மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!

எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!

ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் இடையே சந்திப்பு நடக்காமல் பார்த்துக் கொண்டது மன்னார்குடி. அது தீபாவின் கல்யாணம் தொடங்கி அப்போலோ வரை தொடர்ந்தது. ‘‘எங்கள் சந்திப்பு நடந்துவிடாமல் சசிகலா தடுத்தார்’’ எனச் சொல்லும் தீபா, அதுபற்றி விரிவாகவே பேசினார்.

‘‘1996-ம் ஆண்டு அத்தை கைது செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்​பட்டிருந்தார். சிறையில் போய் அவரைப் பார்த்தேன். அப்போது நான் சின்னப் பெண். ‘எப்படி இருக்கீங்க அத்தை’ எனக் கேட்டேன். ‘நல்லா இருக்கேன். நீ இங்கே எல்லாம் வரக்கூடாது’னு சொல்லி என்னை அனுப்பி வைத்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அத்தை அடைக்கப்பட்டிருந்த நேரத்தில்கூட போய்ப் பார்க்க முயன்றேன். அவர் ஜாமீனில் வந்தபோது கார்டனில் தொண்டர்களோடு கலந்து நின்றேன். அவரை நேரில் சந்திக்க முயன்று தோற்றுப் போனேன். நூற்றுக்கணக்கில் கடிதங்களும் ஃபேக்ஸ்களும் அனுப்பியும், எதுவுமே அத்தையின் கைகளுக்குப் போய்ச் சேரவில்லை. எந்த நிலையிலும் அத்தையை எப்படியாவது சந்தித்துவிட முடியாதா எனத் தொடர்ந்து முயன்றேன். முடியவில்லை. ‘அத்தையை சந்திக்கவிடாமல் ஏன் தடுக்கிறார்கள்?’ என்பதுதான் புரியவில்லை. என்னைப் பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் அத்தையிடம் தவறாகச் சொல்லி நெகட்டிவான செய்திகளைப் பரப்பி, ரத்த பந்தங்களிடையே பிரிவை ஏற்படுத்திவிட்டார்கள். அத்தையை சந்திக்க முயன்றால் ‘உங்களை மேடத்துக்குப் பிடிக்கவில்லை. சொந்த பந்தமே வேண்டாம் என்கிறார்’ எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் அத்தை அப்படி நடப்பவர் இல்லை என்பது எனக்குத் தெரியும். நாங்கள் வந்தால் யாருக்காவது பாதிப்பு வரும் என நினைக்கிறார்கள் போல. நான் கார்டனுக்கு வந்து போன காலத்தில்கூட அவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களை எந்த நேரத்திலும் நாங்கள் வெளியே போகச் சொல்லவில்லையே! ரத்த உறவுகளான எங்களை மட்டுமே சந்திக்கவிடாமல் தடுப்பது எதற்காக என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ரிலேஷன் கட்டாகிவிடும் என நினைக்கிறார்கள். அவர்கள் மட்டுமே பக்கத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சோல் புரொப்பரைட்டர் மாதிரி தனி உரிமையாளராக இருக்க விரும்புகிறார்கள். அதற்கு முட்டுக் கட்டைகள் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக அவரை சந்திக்க முயன்று கடைசியில் அவரின் உடலைத்தான் பார்க்க முடிந்தது. அப்போலோவில் பார்க்க முயன்ற நேரத்தில், இப்போதுதான் அத்தையை சந்திக்க முயன்றதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ‘உனக்குப் பெயர் வைத்ததே நான்தான்’ என அத்தை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு நான் அத்தையின் செல்லமாக இருந்தேன். அத்தையின் பாசத்துக்காகத்தான் ஏங்கினேன்’’ என்கிறார் தீபா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!

அந்த ஏக்கம்தான் தீபாவிடம் கவிதைகளாய் கொட்டியது.

சின்னச் சின்ன ஞாபகங்கள்
சின்னவள் என் சிந்தையிலே!
அத்தை என்று உன்னை அழைக்க
அமுதூறுது என் நாவிலே!
வண்ண வண்ணப் பூங்காவில்
அத்தை மடி மெத்தையிலே


‘இளவேனில் பூக்கள்’ என்கிற தீபாவின் கவிதைத் தொகுப்பில் ‘அத்தை மடி மெத்தையடி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் கவிதை இதுதான்.

‘அரசன் அன்று ஆட்சி புரிந்தான். அரசியல் மட்டும்தான் நடந்தது; அக்கிரமக்காரன் இன்று ஆட்சி புரிகின்றான் அரசாங்கமே சீர்குலைந்தது! வெள்ளைக்காரன் அன்று கோட்டையில் நுழைந்தான். எல்லையற்ற துன்பம் நிகழ்ந்தது. கொள்ளைக்காரன் இன்று கோட்டையில் நுழைந்தான். கொடுமைகள் கொடிகட்டிப் பறக்கிறது’ என பல வருடங்களுக்கு முன்பே தீபா எழுதியிருக்கிறார். அவர் யாரை மனதில் வைத்து எழுதினார் எனத் தெரியவில்லை. ஆனால் அது மறைமுகமாக மன்னார்குடியினரைதான் சுட்டிக் காட்டுகிறது. ‘இன்னும் எத்தனை காலங்கள் இறைவா இந்த வேதனைகள். இந்த பூலோகச் சிறையை திறந்துவிடு, என்னை பூமித்தாய் மடியில் உறங்கவிடு. பொறுத்தேன் பொறுத்தேன் பல நாட்கள். பொறுக்காது, இன்னும் சில நாட்கள்! விதியே எனக்கு விடை கொடு, விடுதலை காண வழிகொடு’ என அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் தீபா.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 14 - புரொப்பரைட்டர் சசிகலா!

‘‘நர்சுகளோடு பந்து விளையாடினார்... கிச்சடி சாப்பிட்டார்’’ என ஜெயலலிதாவைப் பற்றி தினமும் திரைக்கதை எழுதியவர்கள், அப்போலோவில் இருந்து ஒரு போட்டோவையாவது வெளியிட்டார்களா? ‘‘புகைப்படம் வெளியிடுங்கள்’’ என்று தமிழகமே வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை சசிகலா. ‘‘முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்’’ என கடைசி நாள் வரையில் சொல்லிவிட்டு சடலத்தைத்தானே காட்டினார்கள். நம்பிக்கையை விதைக்காமல் போனதால்தானே அ.தி.மு.க.வினர் எல்லோரும் தீபாவின் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறார்கள். சசிகலா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்குக்கூட திரளாத கட்சியினர், தி.நகர் சிவஞானம் தெருவில் இருக்கும் தீபாவின் வீட்டுக்குப் படையெடுக்கின்றனர். ஆளும் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சசிகலாவைக்கூட ஆரம்பத்தில் சில நாட்கள்தான் கட்சி நிர்வாகிகள் பார்த்தனர். ஆனால் எந்த ஒரு நிர்வாகத்திலும் இல்லாத தீபாவைப் பார்க்க தொண்டர்கள் தினமும் ஜெ ஜெ என குவிகிறார்கள். தி.நகர் சிவஞானம் தெருவை போயஸ் கார்டனாக மாற்றிய பெருமை சசிகலாவைத்தான் சேரும்.

(தொடரும்...)