Published:Updated:

“சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை?” - பாக்யராஜ் கேள்வி

“சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை?” - பாக்யராஜ் கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
News
“சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை?” - பாக்யராஜ் கேள்வி

“சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை?” - பாக்யராஜ் கேள்வி

ல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டத்துக்குக் கொஞ்சமும் சளைக்காத ஜல்லிக்கட்டு, அ.தி.மு.க-விலும் அரங்கேறி வருகிறது. சசிகலா, ஓ.பி.எஸ்., தீபா என்று மும்முனைப் போட்டியாக அதிரிபுதிரி கிளப்பிவரும் சூழலில், எம்.ஜி.ஆரால் ‘கலையுலக வாரிசு’ என்று அறிவிக்கப்பட்ட நடிகர் - டைரக்டர் பாக்யராஜிடம் பேசினோம்.

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய நிகழ்வுகளை ஒப்பிட முடியுமா?’’

‘‘ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனை சென்றேன். ஆனால், நோய்த் தொற்றுப் பிரச்னை இருப்பதாகச் சொன்னதால், நேரில் சந்திக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் அவர்களோடு ஓரிரு வார்த்தைகள்கூட பேசமுடியாமல் போய்விட்டதே என்ற வேதனை எனக்குள் இன்னமும் இருக்கிறது. அஞ்சலி நிகழ்ச்சியின்போதும்கூட ராஜாஜி ஹாலில் பயங்கர தள்ளுமுள்ளுதான் நடந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் அஞ்சலி நிகழ்ச்சியின்போது இதே ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதை எல்லாம் நானும் நேரில் பார்த்தவன்தானே...? அதேபோல் இப்போதும் ‘யார் முக்கியமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்’ என்பதில்தான் குறியாக இருந்தார்களே ஒழிய... உண்மையான உள்ளன்போடும் உணர்ச்சியோடும் யாரும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.’’

“சசிகலா ஏன் அதைச் செய்யவில்லை?” - பாக்யராஜ் கேள்வி

‘‘ஜெ. மரணத்துக்குப் பிந்தைய அ.தி.மு.க நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். பெரிய தலைவர்கள் தங்களுக்குப் பிறகு இந்த இயக்கத்தை வழி நடத்தப்போகிறவர் இவர்தான் என்று யாரையும் குறிப்பிட்டு அடையாளம் காட்டாமல் போய்விடும்போது ‘நான், நீ’ எனப் போட்டிகள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. ‘ஜெயலலிதாவோடு கூட இருந்தவர் என்பதாலேயே ஒருவர் தலைமை ஏற்றுவிட முடியுமா? அரசியல் சேவைக்கு அனுபவம் என்ற தகுதியே வேண்டாமா...’ என்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. அப்படியென்றால், தகுதியுள்ள வேறு நபர் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.’’

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்றுவது யார் என்பதில் போட்டி இருந்தது. நிறைய குழப்பங்களும் நடந்தன. ஆனால், இப்போது அந்த மாதிரி போட்டி என்ற ஒன்றே இல்லையே... இந்த மாதிரி சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு போட்டியின்றி சசிகலாவை பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுத்திருக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனாலும்கூட அப்படிச் செய்யாமல், நியமனம்தான் செய்திருக்கிறார்கள். ஏன் அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார் என்பது எனக்கும் புரியவில்லை.’’

‘‘மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும்கூட பல்வேறு சர்ச்சைகள் கிளம்புகின்றனவே?’’

‘‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போது குறைந்தபட்சம் ஒரு போட்டோவையாவது வெளியிட்டிருக்கலாம். அதைச் செய்யாததால்தான் இப்போது நீதிபதியே கேள்வி கேட்கும் நிலைக்கு விவகாரம் வந்திருக்கிறது. ஒரு பொறுப்புக்கு வருகிறவர்கள் மீது இதுபோன்ற சந்தேகங்கள் எல்லாம் வரக்கூடாது. அப்படி வருகிறதென்றால்கூட உடனடியாகத் தெளிவான விளக்கங்களைக் கொடுக்கவேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல், மர்மமாகவே போய்க்கொண்டிருப்பதால்தான் ‘தோண்டிப் பார்க்கலாமா’ என்பதுவரைகூட பேச்சு போகிறது... மனசுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.’’

‘‘ஜெயலலிதாவின் புகழ் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அ.தி.மு.க-வினரே புகார் கூறுகிறார்களே?’’

‘‘ஆயிரம்தான் இருந்தாலும்கூட ஜெயலலிதா இல்லையென்றால், இன்றைக்கு இங்கே இருக்கிறவர்கள் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், இன்றைக்கு ‘அவருக்கு என்ன தெரியும்?’ என்பதுபோல் பேசுகிறார்கள். ‘எப்படி இவர்களுக்கு இப்படி நாக்கு தடித்துப் பேசுகிறது’ என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு இவ்வளவு பேசும் இவர்கள் எல்லாம் அன்றைக்கு ஜெயலலிதா உயிரோடு இருந்துபோது நிமிர்ந்து நிற்க தைரியம் இருந்ததா? பயத்தோடு குனிந்துதானே கும்பிடு போட்டுக் கொண்டிருந்தார்கள்?’’

‘‘ ‘சசிகலா முதல்வராக வேண்டும்’ என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளதே?’’

‘‘பொதுக்குழுவில் இப்போது இருக்கிற முக்கியமானவர்களில் பெரும்பாலானோர் அவர் மூலமாகக் கட்சிக்குள் வந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்கள். எப்போதுமே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, அதிகாரம் இருக்க வேண்டும்; அல்லது பணம் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் சசிகலாவிடம் இரண்டும் இருக்கின்றன. அதனால், இன்றைய சூழலில் அவர்கள்தான் ஜெயிப்பார்கள். என்ன ஒன்று... இதை அவர்கள் முறையாக பொதுத்தேர்தலில் நின்றே ஜெயித்து செய்யலாம். சர்ச்சைகளுக்கும் இடம் இருக்காது.’’

‘‘எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியில் மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்றிருக்கிறாரே தீபா?’’

‘‘எம்.ஜி.ஆர் தனது இறப்புக்கு முன்பே தனது சொத்துக்கள் குறித்து, தெளிவாக எழுதிவைத்துவிட்டுப் போயிருந்ததால் பிரச்னைக்கு இடமில்லாமல் போனது. ஆனால், ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் திடீரென இறந்துபோனதால் அவரது சொத்துக்கள் குறித்த சட்டபூர்வமான உரிமைகள் தீபாவுக்கு வந்துவிடுகின்றன. ‘அத்தையின் வீட்டில் எனக்கும் உரிமை இருக்கிறது’ என்றுதான் தீபா முதன்முறையாக உள்ளே வருகிறார். மற்றபடி நேரடியாக அரசியல் மூலமாக அவர் உள்ளே வரவில்லை. பொதுவாக நிறைய சொத்துக்கள் இருக்கும் இடங்களில் இதுபோன்ற விஷயங்கள் இயல்பானவைதான்.’’

‘‘அ.தி.மு.க-வுக்கு தீபா தலைமை ஏற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசி வருகிறார்களே?’’

‘‘அதையெல்லாம் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ‘கூட இருந்தவர் என்பதாலேயே கட்சித் தலைமையாக வரமுடியுமா’ என்று சசிகலாவைக் கேட்கும் கேள்வி இவருக்கும் பொருந்தும்தானே... ரத்த உறவு என்பதாலேயே பொறுப்புக்கு வரமுடியுமா என்ன?’’

- த.கதிரவன்,
படங்கள்: லோகேஸ்வரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz