Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 55: 29.6.88

பழசு இன்றும் புதுசு

யங்கரமான ஒரு திரு​விழா... 2,000-க்கும் மேற்பட்ட எருமைக் கடாக்களை ஒரே

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இடத்​தில் துடிக்கத் துடிக்கக் கழுத்துகள் துண்டாகுமாறு வெட்டி, அவற்றை அப்படியே குழியில் தள்ளிவிடும் கொடு​மை. தாங்க முடியாத வேதனை​யோடு, தடுக்க முடியாத ஆதங்கத்தோடு இந்தக் காட்சிகளை எல்லாம் நாம் நேரில் பார்த்தோம்...

 திருச்சியில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்​தில் பாளை​யத்​துக்கு அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமம்... இங்கே உள்ள துர்க்​கையம்மன் கோயி​லில்தான் இந்தத் திருவிழா. ஜூன் மாதம் 16-ம் தேதி, விகடன் வாசகர் ஒருவர் நம்மை மேட்டுப்​பட்டிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

காலையில் இருந்தே லாரிகள், வேன்கள் மூல​மாகவும், சுற்றியுள்ள கிராமங்​களில் இருந்து வண்டி கட்டிக்கொண்டும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். கிட்டத்தட்ட 30,000 பேருக்கு மேல் இருக்கும்.

ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் திருவிழா இது. ''சாமி அப்படித்​தான் வரம் கொடுத்​திருக்கு. ஏழு வருஷத்துக்கு ஒரு தரம்தான் நடத்தணும்'' என்று காரணம் சொன்னார் ஒருவர்.

பழசு இன்றும் புதுசு

புதிதாக முளைத்த கடைகள்... குட்டி சர்க்கஸ் கூடாரங்​கள்... 'போட்டோ புடிக்கும் இடங்கள்’... என எங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலம்.

ஓர் இடத்தில் ஆயிரக்கணக்கான எருமைக் கடாக்கள் 'தங்களின் உயிர் இன்று பறிக்கப்படப்போகிறது’ என்பது தெரியாமல் நின்றுகொண்டும், நடந்துகொண்டும் இருந்தன. மேலும் மேலும், எருமைக் கடாக்கள் வந்துகொண்டே இருந்தன.

அன்று காலை 8 மணிக்கே எல்லாவிதமான ஏற்பாடுகளும் ஆரம்பமாகின...

கோயிலுக்கு முன்னால் இருந்த ஆலமரத்தின் அடியில் சிலர் மண்வெட்டி சமாசாரங்களோடு குழி தோண்ட ஆரம்பிக்க... மண்டை ஓடுகள், கொம்புகள் என்று எலும்புக்கூடுகள் மயம்... கடந்த முறை (ஏழு ஆண்டுகளுக்கு முன்) நடந்த திருவிழாவில் புதைக்கப்பட்ட எருமை கடாக்களின் மிச்சங்கள்தான் இவை எல்லாம்!

ஆயிற்று! குழி ரெடி...

''ஒவ்வொரு தடவையும் கடா வெட்டறத்துக்கு முன்னாடி, குழியில் ஒரு எலுமிச்சம்பழமும் பூவும் வைப்பாங்க. அடுத்த தடவை தோண்டும்போதும் அது வெச்சமாதிரி அப்படியே இருக்கும்'' என்று பக்கத்தில் இருந்த ஒருவர் 'ரீல்’ சுற்றினார். நாம் விசாரித்தபோது அப்படி எதுவும் இந்த முறை எடுத்ததாக யாரும் சொல்லவில்லை.

மணி 10... கையில் நீளமான சவுக்குக் கட்டைகளையும் கம்புகளையும் ஏந்திக்கொண்டு பலர் (கிட்டத்தட்ட 200 பேர் இருக்கும்) அந்த இடத்தில் பிரசன்னமானார்கள், உடம்பில் சட்டை இல்லாமல். அவர்கள் இடுப்பில் அண்டர்வேர் அல்லது வேட்டியை மடித்துக் கட்டியிருந்தனர். ''ஆ... ஊ'' என்ற ஆரவாரம் வானை எட்டியது.

திடீரென ''தள்ளு... தள்ளு'' என்று காக்கிச் சட்டைகள் நம்மைத் தள்ள, அந்த சவுக்குக் கட்டை வைத்திருந்தவர்கள் மேளதாளத்துடன் கோயிலைச் சுற்றிக்கொண்டு ஓடி வந்தார்கள். சிலரின் கையில் கட்டைக்குப் பதில் நீளமான ஈட்டி.

பழசு இன்றும் புதுசு

(''திருவிழாவைப்பத்தி பேப்பர்ல எல்லாம் எழுதக் கூடாது. எழுதினா, அம்மா கோவிச்சுக்கும்... 'போட்டோ’ல்லாம் புடிக்கக் கூடாது.'' அங்கே அறிமுகமான ஒருவர் கண்களை உருட்டி​யவாறு நமக்குத் தந்த அட்வைஸ். அதனால், பயந்து பயந்து யாருக்கும் தெரியாமலேயே 'கிளிக்’க வேண்டி​யிருந்தது.)

நேரம் 11.45-ஐ நெருங்க, மேடை மாதிரி போடப்பட்டு இருந்த ஒன்றில் மாலை போட்டுக்கொண்டு உட்கார்ந்​திருந்த பூசாரி விபூதியை அள்ளி நாலாபுறமும் வீசினார்.

கீழே, கையில் நீ...ளமான அரி​வாள் பளபளக்க, நான்கு பேர் ஒரே மாதிரியான ஜிகினா போன்ற உடை அணிந்து, தயாராய் இருந்​தனர். (அரிவாளைத் தீட்டிக் கொடுக்க அருகிலேயே சாணை பிடிக்கும் வசதி வேறு!)

கூட்டத்தின் ஆரவாரம் அதிகரிக்க, கூச்சல்களுக்கு இடையே பரிதாபமாக விழித்துக்​கொண்டு இருந்த சிறிய எருமைக் கடா ஒன்று கயிற்றால் கட்டி இழுத்து வரப்​பட்டது. 'தரதர’வென்று இழுத்து வந்து குழிக்கு முன்னால் இருந்த வெட்டவெளியில் நிறுத்தப்​பட்டு, நாலாப் பக்கங்களும் கயிற்றால் இழுக்கப்பட, திமிறி... பின் கால் தடுக்கிக் கீழே விழுந்தது. மீண்டும் எழுந்து திமிறியது அந்த எருமைக் கடா.

அரிவாள் ஏந்தியவர்களில் ஒருவர் தன் கையில் இருந்த நீளமான அரிவாளை ஓங்கி, திமிறிய அந்த ஜீவனின் கழுத்தில் பளீரென்று இறக்க... ஐயோ...! பார்த்துக்கொண்டு நின்ற நமக்கு உடல் பதறியது. அந்த அப்பாவி ஜீவன் வேதனையில் துடிக்க... மறுபடியும் அடுத்த வெட்டு... ரத்தம் சிவப்பாகப் பரவித் தரையை ஈரமாக்க, தலை துண்டாகித் தனியாக விழவும் 'ஹோ’வென்ற உற்சாகத்துடன் 'பக்தர் கும்பல்’ ஆரவாரம் செய்ய, தரையில் அந்த மிச்ச உடல் கடைசியாகத் துடித்துக்கொண்டு இருந்தது.

வெட்டப்பட்ட தலையைத் தன் தலையில் சுமந்துகொண்டு ஒரு பக்தர் குழியைச் சுற்றி வலம் வர, அவரின் முகம், உடல் எல்லாம் ரத்த மயம். சுற்றி முடித்துவிட்டு அந்தத் தலையைக் குழிக்குள் எறிய, தனியே துடித்த உடலையும் துடிப்பு அடங்குவதற்குள் அந்தக் குழிக்குள்ளேயே தள்ள... முதல் பலி முடிந்தது.

இதற்குள், அடுத்த கடா தயாராய் இழுத்துக் கொண்டு​வரப்பட, சுற்றி நின்ற பக்தர்கள் தங்கள் கையில் இருந்த சவுக்குக் கட்டையால் மாறி மாறி அதை அடித்தனர். நடக்க முடியாமல் அலறித் தள்ளாடிய அந்தக் கடாவை இழுத்துத் தரையில் தள்ளிக் கயிற்றால் இழுத்துத் தரையில் தள்ளிக் கயிற்றால் இழுத்துப் பிடிக்க... மறுபடியும் அரிவாள் மேலே சென்றது... மறுபடி கீழே ரத்தம் கொப்பளித்துத் தரையை நனைத்தது. மறுபடியும் தலை ஊர்வலம் - உடல் குழிக்குள் தள்ளப்பட்டது.

சில கடாக்கள் ஓரிரண்டு வெட்டுக்களிலேயே தங்கள் தலையை இழக்க, இன்னும் சில, 30 வெட்டு வெட்டிய பின்னரும் அப்படியே துண்டாகாமல் இருந்தன. ஒவ்வொரு முறையும் கடைசியாக அவை துடித்த துடிப்பு... நம்மால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நம் கால்கள் துவள ஆரம்பித்தன.

பழசு இன்றும் புதுசு

அந்தக் குழிக்குள்ளே உடல்களும் தலைகளும் தனித்தனியாகத் துடித்துக்கொண்டு இருந்த காட்சி கல் நெஞ்சர்களைக்கூட ஒரு கணம் கலங்கடிக்கும். ஆனால், பக்தர்கள் தங்கள் வேலையைக் கடமையாகச் செய்துகொண்டு இருந்தனர். பொது​மக்கள் பக்கம் இருந்து உப்புப் பொட்டலங்கள் குழியை நோக்கிப் பறந்தன. (வழக்கமாம்!)

சுமார் அரை மணி நேரம் ஆகியி​ருக்கும்... திடீரென, இழுத்துக்கொண்டு வரப்பட்ட ஒரு கடா திமிறிக்கொண்டு கூட்டத்துக்குள் புகுந்து ஓட, கூட்டம் அலறிக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து குழந்தைகள் கால்களுக்குள் மிதிபட, அங்கே பெரிய கூச்சல் சில நிமிடங்களுக்கு. கடாவைத் துரத்திக்​கொண்டு பக்தர்கள் ஓட, ஒரு பந்தலில் கடா புகுந்து ஓட, பந்தல் சரிந்து ஒரு பெண்ணின் கால் முறிந்தது. அவசர அவசரமாக அவரை வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றார்கள். எப்படியாவது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த அந்த ஜீவன், கடைசியாய் இவர்கள் கைகளில் சிக்க, தங்கள் வெறி எல்லாம் தீரும் வரை அதைச் சவுக்குக் கட்டைகளால் அடித்த பிறகு, பலியிடும் இடத்துக்குக் கொண்டுவரப்பட... கடைசியில் அந்தக் கடாவால் தப்ப முடியவில்லை!

இடையிடையே கடாக்களின் தலை​யை ரத்தம் சொட்டச் சொட்டச் சுமந்துகொண்டு ஆடியவர்கள், வேண்டும் என்றே பொதுமக்கள் பக்கம் வந்து அவர்களின் மேலே போட்டுவிடுவது போல் பயமுறுத்த, அலறிய பொதுமக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பின்வாங்கினர். உற்சாகம் தலைக்கேற, மேலும் மேலும் அவர்கள் தலையைவைத்துப் பயமுறுத்துவதைச் சுற்றி நின்ற போலீஸ்காரர்கள் சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். (கண்ணாடி அணிந்த போலீஸ்காரர் ஒருவர் மீது ஒரு முறை ரத்த அபிஷேகம் நடக்க, அவர் பதறிக்கொண்டு யூனிஃபார்மை உதறியவாறு நின்றதைக் கண்டு பொதுமக்கள்  சிரித்தார்கள்!)

நேரம் ஆக ஆக... அந்தக் குழிக்குள், வெட்டப்பட்ட தலைகளும் உடல்களும் விழுந்துகொண்டே இருந்தன.அந்த இடத்தில் மண்ணின் நிறமே காணா​மல் போய், சிவப்பாக ரத்தக் குழம்பு தேங்கிப் போய்ப் பயங்கரத்தைத் தோற்று​வித்தது. வேக வேகமாக உயிர்கள் பறிபோய்க்கொண்டு இருந்தன.

ஒரு சின்ன ஆச்சரியம் - அவ்வளவு ரத்தம் இருந்தும், ஒரு காக்கைகூட வரவில்லை. ஒரு ஈ கூட அந்தப் பகுதியிலேயே இல்லை!

''அதெல்லாம் ஆத்தா மகிமை. ஈ, காக்கா கிட்ட அண்டாது. நாய், நரி எது நெருங்கினாலும் அப்படியே செத்து விழுந்திடும்'' என்று  முதியவர் ஒருவர் விளக்கம் தந்தார்.

அரிவாளை அடிக்கடி மாற்றிக் கூர்மை​யாக்கித் தந்துகொண்டே இருந்தனர். கிட்டத்தட்ட 2,000 எருமைக் கடாக்கள் அன்று தங்களின் உயிர்களைப் பறிகொடுத்​தன. குழி நிரம்பி, அதற்கு மேலும் மேலும் போட்டுக்கொண்டே இருக்க, கண்களுக்கு முன்னால் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொன்று குவித்தனர் உற்சாகத்துடன்.

யாராவது தலைப்பாகை அணிந்திருக்கக் கண்டால், உடனடியாக அந்தத் துண்டு​களைப் பறித்து, வெட்டிய கடாக்களுடன் குழிக்குள் எறிந்தனர்.

ஒரு மாத காலத்துக்கு இந்தக் குழியை மூடாமல் அப்படியே வைத்திருப்பார்களாம். அதற்குப் பின் மூடிவிடுவார்களாம்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின்தான், அந்தக் குழி, அன்று காலையில் நடந்தது போல் மறுபடி தோண்டப்படுமாம்.

காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி, இரவு வரை தொடர்ந்தது. ரத்தக் குளியலில் நனைந்த கும்பல் ஆரவாரத்துடன் களைத்து ஓய்ந்தது.

இதே போன்று எருமைக் கடா வெட்டும் திருவிழாக்கள் இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடக்குமாம். ஆனால், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வெட்டப்படுவது இங்குதான்.

பாதுகாப்புக்கு வந்திருந்த மணப்பாறை இன்ஸ்​பெக்டர் ஜெகவீரபாண்டியனைச் சந்தித்தோம்...

''ஏன் இம்மாதிரி நிகழ்ச்சிகளைத் தடை செய்வதில்லை?'' என்றோம்.

''யாருமே தடுக்க முயற்சிக்கலை... வழக்கமா மத்த இடங்கள்ல ஆடு, கோழி வெட்டுவாங்க. இங்கே எருமைக் கடா... அதுதான் வித்தியாசம்.'' என்றார்.

நாம் கேள்விப்பட்டதோ வேறு. கடந்த முறை அரசு இதைத் தடுத்துவிட்டதாம். ஆனால், போலீஸ் தடுப்பையும் மீறி 'நடத்தியே தீருவோம்’ என்று ஊர்க்காரர்கள் பிடிவாதம் பிடிக்கவும், வேறு வழி இல்லாமல் அனுமதித்துவிட்டார்களாம்.

அந்த இடத்தில் துடித்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த அப்பாவி ஜீவன்கள் கண் முன் வந்து மனத்தை என்னவோ செய்தன...

கண்டிப்பாக, தான் படைத்த உயிர்களை எந்தக் கடவுளும் இப்படிப் பலி கேட்க மாட்டார்!

- து.கணேசன்