Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

வசந்தகுமார், பொள்ளாச்சி.

? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்குகிறதே?


! எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை 100 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் நின்று நிலைத்திருப்பதற்குக் காரணம், அவரது பொன்மனம்தான். அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது தரப்பட்டபோது, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ‘‘நாமும் ஒருநாள் மறக்கப்பட்டுவிடப் போகிறவர்கள்தான். பாராட்டு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்து அமைகிறதே தவிர, தனிப்பட்ட ஒருவருடைய திறமையின் அளவுகோலில் அல்ல” என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். `ரசிகர்கள்தான் முக்கியம்’ என்று அந்தக் கூட்டத்தில் சொன்னார்.

‘‘என்னதான் கண்ணை உருட்டி கன்ன தசைகளை ஆட்டி உதடுகளைப் பிதுக்கி ஒரு பக்கத்தை கோணவைத்து நடித்தாலும், மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் நடிகன். இல்லை என்றால் இல்லை. ஒரு நடிகன் பிரபலமாவதும் புகழடைவதும் ஒரு தயாரிப்பாளரால்தான். அவர்தான் ஒரு நடிகனை உருவாக்குகிறார். நடிகன் பிரபலம் ஆனபிறகு மக்கள் அந்தத் தயாரிப்பாளரை மறந்துவிடுகிறார்கள். கடவுளுக்கு மதிப்பு இல்லை. பூசாரிக்குத்தான் மதிப்பு” என்று பகிரங்கமாகச் சொன்னவர் எம்.ஜி.ஆர்.

கழுகார் பதில்கள்

‘‘நாம் பெரியவனாக ஆகவில்லை; ஆக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை கலைஞர்கள் புரிந்துகொண்டால் யாருக்கும் யார் மீதும் பொறாமை, போட்டி மனப்பான்மை ஏற்படாது” என்று சொல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. ‘‘இந்தக் கலையுலகில் எனக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்கள் எனக்கு ஒவ்வொரு விநாடியும் எச்சரிக்கை தந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அதே கூட்டத்தில்தான் சொன்னார். ‘‘நீங்கள் இன்று என்னைப் பாராட்டுகிறீர்கள். இன்று பாராட்டுகிறார்களே... இவர்களாலேயே நாளை தூக்கி எறியப்படுவதுதான் புகழ் என்பது” என்றும் சொன்னார்.

பணம், புகழ், பட்டம், பதவிகள் அனைத்தையும் மிகமிக யதார்த்தத்துடன் யோசித்து எம்.ஜி.ஆர் தனது மனத்தராசில் நிறுத்துப் பார்த்துப் பேசிய பேச்சு இது. அவரது நிலைத்த புகழுக்கு இதுதான் காரணம்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

? தி.மு.க பொதுக்குழுவில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் சந்தித்ததும் அரசியல் ஆரோக்கியம். இது தொடருமா?


! தொடர வேண்டும். மாநில முதலமைச்சர் மறைவுக்கு, பிரதான எதிர்க்கட்சி ஒன்று அஞ்சலி செலுத்தித் தீர்மானம் போடுவதும், மாநில முதலமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பதும் மிகச் சாதாரணமான நடைமுறைகள்தான். மற்ற மாநிலங்களில் இவை இயல்பாக நடக்கின்றன. தமிழ்நாட்டில் பங்காளிச் சண்டை போல அரசியல் நடந்ததால் இதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆரோக்கிய அரசியல் நிச்சயம் தொடர வேண்டும். அதனை இரண்டு கட்சிகளும் சேர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

? நாஞ்சில் சம்பத் இனி சின்னம்மாவை என்ன சொல்லி விளிப்பார்?


! புரட்சித் தலைவியால் அடையாளம் காட்டப்பட்ட புரட்சி இளவரசியே!

போயஸ் கார்டனில் பூத்த குரோட்டன்ஸ் ரோஜாவே!

மன்னார்குடியின் மன்னர்குடியே!

இவர் சின்னம்மா அல்ல.... எங்களின் சின்னம் அம்மா!

இவர் சசிகலா அல்ல... எங்கள் லக... லக... லக..!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

? நடராசனின் தற்போதைய நிலைப்பாடு என்ன?


! மனைவிக்கு மகுடம் சூட்டுவது. தனது நிழலாட்சியைத் தொடர்வது. இதுதான் தற்போதைய நிலைப்பாடு மட்டுமல்ல, எப்போதைய நிலைப்பாடும்.

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

? ஸ்டாலின் - சசிகலா ஒப்பிடுக!


! ‘இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்’ என்று இருவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ப.பாலா என்ற பாலசுப்பிரமணி, பாகாநத்தம்.

? தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை வீழ்ச்சி அடைந்ததற்கு என்ன காரணம்?


! கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்குடன் இருந்த காலம் என்பது 1970-களுக்கு முன். அதன்பிறகு தி.மு.க., அ.தி.மு.க. என ஏதாவது ஒரு கட்சியின் தோளில் தொங்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறிப் போயின. ஆளும் கட்சியை வீழ்த்துவது மட்டுமே அக்கட்சிகளின் லட்சியமாக ஆனதால் தேயத் தொடங்கியது. ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதைப் போல கடந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கூட்டணியை அவர்கள் அமைத்தார்கள். அது வெற்றியைத் தராதது மட்டுமல்ல, கவனத்தையும் பெற முடியவில்லை.

மேலும், இது தேர்தல் அரசியலோடு மட்டுமே இணைத்துப் பார்க்க வேண்டிய விஷயம் அல்ல. மார்க்ஸியம் என்ற கருத்தாக்கம் இன்றைய இளைய தலைமுறை மத்தியில் கூடுதல் கவனம் பெற்று வருகிறது. இதனை கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்வாங்கி வளர்த்தெடுக்க வேண்டும்!

கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

? தமிழக அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்த முடிவுகளை அவரவரே எடுக்க முடியுமா?


! எடுக்கத் தெரியுமா? அப்படிப்பட்ட தகுதி வாய்ந்தவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்களா?

கோவை அசோக், கோவை.

? ஒரு கற்பனை... திடீரென ஜெயலலிதா உயிரோடு வந்துவிட்டால்..?


! சசிகலா, நடராசன், திவாகரன்தான் பயப்பட வேண்டும். நாம் வரவேற்போம்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்

? சசிகலா அளவுக்கு அரசியல் அறிவு தீபாவுக்கு இல்லாதபோது அவரை எப்படித் தலைமை தாங்க அழைக்கிறார்கள்?


! தமிழ்நாட்டுக்கு தலைமை தாங்க சசிகலாவும் தீபாவும் அரசியல் அளவுகோல்கள் ஆனதுதான் வேதனைக்குரியது.

பொன்விழி, அன்னூர்.

? சசிகலாவுக்கு தோழிகள் இருக்கிறார்களா?


! ஜெயலலிதா தனது குடும்பத்தினரை ஒதுக்கி வாழ்ந்தார். அதனால் தோழி தேவைப்பட்டார். சசிகலா அப்படி இல்லை. தோழிகள் அண்ட முடியாத அளவுக்கு சொந்தங்கள் கூட்டம் அதிகம். தோழிகள் சேராமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!