மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”

“சசிகலா, நடராஜன் இருவரின் உடலிலும் முகலாய ரத்தமே ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்திருந்தால் ஆங்கிலேயர் ஆட்சியையே வரவிடாமல் செய்திருப்பார்கள். அவ்வளவு சாமர்த்தியசாலிகள். நந்த வம்சத்தை கூண்டோடு அழித்த சாணக்கியன்கூட அரசியல் அரிச்சுவடியை சசிகலாவிடமிருந்துதான் அறிந்துகொள்ள வேண்டும்...”

- 20 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிச் சொன்னவர் ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரி ஜான். 1991 - 1996 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மன்னார்குடி குடும்பத்தின் கொட்டம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தபோதுதான் இப்படிக் கொதிப்பைக் கொட்டியிருந்தார் வலம்புரி ஜான். 

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”

ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுக்க, அரசியல் பாடம் சொல்லித் தர எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டிருந்தார் வலம்புரி ஜான். நாடாளுமன்றத்துக்கு ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் அனுப்பி வைத்தபோது, அவருக்கு உறுதுணையாக இருப்பதற்காக வலம்புரி ஜானையும் சேர்த்தே ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார் எம்.ஜி.ஆர். நாடாளுமன்ற நடைமுறைகள், உரை தயாரிப்பு என நிறைய விஷயங்களை ஜெயலலிதாவுக்கு வலம்புரி ஜான் சொல்லிக் கொடுத்தார்.

ஜெயலலிதா நல்ல எழுத்தாளரும்கூட என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அவரின் எழுத்தாற்றலை செழுமைப்படுத்தியதில் வலம்புரி ஜானுக்கும் முக்கிய பங்கு உண்டு. ‘எனக்குப் பிடித்த’ என்ற தலைப்பில் ‘தாய்’ வார இதழில் ஒரு தொடரை எழுதும் சந்தர்ப்பத்தை ஜெயலலிதாவுக்காக ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் வலம்புரி ஜான். ‘எனக்குப் பிடித்த இடம்... எனக்குப் பிடித்த மொழி... எனக்குப் பிடித்த பாடல்... இப்படித் தனக்குப் பிடித்த விஷயங்களை எல்லாம் அந்தத் தொடரில் ஜெயலலிதா கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் ‘நெஞ்சினிலே ஒரு கனல்’ என்ற தொடரையும் இன்னொரு பத்திரிகையில் ஜெயலலிதா எழுதிக்கொண்டிருந்தார். அந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை ‘தாய்’ இதழில் ஜெயலலிதா எழுத வலம்புரி ஜான் மேடை போட்டுக் கொடுத்தார். இப்படி ஜெயலலிதாவின் எழுத்துகள் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. அதோடு ஜெயலலிதா வுக்கு வேண்டிய புத்தகங்களை எல்லாம் அவர் வாங்கிக் கொடுத்தார்.

தான் எழுதிய எல்லாவற்றையும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட ஆசைப்பட்டார் ஜெயலலிதா. அந்த விருப்பத்தை வலம்புரி ஜானிடம் தெரிவித்தார். ‘நீயின்றி நானில்லை’, ‘எண்ணங்கள் சில’, ‘மனதைத் தொட்ட மலர்கள்’ என ஜெயலலிதா எழுதிய மூன்று புத்தகங்களை தன்னுடைய ‘கவிதா பானு’ பதிப்பகம் மூலம் வெளியிட்டார் ஜான்.

அதில் ‘எண்ணங்கள் சில’ புத்தகத்துக்கு ஜெயலலிதா எழுதிய முன்னுரை இதுதான்... ‘வலம்புரி ஜான் சீரிய சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர். எனக்கு எழுத்தாளர் என்கிற அந்தஸ்தை அளித்தவர். கலீல் ஜிப்ரானின் கவிதையை மொழிபெயர்த்தபோது பாராட்டி என்னை உற்சாகப்படுத்தியவர்.’ ஜெயலலிதா எழுதிய அந்த மூன்று புத்தகங்களையும் விற்றுத் தீர்க்கவே வலம்புரி ஜானுக்கு மூன்று ஆண்டுகள் ஆகின. இப்படி ஜெயலலிதாவுக்கு எல்லா வகையிலும் உதவிய வலம்புரி ஜானை சசிகலாவுக்காகத் தூக்கி அடித்தார் ஜெயலலிதா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 9 - “வரலாற்றின் வணக்கத்துக்கு உரியவர் சசிகலா!”

ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுத்து... மேடையில் பேச பாயின்ட் சொல்லித் தந்து... நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்குத் தேவையான தகவல்களையும் திரட்டிக் கொடுத்து... இப்படி ஜெயலலிதாவுக்கு எல்லா வகையிலும் உதவக்கூடிய, எப்போதும் உறுதுணையாய் இருக்கக்கூடிய ஒருவரை விட்டு வைப்பார்களா? சசிகலாவின் அரசியல் சதுரங்கத்தில் வலம்புரி ஜானும் வீழ்ந்து போனார்.

தான் வீழ்த்தப்பட்டதை வலம்புரி ஜான் எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா? ‘ஜெயலலிதா அப்போது எம்.ஜி.ஆர் காதுகளை குற்றச்சாட்டுகளால் நிரப்பினார். இப்போது தனது காதுகளை சசிகலாவின் கோள்மூட்டல் களால் நிரப்பிக்கொள்கிறார்!’

கொள்கை பரப்புச் செயலாளராக பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதா பங்கேற்றபோது, எம்.ஜி.ஆருக்கு சேர்ந்ததைப் போலவே ஜெயலலிதாவுக்கும் கூட்டம் சேர்ந்தது. அதைப் பார்த்து ஜெயலலிதா மகிழ்ந்து போனார். ஆனால், ‘ஜெ. தன்னை ஓவர்டேக் செய்து விடுவாரோ’ என எம்.ஜி.ஆருக்கு சந்தேகம் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜெயலலிதாவைக் கண்காணிக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது சசிகலா பற்றிய தகவல்கள் எம்.ஜி.ஆருக்குக் கிடைக்க, ஒரு பெண்ணை வைத்தே இன்னொரு பெண்ணை உளவு பார்த்தார் எம்.ஜி.ஆர். ‘போயஸ் கார்டனில் நான் பார்த்த சசிகலாவை தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர் அலுவலகத்திலும் எம்.ஜி.ஆர் வீடு இருக்கும் ராமாவரம் தோட்டத்திலும் பார்த்திருக்கிறேன்’ எனச் சொல்லும் வலம்புரி ஜான், ‘எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் ஜெயலலிதாவையும் கண்காணித்த சசிகலா வரலாற்றின் வணக்கத்துக்கே உரியவர்’ என்கிறார்.

- அடுத்த இதழில்

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
படம்: சு.குமரேசன்