Published:Updated:

‘‘ஓடி ஒளிந்து கொள்கிற ஆள் நானில்லை!’’ - தீபா ‘தில்’

‘‘ஓடி ஒளிந்து கொள்கிற ஆள் நானில்லை!’’ - தீபா ‘தில்’
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘ஓடி ஒளிந்து கொள்கிற ஆள் நானில்லை!’’ - தீபா ‘தில்’

‘‘ஓடி ஒளிந்து கொள்கிற ஆள் நானில்லை!’’ - தீபா ‘தில்’

‘‘ஓடி ஒளிந்து கொள்கிற ஆள் நானில்லை!’’ - தீபா ‘தில்’

எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து புதிய அறிவிப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளியிடப் போவதாக வெளியான தகவலால், அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டனர். ஜனவரி 17-ம் தேதி காலை 6 மணியில் இருந்து நிகழ்ச்சிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், அதிகாலை 5 மணிக்கே சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் இருக்கும் தீபா வீடு முன்பாகக் கூட்டம் திரண்டது.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களை வைத்து வீட்டிலேயே அஞ்சலி செலுத்திய பின் அதே பகுதியில் உள்ள ‘எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி’யில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்குதல் முதல் நிகழ்ச்சியாக சொல்லப்பட்டிருந்தது. அதனால் பலரும் அங்கே போய்க் காத்திருக்க ஆரம்பித்தனர். ஆனால், ‘காலை 10 மணிக்குப் பின்னரே பள்ளி திறக்கப்படும்’ என்று அங்கிருந்த நிர்வாகிகள் பதிலளித்ததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இதெல்லாம் தீபா காதுக்குப் போக, அவர் இங்கு வருவதைத் தவிர்த்துவிட்டு நேராக எம்.ஜி.ஆர் சமாதிக்குப் போய்விட்டார். திரளாக வந்திருந்த தீபாவின் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சிக்கிக்கொள்ள, சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை தீபா ஆதரவாளர்கள் அங்கிருந்து விரட்டினர். அ.தி.மு.க-வினர் வந்திருந்த கார்களை கைகளால் ஓங்கிக் குத்தினர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே போலீஸார் இருந்ததால் நிலைமையைப் புரிந்துகொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தீபா அங்கிருந்து நேராக வீட்டுக்குப் போய்விட்டார். காலை 11 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு என்று சொல்லியிருந்தாலும் 9 மணிக்கே செய்தியாளர்கள் அங்கு வந்து காத்திருந்தனர். கறுப்பு நிற சபாரி அணிந்த இளைஞர்கள், ஜிம்-பாய்ஸ் என்று 30 பேர் பாதுகாப்புக்காக வீட்டின் கதவருகே நின்றுகொண்டனர். அவர்கள் செய்தியாளர்களின் பெயர், நிறுவனம், தொலைபேசி எண்களை ஒரு நோட்டில் குறித்து அதை தீபாவின் பார்வைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு தீபா செய்தியாளர்களை சந்தித்தார். தீபாவுடன் அவர் கணவர் அமர்ந்துகொண்டார்.

இதுநாள்வரை ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகள் கிளப்பிக்கொண்டிருந்த தீபா, இந்த முறை அந்த நிலையை மாற்றிக்கொண்டார். ‘‘ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாகக் கருதவில்லை. 25 நாட்கள் வரை என் சகோதரர் தீபக் மருத்துவமனையில்தான் உடனிருந்தார். அதனால் சந்தேகம் என்ற பிரச்னைக்குள் போக விரும்பவில்லை.

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று என் அரசியல் திட்டத்தை வெளிப்படுத்த ஆசை. முதலில் மக்களை, தொண்டர்களை சந்திக்க வேண்டும். அவர்களின் கருத்துகளை நான் சேகரிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த இடைவெளி தேவைப்படுகிறது.

‘ஜெயலலிதாவை 33 ஆண்டுகளாக வழிநடத்தியது நாங்கள்தான்’ என்று அவர்கள் கூறுவது வேடிக்கையானது. ஜெயலலிதா ஒப்பற்ற ஆற்றலும் சுயமாக சிந்திக்கும் திறனும் கொண்டவர். ‘அவரை நாங்கள்தான் வழிநடத்தினோம்’ என்ற கருத்தை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அரசியலுக்கு வர அனுபவம் தேவையில்லை. அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவைகளில் ஒன்று. மக்களுக்கு நற்பணி செய்ய நல்லவர்கள் போதும். இதை அறிந்துதான் மக்கள் என்னை அணுகுகிறார்கள்.

அரசியல் வாழ்க்கைக்குள் வர அனுபவம் என்கிற சான்று ஏதும் தேவையில்லை. அரசியலில் உறுதியாக இருக்கவேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். பிறகு அனுபவமும் வேண்டும் என்கிறீர்கள். இது ஜனநாயக நாடு, எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் எனக்குள்ள ஆர்வத்தை நான் சொல்லியிருக்கிறேன்.

எனக்கு என் அத்தையின் சொத்துகளில் எதுவும் வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனாவை மட்டும் கொடுத்தால் போதும். நான் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர். எனக்குப் பிடித்ததைத்தானே கேட்கமுடியும்?
தேர்தலில் போட்டியிடுவேன். அது ஆர்.கே. நகர் தொகுதியிலா என்பது தெரியாது. ஆர்.கே. நகர் தொகுதி என்பது என் கனவு அல்ல. அப்படி ஒரு கனவே எனக்கு இருந்தது இல்லை.

பி.ஜே.பி மட்டுமல்ல, எந்தக் கட்சியினரும் என்னிடம் பேசவில்லை. எனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பயந்து ஓடிப்போய் விடுவேன் என்றார்கள். நான் ஓடி ஒளிகிற ஆள் இல்லை.

அத்தையைப்போல் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நான் பேச வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், எனக்கு அப்படியொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுங்கள்.

நான் சாதாரண குடும்பப் பெண். எனக்கும் தனி வாழ்க்கை இருக்கிறது. மக்களின் எண்ணத்தைப் பொய்யாக்க விரும்பவில்லை. அவர்களின் உணர்வை மதிக்கிறேன்’’ என்றார்.

பேட்டியின்போது குரலின் ஏற்ற இறக்கம், சிரிப்பு, கேள்விகளை எதிர் கொள்வது, திரும்பிப் பார்ப்பது என்று மொத்தமும் ஜெயலலிதாவாகவே மாறியிருந்தார் தீபா.

- ந.பா.சேதுராமன்

படம்: அ.சரண் குமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz