Published:Updated:

பொங்கலில் புதுக் கட்சி!

பொளந்து கட்டும் போட்டி பா.ம.க.

##~##
பொங்கலில் புதுக் கட்சி!

பா.ம.க-வில் இருந்து அண்மையில் நீக்கப்​பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான வேல்முருகனுக்கு ஆதரவாக, பல திசைகளில் இருந்தும் ஆதரவுக் கரங்கள் நீள்கின்றன.  சேலம் வசந்தம் ஹோட்டலில் கடந்த 12-ம் தேதி, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான காவேரி, காமராஜ் தலைமையில் மாற்றுக் கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய காவேரி எடுத்த எடுப்பிலேயே, '' 'இந்தக் கட்சிக்காரங்களுக்கு (பா.ம.க.தான்) வேற வேலையே கிடையாது. காலையில் தூங்கி எழுந்திருச்சா... ஜாதி... கட்சினு சொல்லி வீட்டுக்கு வந்து உட்கார்ந்துக்கிறாங்க. உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையாப்பா..?’னு கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் எங்களையும், அவரது அப்பா ராமதாஸையும் திட்டுவார் அன்புமணி. இன்றைக்கு அவர்தான் அந்தக் கட்சியோட தூண். அப்புறம் எப்படி அந்தக் கட்சி விளங்கும்னு சொல்லுங்க பார்ப்போம்...'' என அதிரடியாக வெடித்தவர் தொடர்ந்து பொரிந்தார். ''இந்தக் கூட்டம் பா.ம.க-வுக்குப் போட்டிக் கூட்டம் கிடையாது. ஏன் தெரியுமா? அப்படி ஒரு கட்சியே இப்போது இல்லை.  இது ஒரு புதிய கட்சி தொடங்குவதற்கு அடித்தளம் போடும் கூட்டம். கொள்கை, கோட்பாடுனு இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று பணம் மட்டும்தான் முக்கியம்! ஒவ்வொரு தேர்தலிலும் கோடி கோடியாகப் பணத்தை வாங்கிட்டுத்தானே அப்பனும் மவனும் ஸீட் கொடுக்கிறாங்க. பா.ம.க-வைத் தன்னோட குடும்பமும் வாரிசுகளும் மட்டும்தான் ஆளணும்னு நினைக்கிறார் ராமதாஸ். அதனாலதான், வயசு வித்தியாசம் பார்க்காம எல்லோரும் தன் பையனை 'சின்னய்யா’னு கூப்பிடச் சொல்றாரு. கோ.க.மணி இருக்காரே... அவர் ஒரு கோவில் மணி. மணியை அடிச்சாத்தானே சத்தம் வரும்? அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். மணியும் காடுவெட்டி குருவும் ராமதாஸுக்குக் கூட்டாளிகள். அதனாலதான், சாதாரண ஸ்கூல் வாத்தியாரா இருந்த மணியோட பையன் இன்னிக்கு சினிமா ஃபைனான்சியராகி இருக்கார். உண்மையைப் பேசினால் எப்பவுமே 'அய்யா’வுக்குப் பிடிக்காது. வேல்முருகனும் உண்மையா இருக்கணும்னு நினைச்சதால்தான், இன்னிக்கு அவர் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க. வேல்முருகன் தலைமையில் நாம் ஒன்று கூடுவோம். யார் நிஜமான பா.ம.க. என்பதைத் தைலாபுரம் குடும்பத்துக்குக் காட்டுவோம்'' என்று சூட்டைக் கிளப்பினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொங்கலில் புதுக் கட்சி!
பொங்கலில் புதுக் கட்சி!

அடுத்து, தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜ் எழுந்து, ''இனி நமது தலைவர் வேல்முருகன்தான். அவரது தலைமையில் நாம் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு மாவட்டமாக அவர் வரப்போகிறார். மக்களைச் சந்திக்கப்போகிறார். ராமதாஸ் குடும்பம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றியது என்பதை பா.ம.க-வினரிடமும் பொதுமக்களிடமும் புட்டுப்புட்டுவைக்கப் போகிறார். பா.ம.க-வை பத்தியோ அதனுடைய கொள்கையை பத்தியோ தெரியாமல் இருக்கும் அன்புமணியைவிட எங்கள் வேல்முருகன் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். இனி பா.ம.க-வும் எங்களுடையதுதான்; மாம்பழச் சின்னமும் எங்களுடையதுதான். அதைக் கைப்பற்றாமல் ஓய மாட்டோம்'' என்று சீறினார்.

முன்னாள் எம்.பி-யான பு.தா.இளங்கோவன், அவரது சகோதரர் பு.தா.அருள்மொழி ஆகியோரை யும்

பொங்கலில் புதுக் கட்சி!

வேல்முருகன் சந்தித்துப் பேசி இருக்கிறார். பு.தா.இளங்கோவனிடம் பேசினோம். ''1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தும், 1989-ல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தும், தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் தாண்டி யாரும் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கக் கூடாது என்பதில் ராமதாஸ் தெளிவாக இருப்பார். அப்படி யாராவது இருந்தால், அவர்களை வெளியேற்றிவிடுவார். அவர் செய்யும் தவறுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ யாராவது சுட்டிக் காட்டினால், அவர்கள் அத்தோடு தொலைந்தார்கள். வேல்முருகனுக்கும் அதுதான் நடந்திருக்கிறது. கட்சிக்காக உழைக்கும் யாரையும் ராமதாஸுக்குப் பிடிக்காது. சுய மரியாதை உள்ள யாரும் அந்தக் கட்சியில் இருக்க மாட்டார்கள். ராமதாஸின் பா.ம.க-வினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. வேல்முருகனும் நானும் அதைத்தான் பேசி இருக்கிறோம். கூடிய சீக்கிரமே அனைவரையும் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்போம். வரும் 18-ம் தேதிக்குப் பிறகு பூதாகரமாக வெடிக்கப்போகும் விஷயங்களை நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்...'' என்று பூடகமாகச் சொன்னார்.

வன்னியர் சமுதாய மக்களின் நாயகனாக விளங்கும் வேல்முருகன் என்ன சொல்கிறார்? ''ராமதாஸுக்கு முன்னாடி ஏ.கே.நடராஜன் வன்னியம் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே நானும் அதில் இணைந்திருந்தேன். இந்த இனத்துக்காக அவர் செய்த துரோகங்களை ஆதாரத்தோடு என்னால் பட்டியல் போட முடியும். புதிய கட்சி தொடங்குவதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள நம் உறவுகள் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன். தமிழர்களுக்கு நிச்சயமாக தை பிறந்தால் வழி பிறக்கும். நான் ஏற்கெனவே, மாவீரர் தினம், கூடங்குளம் பிரச்னை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக உறுதி கொடுத்திருக்கிறேன். அதற்காக, நேரம் இல்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன். ஆகவே, எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம், தை மாதத்தில் கண்டிப்பாக நடக்கும்.'' என்று உறுதியாகச் சொன்னார்.

தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு ஊராகப் போய் அதிருப்தியில் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகளிடமும் பேசுவதற்காக டூர் புரோகிராமைத் தயார் செய்துவிட்டாராம் வேல்முருகன்.

தைலாபுரத்தின் பதிலடியையும் கவனிப்போம்!

- கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார், ஜெ.முருகன்  

 'கொசுவை அடித்தோம்!’

'கடலூர் மாவட்ட பா.ம.க. கட்சி அலுவலகம் எனக்குத்தான் சொந்தம். தைரியம் இருந்தால் ஐயாவோ, மணியோ அல்லது குருவோ இந்த மண்ணில் கால் வைத்துவிட்டு அலுவலகத்தின் சாவியை வாங்கிக்கொள்ளட்டும்’ என வேல்​முருகன் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்​தார். ராமதாஸ் ஆதரவாளர்களோ கட்சி அலுவ​லகத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி காவல் துறையில் புகார் செய்தனர்.

கடலூரில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருக்க, சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட் கிரன் குராலா உத்தரவின் பேரில், வட்டாட்சியர் எழிலன் மூலம் பா.ம.க. அலுவல​கத்துக்கு சீல் வைத்தனர். அலுவ​லகத்​தின் ஒரிஜினல் டாக்குமென்டை நீதிமன்​றத்தில் சரண்டர் செய்துவிட்டு சாவியை வாங்கிக்​கொள்​ளுங்கள் என வட்டாட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில்தான், வேல்முருகன் சவாலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என, கடந்த 13-ம் தேதி கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டி இருந்தார் ராமதாஸ். கூட்டத்துக்கு அவரே தலைமையும் ஏற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வேல்முருகனைத் திட்டித் தீர்த்தனர். எந்தச் சலனமும் இல்லாமல் கடைசியாக மைக் பிடித்தார் ராமதாஸ். ''இந்தக் கூட்டத்துக்கு நான் வர வேண்டுமா என முதலில் யோசித்தேன். நிர்வாகிகளை மட்டும் அனுப்​பலாம் என நினைத்தேன். ஆனால், அது சரியா வராது என்றுதான் புறப்பட்டு வந்தேன். பிஞ்சிலேயே பழுத்தவர்கள் மக்களுக்குப் பயன்பட மாட்டார்கள் என்றுதான் தூக்கிப் போட்டுவிட்டோம். கொசு கடிச்சா, யாராவது வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போமா? கடிச்சது... தட்டினோம்... விழுந்துடுச்சு. அதுக்​காக வருத்தப்பட வேண்டியது இல்லை. பா.ம.க. ஒரு ஆலமரம். இதில், எந்தப் பறவைகளும் வந்து தங்கலாம்; பழங்களைத் தின்னலாம்...'' என்று எதையோ மறைமுகமாகப் பேசி முடித்தார்.

''கடலூர் மாவட்டப் பொதுக் குழு என்று பெயர் போட்டு​விட்டு பல மாவட்டத்தில் இருந்தும் ஆட்களைக் கொண்டுவந்துட்டாரு ராமதாஸ்'' என்று அங்கே இருந்தவர்களே சொல்லிக்​கொண்டதைக் கவனிக்க முடிந்தது!

- க.பூபாலன்