Published:Updated:

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்... தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்?

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்... தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்?
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்... தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த தகவல் நேற்று இரவு வந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களின் நீண்ட போராட்டத்துக்குப்பிறகு இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை என ஐந்து மாவட்டங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம் பார்க்கப்பட்டது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கைகாட்டிய இடங்களை பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை குழுவினர் அங்கிருக்கும் ஒவ்வொரு வசதிகளுக்கும் மதிப்பெண் அளித்தார்கள்.  

அந்த வகையில் ஆரம்பத்திலேயே எய்ம்ஸ் குழுவினரின் எதிர்பார்ப்புக்கு சரியாக அமைந்தது மதுரையில் உள்ள தோப்பூர்தான். இதனால் விரைவில் மதுரை அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், அமைச்சர் விஜயபாஸ்கர் குழப்படி செய்தார். அதனால் மூன்று வருடங்களாக எய்ம்ஸ்க்கான அனுமதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஒருவழியாக மதுரை மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு தற்போது மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை அருகே தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் 1500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை என்று முதலமைச்சரும் அறிவித்துவிட்டார். தன்னுடைய திருமங்கலம் தொகுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால் அந்த இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பார்வையிட்டார். 

ஒரு மருத்துவமனைக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு, எய்ம்ஸில் அப்படி என்ன சிறப்பு? என்று பலருக்கும் கேள்வி எழலாம். இதைப்பற்றி, பல முயற்சிகளை எடுத்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தினரிடம் கேட்டோம், ''தமிழகத்திலேயே அதிகமான  மக்கள் வந்து செல்லும் இரண்டாவது பெரிய அரசு மருத்துவமனையான மதுரை ராஜாஜி மருத்துவமனை இருந்தாலும், அதி நவீன சிறப்பு வசதிகள் உள்ள பல தனியார் மருத்துவமனைகளும் மதுரையில் நிறைந்திருக்கின்றன.  

அதே நேரம், அதிகளவு எளிய மக்கள் வாழும் தென் மாவட்ட மக்களுக்கு மலிவான கட்டணத்தில் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு ஒரு மருத்துவமனை தேவையாக இருக்கிறது.

அது எய்ம்ஸ் வந்தால்தான் முடியும். 1952ல் டெல்லியில் தொடங்கப்பட்ட 'எய்ம்ஸ்' மத்திய அரசின் நிதி உதவியுடன் தரமாக இயங்கி வருகிறது. மருத்துவ உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுடன் மக்கள் தினமும் சிகிச்சை எடுத்து செல்லும் வகையில் மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. தற்போது, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. எய்ம்ஸ் தனியாக மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இங்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தால் ஆண்டு கட்டணம் 6 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். ஆனால், அந்த மாணவருக்காக பல லட்சங்களை செலவு செய்கிறது எய்ம்ஸ். தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது மக்கள் இங்கு சிகிச்சை எடுக்க மிகவும் குறைந்த கட்டணம்தான். பதிவுக் கட்டணமாக 10 ரூபாயும், பொதுவார்டில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படும். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே. எவ்வளவு மோசமான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். இங்கு உடல் பரிசோதனைகள் மிக குறைந்த கட்டணத்திலேயே எடுக்கப்படும். மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மருத்துவமனை பராமரிக்கப்படும்.

இங்கு சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரிய மருத்துவர்கள் டெல்லியிலிருந்து விமானம் மூலம் அடிக்கடி வந்து செல்வார்கள். வெளிநாட்டு மருத்துவர்களும் வருகைத் தருவார்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் சுற்றியுள்ள 17 மாவட்ட மக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. எந்த மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து ஐந்து மணி நேரத்துக்குள் மதுரை வந்துவிடலாம். பேரூந்து, ரயில், விமான சேவை அருகிலேயே உள்ளது. மூன்று பகுதியிலிருந்து நான்கு வழிச்சாலையும் மதுரையில் சந்திக்கிறது. டெல்லி எய்ம்ஸில் மட்டும் உள் நோயாளிகள் இரண்டாயிரம் பேரும், வெளி நோயாளிகள் பத்தாயிரம் பேரும் வந்து செல்கிறார்கள். 'மதுரையில் 750 படுக்கை வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனையும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களும், 60 நர்ஸ்கள் பயிற்சி எடுக்கும் வசதியும் உருவாக்கப்படும்' என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் தோப்பூர், மதுரை அருகே ஒரு துணை நகரமாக உருவாகும். இதனால், இங்குள்ள தனியார் மருத்துவமனைகள் கட்டணங்களை குறைக்கும்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு