Published:Updated:

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

எருதுப் புரட்சி!

வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம்.

‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் இந்திரா. வழக்கு நிலுவையில் இருந்தபோதே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இந்திரா அரசு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதோடு அரசியல் சட்டமும் திருத்தப்பட்டது. ‘ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதாலேயே அது தொடர்பாக அரசு எதுவும் செய்யக்கூடாது என அர்த்தம் இல்லை. சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். நாடாளுமன்றம் இப்போது நடைபெறவில்லை என்பதால், பிரதமர் பரிந்துரைப்படி ஜனாதிபதி அவசர சட்டம் கொண்டு வரலாம். இது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்துக்கு இணையான பாதுகாப்பு கொண்டது. இதை ஏன் மோடி செய்யவில்லை? செய்யச்சொல்லி அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் ஏன் கேட்கவில்லை?’ என்பவைதான் கட்ஜு எழுப்பும் கேள்விகள்!”

‘‘நடராசன் வெளிப்படையாக மத்திய அரசுக்கும் இந்துத்வா அமைப்புகளுக்கும் சவால் விடுகிறாரே... அப்புறம் அ.தி.மு.க அரசுக்கு என்ன தயக்கம்?”

‘‘மேடையில் பேசுவதுபோல எல்லா இடங்களிலும் ஆவேசம் காட்டிவிட முடியுமா? மத்திய அரசையும் எதிர்க்க முடியாமல், உச்ச நீதிமன்றத்திடமும் வேகம் காட்ட முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது அ.தி.மு.க. ஏற்கெனவே கரூர் அன்புநாதனில் தொடங்கி சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் வரை பலரின் வீடுகளில் நடத்திய ரெய்டுகளின் கணக்கையே இன்னும் சரிபார்த்து முடிக்கவில்லை. ஜல்லிக்கட்டுக்காக மோதி, இப்படிப்பட்ட மறைமுக விளைவுகளைச் சந்திக்க ஆட்சி மேலிடமோ, கட்சி மேலிடமோ தயாராக இல்லை! உச்ச நீதிமன்றத்திலும் வாயைத் திறக்க முடியாது. ஜல்லிக்கட்டு வழக்கு அங்கு தீர்ப்புக்காகக் காத்திருப்பது போலவே, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக்குவிப்பு வழக்கும் விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது அல்லவா?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

‘‘இந்த விஷயம் இவ்வளவு பூதாகரமாக ஆகும் என தமிழக அரசு எதிர்பார்க்கவில்லையோ?”

‘‘எம்.பி-க்கள் மட்டுமல்ல... தமிழக அரசும் ஜல்லிக்கட்டு பிரச்னையில் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், விவகாரம் இத்தனை சிக்கலாக மாறியிருக்காது என்றுதான் டெல்லி தரப்பிலும் சொல்கிறார்கள். தமிழக அரசு இந்தப் பிரச்னையில், கோட்டை விட்டுவிட்டதாக மத்திய உளவுத் துறையினர் பிரதமருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.’’

‘‘என்னவாம்?’’

‘‘கடந்த 2 ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பொங்கலை ஒட்டிய சில நாட்கள் மட்டும் கொந்தளிப்பு எழுந்து அடங்கிப்போய்விடும் என்றுதான் அரசு எதிர்பார்த்தது. ஆனால், இந்த ஆண்டு சூழ்நிலை வேறாக இருக்கிறது. 130 ஆண்டுகளில் ஏற்படாத கடும் வறட்சி காரணமாக நிகழும் விவசாயிகள் தற்கொலைகளும், அவற்றை மாநில அரசு கையாண்ட விதமும் பெரும் அதிருப்தியை எங்கெங்கும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையை மாநில உளவுத் துறையினர் கணிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் அரசுக்குத் தவறான ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்’ என்று மத்திய உளவுத் துறை செய்தி அனுப்பி உள்ளதாம்.’’

‘‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், ஓர் ஊரில் தடியடி, ஓர் ஊரில் அமைதி என தமிழக காவல் துறையின் நடவடிக்கை ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மாதிரி இருக்கிறதே?’’

‘‘ஆரம்பத்தில், சில இடங்களில் தடியடி சம்பவங்களை போலீஸார் அரங்கேற்றினர். ஆனால், ‘இதற்கு அடுத்தபடியாக கண்ணீர்ப்புகை குண்டு,  துப்பாக்கிச் சூடு என்றெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை வரும்போல இருக்கிறது’ என்று தென் மண்டல போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், டி.ஜி.பி அலுவலகத்தில் தொடர்புகொண்டு அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், ‘அவசரப்பட்டு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். துப்பாக்கி, கண்ணீர்ப்புகை குண்டுகளைப் போராட்ட ஸ்பாட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டாம்’ என்று கண்டிப்பான உத்தரவுகளே பிறப்பிக்கப்பட்டதாம். இதையடுத்தே போலீஸாரும் அமைதி காத்தனர்.’’

‘‘ஆனாலும், சென்னை மெரினாவில் போலீஸ் தடியடி நடத்தியதே?’’

‘‘முன்கோபம் பொங்கும் அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, கண்ணியமாக நடந்துகொள்ளும் போலீஸ் அதிகாரிகளையே போராட்டக் களத்தில் கவனமாகப் பயன்படுத்தி வருகிறது தமிழகக் காவல் துறை. ஆனாலும் இப்படிப்பட்ட உரசல்கள் நிகழத்தான் செய்கின்றன. சில இளைஞர்கள் தண்ணீர் பாட்டில்களை போலீஸ்காரர்கள் மீது வீசி எறிகின்றனர். போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதற்கு சில ஆசாமிகள் ஊடுருவி இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள். கோபம் தலைக்கேறும் சில போலீஸ்காரர்கள் தடியடியில் ஈடுபடுகிறார்கள். இதை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். போலீஸ் இந்த விஷயத்தில் வெறுமனே இளைஞர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பணியைத்தான் செய்ய வேண்டும் என்று, பிரதமரைப் பார்த்தபிறகு டெல்லியிலிருந்து முதல்வர் பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். ‘அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தினீர்கள்?’ என டெல்லி பிரஸ்மீட்டில் காரசாரமாகக் கேள்வி கேட்டனர் நிருபர்கள். இதைப் பன்னீர் எதிர்பார்க்கவில்லை. தடுமாறியபடி, ‘எங்கும் தடியடி நடந்ததாக... இல்லை’ என எதையோ சொல்லி, சமாளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதன்பிறகே இப்படி ஓர் உத்தரவு.’’

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

‘‘நம்பிக்கையோடு ஓ.பி.எஸ் டெல்லி போனாரே... அங்கு என்னதான் நடந்ததாம்?”

‘‘மத்திய அரசு நல்ல இணக்கத்தில்தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான், ‘ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி; எள்ளளவும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று அவர் அறிவித்தார். ஆனாலும், கடந்த 19-ந்தேதி அவருக்கு சரியான வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள். ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது’ என்று சம்பிரதாயமாகச் சொல்லிக் கைவிரித்துவிட்டார் மோடி. நம்பிக்கையோடு கிளம்பிப்போன ஓ.பி.எஸ், இந்த வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ந்துவிட்டார். எனினும், ‘சட்டரீதியாக இதில் என்ன செய்ய முடியும் என வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு சீராய்வு மனு போடலாம். மத்திய அரசு இதற்கு உறுதுணையாக இருக்கும்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார். இதனால்தான் பிரதமரைச் சந்தித்தப்பிறகு பேட்டி கொடுத்த பன்னீர், ‘மாநில அரசின் நடவடிக்கைகளை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள்’ என ஒருவித மர்மப் புன்னகையோடு சொன்னார். ‘நன்மையே யாவும்... நன்மையாய் முடியும்’ என பன்ச் டயலாக்கும் அடித்தார். ‘என்ன செய்யப் போகிறீர்கள்?’ என நிருபர்கள் துருவித்துருவிக் கேட்டபோதும், ‘பொறுமையாய் இருங்கள், நல்லவை நடக்கும்’ என்று மட்டும் சொன்னார். ஏதோ ஒன்றைச் செய்து, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலையில் பன்னீர் இருக்கிறார். அதனால் பிரதமர் சந்திப்பு முடிந்தபிறகு, டெல்லியில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினார்.’’

‘‘இந்தப் பிரச்னையில் தமிழக அரசு என்னதான் செய்திருக்க வேண்டும்?’’

‘‘காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கர்நாடக அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தியது. அனைத்துக் கட்சியினரும் ‘தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது’ எனக் கொதித்தார்கள். அதையே தீர்மானமாகப் போட்டது கர்நாடக சட்டமன்றம். அப்படி ஒரு வேகத்தை தமிழக அரசு ஏன் காட்டவில்லை? எத்தனையோ விஷயங்களில் நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறது அரசு. ஜல்லிக்கட்டில் மட்டும் ஏன் இத்தனை பணிவு காட்ட வேண்டும்? இதுதான் ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறவர்கள் எழுப்பும் கேள்வி. பன்னீர் டெல்லி போயிருந்த அதே நாளின் மாலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகி, ‘தமிழக அரசே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றலாம். இதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆட்சேபிக்க முடியாது’ என்று சொல்லியிருப்பதை நன்கு கவனியும். ஜெ. மரணம், புதிய அரசு பதவியேற்பு, பொதுச்செயலாளர் நியமனம் என ஆளும்கட்சியினர் தங்களது சொந்தக் கட்சி விவகாரங்களிலேயே மூழ்கிக்கிடந்து, ஜல்லிக்கட்டை கோட்டை விட்டுவிட்டார்கள்.’’

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

‘‘இனிமேல் இந்த விவகாரம் எப்படிச் செல்லும்?’’

‘‘போலீஸும், அரசுத் துறைகளும் இப்போது எந்தத் தொந்தவும் செய்ய வேண்டாம் என தமிழக அரசு கூறிவிட்டு, ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தபிறகு குறிப்பிட்ட காளைகளைப் பறிமுதல் செய்வதுடன், மாடுபிடி வீரர்கள் மீதும், விழா நிர்வாகிகள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்யலாம். இதை எதிர்த்து பீட்டா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், ‘நாங்கள் காளைகளைப் பறிமுதல் செய்தோம், வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோம்’ என தமிழக அரசு வாதிடலாம். ஆனால், இது ஆரோக்கியமான வழிமுறையோ, சட்டபூர்வமான வழிமுறையோ, முன்னுதாரண நடவடிக்கையோ அல்ல.’’

‘‘இதில் பெரும் இழப்பு பாரதிய ஜனதாவுக்குத்தானே?”

‘‘இதை தமிழ் ஆர்வலர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். ‘இது உடனடிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இழப்பு, ஆனால், நீண்டகால நோக்கில் ஓர் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பி.ஜே.பி’ என்கிறார்கள் அவர்கள். ‘நீதிமன்றத்தைக் கைகாட்டுவது எல்லாம் ஒரு நாடகம். ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்பதில் பி.ஜே.பி-க்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. அது, இந்தியா முழுவதும் ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டுவருவது என்கிற அவர்களின் அஜெண்டா. இந்த நாட்டின் பெரும்பான்மை கலாசாரம் என்று அவர்கள் எதைச் சொல்கிறார்களோ, அதைத் திணிப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு விவகாரம். மத்தியில் ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி. அவர்கள் நினைத்தால்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். ஆனால், பி.ஜே.பி-யில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்கள். பொங்கல் கட்டாய விடுமுறை என்பதை மாற்றினார்கள். பிறகு, அதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்தவுடனேயே, பல்டி அடித்தார்கள். கீழடியில் அகழ்வாராய்ச்சி ஏன் இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது? இப்படியாக அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், தமிழகத்தின் கலாசார விழுமியங்களை அழிப்பதில்தான் வந்து நிற்கிறது’ என குற்றம்சாட்டுகிறார்கள் அவர்கள். இதெல்லாம் சேர்ந்துதான் இளைஞர்களை வீதிக்கு விரட்டியிருக்கிறது’’ - சொல்லி முடித்த கழுகார், வெளியில் பறந்தார்.

அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: ஏ.சிதம்பரம், அசோக்குமார், விக்னேஷ்வரன்

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

ஓ.பி.எஸ். - தம்பிதுரை மோதல்!

ல்லிக்கட்டு பிரச்னைக்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்றபோது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கே அ.தி.மு.க எம்.பி-க்கள் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வமும் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் மோதிக்கொண்டார்களாம். டெல்லியைப் பொறுத்தவரையில், சசிகலாவின் தூதுவர் என்கிற ரீதியில் செயல்படுகிறவர் தம்பிதுரை. தனது ஆபீஸ் லெட்டர்பேடில் சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டு விசுவாசத்தைக் காட்டியவர். சசிகலாவை முதல்வர் ஆக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் பன்னீர்செல்வத்துக்கு தம்பிதுரை மீது எரிச்சல் உண்டு. கடந்த முறை பிரதமரைப் பார்க்க பன்னீர்செல்வம் போனபோது, தம்பிதுரைக்கு மட்டும் பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்தது. அதனால் இந்த முறை தன்னைத் தவிர்த்துவிட்டு பன்னீர் போகக்கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருந்தார். பன்னீர்செல்வத்திடம், ‘‘உங்களுடன் நானும் வருகிறேன். அம்மா டெல்லி வரும்போதெல்லாம் என்னை உடன் அழைத்துச் செல்வார்’’ என்று சொல்ல... ‘‘இல்லையில்லை. பிரதமருடன் ஒன் டு ஒன் மீட்டிங். நீங்கள் வேண்டாம்’’ என்றாராம். ‘‘நம் கட்சி எம்.பி-க்கள் அனைவரும் உங்களுடன் வருகிறோம். எங்களை பிரதமர் அனுமதிக்காவிட்டால், நீங்கள் மட்டும் தனியாக அவரை சந்திக்க வேண்டாம்’’ என்று தம்பிதுரை சொல்ல... பன்னீர் காதில் வாங்கிக்கொள்ளாமலே கிளம்பிப்போய்விட்டாராம்.

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!
மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

வரவேற்பும் துரத்தலும்!

ங்கள் போராட்டத்துக்கு யாரும் துளியும் அரசியல் சாயம் பூசிவிடக்கூடாது என்பதில் இளைஞர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை... இதை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக்கூடாது எனவும் எச்சரிக்கையோடு செயல்படுகிறார்கள். மெரினா போராட்டக்களத்துக்கு ஸ்டாலின் வந்தபோது, ‘‘எந்த அரசியலும் வேண்டாம் என நினைக்கிறோம்’’ என மாணவர்கள் மறுத்ததை அவர் புரிந்துகொண்டு நகர்ந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் யுவராஜ் வந்தபோது, அவரைக் காரைவிட்டே இறங்கவிடாமல் அனுப்பினர். இப்படி தமிழகம் முழுக்க அரசியல் கட்சியினர் விரட்டப்பட்டனர். மதுரையில் நடிகர்கள் ஆர்யா, விஜய்சேதுபதி போன்றவர்களை உள்ளே விடவில்லை. தமிழ் உணர்வோடும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்படும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கௌதமன் போன்ற சிலருக்கு மட்டுமே வரவேற்பு கிடைக்கிறது.