Published:Updated:

``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா?!" கதறும் அற்புதம்மாள்

``இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் நம்பிக்கைய இழந்ததில்லே. இப்போ தோணுது. இனியும் என் புள்ளை என்கிட்ட வருவான்; சந்தோஷமா வாழுவான் என்கிற நம்பிக்கைப் போயிருச்சு. போங்கய்யா நீங்களும் உங்க அரசாங்கமும். என்னையும் என் புள்ளை வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமா செதைச்சுட்டீங்களேய்யா”

``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா?!" கதறும் அற்புதம்மாள்
``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா?!" கதறும் அற்புதம்மாள்

``ப்பா, என்னப்பா நடக்குது? காலையிலிருந்தே புள்ளைகள் போன் போட்டு அறிவு விடுதலைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிச்சுட்டாரு. இனிமே வெளியவர வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்களே உண்மையா? மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன்!''

 27 வருடங்களாக சிறையிலிருக்கும் தன் மகனின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாசத் தாயின் வேதனைக் குரல். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்களில் மீண்டும் அற்புதம்மாளே அழைத்தார். 

``நான் வெளியூருக்கு வந்திருக்கேன்ப்பா. இங்கே கேபிள் கனெக்‌ஷன் கிடையாது. அதனால், டி.விகூட பார்க்க முடியலை. காலையில்தான் புள்ளைகள் போனில் விஷயத்தைச் சொன்னாங்க. என்ன பதிலுப்பா இது? ஒரு ஜனாதிபதி சொல்லக்கூடிய பதிலா இது? நேத்துவரை என் புள்ளை ஒருநாள் திரும்பி வருவான்னு நம்பிக்கையில் இருந்தேன். அந்த நம்பிக்கையையும் இந்த அரசு கொன்னுடுச்சே. தப்பு செய்யாத குழந்தையை இந்த அரசாங்கத்துக்கு காவு கொடுத்துட்டு மருகிக்கிட்டுக் கெடக்குறேன். ரெண்டு மாசம் பரோலில் வந்திருந்தப்பவும் அவன் நண்பர்கள் எல்லாம் வந்து பாத்துட்டுப் போனாங்க. 'இது என் பொண்ணுடா. ப்ளஸ் டூ போறா. இவன் என் பையன் காலேஜ் படிக்கிறான்'னு ஒவ்வொருத்தரும் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அப்போ நான் மட்டும் சந்தோஷமா இல்லேப்பா. 'ஏம்மா ஒரு மாதிரி இருக்கே?'னு அறிவு கேட்டான். 'ஒண்ணுமில்லேப்பா. உடம்புக்கு சுகமில்லே'னு சமாளிச்சுட்டேன். 26 வருஷமா மக்க மனுசரோடு பழகாம, திடீர்னு எல்லா மகிழ்ச்சியையும் அனுபவிச்சுட்டு திரும்பவும் ஜெயிலுக்குள்ளே புள்ளை ஏங்குவானேன்னு என் மனசு கெடந்து அடிச்சுக்கிச்சு.

பரோல் முடிஞ்சு போகும்போது காவல்துறை அதிகாரிகள், 'இந்த 60 நாளில் எத்தனையோ தலைவர்களும் பொதுமக்களும் வந்து போனங்க. ஆனால், ஒரு சின்னப் பிரச்னைகூட உங்க பையன் மூலமா வரலை. ஒரு கைதியால் சிறையிலும், பரோலில் வந்திருக்கும்போதும் இப்படி பிரச்னை இல்லாமல் இருக்கிறது ரொம்ப ஆச்சர்யம்மா. உங்க பையனை நல்லா வளர்த்துருக்கீங்க'னு சொல்லிட்டுப் போனாங்க. அப்படிப்பட்ட புள்ளையால் இந்த நாட்டுக்கே பிரச்னையாகிடும்னு இந்த அரசாங்கம் பயப்படறது எந்த வகையில் நியாயம்?

என் புள்ளை அவன் இளமை முழுவதையும் இழந்துட்டான். இதுக்கு மேலே இழக்கிறதுக்கு என்ன இருக்கு? அவனால் பிரச்னை வரும். வில்லங்கமாகும்னு. வெளியில் விடமுடியாதுன்னு பயந்தீங்கன்னா, இந்த அரசாங்கத்துக்கிட்ட நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன் என் புள்ளையைக் கொன்னுடுங்க. மரண தண்டனை கொடுத்துடுங்க. கொஞ்சம் கொஞ்சமா சாவறதுக்கு மொத்தமா போய்ச் சேர்ந்துடட்டும். நான் கொஞ்ச நாளைக்குப் புலம்பிட்டிருப்பேன். பைத்தியக்காரி மாதிரி தெருத் தெருவா சுத்திட்டிருப்பேன். அதனால், யாருக்கு என்ன இழப்பு? உங்க அரசாங்கமும் உங்க நாடும் நிம்மதியா இருந்துட்டுப் போகட்டும். இத்தனை வருஷத்துல ஒருநாளும் நான் நம்பிக்கைய இழந்ததில்லே. இப்போ தோணுது. இனியும் என் புள்ளை என்கிட்ட வருவான்; சந்தோஷமா வாழுவான் என்கிற நம்பிக்கைப் போயிருச்சு. போங்கய்யா நீங்களும் உங்க அரசாங்கமும். என்னையும் என் புள்ளை வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமா செதைச்சுட்டீங்களேய்யா” 

தொண்டை அடைக்க வெடித்து அழுகிறார் அற்புதம்மாள். அந்த அழுகுரல் இந்த அரசாங்கத்தையும் ஆள்பவர்களையும் உறக்கத்திலும் மிரட்டும்!