Published:Updated:

பிறவி பணக்காரர்.. ப்ளேபாய்... பிசினஸ் மேக்னட்.. ட்ரம்ப் எனும் அமெரிக்க ஜமீன்! #HBDTrump

டொனால்ட் ட்ரம்ப் ஆரம்ப காலத்தில் எந்த டாஸ்க்கையும் ஈஸியாக முடிக்கும் டாஸ்க் மாஸ்டர். அவருக்கு அதிபர் தேர்தலுமே ஒரு டாஸ்க் தான் என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும் தகவல். இதற்கெல்லாம் காரணம் அவர் 5 வருடங்கள் ராணுவப்பள்ளியில் படித்தது தானாம்.

பிறவி பணக்காரர்.. ப்ளேபாய்... பிசினஸ் மேக்னட்.. ட்ரம்ப் எனும் அமெரிக்க ஜமீன்! #HBDTrump
பிறவி பணக்காரர்.. ப்ளேபாய்... பிசினஸ் மேக்னட்.. ட்ரம்ப் எனும் அமெரிக்க ஜமீன்! #HBDTrump

பணக்கார வீட்டுப் பையனையோ/பெண்ணையோ பார்த்தால் நீயெல்லாம் யாருப்பா ''Born with Silver Spoon'''னு சொல்லுவாங்க. அமெரிக்காவின்  ''Born with Silver Spoon'' என்ற வார்த்தைக்குப் பொருத்தமான நபர்களில் டொனால்ட் ட்ரம்ப்பும் ஒருவர். 70களின் மத்தியில் நியூயார்க் நகரம் பெரும் பொருளாதார வீழ்ச்சியிலும், மக்கள் வறுமையிலும் தவித்தனர். ஒரே நாளில் வேலையிலிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகை டொனால்ட் ட்ரம்பிடம் கருத்து கேட்கிறது. ``அரசியல்வாதிகளும், தலைவர்களும் தங்கள் மூளையை 1% உபயோகமாக பயன்படுத்தினால் இந்த பிரச்னைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்கிறார் ரியல் எஸ்டேட் வியாபாரியின் மகனான ட்ரம்ப். அவரை மீடியாக்கள் ''பிறக்கும்போதே சேல்ஸ்மேனாக பிறந்தவர்'' என்று வர்ணிக்கின்றன. அன்று நியூயார்க் பிரச்னைக்கு பதில் சொன்ன அந்த இளைஞன் தான் இன்று அமெரிக்காவின் அதிபர். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் சர்ச்சைகளும், சாதனைகளும் ஏராளம்.

காமோடோர் ஹோட்டல் (Commodore Hotel) மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கிறது. அதை மறுசீரமைப்பு செய்யும் ப்ராஜெக்ட் யாருக்கு வந்து சேரும் என்பது பெரிய கேள்வி. எப்போதும் ட்ரம்பின் தந்தைதான் கன்ஸ்ட்ரக்‌ஷன் வர்த்தகத்தில் களமிறங்குவார். இந்த முறை மகனுக்கு முதல் வாய்ப்பை இந்த ஹோட்டல் விஷயத்தில் அளிக்கிறார். இதற்கு பல மில்லியன் டாலர் வரிச்சலுகை கோரப்படுகிறது. எல்லாவற்றையும் சமாளித்து ஹோட்டல் மறுசீரமைப்பு வாய்ப்பு ட்ரம்ப்புக்கு கிடைக்கிறது. அப்போது ட்ரம்ப் ``2 வருடத்தில் ஹோட்டல் எப்படி மாறியிருக்கும் என்பதைப் பார்த்து இந்த உலகமே வியக்கும்'' என்கிறார். இரண்டே வருடம் ஹோட்டல் கிராண்ட் ஹையாட் என்ற பெயரில் உருமாறி நின்றது. ட்ரம்ப் தன்னை ஒரு டாஸ்க் மாஸ்டர் என்பதை நிரூபித்தார். இதற்குக் காரணம் தனது 13-வது வயதில் இருந்து 5 வருடம் அவர் ராணுவப் பள்ளிக்கூடத்தில் படித்தது தானாம்.

70களின் அமெரிக்க பேச்சுலர் பாய்ஸின் பொறாமை முழுவதும் ட்ரம்ப் மீதுதான். காரணம் ட்ரம்ப் மிகப்பெரிய ப்ளேபாய். 70களில் ட்ரம்பின் டேட்டிங் ரெக்கார்ட் வேற லெவல் என்கிறார்கள் அவரது நண்பர்கள். அப்போதுதான் இவானாவையும் சந்திக்கிறார். காமோடோர் ஹோட்டல் மறுசீரமைப்பில் இவனாவின் பங்கு இருந்தது யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவரது பங்கு அளப்பறியது. இந்த ஹோட்டலை மீண்டும் திறந்தபோது யார் இதைச் செய்தது என்பவர்களுக்கு யாரோ ஒரு பெரிய பணக்காரரின் மகனாம் பெயர் ட்ரம்ப். இவ்வளவுதான் ட்ரம்பின் அறிமுகம். முதல் ப்ராஜெக்ட்டை வெற்றியோடு துவங்கினார் ட்ரம்ப்.

காதல் கசிந்துருகி திருமணம் செய்த முதல் மனைவி இவானாவுக்கு மூன்று குழந்தைகள் டொனால்டு ஜூனியர், இவான்கா மற்றும் எரிக். 1977ல் இவானாவை மணந்த ட்ரம்ப் 1992ல் விவாகரத்து செய்தார். 1993ல் மாப்லெஸை மணந்தார். அவருக்கு டிஃபானி என்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. 1999ல் அவருடனும் விவாகரத்து செய்தார். 2005-ம் ஆண்டு மெலனியாவை மணக்கிறார். இப்போது வரை அவருடன் தான் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு பாரோன் என்ற மகன் உள்ளார். இப்போது ட்ரம்பின் வர்த்தகத்தை மகனும், மருமகன் ஜெரார்டு க்யூஷ்னரும் கவனித்து வருகின்றனர், மகள் இவான்கா அதிபரின் ஆலோசகராக உள்ளார். ஆட்சியில் குடும்ப அரசியல் செய்கிறார் என்பதும் ட்ரம்ப் மீதான சர்ச்சைகளில் ஒன்று.

ட்ரம்பின் வர்த்தகம் என்பது ராக்கெட் வேகத்தில் வளர்ந்தது. ரியல் எஸ்டேட், நண்பருடன் சேர்ந்து ரெஸ்ட்லிங்மேனியா, அப்ரெண்டிஸ் டி.வி ஷோவின் தயாரிப்பாளர் என பல வேலைகளிலும் பணம் சம்பாதித்தார் ட்ரம்ப். 24*7  பணம் செய்வதையே தொழிலாக மாற்றினார். வளர்ச்சிக்கு நிகராக சர்ச்சைகளிலும் சிக்கினார். இன்றுவரை பல பாலியல் துன்புறுத்தல் புகார்கள் ட்ரம்ப் மீது உள்ளது.

இதுவரை அமெரிக்கா கண்டிராத ஒரு அதிபர் வேட்பாளர் என்றுதான் ட்ரம்ப் மக்கள் மத்தியில் பிராண்ட் செய்யப்பட்டார். அவர் ஒரு வியாபாரி அவர் எப்படி அதிபராவார் என்று உலகமே கேட்டது. அமெரிக்க முதலாளிகளின் நாடு. ட்ரம்ப் முதலாளியை அதிபராக்குவோம் என்று அதிபராக்கியது அமெரிக்கா. இதற்கு ட்ரம்ப் பயன்படுத்தியதெல்லாம் மூன்றே வார்த்தைகள் தான்.. வெற்றி (WIN), ஒப்பந்தங்கள்(DEAL) மற்றும் எல்லையில் சுவர் கட்டுவது (Build a Wall) 

ட்ரம்ப் முன் வைக்கும் பிரசாரங்களை சிலர் விமர்சனம் செய்யும்போது,  அது ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு சரி என்றே தோன்றியுள்ளது. அவர் கூறும் பொருளாதாரக் கொள்கையை ஏற்கவில்லை என்பவர்களுக்கு அவரது பதில் இதுதான். 'ஒரு காலத்தில் அமெரிக்காவின் பொருள்களால் உலகம் நிறைந்திருந்தது. இன்று உலகின் பொருள்களால் அமெரிக்கா நிறைந்துள்ளது என்று அமெரிக்காவின் பொருளாதாரம் - வேலைவாய்ப்பை ஒரே பிரசாரத்தில் காலி செய்தார். ஜான் ஆலிவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலாய்க்கப்பட்டார் ட்ரம்ப். அவரை அமெரிக்காவின் மிகப்பெரிய பிசினஸ்மேன் என்கிறார்கள் சிலர். எத்தனை பிசினஸ்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன தெரியுமா? 'மேக் டொனால்ட்  ட்ரம்ப் அகெய்ன்' என்று அவரது கோஷத்தை அவருக்கே திருப்பி கலாய்த்து 2 கோடி வீடியோ வியூஸை பெற்றார் ஜான் ஆலிவர். ஆனால், இதையெல்லாம் மக்கள் ரசித்தார்களே தவிர இவை ட்ரம்புக்கு எதிராக திரும்பவில்லை. இன்றும் ஆன்டி-ட்ரம்ப் மனநிலையில் அதிக விமர்சனங்கள் வந்தாலும் அமெரிக்காவுக்கு அதிபர் ட்ரம்ப்தான் என்று உரக்கச் சொன்னது அமெரிக்க அதிபர் தேர்தல். 

ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதும் 7 இஸ்லாமிய நாடுகளிலிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் வர தடைவிதித்தார். சட்டத்துக்குப் புறம்பாக புலம் பெயர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றார். சிலிக்கான் வேலியிலிருந்து மார்க் சக்கர்பெர்க், சுந்தர்பிச்சை என அனைவரும் எதிர்ப்புக்குரல் தெரிவித்தனர். ஒரே வார்த்தையில் ஆன்டி ட்ரம்ப் மனநிலையில் இருந்து மாறுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார். 

தவறான தகவல்களோடு பேசுவது, பொதுமேடையில் அநாகரீகமாக நடந்துகொள்வது, கைகுலுக்குவதில் சங்கடம் ஏற்படுத்துவது, ஃப்ரான்ஸ் அதிபரின் மனைவியைப் பார்த்து பிசிக்கல் ஷேப் நல்லா இருக்கு என்று கூறிவது என சர்ச்சையின் மொத்த உருவமாக இருக்கிறார் ட்ரம்ப். இன்னொரு பக்கம் உலகமே கண்டு நடுங்கிய வடகொரிய தலைவருடன் கெத்தாக மீட்டிங் நடத்தி உலகை மிரள வைக்கிறார். மோடியை பாராட்டுகிறார். அதேசமயம் இந்தியர்களுக்கு ஹெச்1பி விசா விஷயத்தில் செக் வைக்கிறார். ``என் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது'' என்று புரியாத புதிராகவே இருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ஒரு வழக்கத்தை மாற்றி அமைத்திருக்கிறார். வார் ரூம் என்ற அமைப்பு ஒரு நாளின் அமெரிக்காவின் சாதக, பாதகங்களை அதிபருக்கு எடுத்துச் சொல்லுமாம். அதற்கு வெறும் சாதகங்களைச் சொல்லுங்கள் போதும் என்று உத்தரவிட்டுள்ளார். மேக் அமெரிக்கா க்ரேட் எகெய்ன் என்கிறார். ட்ரம்புக்கு பாசிட்டிவ் மட்டுமே கண்ணில் தெரிய வேண்டும் என்கிறார். ஆனால், அவரைப் பற்றி நெகட்டிவ் அதிகமாக உள்ளது. வெளியில் வந்து நெகட்டிவ் பார்த்தால் மனம் மாறாலாம். ஆனால், ட்ரம்ப் அதிபரா.. அரசியல்வாதியா... என்றால் பதில் வேறு ஒன்றாகதான் இருக்கும். ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன். வடகொரிய சந்திப்பும் வர்த்தகமும், மார்க்கெட்டிங் உத்தியும் நிறைந்ததுதான் என்பது பலரது பார்வை. தங்க ஸ்பூனோடு பிறந்து தங்க ஸ்பூனோடு வாழும் ட்ரம்ப். வாழவழியற்ற அமெரிக்கர்களை பாகுபாடின்றி அணுக வேண்டும் என்பதுதான் அமெரிக்கர்கள் ட்ரம்பிடம் கேட்கும் பிறந்தநாள் ட்ரீட்... ஹாப்பி பர்த்டே பிரெஸிடேன்ட்.. ப்ளீஸ் மேக் அமெரிக்கா பீஸ் எகெய்ன் (Make America Peace Again) என்பதுதான் அமெரிக்கர்களின் பிறந்தநாள் வாழ்த்து... அமெரிக்க வாழ்த்துகளுக்கு செவிகொடுங்கள் வாழ்த்துக்கள் ட்ரம்ப்.