்சியைத் தருகிறோம் என்று, அழிவை மட்டுமே தந்துகொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய விவசாயம் அழியப்போகிறது. அதை நம்பி இருக்கக்கூடிய லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை எங்கே போகும். அம்பானிக்கும் அதானிக்கும்தான் வளர்ச்சி. ஆனால், கிராமப்புற மக்களுக்கு ஏதுமில்லை. கிராமங்களில் டாஸ்மாக் கடைகளில் எல்லாமே எப்போதுமே கிடைக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் முறையாகப் பொருள்கள் கிடைப்பதில்லை.

கார்ப்பொரேட் மயமாகிற கொள்கைக்குச் சாவுமணி அடிக்கும் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது. தூத்துக்குடியில் போராடியவர்களை ஏன் சுட்டுக்கொல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியரகத்தை எதிர்த்ததற்காக அவர்கள் சுடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்பதற்காகச் சுடப்பட்டிருக்கிறார்கள். 

தூத்துக்குடி ஒரு முன்னோட்டம், இனி திருவாரூர், நாகை, கடலூர் என மக்கள் போராடி வரக்கூடிய ஒவ்வோர் இடங்களிலும் நாளை துப்பாக்கி வெடிக்கலாம். ``போராடுவோம் தமிழகமே” என்பது வெற்று கோஷமல்ல. இனி எத்தனை துப்பாக்கிகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்திப் போராடுவோம் தமிழகமே என்கிற அடிப்படையில் ஒருங்கிணைகிறோம்." என்று பேசி முடித்தார் பாலகிருஷ்ணன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு