Published:Updated:

`மழை வரும்... அணை நிரம்பும்... ஆண்டவனே நம்ம பக்கம்' - மயிலாடுதுறையில் அதிர்ந்த எடப்பாடி!

`மழை வரும்... அணை நிரம்பும்... ஆண்டவனே நம்ம பக்கம்' - மயிலாடுதுறையில் அதிர்ந்த எடப்பாடி!
`மழை வரும்... அணை நிரம்பும்... ஆண்டவனே நம்ம பக்கம்' - மயிலாடுதுறையில் அதிர்ந்த எடப்பாடி!

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று (18.6.18) அ.தி.மு.க-வின் `காவிரி நதிநீர் மீட்புப்' போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முதல்வருக்கு முன்பாக அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர் பேசினர். அதில் ஒருவரான பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் பேசும்போது,  ``காவிரி விஷயத்தில் தமிழக மக்களுக்குத் தந்தை செய்ததோ பச்சைத் துரோகம், ஆனால், மகனோ பச்சைத் துண்டை அணிந்துகொண்டு ஊர் ஊராகச் செல்கிறார்" என்று  கருணாநிதி மற்றும் ஸ்டாலினை தாக்கிப் பேசினார். அடுத்தாக பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 'காவிரி மேலாண்மை ஆணையம்' அமைப்பதற்கு முழு காரணம் அ.தி.மு.க.தான். காவிரி விஷயத்தில் தி.மு.க செய்தது `எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார்" என்ற கதை போல்தான் உள்ளது. உண்மையாகக் காவிரியை மீட்கப் போராடியது அ.தி.மு.க.தான்'' என்றார்.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி,  ``காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது அ.தி.மு.க-வின் மிகப்பெரிய வெற்றி. குறுவை சாகுபடிக்கு ஜூன் - 12 ல் தண்ணீர் திறக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். ஆனால், அணையில் குறிப்பிட்ட அளவு நீர் இருந்தால்தான் தண்ணீரைத் திறந்துவிட முடியும் என்ற அறிவு ஏழை விவசாயிக்குக்கூட இருக்கும். ஆனால், எதிர்க்கட்சி செயல் தலைவருக்கு இல்லை. தற்போது மேட்டூர் அணையில் 45 கன அடி நீரே உள்ளது. குறைந்தபட்ச அளவாக 80 கன அடி நீர் இருந்தால்தான் அணையைத் திறக்கலாம். வானிலை அறிஞர்களிடம் நான் பேசினேன். அவர்கள் இந்த வருடம் பருவ மழை அதிகம் இருக்கும் என்று கூறியுள்ளனர். அதனால் மழை பெய்யும். அணை நிரம்பும். தண்ணீர் திறக்கப்படும்.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்" என்று கூறினார்.

இரவு 8 மணியளவில் இந்தக் கூட்டம் முடிவடைந்தது. மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு முடிந்த, கிட்டத்தட்ட 4 மணி நேரத்தில் முடிவடைந்த இந்தக் பொதுக்கூட்டத்துக்காக கடந்த மூன்று நாள்களாக 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு, மயிலாடுதுறையில் முக்கிய பகுதியான சின்ன கடைத்தெருவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின்  வாகனங்கள் வேறு மாற்று வழியில் அனுப்பப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும், காவல்துறையினரில் சிலர் தொடர்ந்து கடும் வெயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் மயங்கி விழும் நிலைக்குச் சென்றனர். மருத்துவமனைக்குச் சென்று வரக்கூட பொதுமக்கள் வழக்கமான பாதையில் அனுமதிக்கப்படாததால் நோயாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும் பெரும் அவதிப்பட்டனர். விழா முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து தடைப்பட்டு நின்றது.

 ``மக்களுக்காக நடத்தப்படும் விழா என்று கூறிக்கொண்டு அரசியல்வாதிகள் தங்களின் சொகுசுக்காக நடத்திக்கொள்ளும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் இதுபோன்ற விழாக்கள் தேவையற்றவையே.  கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்பவர்கள் எங்கிருந்து பொதுமக்களின் சிரமங்களைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்'' என்று இந்தக் பொதுக்கூட்டத்தால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை நகர வாசிகளும், பொதுமக்களும் புலம்பி தீர்த்தனர்.

அடுத்த கட்டுரைக்கு