Published:Updated:

உத்தரப்பிரதேசம் யாருக்கு?

உத்தரப்பிரதேசம் யாருக்கு?
பிரீமியம் ஸ்டோரி
உத்தரப்பிரதேசம் யாருக்கு?

மருதன்

உத்தரப்பிரதேசம் யாருக்கு?

மருதன்

Published:Updated:
உத்தரப்பிரதேசம் யாருக்கு?
பிரீமியம் ஸ்டோரி
உத்தரப்பிரதேசம் யாருக்கு?

த்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் என ஐந்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் மாதம் 8-ம் தேதி வரை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஐந்து மாநிலங்கள் என்றாலும், எல்லோருடைய கவனமும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீதே குவிந்திருக்கிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தை முன்வைத்து, பரபரப்பான விவாதங்களும் யூகங்களும் நடைபெறுவதற்குக் காரணம், அது செல்வாக்குமிக்க பெரிய மாநிலம் என்பது மட்டும் அல்ல... ஆளும் சமாஜ்வாதி கட்சி குறித்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு செய்திகள் வெளிவருவதுதான்.

உத்தரப்பிரதேசம் யாருக்கு?

எதிர்க்கட்சிகளை வீழ்த்துவது இருக்கட்டும், முதலில் அகிலேஷ் யாதவால் தன் கட்சி உடையாமல் பாதுகாக்க முடியுமா? காங்கிரஸுடன் கூட்டணி சேர்வது இருக்கட்டும், தந்தை முலாயம் சிங் யாதவுடன் அகிலேஷால் நல்லுறவு பேண முடியுமா? 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வென்றதைப்போல், இந்த முறையும் பா.ஜ.க உத்தரப்பிரதேசத்தில் வெல்லுமா? அல்லது இருவரையும் பின்னுக்குத் தள்ளி, மாயாவதி ஆச்சர்யமூட்டும் வகையில் முன்னுக்கு வருவாரா? கருத்துக்கணிப்புகளையும் அரசியல் ஆரூடங்களையும் ஒதுக்கிவிட்டு உத்தரப் பிரதேசத்தின் கள யதார்த்தத்தைப் பார்ப்போம்.

மூன்று முக்கிய அம்சங்களைப் புரிந்து கொண்டால்தான், உத்தரப்பிரதேசத்தின் அரசியலை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடியும்.

குடும்ப அரசியல்

எதிர்வரும் தேர்தலில், 25 வயதான சமாஜ்வாதி கட்சி சந்திக்க உள்ள மிகப்பெரிய சவால், பா.ஜ.க-வோ, மாயாவதியோ அல்ல... சமாஜ்வாதி கட்சியின் உள்அரசியல்தான். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி சமாஜ்வாதி கட்சி இரண்டாகப் பிளந்து ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முலாயம் சிங் யாதவின் மகனும் உ.பி முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ். இன்னொரு பக்கம், முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவ்.

ஷிவ்பால் யாதவுக்கு நெருக்கமானவர்களாகப் பார்க்கப்பட்ட முதன்மைச் செயலாளர் தீபக் சிங்காலையும் இரண்டு அமைச்சர்களையும் (காயத்ரி பிரசாத் பிரஜாபதி, ராஜ்கிஷோர் சிங்) அகிலேஷ் யாதவ் பதவிநீக்கம் செய்தது மோதலின் தொடக்கம். வெகுண்டெழுந்த ஷிவ்பால், முலாயம் உதவியுடன் அகிலேஷைப் பதவிநீக்கம் செய்ய முயன்றார். பதிலுக்கு அகிலேஷ், ஷிவ்பாலின் அனைத்துப் பதவிகளையும் பறித்தார். முலாயம் சிங்குக்கு அடுத்த இடத்தை வகித்துவந்த ஷிவ்பால் யாதவை நீக்கியதன் மூலம், வெளிப்படையாகத் தன் தந்தைக்கு எதிரான போரையும் அகிலேஷ் தொடுத்தார். தான் ஆதரிக்கப்போவது சகோதரனையா அல்லது மகனையா என்ற கேள்வி எழுந்தபோது, முலாயம் சிங் தன் சகோதரனை ஆதரித்தார். 2016-ம் ஆண்டின் இறுதியில் தன் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினார்.

அதிகாரபூர்வமாக இரண்டாக உடையவில்லை என்றாலும், கட்சி இரு அணிகளாகப் பிரிந்து நின்றது. கட்சியின் சின்னமான சைக்கிள் யாருக்குப் போக வேண்டும் என்ற கேள்வி இரு அணிகளுக்குள் எழுந்தபோது, தேர்தல் ஆணையம் அகிலேஷ் யாதவுக்கு அதை வழங்க முடிவுசெய்தது. அகிலேஷ் யாதவ் அதிகாரபூர்வமாக சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர முலாயம் சிங்குக்கு வேறு வழி இல்லை. இப்போது மெள்ள மெள்ள தன் மகனுடன் நெருங்க ஆரம்பித்திருக்கிறார் முலாயம்.

`கட்சி யாருக்கு?' என்னும் கேள்விக்கு விடை வந்துவிட்டது என்றாலும், குடும்ப அரசியலில் உள்ள ஆதாரச் சிக்கல் தீர்ந்துவிட்டது எனச் சொல்வதற்கு இல்லை. கட்சித் தலைவர் பதவிக்கு மட்டும் அல்ல, முதலமைச்சர் பதவிக்கும்கூட போட்டிபோட்டவர் ஷிவ்பால். கட்சியின் இரண்டாவது முக்கியத் தலைவராக இருந்த அவரால், அனைத்துச் சங்கடங்களையும் மறந்து அகிலேஷின் தலைமையை மீண்டும் ஏற்றுக்கொள்ள முடியுமா? தன் ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்தி, அகிலேஷின் தலைமையை ஏற்றுக்கொள்ள செய்ய முடியுமா? சின்னம், பதவி, கட்சி மூன்றையும் தக்கவைத்துக் கொண்டுவிட்டார் என்றாலும், தன் அப்பாவோடும் சித்தப்பாவோடும் மீண்டும் இணக்கமான உறவை அகிலேஷால் ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? குடும்பத்தில் நிலவும் அதிகாரப் போட்டியை அவரால் முடிவுக்குக் கொண்டுவர முடியுமா?

அகநிலை வருத்தங்கள் எவ்வளவு இருந்தாலும் தேர்தல் என்னும் புறநிலை யதார்த்தம், தற்சமயம் இந்த மூவரையும் அமைதிப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து வீழ்த்தவேண்டிய சமயத்தில், இப்படி ஒரு பெரும் குழப்பமாக நாமே மாறியிருப்பது நல்லது அல்ல எனும் உண்மையை, மிகத் தாமதமாக சமாஜ்வாதி கட்சி புரிந்துகொண்டது. ஆனால், அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விலை மிகப்பெரியது. மாநிலப் பிரச்னைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, குடும்பப் பிரச்னைகளை முதன்மைப்படுத்திய யாதவ் கும்பலை, உத்தரப்பிரதேச மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்வார்களா எனும் சந்தேகம் பூதாகாரமாக எழுந்து நிற்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தரப்பிரதேசம் யாருக்கு?

அகிலேஷுக்கும் முலாயமுக்கும் இடையிலான மோதலை, புதுமைக்கும் பழைமைக்கும் இடையிலான மோதல் என, சிலர் கட்டமைக்கிறார்கள். ஊழல் கறை படிந்த தன் அப்பாவின் நண்பர்களை நீக்கவே அகிலேஷ் விரும்புகிறார் என்றும், கட்சியைச் சுத்தப்படுத்தும், நவீனமயமாக்கும் வேலையைத்தான் அவர் செய்கிறார் என்றும், அவர்கள் அகிலேஷைத் தூக்கி நிறுத்துகிறார்கள். ஆனால், இது வெளிப்படையான அதிகாரப் போட்டியே. குடும்ப அரசியல் எங்கெல்லாம் தழைக்கிறதோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட வாரிசுப் போட்டிகள் நடைபெறுவது இயல்பு என்பதற்கு, தமிழ்நாடு தொடங்கி இந்தியா முழுக்க பல உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

சாதி அரசியல்

இந்திய அரசியல் பெரும்பாலும் சாதி அரசியல். அதனால்தான் சமாஜ்வாதி கட்சி, பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி மூன்றுமே சாதி அரசியலைப் பிரதானமாக முன்வைத்து, இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன.

80-களில் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் சாதி அரசியல் முளைவிட ஆரம்பித்தது. தவிர்க்க இயலாதபடி, வகுப்புவாத அரசியலும் உடன்சேர்ந்து செழித்தது. இந்தப் பின்னணியில்தான் 90-களின் தொடக்கத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி தோன்றியது.

அப்போதைய கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட தலித் பிரிவினரின் பாதுகாவலனாக அவர்களுடைய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பாக அது தன்னைக் கட்டமைத்தபோது, உத்தரப்பிரதேசத்தின் தவிர்க்க இயலாத சக்தியாக சமாஜ்வாதி கட்சி உயர்ந்தது. மதச்சார்பின்மை, சமூகநீதி போன்ற முழக்கங்களை எழுப்பி, பரந்த அளவில் மக்களின் கவனத்தை அது வெற்றிகரமாக ஈர்த்தது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ், கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இதே போன்று சாதி அரசியலை முன்னெடுத்து பெரும் வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சி, எதிர்வரும் தேர்தலிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஆதரவையும் இஸ்லாமியர்களின் ஆதரவையும் பெறுவதில்தான் கவனம் செலுத்திவருகிறது.
அடுத்து, பா.ஜ.க. 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரே அமித் ஷா பல்வேறு சாதிக் கட்சி மாநாடுகளில் கலந்துகொண்டார். ஆர்.எஸ்.எஸ் உதவியுடன்தான் இந்த மாநாடுகள் அரங்கேறின. பா.ஜ.க தன் உயர்சாதி பிம்பத்தை மாற்றிக்கொள்ள அவசரகதியில் இயங்குகிறது. அதன் ஒரு பகுதியாக தலித் பிரிவினரை ஈர்க்கவும் அம்பேத்கரை உள்ளிழுத்துக்கொள்ளவும் பா.ஜ.க தீவிரமாக முயன்றுவருகிறது. சமாஜ்வாதி கட்சியைப்போலவே பா.ஜ.க-வும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களைக் குறிவைத்தே பிரசாரம் மேற்கொள்கிறது.

மூன்றாவது, பகுஜன் சமாஜ் கட்சி. சமாஜ்வாதி கட்சியில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதே மாயாவதியின் முதன்மையான இலக்கு. பசு மாட்டை முன்னிறுத்தி உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வகுப்புவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களின் ஆதரவை சமாஜ்வாதி கட்சி இழந்துள்ளதை மாயாவதி கவனத்தில் கொண்டுள்ளார். அதை ஒரு வாய்ப்பாகவே அவர் காண்கிறார். அதற்கு உதாரணம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் நூறு பேர் இஸ்லாமியர்களாக இருப்பதுதான். தலித்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுதிரட்டினால், அவர்களுடைய நம்பிக்கையை வென்றால், முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பதே மாயாவதியின் கணக்கு.

தேர்தல் அரசியல்

இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? மொத்தம் உள்ள 403 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சியை எதிர்த்துப் போட்டியிடுவதே பா.ஜ.க-வின் திட்டம். தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வேட்பாளரை அந்தக் கட்சி அறிவிக்கப்போவது இல்லை. இந்த முடிவு, உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. `` ‘கட்சியை வெற்றிபெறவைக்க தன்னால் மட்டுமே முடியும்’ என அமித்ஜி நினைக்கிறார். எங்களுடன் விவாதிக்கக்கூட அவர் தயாராக இல்லை’' என்கிறார்கள் அதிருப்தியாளர்கள்.

உத்தரப்பிரதேசம் யாருக்கு?

2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது உண்மை. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. அதற்கு மாடு அரசியல் ஒரு காரணம். கடந்த ஜனவரி மாதம் 35 பஞ்சாயத்துத் தலைவர்கள் முசாஃபர்பாத்தில் ஒன்றுகூடி, `அடுத்த முறை பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கப்போவது இல்லை’ என உறுதி எடுத்துள்ளனர். பா.ஜ.க-வின் சாதி அரசியலைச் சந்தர்ப்பவாதமாகவும், அவர்களுடைய இந்துத்துவ அரசியலை வகுப்புவாதமாகவும் உத்தரப்பிரதேசத்து மக்கள் காண்கின்றனர். இவை போக, சமீபத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கணிக்கிறார்கள். இந்த மூன்று தடைகளையும் மீறினால்தான் பா.ஜ.க-வால் உத்தரப்பிரதேசத்தில் வெல்ல முடியும்.

இரண்டாவது, பகுஜன் சமாஜ் கட்சி. மாயாவதியால் தனது நீண்டகாலத் தேக்கநிலையை உடைத்து, மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியுமா என்னும் சந்தேகத்தைப் பலரும் எழுப்பிவருகிறார்கள். தொடர்ச்சியாக உயர் சாதிப் பிரிவினரின் மேலாதிக்கத்தை எதிர்த்து வந்ததன் மூலம், தலித் மக்களை அணிதிரட்டி வந்த கட்சி பகுஜன் சமாஜ். இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள மாயாவதி, தலித் பிரிவினரோடு சேர்த்து மேல் சாதியினரின் ஆதரவையும் வெல்ல முயன்றுவருகிறார். இந்த அணுகுமுறையை இரு தரப்பினராலும் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சந்தேகமே.

உத்தரப்பிரதேசம் எப்படி முடிவெடுக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism