Published:Updated:

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: தீபா டீல்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

‘‘ ‘தீபா’வளி... ‘தீபா’வளி எனப் பாடிக்கொண்டு வந்தார் கழுகார். யாரைப் பற்றி சொல்லப் போகிறார் என்பது தெரிந்தது. அவரைப் பற்றியே ஆரம்பித்தோம்.

‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன் இன்னமும் கூட்டம் குவிந்து கிடக்கிறதே... என்ன முடிவில் இருக்கிறார் தீபா?’’

‘‘தீபா, மாற்றி மாற்றி முடிவுகளை அறிவிக்கிறார்; ஆனால், தனது நோக்கத்தில் அவர் தெளிவாக இருக்கிறார்.’’

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

‘‘நோக்கமா?’’

‘‘ ‘ஜனவரியில் புதுக்கட்சி ஆரம்பிப்பேன்’ என்று தீபா சொல்லவில்லை. ஆனால், தீபா தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதை நம்பி, அ.தி.மு.க-வில் சசிகலாவின் தலைமையை ஏற்காத தொண்டர்கள் தீபா வீட்டு முன் குவிந்தனர். தீபா வீட்டை நோக்கி தினமும் சாரை சாரையாகப் படையெடுத்து வந்தனர். ஆனால், ஜனவரியில் தீபா உருப்படியாக எதையும் அறிவிக்கவில்லை. மாறாக, ‘மக்கள் கருத்தைக் கேட்டபிறகு, பிப்ரவரியில் அறிவிக்கிறேன்’ என்று சொல்லி, இன்னும் ‘பெப்’ ஏற்றினார். ஆனால், அதன்பிறகு அது தொடர்பான எந்த முயற்சிகளோ... சந்திப்புகளோ தீபா தரப்பில் இருந்து நடக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது, தீபா இப்போதைக்கு அல்ல... எப்போதுமே உருப்படியாக எதையும் செய்ய மாட்டாரோ என்று அவர் ஆதரவாளர்களுக்கே சந்தேகம் வந்துள்ளது!’’

‘‘ம்ம்ம். பின்னால் இருந்து அவரை சிலர் இயக்குவதாகச் சொல்லப்பட்டதே?’’

‘‘பின்னால் இருந்து இயக்குவதற்கு சிலர் முயற்சித்தது உண்மைதான். தமிழக பி.ஜே.பி-யில் பரபரப்பாக வலம்வரும் சிலர் அதற்குத் தூண்டில் போட்டனர். அ.தி.மு.க-வில் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்காத பழைய தலைகள் சிலவும் தீபாவை வைத்து ஏதாவது காரியம் சாதிக்க முடியுமா என நினைத்தன. ஆனால், தீபா யாருக்கும் பிடிகொடுக்கவில்லை.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பரபரப்பாக வழக்குத் தொடரும் வழக்கறிஞர் ஒருவர், தீபாவிடம் ‘உங்களுக்குச் சட்டப்படியான வழிகாட்டுதல்கள் அனைத்தையும் செய்து தருகிறேன்; உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறேன்’ என்றெல்லாம் பேசி உள்ளார். அதைக் கேட்ட தீபா, ‘நிச்சயமாகச் செய்யுங்கள்... ஆனால், அதற்கு முன்னால் நீங்கள் சசி அத்தைக்கு எதிராகப் பேசுவது, அவர்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது போன்ற வேலைகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வாருங்கள்’ என்றாராம். அதிர்ச்சியடைந்து திரும்பிவிட்டார் அந்த வழக்கறிஞர்.’’

‘‘அப்படியானால், தீபாவின் நோக்கம் சசிகலாவை எதிர்ப்பது இல்லையா?’’

‘‘நிச்சயமாக இல்லை. சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்வதுதான் தீபாவின் நோக்கம் என்றால், இந்நேரம் அவர் பரபரப்பாக வலம்வர ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கில் மெரினாவில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதுகூட, அது பற்றிய எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. நடராசன் சொன்னதும் பலரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ‘தீபாவும் தீபக்கும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள். அவர்களைப் பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு’ என்று. இதை வைத்தே பலரும் தீபா மீது சந்தேகம் கிளப்புகிறார்கள்.’’

‘‘தீபாவின் நோக்கம்தான் என்ன?’’

‘‘தீபாவுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. அதுதான் தீபாவின் தற்காலிகப் பூச்சாண்டிகளுக்குக் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். அந்தச் சிக்கலில் சமரசம் ஏற்பட்டு, நினைத்தது படிந்துவிட்டால், அதன்பிறகு தீபாவும் சசிகலா குடும்பத்துப் பிள்ளையாகிவிடுவார்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

‘‘நினைத்தது என்றால் என்ன?”

‘‘அ.தி.மு.க-வில் ஓர் இடம். அதேபோல் ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றிய ஒரு தெளிவு... இதுபற்றி தீபாவுக்கு தெளிவு கிடைக்க வேண்டும் என்கிறார்கள். ஜெயலலிதா வகித்துவந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை தீபாவுக்குக் கொடுத்து, ‘அம்மா’ புகழ் பாடும்விதமாக டூர் அனுப்பிவைக்க அவர்களிடம் ஒரு திட்டம் இருக்கிறது. மேலும், இதற்கு சன்மானமாக ஒரு எம்.பி பதவியும் தரப்படலாம்.  இதற்கு இன்னும் ஆறேழு மாதங்கள் இருக்கின்றன. அதுவரைக்கும் தீபா பேரவை, ஜெ. தீபா பேரவை காமெடி வெடிகள் வெடித்துக்கொண்டே இருக்கும்.’’

‘‘இந்த பேரத்தில் வேறு சிக்கல் ஏதாவது இருக்கிறதா?’’

‘‘போயஸ் கார்டன் வீடு ஒரு தடையாக இருக்கிறது. அந்த வீட்டை தீபா பிடிவாதமாகக் கேட்கிறார் என்கிறார்கள். சசிகலாவுக்கு அதில் விருப்பம் இல்லையாம்.

‘போயஸ் கார்டன் வீடு என்பது தமிழகத்தின் அடையாளம். ராமாவரம் தோட்டம், கோபாலபுரம் இல்லம், தைலாபுரம் தோட்டம் என்ற அடையாளங்களைப் போல போயஸ் கார்டன் ஓர் அடையாளம். அ.தி.மு.க-வினரின் வழிபாட்டுத்தலம். அதை விட்டுத்தர சசிகலா மறுக்கிறார். தீபா பிடிவாதமாகக் கேட்கிறார். அதுதான் இப்போதைக்குப் பிரச்னை என்றும் சொல்லப்படுகிறது.’’

‘‘இதற்கு மத்தியில் சசிகலாவுக்கு நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதே?’’

‘‘ஆமாம்.... சசிகலா மீது 1996-ம் ஆண்டு காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஜெ.ஜெ தொலைக்காட்சிக்கு (இப்போதைய ஜெயா டி.வி) உபகரணங்கள் வாங்கியது, சசிகலாவின் கணக்கில் அமெரிக்க டாலர்கள் வந்தது போன்ற பல குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது அந்த  வழக்கு.  இதில் தனித்தனியாகவும் தொலைக்காட்சி நிர்வாகத்தோடு சேர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, சசிகலா மீது தனியாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவித்தார். ஆனால், ஜெ.ஜெ தொலைக்காட்சியோடு சேர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணையைச் சந்திக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.’’

‘‘அப்படியா?”

‘‘தனியாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து சசிகலாவை விடுவித்தது செல்லாது. எனவே, கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கேட்டு அமலாக்கத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவுசெய்வதற்கான முகாந்திரங்கள் உள்ளன. அதனால், அவர் அந்த வழக்கு விசாரணையைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சசிகலாவின் தலைவலியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது’’ என்ற கழுகாரிடம், ‘‘ கடந்த முறை நீர் சொன்னது மாதிரியே கலகலப்பாக முடிந்துவிட்டதே சட்டமன்றம்?’’ என்று பேச்சைத் திருப்பினோம்.

‘‘ஆமாம். கடைசி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முதல்வர் பதிலுரையும் கலகலப்பாகத்தான் அமைந்தது. ஜெயலலிதா முதல்வராகப் பதிலுரை அளித்தால், தி.மு.க அதைப் புறக்கணித்திருக்கும் அல்லது களேபரங்களுக்குப் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், ஓ.பி.எஸ் பதில் உரையின்போது, தி.மு.க-வின் குறுக்கீடுகள் இருந்துகொண்டே இருந்தாலும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் ஓ.பி.எஸ் பதில் அளித்துக்கொண்டே இருந்தார். ஆளும் தரப்பு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நிதானமாகப் பதிலும் சொன்னார் முதல்வர்.’’

‘‘ம்!”

‘‘முதல்வராக இருந்து முதல்முறையாக 110 விதியின் கீழ் அறிக்கையும் வாசித்து அசத்திவிட்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தனது அரசுக்கு இமேஜ் கெட்டுப்போய் விட்டது என்பதால் மாணவர்கள் விடுதலை, விசாரணை கமிஷன் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் கவனிக்கவேண்டிய விஷயமும் இருக்கிறது. ஸ்டாலின் எந்தெந்த கோரிக்கைகளையெல்லாம் வைத்தாரோ அவற்றையெல்லாம் முதல்வர் 110 விதியில் அறிவித்துள்ளதைத்தான் இப்போது எல்லோரும் உற்றுநோக்குகிறார்கள். முதல்வர் இவ்வளவு இணக்கமாக நடந்துகொண்டாலும், தி.மு.க-வினர் முதல்வர் மீது வருத்தத்தில்தான் உள்ளார்கள்.’’

‘‘என்னவாம்?’’

‘‘சட்டமன்றக் குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அதில், பொதுக்கணக்குக் குழுத் தலைவர் பதவி தி.மு.க-வுக்கு கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஸ்டாலினும் சபாநாயகரிடம், ‘பொதுக்கணக்கு குழுத் தலைவர் பதவி எனக்கு வேண்டாம், துரைமுருகனுக்குத் தாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். ஆனால், அந்தப் பதவி இப்போது காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்குத் தரப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழு பதவியில் பொதுக்கணக்குக் குழுதான் முக்கியமானது. ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பாக எந்த ஆவணங்களையும் வாங்கிப் பார்த்து அம்பலப்படுத்தும் அதிகாரம் கொண்டது இந்தப் பதவி. இதை துரைமுருகனிடம் தந்தால், அவர் ஏதேனும் நெருக்கடி கொடுத்துவிடுவார் என்ற அச்சம் அ.தி.மு.க-விடம் உள்ளது. அதனால், ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதை முன்னுதாரணமாகக் காட்டி, ராமசாமிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்செட் ஆன ஸ்டாலின், ‘சட்டமன்றக் குழுக்களில் தி.மு.க உறுப்பினர்களும் வெளியேறிக்கொள்ள வேண்டியதுதான்’ என்று காட்டமாக சொல்லியுள்ளார்.

‘‘ஆனால், துரைமுருகன் அ.தி.மு.க-வை வாழ்த்தியுள்ளாரே?’’

‘‘ஆமாம். எதிர்க் கட்சி மீது குற்றம்சாட்டி முதல்வர் பேசியபோது, குறுக்கிட்ட துரைமுருகன், ‘நாங்கள் ஐந்து ஆண்டுகள் எதிர்க் கட்சியாகவே இருக்கிறோம். நீங்கள் ஆளும் கட்சியின் முதல்வராக இருங்கள். உங்கள் பின்னால் உள்ள சக்தியைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று நக்கலாகச் சொல்ல அ.தி.மு.க உறுப்பினர்களும் சிரித்துவிட்டார்கள்.’’

‘‘தி.மு.க உறுப்பினர்களைக் கண்டித்தாராமே ஸ்டாலின்?’’

‘‘அ.தி.மு.க உறுப்பினர்கள் ‘பெரியம்மா, சின்னம்மா, குட்டியம்மா என்று புகழ்பாடிக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஆனால், தி.மு.க உறுப்பினர் கணேசன் புகழ்ந்து பேசியபோது குறுக்கிட்ட ஸ்டாலின், ‘புகழ்வதை நிறுத்திவிட்டுக் கேள்வி கேளுங்கள்’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார். அளவுக்கு மீறி ஆளும்கட்சி யோடு ஸ்டாலின் அணுசரித்துப் போவதை தி.மு.க. உறுப்பினர்களும் தொண்டர்களும் விரும்ப வில்லையாம்” என்று சொல்லி எழுந்த  கழுகார்,

‘‘பாகுபலி -2 திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை நெடுஞ்சேரன் என்பவரது மகனான ராஜராஜன் என்பவர் வாங்கியுள்ளாராம்.  இந்தப் நெடுஞ்சேரன் ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமானவர் என்று சொல்லிவருகிறாராம். ‘இந்தப் படத்தை கூடுதல் விலைக்கு இரண்டு பேரிடம் விற்றுவிட்டார்கள். இருவரில் ஒருவர் முன்பணத்தை திரும்பக் கேட்டார். அப்போது பணத்தைத் திருப்பித் தராமல் நாங்கள் தான் அரசாங்கம் என்று இவர்கள் சொன்னார்கள்’ என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்தப் பணம் யாருடையது என்ற பட்டிமன்றமும் இன்னொரு பக்கம் நடக்கிறது” என்றபடி பறந்தார்.

ஸ்டாலினை பாராட்டிய அ.தி.மு.க!

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

.தி.மு.க எம்.எல்.ஏ ராதாபுரம் ஐ.எஸ். இன்பதுரை சட்டமன்றத்தில், “இங்கே எதிர்க் கட்சித் தலைவர் பேசுகையில், ‘நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்தினோம். ஆனால், அந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வாங்கவில்லை’ என்று சொல்கிறார். இதனை ஒப்புக் கொண்டதற்காக ஸ்டாலினை பாராட்டுகிறேன். பெண் என்றால் பிள்ளையைப் பெற்றுதான் ஆக வேண்டும். ஆனால், பிள்ளையைப் பெறுகின்ற பெண், திருமணம் ஆனவளாக இருக்க வேண்டும். அதுதான் பெண்ணுக்கு அழகு. அந்தப் பிள்ளைக்கும் பாதுகாப்பு. அதாவது நீங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கலாம். ஆனால், அதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு பெற்றுத்தந்தது அ.தி.மு.க அரசு. சத்தியத்துக்கு சாட்சி சொல்கிற இந்த வாய்ப்பைத் தந்த புரட்சித் தலைவி, பட்டாள படை வரிசையை வழிநடத்துகிற ஃபீல்டு மார்ஷல், தமிழகத்தின் புதிய புரட்சித் தலைவி, புரட்சிப் பூங்குயில், இளைய இதயங்களில் வாழ்கிற இளையத் தலைவி, தமிழகமே வணங்குகின்ற தானைத் தலைவி சின்னம்மா பாதங்களில் என்னுடைய தலையை சாய்த்து அமைகிறேன்” என்று நீட்டி முழக்கி அ.தி.மு.க-வினரையே நெளியவைத்தார்.

விடுதலை!

லாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும்  மிகப்பெரும் தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்த ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் இருந்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்துள்ளது.

மிஸ்டர் கழுகு: தீபா டீல்?

தயாநிதி மாறன் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனின் ‘ஏர்செல்’ நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்பவரின் ‘மேக்சிஸ்’ நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி மிரட்டினார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் பகிரங்கமாகப் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுத்து விசாரித்தது. அந்த விசாரணையில், கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டி.டி.ஹெச் நிறுவனத்துக்கு மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து முதலீடுகள் குறிப்பிட்ட காலத்தில் வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதன் தொடர்ச்சியாக சன் டி.வி-க்குச் சொந்தமான, 742 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது கூட்டுச்சதி 120-பி, அரசு ஊழியர் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து விசாரணை சூடு பிடித்தது. இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு முன்ஜாமீன்கூட பலமுறை மறுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்ஸிஸ் நிறுவனத்தின் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தார். ``இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை’’என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அமலாக்கத் துறை வழக்கும் ரத்து ஆகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism