Published:Updated:

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் யாரு... நம்ம செல்லூர் ராஜு சாரு! #MaduraiAtrocity

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் தினகரன் செலவு செய்கிறார்'' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் யாரு... நம்ம செல்லூர் ராஜு சாரு! #MaduraiAtrocity
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் யாரு... நம்ம செல்லூர் ராஜு சாரு! #MaduraiAtrocity

``ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் தினகரன் செலவு செய்கிறார்'' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியது சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `நான் அப்படிப் பேசவில்லை...' என்று அவர் விளக்கம் சொன்னாலும், அவர் பேசிய வீடியோ மக்கள் மத்தியில் இப்போதும் பரவி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல உளறிக் கொட்டுபவர்களும், சேம் சைடில் கோல் அடிப்பவர்களும் அ.தி.மு.க-வில் நிறைய பேர் உள்ளனர் என்று அக்கட்சியினரே கூறுகிறார்கள். அதேபோல் எதிர்தரப்பில் உள்ள தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோரை குறிவைத்து வசைபாடி வருகிறார்கள் அமைச்சர்கள். மதுரையில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா பொதுக்கூட்டத்தைத் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் நடத்தி வருகிறார்கள். மதுரை சௌராஷ்டிரா பள்ளி அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ''காவிரி வெற்றிக்குச் சொந்தக்காரர்கள் நாம். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் கூட்டம் போடுகிறோம். இதற்கான முதல் முயற்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அடுத்து, ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகண்டார். ஆனால், தி.மு.க-வினர் மக்களுக்குத் தேவையானதைப் பேசாமல் போராட்டங்களைச் செய்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு 360 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது ஸ்டாலின். ஆனால், அவரே போராட்டம் நடத்துகிறார். நீராதார பிரச்னைகளைத் தீர்க்காதவர்கள் தி.மு.க-வினர். தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் தி.மு.க கொண்டு வரவில்லை. அவர்கள் ஆட்சியில் வட்டச் செயலாளர்கூட போலீஸை மிரட்டுவார்கள். மதுரையில் எவ்வளவு அராஜகம் செய்தார்கள். நான் ஏழு ஆண்டாக அமைச்சராக உள்ளேன். என்னால் யாருக்காவது துன்பம் உண்டா... யாரையாவது மிரட்டியிருக்கிறேனா, தேவையில்லாமல் ஸ்டாலின் எங்கள் ஆட்சியில் 'ஊழல் ஊழல்' என்று எப்போதும் சொல்கிறார்.

எங்களைப் பற்றி விரல் நீட்டி குற்றம் சுமத்தினால், நான்கு விரல்கள் உங்களை நோக்கி இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நாட்டு மக்களுக்கு ஆபத்து என்கிறார். ஸ்டாலினுக்கு அரசியல் ஞானம் இல்லை. எங்கள் ஆட்சியில் முதலமைச்சர் எளிமையாக இருக்கிறார். சட்டம் ஒழுங்கில் அகில இந்திய அளவில் தமிழகம்தான் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் இரண்டு காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டன. ஊழலுக்காகக் கலைக்கப்பட்டதுதான் தி.மு.க ஆட்சி. போராட்டம் என்றாலே மக்களுக்கு அலர்ஜியாகிவிட்டது. ஸ்டாலின் இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிறார். இது என்ன தேன் கூடா... கலைப்பதற்கு. பதவியை துச்சமாக நினைப்பவர்கள் நாங்கள். மக்கள்தான் எஜமானர்கள், அவர்கள் போ என்று சொன்னால் பதவியைவிட்டு போய்விடுகிறோம்'' என்று பொங்கித் தீர்த்துவிட்டார். 

விவரமான அமைச்சர் என்று பெயர் எடுத்த மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, ''`மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' போன்றவர் செல்லூர்ராஜு. அண்ணன் பொறுப்பு வகிக்கும் தமிழக கூட்டுறவுத்துறையில்தான் மற்ற மாநிலங்களைவிட அதிக சேமிப்பு உள்ளது. எங்கள் ஆட்சியில் ப்ளஸ் டூ முடித்தவர்கள் 100-க்கு 48 பேர் கல்லூரிக்குச் செல்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் 26 பேர்தான். எடப்பாடியார் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று  இமயமலை அருகே சிலிகுரியில் இருந்துகொண்டு ஒருத்தரும் அமெரிக்காவில் இருந்துகொண்டு ஒருத்தரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். காவிரி பிரச்னைக்குத் தீர்வு கண்டது முதல், களவு போன ராஜராஜன் சிலையை மீட்டது வரை இந்த ஆட்சியில் நடந்துள்ளது. 'ஜல்லிக்கட்டு நாயகன்’ என ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெயர் வந்ததுபோல் 'காவிரி நாயகன்' என எடப்பாடி பழனிசாமிக்கு பெயர் வந்துள்ளது'' என்று நெக்குருகிப் பேசினார்.

அதேபோல சிவகாசியில் நடந்த காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ''சிறப்பாகச் செயல்பட்டு வரும் அ.தி.மு.க ஆட்சியைப் பொறுக்க முடியாமல் தி.மு.க-வினர் தேவையில்லாமல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இனி அ.தி.மு.க-வுக்கு எதிரிகளே கிடையாது" என்றார்.