மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 11 - தீபாவுக்கு வைத்த செக்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 11 - தீபாவுக்கு வைத்த செக்!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 11 - தீபாவுக்கு வைத்த செக்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

‘வேதா நிலையம், எண் 36, போயஸ் கார்டன், சென்னை-86’ என்கிற ஜெயலலிதாவின் வீட்டு முகவரியில் முழுமையாகக் குடிபுகுவதற்கு முன்பு ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில்தான் சசிகலா வசித்து வந்தார். அந்தத் தெருவின் ஒரு முனையில் சசிகலாவின் வீடும் இன்னொரு முனையில் ‘வினோத் வீடியோ விஷ’னும் இருந்தன. ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து போயஸ் கார்டனுக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில்தான் ஆரம்பத்தில் வருவார் சசிகலா. அந்த ஆட்டோ ரிக்‌ஷாவுக்கான கட்டணம் ஐந்து ரூபாயை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் மேனேஜர் துரையும் கேஷியர் சாமிநாதனும்தான் சசிகலாவுக்குக் கொடுப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்க நினைத்தபோது, அதற்கு உதவியவர்களில் துரையும் ஒருவர். ஜெயலலிதாவை முதன்முறையாக சந்திப்பதற்கு முன்பு துரையைத்தான் சசிகலா முதலில் போய்ப் பார்த்தார். சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துவைத்த துரையும் களையெடுப்பில் தப்பவில்லை. துரையும் கேஷியர் சாமிநாதனும் ஆடிட்டர் சுந்தரேசனும் சசிகலா வருகைக்குப்பின் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மன்னார்குடியினர் செய்த மாயத்தில் எம்.ஜி.ஆரின் அபிமானத்தைப் பெற்றவர்கள் எல்லாம் பந்தாடப்பட்டார்கள். ‘எதிர்காலத்தில் எதிரியாவார்கள்’ என யார் மீதெல்லாம் சந்தேகம் எழுந்ததோ, அவர்கள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டனர். இப்படி ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் அடுத்த இலக்கு, ஜெயலலிதாவின் ரத்த உறவுகள்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 11 - தீபாவுக்கு வைத்த செக்!

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில்தான், அவர் அண்ணன் ஜெயக்குமார் மனைவி விஜயலட்சுமியோடு வாழ்ந்து வந்தார். அங்கேதான் அவர்களின் மகள் தீபா பிறந்தார். அண்ணன் மகள் தீபாவுக்கு அந்தப் பெயரை வைத்தவரே ஜெயலலிதாதான். மூன்று வயது வரையில் அங்கேதான் தீபா வளர்ந்தார். ஜெயக்குமாருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. இதனால் அங்கிருந்து ராயப்பேட்டைக்கு ஜெயக்குமாரின் குடும்பம் குடிபெயர்ந்தது. ஆனாலும் அவர்களோடு அடிக்கடி போனில் ஜெயலலிதா பேசி வந்தார். ‘போயஸ் கார்டனில் பிறந்தவர்’ என்பதால் தீபா மீது ஜெயலலிதாவுக்குப் பாசம் அதிகம். அதனால் அவரின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். தீபாவின் பிறந்தநாளுக்குப் பரிசுகள் கொடுப்பார். புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தந்திருக்கிறார். போயஸ் கார்டனுக்கு எப்போது வேண்டுமானாலும் போய் வந்துகொண்டிருந்தார் தீபா. அவர் கார்டனுக்கு வருவதும், செக்யூரிட்டிகள் கேள்வி எதுவும் கேட்காமல் உள்ளே அனுப்புவதும் சகஜமாக நடந்து கொண்டிருந்தன. அந்த அளவுக்கு கார்டனில் செல்லப்பிள்ளையாக இருந்தார் தீபா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 11 - தீபாவுக்கு வைத்த செக்!

கார்டனை விட்டுப் போனாலும் அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினர் மீது ஜெயலலிதா அக்கறை காட்டி வந்தார் என்பதற்கு சாம்பிள் இந்த சம்பவம்... வெயிட் லிஃப்ட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஜெயக்குமாருக்கு எலும்பு முறிந்துவிட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, உடனே டாக்டர் சொக்கலிங்கத்துக்கு போன் செய்து அண்ணன் ஜெயக்குமாரை பார்க்கச் சொன்னார். தொடர்ச்சியாக விசாரித்துக்கொண்டிருந்தார். இதன்பிறகு அண்ணன் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே திரை போடப்பட்டது. என்னதான் நடந்தது? தீபாவே அதை விவரிக்கிறார்...

‘‘1995-ம் ஆண்டு செப்டம்பரில் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் திருமணம் நடந்தது. அக்டோபரில் அப்பா ஜெயக்குமார் இறந்து போனார். அதன்பிறகு கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டன. நாங்கள் இருப்பது யாருக்குப் பிரச்னை எனத் தெரியவில்லை. வழக்கம் போல கார்டனுக்குள் போய் வர முடியவில்லை. 2002-ம் ஆண்டுதான் கடைசியாக அத்தையைப் பார்த்தேன். அதன்பிறகு அந்த ரோட்டுப் பக்கம்கூடப் போக முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எங்களை சிலர் ஒதுக்க ஆரம்பித்தார்கள். அப்போது நான் சின்னப் பெண் என்பதால் அதையெல்லாம் புரிந்துகொள்ளத் தெரியவில்லை. கடைசியாக அத்தையைப் பார்க்கப் போனபோது, ‘தீபா இங்கே வந்தால் என்னிடம் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அங்கே இருந்த பணியாளர்களிடம் அத்தை சொன்னார். ஆனால், அதன்பிறகு பல முறை அங்கே போனபோது விரட்டியடிக்கப்பட்டோம். நாங்கள் வந்து போன தகவலைக்கூட அத்தையிடம் சொல்லவில்லை’’ என்கிறார் தீபா.

அந்த தீபாதான் ஜெயலலிதாவின் கடைசி தினங்களில் அப்போலோ முதல் ராஜாஜி ஹால் வரை விரட்டியடிக்கப்பட்டவர். அந்த தீபா வீட்டுக்கு தினமும் தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். எதிர்காலத்தைக் கணித்து காய் நகர்த்தும் வித்தை சசிகலாவுக்கு கைவந்த செயல். 

- அடுத்த இதழில்