மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, போயஸ் கார்டனைவிட்டுப் போனபிறகு இதழியல் படிப்பை முடித்து வெளிநாட்டில் அந்தப் படிப்பு தொடர்பான பயிற்சிகளில் பங்கேற்று வந்தார். ஆனாலும் அத்தையுடனான தொடர்பில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. வழக்கம் போல கார்டனுக்கு வந்து போய்க்கொண்டிருந்த தீபாவை மன்னார்குடி குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயலலிதாவோடு அவர் நெருக்கம் ஆகிவிடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தார்கள்.

அப்படி என்ன சசிகலாவுக்கு தீபா மீது கோபம்? அதுபற்றி தீபாவே சொல்கிறார்... ‘‘அவங்களுக்கும் எனக்கும் வாக்குவாதங்கள் நடக்கும். ‘அத்தை உன் மேல கோபமாக இருக்காங்க... இங்கே வர வேண்டாம்’ என்றெல்லாம் சசிகலா சொன்னபோது அவரிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். இதுதான் அவர் மனசுல இருந்திருக்கும். ‘நீ இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கல’ என் பல தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘இதை அத்தை என்னிடம் சொல்லட்டும்’ என நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அத்தை அப்படி ஒருமுறைகூட சொன்னதே இல்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதற்கு ஆதாரம் வேண்டும். எதை வைத்து இதை நம்புவது? அத்தை நேரடியாகச் சொல்லியிருந்தால் மட்டுமே நம்ப முடியும். பலமுறை அத்தை என்னை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். ‘தீபா அங்கே இல்லை. அவரிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை’ என்றெல்லாம் அவர்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்’’ என்கிறார் தீபா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்!

ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்திக்க பலமுறை முயன்று தோற்றுப் போனார் தீபா. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்தபோதும் அவரைப் பார்க்கப் போனார் தீபா. அங்கேயும் அத்தையை அவரால் பார்க்க முடியவில்லை. சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குத் திரும்பியபோது, போயஸ் கார்டன் ரோட்டில் தொண்டர்களோடு ஒருவராக தீபா நின்றிருந்தார். அப்போதும் அவரை கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை. இது அப்போலோ வரையில் தொடர்ந்தது.

அப்போலோவில் அவரைப் பார்க்க பெரிய போராட்டமே நடத்தினார் தீபா. ஆனால், அவரை அப்போலோ வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். மற்ற வி.ஐ.பி-கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை போக முடிந்தபோது, மெயின் கேட்டைக்கூட தீபாவால் தாண்ட முடியவில்லை. ஜெயலலிதா இறந்தபிறகும்கூட இது தொடர்ந்தது. போயஸ் கார்டனில் காத்திருந்தார். ஜெயலலிதாவின் உடல் அங்கே வந்தபோதும் பார்க்கவிடாமல் தடுக்கப்பட்டார். அதிகாலை வரை போயஸ் கார்டனில் காத்திருந்துவிட்டு, ராஜாஜி ஹாலுக்குப் போன தீபாவுக்கு அங்கேயும் தடைகள்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்!

‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்குப் போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்லை. அதன்பிறகு ராஜாஜி ஹாலுக்குப் போய் போராடினேன். அனுமதி தரவேயில்லை. ‘அத்தை முகத்தைக் கடைசியாகப் பார்க்க அனுமதியுங்கள்’ என கெஞ்சியும் போராடியும் அழுத பிறகுதான் அஞ்சலி செலுத்த முடிந்தது. அப்போலோவில் அத்தையைப் பார்க்கவிடாமல் தடுத்தார்கள். அதைவிட ராஜாஜி ஹாலில் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒருவர் இறந்தபிறகு அவரைப் பார்க்கவிடாமல் கடைசி நேரம் வரையில் இப்படி நடந்து கொண்டவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள். இது மனிதர்கள் செய்யும் வேலையே இல்லை. அத்தை இருந்தபோது அவரை வைத்து பாலிடிக்ஸ் செய்தீர்கள்! உயிருடன் இல்லாதபோது அவரைக் கடைசியாகப் பார்க்கக்கூட விடாமல் தடுத்தது ஏன்? இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? போயஸ் கார்டன் வீட்டில் பிறந்து அவரால் பெயர் வைக்கப்பட்ட நான், அத்தையிடம் கடைசியாக ஒரு முறை பேசிவிட முடியாதா என துடித்தேன். உறவினர் என்ற முறையில் அத்தையைப் பார்க்க என்னை அனுமதித்திருக்க வேண்டும். அந்த விருப்பத்தைக்கூட நிறைவேற்ற முடியாமல் தடுத்தார்கள். வலுக்கட்டயமாக வெளியேற்றியது எல்லாம் தவறு’’ என்கிறார் தீபா.

‘‘அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபிறகுதான் தீபாவைப் பற்றி பலருக்கும் தெரியும். அதற்கு முன்பு தீபா எங்கே போனார்’’ என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு முன்பே தீபா முயற்சிசெய்து கொண்டுதான் இருந்தார். ஆனால் அது செய்தியாக மாறவில்லை. எல்லாம் போயஸ் கார்டன் வாசலுக்குள்ளேயே முடிந்து விட்டதால் வெளியே தெரியவில்லை.

ராஜாஜி ஹாலில் போராடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் தீபா. ஆனால், ஜெயலலிதாவின் உடல் அருகில்கூட தீபாவை நிற்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.

- தொடரும்...