Published:Updated:

"தூத்துக்குடியில் தாக்கப்பட்ட காவலர்களின் பட்டியல் கொடுங்கள்?" - மக்கள் உரிமைக் கூட்டணி!

"தூத்துக்குடியில் தாக்கப்பட்ட காவலர்களின் பட்டியல் கொடுங்கள்?" - மக்கள் உரிமைக் கூட்டணி!
"தூத்துக்குடியில் தாக்கப்பட்ட காவலர்களின் பட்டியல் கொடுங்கள்?" - மக்கள் உரிமைக் கூட்டணி!

"தூத்துக்குடியில் தாக்கப்பட்ட காவலர்களின் பட்டியல் கொடுங்கள்?" - மக்கள் உரிமைக் கூட்டணி!

\

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் 100-வது நாள் அன்று நடந்த துப்பாக்கிச் சூடு, படுகொலைகள், வன்முறைகள், தொடர் கைது நடவடிக்கைகள் இன்னும் அப்பகுதி பொதுமக்களை பதற்றத்துடனேயே வைத்துள்ளது. அந்தப் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆய்வுகள், கருத்து கேட்புகள் நடைபெற்று வருகின்றன. அப்படிச் சென்று வந்த குழு ஒன்றில் இடம் பெற்றிருந்த, `மக்கள் உரிமைக் கூட்டணி' நிறுவனர் மற்றும் செயலாளர் வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன் நம்மிடம் பேசினார். அவர், ``கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்த 7 பேர் கொண்ட குழு தூத்துக்குடியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, சுற்றுச்சூழல் உரிமை மீறல்களை நில உரிமையின் மீது நடந்துள்ள தாக்குதல்களை கடந்த 2018 மே 27, 28, 29 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேரடியாகப் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பவங்களை பார்த்தவர்களிடமும் விசாரித்தறிந்தது'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``இத்தனை ஆண்டுகளாகச் செயல்படும் ஒரு பெரிய நிறுவனத்தை, `விதிமீறல் நிறுவனம்' என்று எப்படிக் குற்றம் சாட்டுகிறீர்கள்?''

``ஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியிலிருந்து துரத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1994- ம் ஆண்டு நிறுவப்பட்டது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தள்ளி அமைக்க வேண்டிய ஆலை 14 கிலோ மீட்டருக்குள் அமைந்திருப்பதே விதியை மீறியதுதான். இந்நிறுவனம், வருடத்துக்கு 70,000 டன் `தாமிரம்' உற்பத்தி செய்வதாக அரசுக்கு உறுதி கொடுத்துவிட்டு வருடமொன்றுக்கு 2 லட்சம் டன் தாமிர உற்பத்தியைச் சட்டவிரோதமாகச் செய்து வந்தது. தாமிர ஆலையிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இப்படி, நிலம் கெட்டு, நீர் கெட்டு, காற்றை சுவாசிக்க முடியாமல் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கும் நிலையை உணர்ந்த மக்கள், இந்த ஆலை ஆபத்தானது என்பதை அனுபவத்தில் கண்டறிந்து போராடினார்கள்''. 

``உரிய அனுமதியுடன் பல ஆண்டுகளாகச் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை முடக்க திடீர் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தியது ஏன்?''

``22 ஆண்டுகளாக இந்த ஆலையை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. முடிவுதான் தெரியவில்லை. இந்தநிலையில் ஆலை நிர்வாகம் குமரரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் கிராமங்களில் பொதுமக்களிடம் நைசாகப் பேசி நிலங்களைக் கையகப்படுத்தி ஆலையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியது. இந்த நிலையில்தான் மக்கள் தொடர் போராட்டங்களைக் கையிலெடுத்தார்கள். மே 20, 2018 அன்று மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் சமாதானக் கூட்டத்தை நடத்தினர். இதில் ஒரு குழு மே 21-ம் தேதி அரசு சொல்லும் இடத்தில் கூடுவது எனவும், இன்னொரு குழு மே 22ம் தேதி திட்டமிட்டபடி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்வது எனவும் முடிவெடுத்தனர்''

``திட்டமிட்டு ஆயுங்களுடன் பொதுமக்கள் பேரணியாகச் சென்றதாக காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டுகிறார்களே?''

``போராட்டம் நடத்த ஒன்றுகூடி திட்டமிட்டார்கள். அதன்படி, மே 22-ம் தேதி காலை 9.30 மணியளவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலரும் `ஸ்டெர்லைட் ஆலையை மூடு' என்ற ஒற்றை முழக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டனர். யாருடைய கையிலும் கம்போ, கற்களோ, ஆயுதங்களோ இல்லை. மாறாக, தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள், உணவுப் பொட்டலங்கள் மட்டுமே இருந்தன. முழக்கத்துடன் மக்கள் முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், மாவட்ட நிர்வாகத்துக்குப் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், அலுவலகம் வராமல், ஓட்டப்பிடாரம் சென்று ஜமாபந்தி நடத்திக் கொண்டிருந்தார்.

மக்கள் பேரணி, தெற்கு காவல் நிலையம் அருகில் சுமார் 2 கி.மீ தூரம் கடந்து வந்தபோது, மாடுகளை கூட்டத்தில் விட்டனர் காவல்துறையினர். அதில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து 1 மைல் தூரத்தில் வி.வி.டி சிக்னல் அருகில் காவல்துறையினர், பேரணியில் வந்தவர்களைத் தடுத்தனர். அதையும் மீறி மக்கள் பேரணி சென்றது. 3-வது மைல் கல் பாலம் அருகே பல கிராமங்களிலிருந்து வந்த மக்களும் சேர்ந்து விடுகின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை. எனவே, மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிற்குள் சென்று முழக்கம் எழுப்பினர். அங்கே ஐந்தாயிரம் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்களை, மூன்று மைல் கல் பாலம் அருகே நிறுத்தியிருந்தால், கலெக்டர் வளாகத்துக்குள் வராமல் தடுத்திருக்கலாம். ஒரு சிலரை மட்டும் கலெக்டரைப் பார்க்க அனுமதித்திருக்கலாம். எனவேதான் இதைத் திட்டமிட்ட படுகொலை என்கிறோம்".

``குறிப்பிட்ட அமைப்பினர்தான் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாகச் சொல்கிறார்களே?''

``அதெல்லாம் அரசு நிர்வாகம் நடத்தும் பொய்ப் பிரசாரம். துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களில் ஒரு குழந்தை  உள்பட13 பேரும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், காயம் அடைந்தவர்களிலும் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அருட்தந்தை ஜெயசீலன் குண்டடிபட்டு, தற்போதும் மருத்துவமனையில் உள்ளார். எனவே, இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சாட்டிவிட முடியாது. இப்போது, மாவட்ட ஆட்சியருடன் ஆலைக்குச் சென்ற தாசில்தார் இரண்டு பேப்பரை ஒட்டி, 25 ரூபாய்க்குப் பூட்டு வாங்கி அதில் 5 ரூபாய்க்கு அரக்கு வாங்கி தடவி ஆலையை மூடிவிட்டோம் என அறிவித்து விட்டார். எங்களது கேள்விகளெல்லாம் அடிமட்டத்தில் உள்ள போலீஸாரோடு சண்டைபோடுவதுடன் முடிந்துவிடக் கூடாது. விடை தெரியாமல் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும்''.

``அதென்ன கேள்விகள்?''

``சம்பவம் நடந்து முடிந்தபின் அன்றைய தினம் திரேஸ்புரம் சென்று ஜான்ஸி என்ற பெண்ணை மூளை சிதறச் சுட்டது ஏன்? சம்பவம் நடந்த மறுநாள், அண்ணாநகரில் படையுடன் போய் இரண்டுபேரை ஏன் சுட்டுக் கொன்றார்கள்? குழந்தைகள், குடும்பத்தார் என உணவுப் பொட்டலங்கள், பாய் தலையணையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை கலவரக்காரர்கள் என மீண்டும் மீண்டும் சித்திரிப்பது ஏன்? அவர்கள்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? கலவரத்தைக் கட்டுப்படுத்தத்தான் காவல்துறை அடித்தது, சுட்டது என்றால் இந்தச் சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்களில் எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது, யார்? யார்? எந்த எந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லையே ஏன்? மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர், தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை இடமாற்றம் செய்ததுதான் இந்தப் படுகொலைகளுக்குத் தண்டனையா? 

துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளது. பல குழந்தைகளுக்குக் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 குழந்தைகள் சட்டவிரோதக் காவலிலிருந்து மீட்கப்பட்டு பிணையில் உள்ளனர். தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம், தூத்துக்குடி மாவட்ட குழந்தை நலக்குழு, இளம்சிறார் நீதிக் குழுமம் இதுகுறித்து என்ன முடிவெடுத்துள்ளது? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தும், மக்கள் கூட்டம் உள்ளே நுழைவதற்கும், வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதற்கும் காவல்துறையினர் எப்படி அனுமதித்தனர்? சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை மக்களின் பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது ஏன்?

மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை, உள்நாட்டுப் போரைக் கையாள்வதுபோல் கையாள வழிவகுத்துக் கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலங்களை அரசு எப்போது கையகப்படுத்தும்? ஸ்டெர்லைட் கம்பெனியில் உள்ள ஏராளமான தாமிரக் குவியல்களை, ரசாயனக் குப்பைகளை எப்போது அரசு அகற்றப்போகிறது? நஞ்சாகிப்போன 300 ஏக்கர் நிலத்தை, நீரை, சுற்றுச்சூழலை மறுபடியும் சீரமைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர அரசு என்ன செய்யப் போகிறது? ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கையை அரசு எடுக்கப்போகிறது?''

``அப்படியானால், இதற்குப் பரிகாரம்தான் என்ன?''

``நாங்கள் முன்வைத்துள்ள கேள்விகளுக்கான பதிலை அரசு தர வேண்டும். உண்மையை அரசாங்கம் மூடி மறைக்க முயல்கிறது. நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம், சமூக அமைப்புகள் ஆகியன இந்த நோக்கத்தில் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு, நிராயுதபாணிகளாக உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். நீரைக் காக்க, நிலத்தைக் காக்க, மனித உயிரைக் காக்க, இதுவரை இழந்துள்ள இழப்பீடுகளை ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும். இதுபற்றிச் சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்ப வேண்டும். தவறு இழைத்தது இந்த ஆட்சியா? அந்த ஆட்சியா? என்று விவாதம் நடத்துவது பிரச்னைகளை திசை திருப்பி மழுங்கடித்துவிடும். எனவே, ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கும் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. அத்துடன் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தார்மிகப் பொறுப்பு இருக்கிறது. செய்த தவறுகளை இனியும் மறைக்க முயற்சி செய்யாதீர்கள். அப்போதுதான், நீங்கள் நாகரிக சமூகத்தின் மனிதர்களாக இருப்பீர்கள். அதைவிடுத்து, `இது மக்களாட்சி, மக்களே எஜமானர்கள்' என்று வாய்ஜாலம் பேசாதீர்கள். விடை தெரியாதவரை இத்தகைய கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டேயிருப்போம். கேள்விகள்தாம் நமது கணைகள். ஏனெனில், அவை மட்டுமே நம்மிடம் உள்ளன''. 

``அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?''

``துப்பாக்கிச் சூடு குறித்த எங்களின் கண்டுபிடிப்புகளை, விசாரணை விவரங்களை ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் கொடுப்போம். மேலும், தமிழக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். தூத்துக்குடி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அங்கு, நடந்த மனித உரிமை மீறல்களுக்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள்வரை தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நடந்த `எம்.சி.மேத்தா எதிர் கமல்நாத்' வழக்கில், `சுற்றுச்சூழல் உரிமையும் மனித உரிமையே' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கும் தலா ரூ.20 கோடி வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான மனித உயிர்களுக்குத் தலா ரூ. 1 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்குக் காயத்தின்தன்மைக்கு ஏற்ப ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் காயமடைந்து, உடல் ஊனமுற்றவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தூத்துக்குடியில் தொடரும் கைது நடவடிக்கைகளை கைவிட மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். அந்தப் பகுதியில் பொது அமைதியை ஏற்படுத்த அமைதிக் குழுவை நிறுவ வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடக் கோரியுள்ளோம். இந்த வழக்கில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்.பி என்று பலரையும் சேர்த்துள்ளோம். வரும், திங்கள்கிழமை 25.06.2018 அன்று தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு போடுகிறோம்'' என்றார்.

இதன்மூலம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை வேகமெடுக்கிறது..!

அடுத்த கட்டுரைக்கு