Published:Updated:

“தி.மு.க என் தாய்வீடு!” - அறிவாலயத்துக்கு அச்சாரம் போடும் ராதாரவி

“தி.மு.க என் தாய்வீடு!” - அறிவாலயத்துக்கு அச்சாரம் போடும் ராதாரவி
பிரீமியம் ஸ்டோரி
News
“தி.மு.க என் தாய்வீடு!” - அறிவாலயத்துக்கு அச்சாரம் போடும் ராதாரவி

“தி.மு.க என் தாய்வீடு!” - அறிவாலயத்துக்கு அச்சாரம் போடும் ராதாரவி

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரைக்கும் ஜெ. புராணம் பாடிக்கொண்டிருந்த நடிகர் ராதாரவி இப்போது, “தமிழகத்தின் ஒரே தலைவர் ஸ்டாலின்தான்” என மாற்றிப்பேச ஆரம்பித்துள்ளார். 2001- 2006 அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வந்தார். அதன்பிறகு கட்சியில் தீவிரமாக இயங்கவில்லை. அ.தி.மு.க மேடைகளில் தென்படா விட்டாலும்கூட அ.தி.மு.க-வின் அபிமானியாகவே இருந்தார். இப்போது அறிவாலயத்தில் அச்சாரம் போடுவதற்காகத் தயாராகிவிட்டார் ராதாரவி. அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

“தி.மு.க என் தாய்வீடு!” - அறிவாலயத்துக்கு அச்சாரம் போடும் ராதாரவி

“ஏன் இந்தத் திடீர் மனமாற்றம்?” 

“நடிகர் சந்திரசேகர் மகளின் திருமணத்தில்தான், ‘ஸ்டாலின் மட்டுமே எதிர்கால அரசியலின் ஒரே தகுதிவாய்ந்த தலைவர்’ என்றேன். இன்றைய அரசியல் சூழலில் ஆறு அறிவுகொண்ட எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். சுறுசுறுப்பான மனிதர், இளைஞர்களைப் புரிந்துகொண்டவர், அரசியலை நன்கறிந்தவர், தமிழகத்தில் ஸ்டாலின் ஒருவர்தான். அதனால்தான் அப்படிப் பேசினேன். ஆனால், தி.மு.க-வில் சேரப்போவதாகச் சொல்லவில்லை. சேர்ந்தாலும் என்ன தவறு இருக்கிறது... அது என் தாய்வீடுதானே!’’

“ஒரு கட்சியில் இருந்துகொண்டு மாற்றுக் கட்சித் தலைவரைத் துதிபாடுவது சரியா?’’

‘‘தி.மு.க-வில் இருந்து வந்த எனக்கு, உரிய மரியாதையை அளித்தவர் ஜெயலலிதா. ஒரு பேச்சாளராக என்னை கௌரவமாக நடத்தியதோடு எம்.எல்.ஏ-வாகவும் ஆக்கினார். அந்த நன்றியை என்றும் நான் மறக்கமாட்டேன். அவர் காலம் வரை நன்றியுடனே இருந்தேன். அவர் இருந்தபோதே ராதாரவி இப்படி பேசியிருந்தால்தான் நீங்கள் ‘கட்சித் துரோகி’ என்று சொல்லமுடியும். நான் இப்போதுதானே பேசுகிறேன். ஜெயலலிதாவையோ, எம்.ஜி.ஆரையோ நான் எதுவும் குறைசொல்லிப் பேசவில்லையே. ‘இன்றைய அரசியல் சூழலில் ஸ்டாலின் தகுதியானவர்’ என்கிறேன், அவ்வளவுதான். ஜெயலலிதாவுடனேயே என் அரசியல் பயணத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்தேன். விரக்தியில் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியேதான் இருந்தேன். ஒரு நல்ல மேடை கிடைத்தபோது அதைத் தவிர்க்க முடியாமல் சொல்ல வேண்டியதாகிவிட்டது.’’

“அ.தி.மு.க-வின் புதிய தலைமைக்கும் உங்களுக்கும் என்னதான் முரண்?”

“எனக்கு இப்போதுள்ள தலைமையுடன் எந்த முரண்பாடும் கிடையாது. இவர் தகுதியானவர் என்பதால், அவர் தகுதியற்றவர் என்பதல்ல அர்த்தம். அவர்கள் பற்றிப் பேசும் அளவுக்கு கட்சியின் பெரிய பதவிகளில் நான் இருந்தது இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் நேற்றுவரை இருந்த ஒரு கட்சியை விமர்சனம் செய்வது நாகரிகமும் இல்லை. ஜெயலலிதா உள்ளவரை அவருக்கு நன்றியுடன் நடந்து கொண்டேன். அவ்வளவுதான்.”

“ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்திருக்கும் சசிகலா, அதில் தாக்குப்பிடிப்பாரா?”

“அ.தி.மு.க என்று சொல்லவில்லை... பொதுவாகவே சொல்கிறேன். ‘அம்மாவின் இறப்பில் கற்கவேண்டிய பாடங்கள் சில’ என சமூக வலைதளங்களில் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று, இரண்டாம் கட்டத்தலைமை இல்லாத கட்சி நிற்காது என்பது. அப்படியானால், அவர்கள் கண்ணோட்டத்தில் தகுதியான கட்சி தி.மு.க-தானே? தலைவரின் காலத்திலேயே அடுத்த தலைவர் அடையாளம் காட்டப்பட்டது தி.மு.க-வில் மட்டும்தான்.

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோதும், இறந்தபிறகும் அரசியல் மாச்சர்யங்களைப் பொருட்படுத்தாமல், ஓடிவந்து நின்றார். எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னவிதமான சங்கடங்கள் வரும் என்று தெரிந்தும்கூட சமாதிக்கும் வந்தார். ஜெயலலிதா இறந்தபிறகு அவர் வெளிப்படுத்திய கண்ணியமான பேச்சும் செயலும்தான் எனக்கு அவர் மீது ஈர்ப்பு வரக் காரணமானது. எதிர்காலத்தில் தி.மு.க-வில் சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நான் அங்கிருந்து வந்தவன்தானே. தவிர தி.மு.க-வை எப்போதும் நான் கட்சியாக நினைத்ததில்லை. கலைஞரை என்றும் நான் ‘சித்தப்பா’ என்றே அழைப்பேன். தி.மு.க-வுக்கு செல்வது என் வீட்டுக்குத் திரும்பச் செல்வதுபோல்தான்.”

நேற்றுவரை பதவி, பணம், புகழ் எல்லாம் அனுபவித்துவிட்டு நெருக்கடியான நேரத்தில் கட்சியிலிருந்து வெளியேறுவதை துரோகம் என்று சொல்லமாட்டார்களா?”

“காசு பணத்துக்காக, புகழுக்காகக் கட்சி மாற மாட்டான் ராதாரவி. நான் யார் என்பது ஊருக்கே தெரியும். நெருக்கடியான நேரம்தானே தவிர, இன்னமும் ஆளும்கட்சி அ.தி.மு.க-தான். இன்னும் நான்கு வருடங்கள் அவர்களை அனுசரித்துச் சென்றால் நீங்கள் சொல்கிற பணமும் புகழும் நிறையக் கிடைக்கும். அதைச் செய்யாமல் முரண்பட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகிறேன் என்பதிலேயே என் நேர்மை உங்களுக்கு விளங்கும். அப்படியும் நான் துரோகம் செய்வதாகத் தோன்றினால் என்னிடம் வந்து கேட்கட்டும்; நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். அப்படி ஒரு சூழல்வரும்போது என் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன்.”

“அ.தி.மு.க-வில் இருந்து விரைவில் வெளியேறிவிடுவீர்களா?”

(சிரிக்கிறார்) “முதலில் நான் இப்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா என்று கூடத்தெரியாது. அம்மா இறந்ததற்குப் பிறகு எனக்கு உறுப்பினர் அட்டைகூட தரவில்லை. அதனால், என் உறுப்பினர் எண் காலாவதியாகிவிட்டிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.”

- எஸ்.கிருபாகரன்
படம்: ஜெ.வேங்கடராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz