Published:Updated:

அணை பாதுகாப்புச் சட்டமும்... ஆபத்துகளும்! ஜெ. வழியில் எடப்பாடி பழனிசாமி

அணை பாதுகாப்புச் சட்டமும்... ஆபத்துகளும்! ஜெ. வழியில் எடப்பாடி பழனிசாமி
அணை பாதுகாப்புச் சட்டமும்... ஆபத்துகளும்! ஜெ. வழியில் எடப்பாடி பழனிசாமி

அணை பாதுகாப்பு மசோதாவை (2018) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 5,200-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இப்போது, நாடு முழுவதும் 450 அணைகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. மேலும், நாட்டில் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகள் உள்ளன. இந்த அணைகளைப் பாதுகாக்கவும் பேரீடர் காலங்களில் இழப்பீடு வழங்கவும் நாடு முழுவதற்கும் பொதுவான சட்டம் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யோசனை தெரிவித்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதற்கான சட்டத்தை உருவாக்கியது. இதற்கு, பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் மத்திய அரசை எச்சரித்தார். அப்போது கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டத்தை அவ்வப்போது தூசி தட்டினாலும், பின்னர், பிரதமராக மோடி வந்ததும் அந்தத் திட்டத்துக்கு உயிர்கொடுக்கப்பட்டது. 

2016-ம் ஆண்டு செப்டம்பர் 11- ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், `` `அணை பாதுகாப்பு மசோதா', மக்களவையில் 2010-ம் ஆண்டு அன்றைய யு.பி.ஏ அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதா தொடர்பாக அன்றைய பிரதமருக்கு 29.7.2011, 17.3.2012 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பினேன். அந்த மசோதாவின் ஷரத்துகள் சிலவற்றை பற்றிய எங்கள் ஆட்சேபங்களை அதில் தெரிவித்திருந்தேன். அந்த மசோதா தொடர்பாக மேல் நடவடிக்கை இல்லை. அதனால் அந்த மசோதா காலாவதியானது. இப்போது மத்திய அரசாங்கம் புதிய மசோதா ஒன்றை இந்தப் பிரச்னை தொடர்பாக அறிமுகம் செய்துள்ளது. நான் ஏற்கெனவே இரண்டு கடிதங்களில் தெரிவித்த கருத்துகள் இந்த புதிய மசோதாவைத் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. 

`முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு தமிழகத்தின் பொறுப்பு' என்று உச்ச நீதிமன்றம், 7.5.2014-ம் ஆண்டு வெளியிட்டுள்ள தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்கும் பொறுப்பை வேறு மாநிலம் ஒன்றின் அணை பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைப்பது, ஆய்வு செய்ய அனுமதிப்பது, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன நீதிபதிகள் குழு வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும். மாநிலங்களின்  அரசியல் அதிகார வரம்பை மீறும் வகையில் வரைவு மசோதா பல விதிகளை வகுக்கிறது. இத்தகைய தேவையற்ற சாகசவாத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். எனவே, அவசரப்பட்டு, தமிழக அரசு எழுப்பிய பிரச்னைகள் குறித்து தமிழக அரசுடன் விவாதிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (13.6.2018) இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ``இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல். எனவே, இந்த மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும்'' என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (15.6.2018) எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

2018-ம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதாவில், ``அணைகளின் ஆய்வு, அவசரகால செயல் திட்டம், விரிவான அணை பாதுகாப்பு ஆய்வு, போதுமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான நிதி, கருவிகள் மற்றும் பாதுகாப்புக் கையேடுகள்'' உள்ளிட்ட அணை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு பொறுப்பை அணை உரிமையாளர் மீது இந்தச் சட்டம் சுமத்துகிறது. சில செயல்களைச் செய்வது அல்லது செய்யத் தவறுவது ஆகியவற்றுக்கான தண்டனைப் பிரிவுகளும் சட்டத்தில் அடங்கியுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க இந்த மசோதா உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதாவில் மனித உயிர்கள், கால்நடைகள், சொத்துகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வகை செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளிலும் அவை பாதுகாப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யும் உரிய கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள இந்த மசோதா வகைசெய்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இந்தக் குழு அணை பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கி, இதற்கென தேவைப்படும் வரன்முறைகளைப் பரிந்துரை செய்யும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் என்கிற கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தவும் மசோதா வகை செய்கிறது. இந்த ஆணையம், கொள்கை, நாட்டின் அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், தரங்கள் ஆகியவற்றின் அமலாக்கத்தை மேற்கொள்ளும். மாநில அரசுகள், மாநில அணை பாதுகாப்புக் குழுக்களை அமைத்துச் செயல்படவும் மசோதா வகை செய்கிறது.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையமானது, மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பராமரிக்கும். அணைகள் மீது உரிமை உடையவர்களுடன் தொடர்புகொண்டு அணை பாதுகாப்பு தொடர்பான தகவல் மற்றும் நடைமுறையைத் தரப்படுத்தும். மாநிலங்கள் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உதவிகளை வழங்கும். தேசிய நிலையில் அனைத்து அணைகள் சார்ந்த தகவல் கட்டமைப்பைப் பராமரிக்கும். பெரிய அணைகளில் ஏற்படும் குறைபாடுகளையும் ஆவணப்படுத்தி வைக்கும். அணைகளின் பெரிய குறைபாடுகளுக்கான காரணங்களை ஆராயும். வழக்கமான ஆய்வுக்கான தரமான நெறிமுறைகள், சரிபார்ப்பு பட்டியல்கள் ஆகியவற்றை வெளியிட்டு அவ்வப்போது மேம்படுத்தும். அணைகளின் விரிவான ஆய்வுகள் பற்றியும், இந்த ஆணையம் தகவல் சேகரித்து வெளியிடும்.

புதிய அணைகளின் ஆய்வு, வடிவமைப்பு, கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும், தரங்களையும் இந்த ஆணையம் வழங்கும். இரு மாநிலங்களின் அணைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் விஷயங்கள் குறித்து ஆணையம் ஆராயும். அணைகள் மீது உரிமை உடையவர்கள் தொடர்பான நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், ஒரு மாநிலத்தின் அணைகள் மற்றொரு மாநிலத்தின் பகுதியில் அமைந்திருப்பது போன்ற சில வழக்குகளில் தேசிய ஆணையம், மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கடமை பொறுப்புகளையும் மேற்கொண்டு, மாநிலங்களுக்கு இடையிலான பிணக்குகளைத் தவிர்க்க உதவும்.

மாநிலத்தில் உள்ள அனைத்துக் குறிப்பிட்ட அணைகளின் சரியான கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை இந்தக் குழு உறுதி செய்யும். பாதுகாப்பான செயல்பாட்டையும் அது உறுதி செய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.க. எம்.பி-க்கள் எதிர்ப்புக் காட்டுவார்களா?

அடுத்த கட்டுரைக்கு