Published:Updated:

'போலீஸ் தாக்கவில்லை என எழுதிக் கொடுங்கள்!’ - மிரட்டப்படுகிறார்களா தூத்துக்குடி மக்கள்?

'போலீஸ் தாக்கவில்லை என எழுதிக் கொடுங்கள்!’ -  மிரட்டப்படுகிறார்களா தூத்துக்குடி மக்கள்?
'போலீஸ் தாக்கவில்லை என எழுதிக் கொடுங்கள்!’ - மிரட்டப்படுகிறார்களா தூத்துக்குடி மக்கள்?

``இனிமேல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவே மாட்டாது!". இந்த முடிவை அரசுத் தரப்பு அறிவிக்க, நூறு நாள்களுக்கும் மேலான போராட்டமும் பல உயிரிழப்புகளும் தேவைப்பட்டன. ஆனால், பிரச்னை இதோடு முடிந்துவிட்டது என்று நீங்கள் எண்ணினால் அது தவறு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே மாதம் 22- ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அரசு அறிவித்தது. ``போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தங்களைக் கல்லால் அடித்ததால் நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம்" என்று போலீஸார் ஆவேசமாகப் பேசிய வீடியோ காட்சிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது மட்டுமல்லாமல் போராட்டக்காரர்கள்மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே, தூத்துக்குடி போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் என்கிற பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் காவல்துறையினர் வீடுவீடாகப் புகுந்து விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்தல் செய்வதாகவும் வீட்டில் இருப்பவர்களைத் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், நள்ளிரவு கைதுகளை மேற்கொள்வதாகவும் தூத்துக்குடி சம்பவம் தொடர்பான உண்மை கண்டறியும் குழுக்களில் ஒன்றான மக்கள் சிவில் உரிமைக் கழகம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அங்குள்ள உண்மை நிலைமையைக் காவல்துறையினர் முற்றிலும் மறைப்பதாகக் கூறுகின்றனர் மக்கள். 

தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்காக, களமிறங்கியிருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரான நிஜாம் கூறுகையில், ``தூத்துக்குடி போராட்டத்தில் இதுவரை 18 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள்மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதன் உச்சகட்டமாக தனிநபர்கள் இருவர்மீது தலா 49 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தனிநபர் வாகனங்களுக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட அடிப்படைக் காரணங்களுக்காக, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எளிதில் பிணை கிடைக்காத வகையில் இந்த 18 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் வீடியோக்களில் பேசியவர்கள். அவர்களைக் குற்றவாளிகள் என்று கைது செய்வது எந்த வகையில் நியாயம்? இவர்களில் சிலருக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டத்தை அரசு தவறான வகையில் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டது குறித்தான எவ்விதத் தகவல் அறிக்கையும் அரசின் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் விவரம் குறித்தான தகவல் தளத்திலிருந்து பெற முடியவில்லை. நள்ளிரவு கைதுகளை மறைக்கவே இந்தச் சதியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுகிறது. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்காக, இவர்களின் மீது இத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால், 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது இதுவரை ஒரு முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை. மற்றொரு பக்கம் போலீஸாரின்  தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களிடம் `அடையாளம் தெரியாத நபர்கள்தாம் தாக்கினார்கள்’ என்று அரசு மருத்துவர்கள் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பு எவ்வளவு வன்மத்துடன் நடந்து கொள்கிறது எனத் தெரிய வருகிறது. காவல்துறை தங்கள் தரப்புக் குற்றத்தை எப்படியாவது மறைக்கப்பார்க்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கட்டணமில்லாமல் நீதிமன்றங்களில் வாதாடப்போவதாக முடிவெடுத்துள்ளோம்" என்றார்.

`பொய் குற்றமாகாது. பொய் என்பது மன்னிக்கக் கூடியதுதான். பொய்யை மெய்யாக்கத் துணிவதுதான் குற்றம்' - ஃபியோதர் தாஸ்தோவ்ஸ்கி