Published:Updated:

‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர்

‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர்
பிரீமியம் ஸ்டோரி
News
‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர்

‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர்

ன்னீர்செல்வம் 3-வது முறையாகக் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல்வர் ஆனபோது, ‘இந்த முறையாவது மிச்சம் இருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு நம்மை ஆளவிடுவார்களா’ என்ற மைண்ட் வாய்ஸ் அவரது எண்ணத்தில் ஓடியிருக்கும். ஆனால், இப்போது மூன்றாவது முறையாகவும் அவரது பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.

டான்சி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வர் பதவி வகிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2001-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்புச் சொன்னபோது, ‘அடுத்த முதல்வர் யார்?’ என்று அ.தி.மு.க-வில் மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. அப்போது சசிகலாவின் ஆதரவாளர் என்று அறியப்பட்ட - முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் ஜெயலலிதா தேர்வு செய்தார். முதல்வர் என்ற பதவியுடன் இருந்தபோதும், முதல்வருக்கான அறையைப் பயன்படுத்தவில்லை; பட்டும்படாமல் விலகியே இருந்தார் பன்னீர். ஜெயலலிதா, சட்டரீதியாக தனக்கு இருந்த தடைகளை உடைத்தபிறகு மீண்டும் 2002, மார்ச் மாதம் முதல்வர் ஆனார். 

மீண்டும் ஒரு செப்டம்பர் மாதத்தில் ஓ.பி.எஸ் கைவசம் ரெண்டாவது லட்டுக் கிடைத்தது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றார். பன்னீருக்கு முதல்வர் பதவி மீண்டும் கிடைத்தது. ஜெயலலிதா வழக்குகளில் இருந்து மீண்டு வந்தபோது, 2015-ம் ஆண்டு மே 22-ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 

‘சிட்டி’யின் சிறகுகளை வெட்டிய சசிகலா! - பாவம் பன்னீர்

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று தெரிய வந்தபோது ஜெயலலிதா நிர்வகித்துவந்த பொறுப்புகள் எல்லாம் பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டன. ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமியை அப்பொறுப்புக்கு கொண்டுவர சசிகலா விரும்புவதாகக் கூறப்பட்டது. அப்போதே ஓ.பி.எஸ், தாம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை உணரத் தொடங்கிவிட்டார். புதிய சர்ச்சை எதுவும் வேண்டாம் என்ற அடிப்படையில் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வர் ஆனார். ‘இந்த முறை, நான்கு ஆண்டுகள் நாம்தான்’ என்ற ஆசை அவர் உள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதனால்தான் முன் எப்போதும் இல்லாத வகையில் இறுக்கம் தளர்ந்து காணப்பட்டார்.

அவரது உற்சாக பலூனை முதலில் உடைத்தவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று பன்னீர்செல்வத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டே குண்டைத் தூக்கிப் போட்டார். அடுத்ததாக, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தன் அலுவலக லெட்டர் பேடைப் பயன்படுத்தி ‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இவை பன்னீரை அடுத்தடுத்துக் காயப்படுத்தின. அவமானங்களைச் சந்தித்தார். ஆனால், அவற்றையெல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தாமும், ‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று விரும்புவதாகச் சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.

அடுத்ததாக வர்தா புயல் வடிவில் அவரது நிர்வாகத்தைச் சோதிக்கும் சம்பவம் வந்தது. அப்போது, அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் குறைந்தன. புயல் தாக்கத்துக்குப் பின்னர் சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளை உற்சாகப்படுத்தினார். குறுகிய காலத்தில் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களையும் வர்தாவின் தாக்கத்தில் இருந்து மீட்டெடுத்தார். ‘சபாஷ் பன்னீர்’ என்று மக்கள் பேசிக்கொண்டனர். ஆந்திரா சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, சென்னைக்கு கிருஷ்ணா நீர் வர வழி செய்தார்.

அதே நேரத்தில், ‘இந்தியா டுடே’யின் ஊடக மாநாடு சென்னையில் நடந்தபோது முதல்வர் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டு இருந்தபோதே சசிகலா, அரங்கை விட்டு வெளியேறினார். சசிகலா பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றபிறகு நடத்திய முதல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ‘முதல்வர்’ என்ற வகையிலோ, கட்சியின் பொருளாளர் என்ற வகையிலோ பன்னீருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை. சசிகலா, மேடையில் தன்னுடன் உட்கார வைக்காமல் பார்வையாளர் வரிசையில் பன்னீரை உட்கார வைத்தார்.  

ஜல்லிக்கட்டுப் போராட்டம் அவருக்கு மிகப் பெரிய சோதனைக் களமாக இருந்தது. அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அவர், ‘நீங்களே கொண்டுவந்தால் ஆதரிக்கிறோம்’ என்றார். டெல்லியிலேயே தங்கியிருந்து அவசரச் சட்டத்தை தயாரித்து, மத்திய அரசின் துறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு சென்னை திரும்பினார். அமைதியாக முடிந்திருக்க வேண்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் அசம்பாவிதமாக முடிவடைந்த நிலையில், நீதி விசாரணை, வழக்குகளில் இருந்து மாணவர்கள் விடுவிப்பு என்று எதிர்க்கட்சிகள் கேட்ட எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு நல்ல பெயர் வாங்கினார். ‘நீங்கள் நல்ல பெயரை வாங்கிவிடக் கூடாது பன்னீர்செல்வம்’ என்ற அரசியல் சூழ்ச்சிகள் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தன. அதுதான் இப்போது மூன்றாவது முறையாக அவரது பதவியைப் பறித்திருக்கிறது.

முதல்முறை, ‘ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்’ என்று கேள்வி வந்தபோது சசிகலா என்ற ‘விஞ்ஞானி’யால் உருவாக்கப்பட்ட ‘சிட்டி ரோபோ’தான் பன்னீர். இப்போது அவரே, ‘சிட்டி... பதவியைவிட்டு விலகு’ என்று dismantle செய்யச் சொல்லிவிட்டார். ‘சரிங்க மேடம்’ என்று பன்னீரும் தனது சிறகுகளைத் தானே வெட்டிக்கொண்டார். பாவம் பன்னீர்!

- கே.பாலசுப்பிரமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz