Published:Updated:

ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஜல்லிக்கட்டு என்னும்  கலாசார மூலதனம் - ரவிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்

Published:Updated:
ஜல்லிக்கட்டு என்னும்  கலாசார மூலதனம் - ரவிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்
ஜல்லிக்கட்டு என்னும்  கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, ஒரு போர்க்குரலாக மாறி தமிழ்நாட்டின் அரசியல் வெளியையும் ஊடகங்களையும் ஆக்கிரமித்தது. வரலாறு காணாத வகையில் பருவமழை பொய்த்து, தமிழகத்தை வறட்சி அச்சுறுத்தும் இந்த நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலையிலும் அதிர்ச்சியிலும் உயிர் இழந்துள்ள சூழலில், விவசாயத் தொழிலாளர்களைப் பட்டினிச் சாவு பயமுறுத்தும் நேரத்தில் தமிழகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காகக் கொந்தளித்து நின்றது. அயல்நாடுகளில் வாழும் தமிழர்களும்கூட ஆர்ப்பாட்டங்களை நடத்தி, தமது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

‘அரபு வசந்தம்’, ‘ஆக்குபை வால்ஸ்ட்ரீட்’ போராட்டங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு இளைஞர்களும் மாணவர்களும் தமிழக நகரங்களின் தெருக்களில் கூடினார்கள்.

ஜல்லிக்கட்டு என்னும்  கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!இந்தப் போராட்டங்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் நடத்தப்படும் விளையாட்டு என்பதை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்குமான பண்பாட்டு அடையாளம் என்பதாக அதை மாற்றியிருக்கின்றன.

பொருளாதாரப் பிரச்னைகளைவிட பண்பாட்டுப் பிரச்னைகள் முன்னுரிமை பெற்றுவிடுவது தமிழ்நாட்டுக்குப் புதிது அல்ல. அறுபதுகளில் நிலத்துக்காகவும் கூலி உயர்வுக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்கள் நாடு முழுவதும் அலை அலையாகப் பரவிக்கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் காவிரிப் படுகையும் அத்தகைய போராட்டங்களால் கனன்றுகொண்டிருந்தது. ஆனால், அவை எல்லாம்  பின்தள்ளப்பட்டு தமிழ்நாடு முழுவதும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முன்னிலை பெற்றது. அதை ஆதரித்தவர்கள் எப்படி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார்கள் என்ற வரலாறு நமக்குத் தெரிந்ததுதான். அதே நிலை இப்போதும் தொடர்கிறது என்பதைத்தான் ஜல்லிக்கட்டுக்கான இந்தப் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எல்லாவற்றையும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பவர்கள், இப்படியான பண்பாட்டுக் கொந்தளிப்புகளை ஏதோ ஒருசிலர் திட்டமிட்டு அரங்கேற்றும் சதித் திட்டம் என்றே புரிந்துகொள்வார்கள். அது சரியான பார்வை அல்ல.

ஜல்லிக்கட்டு, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம் என்பவர்கள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் குறிக்கப் பட்டிருப்பதும், ஏறுதழுவுதல் என கலித்தொகை, பட்டினப்பாலை ஆகிய இலக்கியப் பிரதிகளில் சுட்டப்பட்டிருப்பதும்  ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் தற்போது நடத்தப்படுவதும் ஒன்றுதான் என வாதிடுகின்றனர். சங்க இலக்கியப் பிரதிகளை வாசித்தவர்களுக்கு, இந்த வாதத்தை ஏற்பது சற்றுக் கடினமாகவே இருக்கும். இப்படிச் சொல்வதாலேயே உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என அர்த்தம் ஆகாது.
 
ஜல்லிக்கட்டு அரசியலைப் புரிந்துகொள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியர் பூர்தியூ (1930 – 2002)வின் ‘கலாசார மூலதனம்’ குறித்த கோட்பாடு நமக்கு உதவும். கல்வித் தளத்தில் மாணவர்கள் புரியும் சாதனைகளுக்கும் அவர்களது பலதரப்பட்ட குடும்பப் பின்புலங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்த பியர் பூர்தியூ, மாணவர்களின் வெற்றி தோல்வி என்பது அவர்களது உள்ளார்ந்த ஆற்றலோடு தொடர்புடையது என்ற பொதுப்புத்தியின் நம்பிக்கையை நிராகரித்தார். மாணவர்களின் கல்விக்கு எனச் செலவிடப்படும் பணத்தோடு வெற்றி தோல்வியைத் தொடர்புபடுத்திப் பார்த்த பொருளாதாரப் பார்வையையும் அவர் மறுத்தார். ஒரு மாணவனின் வெற்றி தோல்வி அவனது குடும்பம் உருவாக்கியிருக்கும் கலாசார மூலதனத்தோடு தொடர்புகொண்டது என அவர் விளக்கினார். கலாசார மூலதனம் மூன்று வடிவங்களில் இருக்கிறது - அகவயப்படுத்தப்பட்ட நிலை (Embodied state), புறவயப்படுத்
தப்பட்ட நிலை (Objectified state), நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலை (Institutionalised state) என்பவையே அந்த மூன்று நிலைகள்.

அகவயப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் கலாசார மூலதனம் என்பதில், நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பண்பாட்டு நடவடிக்கையை பியர் பூர்தியூ உள்ளடக்குகிறார். அது, ஒருவரது உடலிலும் மனதிலும் என்றென்றைக்குமாகப் படிந்திருப்பது. அதை அடைவதற்குத் தொடர்ச்சியான உழைப்பும் பயிற்சியும் முன்நிபந்தனைகளாக இருக்கின்றன. கலாசார மூலதனத்தை அகவயப்படுத்து வதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. அதை ஒருவர் தனிப்பட்ட முறையில்தான் பெற முடியும். 

தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், ஒரு சில சமூகப் பிரிவினருக்கு ஜல்லிக்கட்டு அத்தகைய கலாசார மூலதனங்களில் ஒன்றாக இருக்கிறது. 1914-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட்டியரில் ஜல்லிக்கட்டு குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி இதை உறுதிப்படுத்துகிறது...

‘ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஒரு நாள் குறிக்கப்படும். அந்தச் செய்தி வாரச் சந்தைகளில் தண்டோரா போட்டு எல்லோருக்கும் அறிவிக்கப்படும். கொம்புகளில் துணி அல்லது கைக்குட்டை கட்டப்பட்ட மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். கட்டை வண்டிகளை நிறுத்தி உருவாக்கப்பட்ட சந்துக்குள் அந்த மாடுகள் ஓடிவரும். அப்போது, பலத்த சப்தத்தோடு மேளங்கள் முழக்கப்படும், கூடியிருப்போரும் ஆரவாரம் செய்வார்கள். ஓடும் மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் துணியை லாகவமாக அவிழ்க்க வேண்டும். அதற்கு, விரைவாக ஓடும் ஆற்றலும் பறித்தெடுக்கும் திறனும் தேவை. வெற்றிபெறுகிறவர்கள் அந்த நேரத்தின் நாயகர்களாகக்  கொண்டாடப்படுவார்கள்.

திறமையற்றவர்களுக்குக் காயங்களும் சிராய்ப்புகளுமே பரிசு. வெறிகொண்ட காளைகள் அவ்வப்போது பார்வையாளர்களுக்கு இடையே புகுந்து சிலரைத் தூக்கிவீசும். அதனால், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஆனால், இதில் ஈடுபடுகிறவர்கள் தமது சொந்தப் பொறுப்பில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதால் கால்பந்து விளையாட்டைவிட, குதிரை ஏற்றத்தைவிட, நரி வேட்டைக்குச் செல்வதைவிட ஆபத்து குறைந்த இந்த வீரவிளையாட்டை அனுமதிக்கலாம் என அரசாங்கம் முடிவுசெய்திருக்கிறது. ஜல்லிக்கட்டின் மீது கள்ளர் சமூகத்தினருக்கு இருக்கும் ஈடுபாடு அசாதாரணமானது. ஜல்லிக்கட்டுக்கு என்றே கிராமங்களில் காளைகள் வளர்க்கப்படுகின்றன. கள்ளர் சமூகத்தினர் நிறைந்திருக்கும் திருமங்கலம், மேலூர், மதுரை தாலுக்காக்களில் ஜல்லிக்கட்டு சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது’ என மதுரை மாவட்ட கெஜட்டியர் (பக்கம் 83) அதை விவரிக்கிறது.

ஜல்லிக்கட்டில் கள்ளர் சமூகத்தவரின் ஈடுபாட்டை உறுதிசெய்யும் புதுக்கோட்டை மாவட்ட கெஜட்டியர், பொங்கலின்போது ஆரம்பமாகும் ஜல்லிக்கட்டு மே மாதம் வரை நடைபெறும் எனக் குறிப்பிடுகிறது (பக்கம் 185). ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் திருப்பத்தூர் தாலுக்கா அரளிப்பாறையில், பத்து நாட்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் அகவயப்படுத்தப்பட்ட கலாசார மூலதனமாக விளங்கியதைத் தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டு என்னும்  கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஒரு நபரோ அல்லது ஒரு சமூகக் குழுவோ அகவயப்படுத்திய கலாசார மூலதனத்தை வேறு எவருக்கும் கைமாற்றித் தர முடியாது. அதுபோலவே, அதை வேறு எவரும் சுவீகரிக்கவும் இயலாது. ஆகவே, ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் வேறு பிரிவினர் இப்போது திடீரென நடத்தினாலும் அது அந்தப் பகுதிகளின்/ பிரிவினரின் கலாசார மூலதனமாக உடனே மாறிவிடாது. அதற்கு தொடர்ச்சியான உழைப்பும், நீண்ட காலமும் தேவை.

ஜல்லிக்கட்டு இப்போது ஒருசில மாவட்டங்களில் ஒருசில பிரிவினருக்கான கலாசார மூலதனமாக இருக்கிறது என்பதாலேயே, அதை மற்றவர்கள் நிராகரித்துத்தான் ஆக வேண்டும் என்ற தேவை இல்லை. அப்படி நிராகரிப்போர் கலாசார மேட்டிமைவாதிகள் என்ற பழிக்கு ஆளாக நேரிடும். ஜல்லிக்கட்டு விளையாட்டில் இப்போது கலந்திருக்கும் சாதியக் கூறுகளை நீக்க வேண்டும் எனில், அதைப் பண்பாட்டுத் தளையில் இருந்து விடுவித்து, மற்ற விளையாட்டுகளைப் போல கேளிக்கைத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். அதற்கு முதலில் ஜல்லிக்கட்டை அரசுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில் எந்தவித சாதியச் சார்பும் இல்லை. அது ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்பாடு எனச் சொல்வது, அதைச் சாதிநீக்கம் செய்வதற்கு ஒப்பாதவர்களின் கூற்றே ஆகும். அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கலாசார மேலாதிக்கத்துக்கே வழிவகுக்கும்.

பிராணிகளின் நலனுக்கு எதிரானது எனக் கூறியும், மிருகவதைத் தடுப்புச் சட்டங்களைக் காரணமாகக் காட்டியும் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டைத் தடைசெய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உருவாகிவந்திருக்கும் கலாசார மூலதனம் ஒன்றை மதிப்பழிப்புச் செய்வதாகவே பொருள்படும். அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டபண மதிப்பழிப்பு (Demonetisation) நடவடிக்கையைவிட இந்தக் ‘கலாசார மூலதன மதிப்பழிப்பு’ ஆபத்தானது. எனவே, நீதிமன்றம் விதித்த தடை முழுமூச்சுடன் எதிர்க்கப்பட வேண்டும்.

எந்த ஒரு பொருளுக்கும் தடை விதிப்பதால் உருவாகும் அதன் பற்றாக்குறை, சந்தையில் அதன் தேவையைச் செயற்கையாக அதிகரிக்கச் செய்கிறது.  அதனால், அதன் வர்த்தக மதிப்பு உயர்கிறது. ஜல்லிக்கட்டுக்கான தடையும் அப்படியான விளைவைத்தான் ஏற்படுத்தியுள்ளது. அது இப்போது பண்டமாக மாற்றப்படுகிறது. அதன் வர்த்தக மதிப்பும் கூடியிருக்கிறது. அதை உணர்ந்ததால்தான் சினிமா வணிகர்கள் அதைக் கையகப்படுத்த முண்டியடிக்கின்றனர்.

ஜல்லிக்கட்டு என்னும்  கலாசார மூலதனம் - ரவிக்குமார்

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பவர்கள் மட்டும் அல்ல... அதை ஒரு பண்டமாகவும், தமிழ் என்பதை ஒரு வர்த்தகப் பெயராகவும் சீரழிக்கிற திரைப்பட வணிகர்களும் அந்தக் கலாசார மூலதனத்தை மதிப்பழிப்புச் செய்யக் காரணம் ஆகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக ஒருவார காலம் அறவழியில் நடைபெற்ற போராட்டம் ரத்தக்களறியில் முடிந்திருக்கிறது. அந்தப் போராட்டத்தை அரபு வசந்தத்தோடு இணைத்துப் பார்த்து அதைப் புரட்சி என்று கொண்டாடியவர்களும், அந்தப் போராட்டத்தின்போது எழுப்பப்பட்ட முழக்கங்களையும், அதில் கலந்து கொண்டோரின் நடவடிக்கைகளையும் தேசவிரோதச் செயல்களாக முத்திரைக் குத்தியவர்களும் அதைச் சரியாக மதிப்பிடத் தவறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டங்களில் ரஷ்ய நாட்டுச் சிந்தனையாளர் மிகைல் பக்தின் (1895-1975) குறிப்பிட்ட திருவிழாக் கொண்டாட்டத்தின் (Carnival) கூறுகளைப் பார்க்க முடிந்தது. திருவிழாக் கொண்டாட்டத்தின்போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கூடி தமக்குள் எவ்வித பேதமும் இல்லாமல் ஒற்றுமையாகக் கலந்துறவாடுவார்கள் என்கிறார் பக்தின். ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களில் கலந்துகொண்ட வர்களும் அப்படித்தான் எங்கெங்கிருந்தோ வந்தார்கள்; தமக்குள் எவ்வித பேதமும் இல்லாமல் தமது கோரிக்கையை முன்வைத்துப் போராடினார்கள். அங்கே ஆண் - பெண் என்ற பால்பேதம்கூட முன்னிலை பெறவில்லை என்பதை அந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பெண்களின் கூற்றுகள் தெரிவித்தன.

திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்கள் பின்விளைவுகளைப் பற்றிய தயக்கம் இல்லாமல் தமது விருப்பங்களை, எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள் எனக் கூறுகிறார் பக்தின். ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் அரசியல் தலைவர்களை விமர்சித்தது அப்படியான மனநிலையில்தான்.

சாதாரண நேரங்களில் ஏற்கப்படாத விஷயங்கள்கூட திருவிழாக் கொண்டாட்டத்தின்போது ஏற்கப்படும் என்கிறார் பக்தின். மற்ற நேரங்களில் பிரிவினைவாதம் எனவும் தேசவிரோதம் எனவும் கண்டனத்துக்கு உள்ளாகிற முழக்கங்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டபோது அவை கேலிகளாக, கிண்டல்களாக, பகடிகளாகவே பார்க்கப் பட்டுச் சிரித்துப் பாராட்டப்பட்டன.

புனிதங்கள் கவிழ்க்கப்படுவதை திருவிழாக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சம் என்கிறார் பக்தின். ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின்போது முதலமைச்சர், பிரதமர் என்ற அதிகாரக் குறியீடுகள் அப்படித்தான் புனித நீக்கம் செய்யப்பட்டன.

திருவிழாக் கொண்டாட்டத்தைப் பற்றி ஆய்வுசெய்த பக்தின் அதற்கும் கலகத்துக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறுகியது. எப்போது வேண்டுமானாலும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம் கலகமாக உருமாறிவிடும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.  ஜல்லிக்கட்டுக் கொண்டாட்டம் கலகமாக உருமாறிவிடுமோ என்ற அச்சத்தில்தான், தமிழகக் காவல்துறை அதன் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இப்போது ஒரு ரத்தக் களறியில் அதை முடித்துவைத்திருக்கிறது.

தமிழக அரசின் அணுகுமுறை, ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் என்னும் திருவிழாக் கொண்டாட்டத்தை இப்போதைக்கு வேண்டுமானால் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல கொண்டாட்டங்களை உருவாக்குவார்கள்; அதற்கான கனவை இந்தப் போராட்டங்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism