Published:Updated:

காதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

காதலும் கடந்து போகும்:  முப்பது வருடங்களில்  காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
காதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

காதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

காதலும் கடந்து போகும்:  முப்பது வருடங்களில்  காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

னக்கு 17 வயதிருக்கும்போது நானும் சில இலக்கிய நண்பர்களுமாய் ஓர் அரசியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள ரயிலில் சென்னைக்குக் கிளம்பினோம். நண்பர்கள் வயதில் என்னைவிட இருபது முப்பது வருடங்கள் மூத்தவர்கள். கூட்டங்களிலோ, நேரிலோ சந்திக்கையில், அவர்கள் அரசியல், இலக்கியம், சமூகம் அன்றி வேறெதையும் உரையாடியது இல்லை. ஆனால், ரயிலில் ஒன்றுசேர்ந்ததும் பேச்சு முழுக்க பெண்கள் பற்றியதாக மாறியது. தீவிர விஷயங்களை முழுக்க உதறி, அவர்கள் தம் பால்யத்துக்குத் திரும்பினார்கள். ஓர் இடதுசாரி அறிஞர் தான் பார்த்த ‘புளூ ஃபிலிம்’ பற்றி பேசினார். வேறு சிலர் தம் இளமைக்காலக் காதலிகள் பற்றி அசைபோட்டபடி திளைத்துக் கொண்டிருந்தார்கள். நான் இவர்கள் மத்தியில் தனி ஆளாய் தத்தளித்தேன். சற்று நேரம் கழித்து நானும் என்னைவிட பத்து வயது மூத்த ஒரு கவிஞருமாய் எழுந்து ரயிலுக்குள் உலாத்தத் துவங்கினோம். செகண்ட் கிளாஸ் இருக்கையில் வெள்ளைக்கார இளைஞர் ஒருவர் அமர்ந்திருப்பது பார்த்து ஆர்வம்கொண்டு அவரிடம் சென்று பேச்சுக்கொடுத்தோம். அவருக்கு வயது இருபதுக்குள் இருக்கும். அப்போது அவர் இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார். நாங்கள் எடுத்த எடுப்பிலே “நீங்கள் முதன்முதலில் எந்த வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள்?” என்று உடைந்த ஆங்கிலத்தில் அவரிடம் கேட்டோம். அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் “பதினாலு வயதில் என் முதல் செக்ஸ் அனுபவம் நிகழ்ந்தது” என்றார்.  ஏதோ முதன்முதலில் சைக்கிள்விடப் பழகியதைபோல் அதைப் பற்றி அவர் குறிப்பிட்ட விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. இன்று இருபது வருடங்களுக்குப் பிறகு இதே பதிலை ஓர் இந்திய இளைஞன் கொஞ்சம் அலட்டல், கர்வத்தோடு கூறுகிறான். இன்று பெண்ணுடலோ, செக்ஸோ, யாருக்கும் திகைப்பான காரியம் அல்ல.

மனித உடலை, சமூகம் கண்காணிக்கும் நெருக்கடியில் செக்ஸ் என்பது காணாப்பொருளாய், அபூர்வமாய், அதனாலே அச்சமூட்டுவதாய், புனிதமானதாய் நமக்கு முன்பு தோன்றியது. இன்று அது தலைகீழாகிவிட்டது. செக்ஸ்தான் காதலின் அடிப்படை. அதனால், காதலையும் சேர்த்து பிற விஷயங்களும் இன்று சாதாரணமாகி விட்டன.

பெண்ணுடன் உரையாடுவது அபூர்வமாய் இருந்த சமூகச்சூழலில் அது தவமிருந்து பெற்ற வரமாய் கருதப்பட்டது. எண்பது, தொண்ணூறுகளின் சினிமாவில் இந்தச் சித்திரம் காதல் பற்றி இருந்தது. ஒரு பெண்ணிடம் ஒரு சொல்லை மனம்திறந்து பேசும் தன்னம்பிக்கை இல்லாத ‘முரளிகள்’ ஏராளம் தோன்றினார்கள். அவர்கள் கடைசிவரை மருகிக்கொண்டே இருந்தார்கள். இலக்கியத்தில் இத்தகைய ஓர் ஆண்நிலையை தி.ஜானகிராமன் ‘மோகமுள்’ நாவலில் உருவாக்கினார்.

காதலும் கடந்து போகும்:  முப்பது வருடங்களில்  காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz



தொண்ணூறுகளின் இறுதியில் தாராளமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, ஊடகப் பெருக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் என நம் சூழலைப் புரட்டிப்போட்டன. இந்தப் புதுச் சமூக வெளிகளில் ஆணும் பெண்ணும் தடையின்றி ஓரளவு உரையாட முடிந்தது. இந்தக் கட்டத்தில் செக்ஸ் குறித்த திகைப்பு விலக ஆரம்பித்தது. காதல் என்பது ஒரு பெண்ணைத் துரத்தி அடையும் காரியம் அல்ல. காதல் ஒரு பெண்ணுடன் பகிரும் அன்பு, இச்சை, உரையாடல் எனும் புதுச் சித்திரம் ஒன்று ஆண்களுக்கு ஏற்பட்டது. சினிமா, தமிழ்ச் சமூகத்தின் ஒரு முக்கியமான பிரதிபலிப்புக் கருவி என்கிற அடிப்படையில் இயக்குநர் ஷங்கரின் ‘காதலன்’ படத்தை  ‘பாய்ஸ்’ உடன் ஒப்பிட்டால், தொண்ணூறுகள் துவங்கி இரண்டாயிரத்தின் முதல் பாதி வரையிலான இந்த மாற்றத்தை நாம் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும். ‘காதலன்’ படத்தில் தன் காதலியை நெருங்கிப் பேசவே நாயகன் போராடி பல நாட்கள் காத்திருப்பான். காதலியின் ஒரு மயிரிழையைப் பாதுகாத்து அதைப்பற்றி பாடி, டான்ஸ் எல்லாம் ஆடுவான். ஆனால், ‘பாய்ஸில்’ பதின்வயதுப் பையன்கள் தம் காதலியர்களோடு அறிமுகமான குறைந்த காலத்திலேயே தியேட்டர், மால் என ஜாலியாய் சுற்றுகிறார்கள். சுவாரஸ்யமாக, இந்தப் பெண்கள் ‘காதல் வேண்டாம், நட்பு போதும்’ எனும் நிபந்தனையின் பேரில்தான் உறவை ஏற்பார்கள். பையன்கள் தொடர்ந்து இந்தப் பெண்களைத் தொட முயன்றுகொண்டே இருப்பார்கள். நட்புக்கும் இச்சைக்கும் இடையிலான காதலின் கட்டம் இது. இந்த உறவுநிலை மாற்றம் மூன்று விதமான சிக்கல்களை உருவாக்கின.

பெண்ணுடல், அதன் மீறல், மீறலின் ஒழுங்கீனம் குறித்து சமூகத்தில் பரவலாய் சர்ச்சைகள் தோன்றின. நாற்பது வயதுக்கு மேலானோர் இளம் தலைமுறையின் கட்டுப்பாடின்மை குறித்து பதற்றம் கொண்டனர். ‘பாய்ஸ்’ படத்தின் ஆபாசம் குறித்து அன்று நிகழ்ந்த சர்ச்சைகள் இதன் விளைவுதான். பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகின. பொறியியல் கல்லூரிகளில், தனியார் பள்ளிகளில், பொதுவெளிகளில் பெண்கள் கடுமையாய் கண்காணிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள கல்லூரிகளில்  தம் மகள்களைச் சேர்ப்பதில் பெற்றோர் சிரத்தை எடுத்தனர். இருபது வருடங்களுக்கு  முன்பு வரை சமூகத்துக்கு இந்தக் கவலை இருந்தது இல்லை.

காதலின் சுதந்திரம் அடுத்து நம் சாதியமைப்பைச் சற்றே அசைத்துப் பார்த்தது. உளவியல்படி மனித மனம் சுலபத்தில் வேறு குழுவைச் (சாதியை) சேர்ந்தவர்கள்மீது இச்சைகொள்ளும். இதனால்தான் மற்ற விஷயங்களில் இறுக்கமான சாதியவாதிகளாய் இருக்கின்ற நாம் மாற்றுசாதியினர்மீது காதல் கொள்வது அதிகமானது. காதலுக்கு முன்பும் பின்பும் நாம் சாதியத்தைக் கடைபிடிக்க தவற மாட்டோம். காதல் செய்யும் காலம் மட்டுமே விதிவிலக்காக இருக்கும். கௌரவக் கொலைகள், காதலை ஒட்டிய சாதிய வன்முறைகளின் காலம் உச்சம் பெற்றது. சாதி மீறிய காதலர்களை சமூகம் ஊர் ஊராய் துரத்தி நிர்மூலமாக்கியது. பிணங்களைக் காட்சிப்படுத்தி எச்சரிக்கை செய்தது. இந்தக் கொடுமை இன்று வரை தொடர்கிறது.

காதலும் கடந்து போகும்:  முப்பது வருடங்களில்  காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

இந்தச் சிக்கலுக்குப் பெரும்பாலான தமிழ்க் காதலர்களின் எதிர்வினை என்ன? அவர்கள் எதற்கு வீண் பிரச்னை என நினைத்தார்கள். இந்தச் சன்மார்க்க சமரசக் கோணத்தில் பார்த்து சாதி கடந்த காதல் அல்லது பெற்றோரின் விருப்பத்தை மீறிய காதலுக்கான தீர்வைப் பேசும் ‘காதலுக்கு மரியாதை’, ‘காதல்’ போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

மூன்றாவதாய், சுதந்திரமான பெண்ணுடல் ஆண்களில் ஒரு பகுதியினருக்குக் கசப்பை, ஏமாற்றத்தை, குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தப் பெண்களுடன் நேரடியாய் பழகும், அவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பற்ற ஏராளமான ஆண்கள் இருந்தார்கள். இவர்கள் இந்தப் பெண்களை ஒழுக்கமற்றவர்கள் எனப் பழித்தார்கள். அல்லது ஆசிட் வீசுவது, பலாத்காரம் செய்வது, தாக்குவது என வேறு வழிகளில் எதிர்வினை ஆற்றினார்கள். ‘என்னை ஏன் நீ பொருட்படுத்தவில்லை?’ என இவர்கள் பெண்களிடம் குரோதத்துடன் கேட்டார்கள். ஆனால், இந்தப் பெண்களை அணுகி உரையாடும் மொழி இந்த ஆண்களுக்கு தெரியவில்லை. ஆம்! சமூகத்தின் அனைத்து வெளிகளிலும் பெண்கள் புழங்கத் துவங்கினார்கள். ஆனால், அவர்களின் மனம் எப்படியானது, அவர்கள் ஆண்களில் இருந்து உணர்வுரீதியாய் எவ்வகையில் வேறுபட்டவர்கள் என ஆண்களுக்குப் புரியவில்லை. ஏனென்றால், இத்தனை நூற்றாண்டுகளாய் பெண்களை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 2012-ல் தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்த ஆண் குரோதத்தின், அறிவீனத்தின் உச்சம். இதை ஒரு கசப்பேறிய, கண்மூடித்தனமான இச்சையின் வெளிப்பாடு என்றும் பார்க்கலாம். பெண்களை எப்படி அணுகுவது என்றே அறியாத ஆண்கள், அதனால் ஏமாற்றமடைந்து, மனம் திரிந்து, பெண்களைத் துன்புறுத்துபவர்களாக மாறினார்கள். இந்த ஆண் தரப்பினரின் காதலை நல்லவிதமாய் காட்ட முயலும் படம் வந்தது. தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’. இந்தப் படத்தில் தன்னைப்  புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ செய்யாத ஒரு பெண்ணுக்காக ஹீரோ அலைந்து திரிந்து மன்றாடுவான். தியாகங்கள் செய்வான். சிறுகச்சிறுக தன்னை அழித்துக்கொள்வான். அந்தப் பெண் ஒரு வில்லியாகவே இறுதியில் காட்டப்படுவாள். Stalking-ஐ (பெண்களை பின்னால் நடந்து தொந்தரவு செய்யும் குற்றம்) இந்தப் படம் கொண்டாடுகிறது என பெண்ணியவாதிகள் விமர்சித்தார்கள்.

காதலும் கடந்து போகும்:  முப்பது வருடங்களில்  காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

எழுபது, எண்பதுகள் வரை பாலியல் கருவியாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண்ணுடல் தொண்ணூறுகளுக்குப் பிறகு சமூக, அரசியல் தளங்களில் வைத்து பேசப்பட்டது. நம் அரசியல், சாதி, மதம், பண்பாடு, கல்வி, வேலையிடங்கள் என ஒவ்வொன்றுமே சுதந்திரம் பெற்ற பெண்ணுடலை முன்வைத்து மீளுருவாக்கம் செய்யப்படத் தேவையிருந்தது. மீண்டும் சினிமாவையே நாம் எடுத்துக்கொண்டால், இரண்டாயிரத்துக்கு முன்புவரை சாதியும் மதமும் காதலுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பற்றி தமிழ்ப் படங்கள் பேசின. ஆனால், இரண்டாயிரத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா படங்களுமே காதல் ஏற்படுத்தும் சமூகப் பிரச்னைகளைப் பேசின. முழுக்க காதலைப் பற்றி சிலாகித்துப் பேசின படங்கள் இந்தக் காலகட்டத்தில் மிக மிகக் குறைவு. ஏனென்றால், சமூகத்துக்குக் காதல் ஒரு பெரும் ‘தொந்தரவாக’ மாறியது.

அதேபோல, பெண்களைக் கடுமையாகப் பழிக்கும் படங்கள் இந்தக் காலகட்டத்தில் தோன்றின. ஏனென்றால், ஆண் சமூகம் தன்னைச் சமமாகப் பாவிக்கக்கோரும் பெண்கள் ஏற்படுத்திய ‘இடர்களை’, தம் ஈகோவை இவர்கள் தொடர்ந்து புண்படுத்தியதைத் தாங்கமுடியாமல் துடித்தது. ஒருபக்கம் காதலைக் கொண்டாடிக்கொண்டே, இன்னொரு பக்கம் காதலைக் கடுமையாய் வெறுத்து ஒதுக்கும் முரண் மனநிலையும் தோன்றியது. காதல் பாடல்களைவிட காதலைத் தூற்றும் பாடல்கள் ஹிட் ஆயின. இந்த மனநிலையை சுவாரஸ்யமாய் சித்தரித்த ‘காதலில் சொதப்புவது எப்படி?’ வெகுவாக ரசிக்கப்பட்டது.

இறுதியாய், காதலைப் பொறுத்து நாம் இன்று வந்து நிற்கும் இடம் என்ன? காதலை நாம் இன்று ஒரு வீடியோ கேம் போல் பார்க்கத் துவங்கிவிட்டோம். (மணிரத்னம் இதைச் சுட்டும்விதமாய் தன் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நாயகனை ஒரு வீடியோ gamer-ஆக சித்தரித்தார்.) இன்று ‘காதலை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது!’ எனும் மனநிலையில் இருக்கிறோம். இரண்டு சம்பவங்களை உதாரணமாகத் தருகிறேன்.

வேலையிடத்தில் லிஃப்ட்டில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு பெண் தன் நண்பரிடம் மற்றொரு பெண்ணை கடுமையாகத் தூற்றிக்கொண்டு வருவதைக் கவனித்தேன். என்ன பிரச்னை என விசாரித்தேன். தூற்றப்படும் பெண் தன் அலுவலகத்தில் ஒரு பையனைக் காதலிக்கிறாள். அதற்கு என்ன? அந்தப் பையனுக்கு வேறு ஒரு காதலி இருக்கிறாள். பையன் என்ன ரெட்டைவால் குருவியா? அவள் சொன்னாள்... ‘அதுகூடப் பரவாயில்லீங்க. அந்த பொண்ணுக்கும் இன்னொரு லவ்வர் இருக்கு. ரெண்டு பேரும் சின்ஸியரா லவ் பண்றாங்க. அந்த லவ்வரை எனக்கு நல்லாத் தெரியும். நல்ல பையன். இந்தப் பொண்ணுக்கு இப்போ ஆபீஸில் இப்படி ஒரு எக்ஸ்ட்ரா லவ் தேவையா சொல்லுங்க?’ நான் நிஜமாகவே குழம்பிப்போனேன். பையனுக்கும் பெண்ணுக்கும் அலுவலகத்துக்கு வெளியேயும் உள்ளேயும் தனித்தனி காதலர் இருக்கிறார்கள். எல்லா காலத்திலும் இதுபோன்று பிறழ்உறவுகள் இருக்கும். ஆனால், ஒரே வித்தியாசம்... இன்று பிறழ்உறவுகள்கூட சீரியஸாக இல்லை. இந்தக் கூடுதல் காதல் தோன்றக் காரணமே முதல் லவ்வர் வேறு நிறுவனத்துக்கு வேலை வாங்கிச்சென்றதுதான். அலுவலகத்தில் போரடிக்க, அங்கு தேவையான ஜாலிக்காக ஓர் உபரிக்காதலை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனாலும், இருவரும் இது விளையாட்டுக்குத்தான், உண்மையான காதல் ஏற்கனவே தமக்கு அலுவலகத்துக்கு வெளியே உள்ளது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வப்போது விளையாடி முடிக்கவேண்டிய ஒரு மொபைல்போன் விளையாட்டாக, நாம் காதலை மாற்றி விட்டோம். காதலும் கடந்து போகும் என்பதுதான் இந்தத்

காதலும் கடந்து போகும்:  முப்பது வருடங்களில்  காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்

தலைமுறையின் டேக் லைன்.

அடுத்து, காதல் என்பது ஆண் – பெண்ணுக்கு இடையிலானது மட்டுமே எனும் இறுக்கமான எண்ணம் இன்று நெகிழ்ந்து வருகிறது. லெஸ்பியன் காதலர்களை இன்று வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. பொதுவெளியில் காதலியின் இடுப்பைத் தழுவிக் கூந்தலை வருடிவிடுகிறார்கள். கொஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தம் மாற்றுப் பாலுறவை வெளிப்படையாக ஏற்கும் துணிச்சல் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. அதனால், பெயருக்கு ஓர் ஆண் காதலனை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்தப் பெண்கள் காதலனிடம் இருப்பதைவிட தம் காதலியிடம்தான் உற்சாகமாய், மலர்ச்சியாய், இயல்பாய் இருக்கிறார்கள். தமிழ் சினிமா முழுக்க ஆண்வயமானது என்பதால், இவர்களின் காதல் பேசப்படவே இல்லை. ஆனால், ஆண்களுக்கு இடையிலான காதல் போன்ற நெருக்கத்தை (bromance) கதிர், ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றவர்கள் சித்தரித்து வெற்றிகண்டிருக்கிறார்கள்.

காதலைப் பொறுத்தமட்டில் நாம் மெள்ள மெள்ள அனைத்து இறுக்கங்களையும் தளர்த்தி ஒரு கொண்டாட்ட நிலைக்கு நகர்ந்து வருகிறோம். அதேநேரம் முன்பிருந்ததைவிட அரசியல், சமூக தளங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறது காதல். இந்த முரண்தான் இன்றைய காதல்!