Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசிகலாவைப் பார்க்காமல் கடிதம் கொடுத்த பன்னீர்!

சசிகலா, பன்னீர்
News
சசிகலா, பன்னீர்

மிஸ்டர் கழுகு

‘‘சசிகலா நிம்மதியாக முதல்வர் பதவி ஏற்க முடியுமா? நிம்மதியாகப் பதவியைத் தொடரத்தான் முடியுமா?” என்ற கேள்விகளைக் கழுகாருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம்.

மிஸ்டர் கழுகு: சசிகலாவைப் பார்க்காமல் கடிதம் கொடுத்த பன்னீர்!

சிரித்தபடியே உள்ளே நுழைந்த கழுகார், ‘‘நிம்மதியாகப் பதவி ஏற்க முடியுமா என்பது இந்த இதழ் உமது வாசகர்கள் கைக்குக் கிடைக்கும்போது தெரிந்துவிடும். நிம்மதியாகப் பதவியில் தொடர முடியுமா என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில்தான் தெரியும்” என்று விளக்கம் அளித்தபடி சொல்ல ஆரம்பித்தார்.

‘‘மன்னார்குடி குடும்பத்தின் ஆலோசனையில் போயஸ் கார்டன் வேதா நிலையம் இரண்டு நாட்களாக மூச்சு முட்டியது. அந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில், சசிகலா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்தார். முதலமைச்சர் பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக தன் முதலமைச்சர் பொறுப்பைத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவற்றை உமக்குச் சொல்கிறேன்.” 

‘‘தஞ்சாவூர் நிகழ்ச்சியில் பேசியபோதுகூட நடராசன், ‘முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். அவர் ஆட்சியே தொடரும்’ என்றுதானே சொன்னார்?”

‘‘பன்னீர்செல்வத்தின் ஆட்சியே தொடரும் என்றுதான் நடராசன் சொல்லி இருந்தார். ஆனால், ஊருக்குள் பொதுமக்களிடமும் சட்டமன்றத்தில் தி.மு.க-விடமும் நல்ல பெயர் வாங்கிய பன்னீர்செல்வம், மன்னார்குடி குடும்பத்திடம் அப்படி நடந்துகொள்ளவில்லை. அவர் தனியாக சில வேலைகளைச் செய்துகொண்டுதான் இருந்தாராம். குறிப்பாக, பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தனி கோஷ்டிகளைத் தயார்செய்ய ஆரம்பித்துள்ளார். அதுபோல், கோப்புகளில் கையெழுத்துப்போடும் ஓ.பி.எஸ், மன்னார்குடி குடும்பத்திடம் சில நேரங்களில் ஆலோசனைகளையும் கேட்பது இல்லை. அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, ‘யெஸ் ஆர் நோ’ என்ற டைப்பில் கையெழுத்துப் போட்டாராம். ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்துக்காக டெல்லியில் முகாம் இட்டதையும், சென்னைக்கு கிருஷ்ணா நீர் கேட்பதற்காக சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்றதையும், வர்தா புயல் நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காணச் சென்றதையும் பன்னீரின் பப்ளிசிட்டியாக சசிகலா குடும்பத்தினர் பார்த்தார்கள்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: சசிகலாவைப் பார்க்காமல் கடிதம் கொடுத்த பன்னீர்!

‘‘அது என்ன ‘யெஸ் ஆர் நோ’?”

‘‘அ.தி.மு.க ஆட்சியில், அமைச்சர்களிடம் இருக்கும் எந்த ஃபைல் கையெழுத்தாக வேண்டும் என்றாலும், அது கார்டனின் ஒப்புதலோடுதான் கையெழுத்தாகும். ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து ஆட்சி நடத்தியபோதும் இதுதான் நடைமுறை. ஜெயலலிதா கொடநாட்டில் இருந்தாலும் சரி... பரப்பன அக்ரஹாராவில் இருந்தாலும் சரி... அவர் கவனத்துக்குக் கொண்டு சென்ற பிறகே, எதுவாக இருந்தாலும் நடக்கும். ஜெயலலிதாவின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றாலும், சசிகலாவுக்கு நிச்சயம் சொல்லப்படும்.  அதன்பிறகுதான் எந்த ஃபைலாக இருந்தாலும் ‘மூவ்’ ஆகும். ஜெயலலிதா காலத்திலேயே சசிகலாவுக்குத் தெரியாமல் ‘மூவ்’ ஆகாத ஃபைல்கள், பன்னீர்செல்வத்தின் காலத்தில் மளமளவென மூவ் ஆகின. இது மன்னார்குடி குடும்பத்தை அதிரவைத்தது.”

‘‘நடராசனிடமும் திவாகரனிடமும் பன்னீர் அடிக்கடி பேசியதாகச் சொல்கிறார்களே?”

‘‘பன்னீர்செல்வம் எதையும் ஆலோசனை செய்யவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்காக எல்லாவற்றையும் கார்டனுக்கு அவர் தெரிவித்துவிடவும் இல்லை. அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, ‘நீங்கள் முடியும் என்று சொன்னால் கையெழுத்துப்போடுகிறேன்... முடியாது என்று சொன்னால் வேண்டாம்’ என்ற ரீதியில் ஃபைல்களை டீல் செய்துள்ளார். அதைத்தான் ‘எஸ் ஆர் நோ’ டைப் என்றேன். அதையும் மீறி சிலர், மன்னார்குடி பெயரைப் பயன்படுத்திப் பார்த்தபோதுகூட, அதிகாரிகள் ‘முடியாது’ என்றனர். இதுவும் கார்டனுக்குத் தெரிவிக்கப்பட்டது.”

‘‘ஓஹோ!”

‘‘எல்லாவற்றுக்கும் மேல், தி.மு.க-வினரோடு பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டியது, மன்னார்குடி குடும்பத்துக்கு மட்டுமல்ல...

அ.தி.மு.க-வில் பல எம்.எல்.ஏ-க்களுக்கே எரிச்சலாம். தி.மு.க-வில் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தது... மக்கள் மத்தியில் பன்னீர்செல்வத்தின் இமேஜ் உயர்ந்தது போன்ற விஷயங்கள் மன்னார்குடியை யோசிக்க வைத்தன. ‘நீங்களே முதலமைச்சராகத் தொடருங்கள். நாங்கள் உங்களை ஆதரிப்போம். உங்களுக்குப் பின்னாள் இருக்கும் சக்தியை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று துரைமுருகன் பேசியது சட்டமன்றத்தில் பதிவு ஆனது. ‘இதைத் தொடரவிடுவது நம்முடைய எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ என்று சொல்லித்தான் பன்னீரை இறக்க நினைத்தாராம் நடராசன்.”

‘‘பன்னீர் பற்றி தொடர்ந்து தம்பிதுரை அவதூறுகள் கிளப்பி வந்தார் என்று சொல்கிறார்களே?”

‘‘தம்பிதுரைக்கும் முதலமைச்சர் நாற்காலி மீது ஒரு கண் இருக்கிறது. அது முடியாது என்று அவருக்குத் தெரிந்தாலும், அந்த நாற்காலியில் மூன்று முறை பன்னீர்செல்வம் அமர வைக்கப்பட்டது அவருக்குப் பொறுக்கவில்லை. அதனால் அவரும், பன்னீர்செல்வத்துக்கும் டெல்லிக்கும் உள்ள தனிப்பட்ட தொடர்புகளை அள்ளிக் கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தையொட்டி பன்னீர்செல்வம் டெல்லிக்குப் போனபோது நடந்த பேச்சுவார்த்தைகள், பன்னீருக்கு அங்கு தரப்பட்ட முக்கியத்துவம், அதே நேரத்தில் சசிகலாவின் சார்பாகச் சென்ற எம்.பி-க்களை மோடி சந்திக்க மறுத்தது போன்ற விஷயங்கள், பன்னீருக்காக டெல்லியில் சுற்றுச்சூழல் துறையில் வேக வேகமாக நடந்த வேலைகள் அனைத்தையும் புட்டுப் புட்டு வைத்தார். அதுவும் மன்னார்குடி குடும்பத்தைக் கலங்கடித்தது.”

‘‘பதவி ஏற்பதில் சசிகலா தயக்கம் காட்டுவதாகச் சொல்லி இருந்தீரே?”

‘‘சசிகலா மிகவும் தயங்கி உள்ளார். முதலில் ஒத்துக்கொள்ளவே இல்லையாம். நிழல் அதிகார மையமாக இருந்தபடி, யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல், நினைத்த எதையும் சாதித்துக்கொள்ள முடிகிறபோது, ‘எதற்கு முதல்வர் நாற்காலி’ என்பது அவர் தயக்கம். ஆனால், அவரது குடும்பத்தினர்தான், ‘இன்னும் நாலரை வருஷம் நம்மிடம் உள்ளது. அதை ஏன் மற்றவர்களுக்குத் தாரை வார்க்க வேண்டும்? வெறும் மூன்று மாதங்கள் சுறுசுறுப்பாக நீங்கள் செயல்படுங்கள். அதற்குள் சட்டசபை நடவடிக்கை, அதிகாரிகள் கூட்டங்கள் என எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாம்’ என்று சொல்லி சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்பிறகுதான், பன்னீர்செல்வத்தை கார்டனுக்கு வரவழைத்துள்ளனர். ‘பன்னீர் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கலாம்... அல்லது எதிர்க்கவும் செய்யலாம்’ என நினைத்து, அவருடைய ‘அரசியல் தெய்வம்’ டி.டி.வி.தினகரனையும் வரவழைத்து அவர் முன்னிலையில் ராஜினாமா செய்யச் சொல்லி உள்ளனர்.”

‘‘பன்னீர்செல்வம் என்ன சொன்னாராம்?”

‘‘பன்னீர்செல்வம் இப்படி எந்தத் தருணத்திலும் நடக்கும் என எதிர்பார்த்துதான் இருந்தார். ‘நான் உங்களுக்கு எதிராக எப்போதும் போகமாட்டேன். என்னைச் சந்தேகப்பட வேண்டாம்’ என்று சொல்லி உள்ளார். அப்படிச் சொல்லிவிட்டு, இறுக்கத்தோடும் சோகத்துடனும் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அவர் கடிதத்தைக் கொடுத்தபோது சசிகலாவின் முகத்தைப் பார்க்கவே இல்லை!”

‘‘சசிகலா உற்சாகமாக இருக்கிறாரா?”

‘‘கடந்த 4-ம் தேதி, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்க, அந்தக் கோயில் சார்பில் நாகராஜ குருக்கள் போனார். சசிகலாவைச் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்தார். வழக்கறுத்தீஸ்வரரை வணங்கினால் வழக்குகள் அறுபடும் என்பது நம்பிக்கை. அதனால், சசிகலா அங்கு அடிக்கடி வந்துபோவார். அந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்கு பலத்த ஏற்பாடுகள் செய்ததும் அவர்தானாம்.”

‘‘வழக்கு அறுபடுமா?”

‘‘உச்ச நீதிமன்றம், ‘இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள்’ என்று 6-ம் தேதி சொல்லி இருக்கிறது. தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜெயம். பாதகமாக வந்தால் மீண்டும் அரசியல் குழப்பங்கள்தான் ஏற்படும்.”

‘‘தீர்ப்பு வருவதற்கு முன்னால் சில கேள்விகள்... எந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார்?”

‘‘சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் முதல்வராக சசிகலா பதவியேற்பதால், ஆறு மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ-வாகத் தேர்வாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. ஜெயலலிதா நின்ற ஆர்.கே நகர் தொகுதியில் சசிகலா நிற்க மறுத்துவிட்டார். தனக்குப் பாதுகாப்பான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்யச் சொல்லி இருக்கிறார். ஆண்டிபட்டி, திருமங்கலம், நன்னிலம் ஆகிய மூன்று தொகுதிகளை மன்னார்குடி உறவுகள் குறிவைத்துள்ளார்களாம்” என்றபடி கழுகார் பறந்தார்.

படங்கள்: சு.குமரேசன், என்.ஜி.மணிகண்டன்
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்

சிக்கலில் வீணை காயத்ரி!

மிஸ்டர் கழுகு: சசிகலாவைப் பார்க்காமல் கடிதம் கொடுத்த பன்னீர்!

மிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்த வீணை காயத்ரியின் பதவி, கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அவருக்கு இன்னமும் நீட்டிப்பு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் காயத்ரிக்குக் கொலை மிரட்டல் வந்தபோது, ஜெயலலிதாவே அவரை அழைத்துப் பேசினார். அப்போது ‘உங்களுடைய பதவிக்காலம் எப்போது முடிகிறது?’ என்று கேட்டறிந்தவர், ‘இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு உங்களுடையப் பதவியை நீட்டித்து உத்தரவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார். அவர் இதை சொன்னபோது, ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், சாந்தா ஷீலா நாயர், ஜெயஸ்ரீ முரளிதரன், வெங்கடரமணன், ராமலிங்கம் என முக்கிய அதிகாரிகளும் உடனிருந்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பதவி நீட்டிப்பு விவகாரத்தை தட்டிக் கழித்து வந்தாராம் ராம மோகன ராவ். ஓ.பன்னீர்செல்வத்தையும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் சந்தித்து வீணை காயத்ரி முறையிட்டு வந்ததாகச் சொல்கின்றனர். காயத்ரி அலைக்கழிக்கப்படுவதற்குக் காரணம், ராம மோகன ராவுடனான கடந்த கால மோதல்கள் என்கிறார்கள்.

ஆட்சியைக் கலைக்க வேண்டும்!

மிஸ்டர் கழுகு: சசிகலாவைப் பார்க்காமல் கடிதம் கொடுத்த பன்னீர்!

‘தமிழக ஆட்சியைக் கலைத்து, சசிகலா முதல்வர் ஆவதைத் தடுக்க வேண்டும்’ என ஆன்லைனில் வெளியான ஒரு மனுவுக்குக் கிடைத்த வரவேற்பு நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது. ‘Change.org’ என்ற இணையதளம், உலக அளவில் புகழ்பெற்றது. ஏதேனும் ஒரு நியாயமான கோரிக்கையோடு யார் வேண்டுமானாலும் இந்தத் தளத்தில் ஒரு மனுவை ஒற்றைக் கையெழுத்துப் போட்டு உருவாக்கலாம். தொடர்ந்து அதற்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து, அந்த மனுவை உரிய அதிகாரிகளிடம் இந்த இணையதளத்தின் அதிகாரிகள் கொண்டு போய் சேர்ப்பார்கள். கிட்டத்தட்ட சமூக சேவைக்கான ஒரு தொண்டு நிறுவனம் போல செயல்படுகிறது இது.
‘196 நாடுகளில் 20,576 கோரிக்கைகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு ஒரு வெற்றி கிடைக்கிறது’ என புள்ளிவிவரம் சொல்கிறது இந்த இணையதளம். இதில் தமிழ் அரசன் என்பவர், ‘தமிழக ஆட்சியைக் கலைத்து, சசிகலா முதல்வர் ஆவதைத் தடுக்க வேண்டும்’ என சட்டமன்ற அ.தி.மு.க தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிப்ரவரி 5-ம் தேதி மதியம் ஒரு மனுவை ஆரம்பித்து வைத்தார். 24 மணி நேரத்துக்குள் 94 ஆயிரம் பேருக்கு மேல் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னும் தொடர்கிறது எண்ணிக்கை. இந்த மனு தமிழக ஆளுநர், ஜனாதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மனுவுக்குக் கிடைத்த வரவேற்பில் உற்சாகமாகி இருப்பவர்கள், ‘எம்.எல்.ஏ-வாகவோ, எம்.பி-யாகவோ இல்லாதவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வர உதவும் அரசியல் சட்டத்தின் 164-ம் பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும்’ என அடுத்த கோரிக்கையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் சொன்ன மரக் கதை!

மிஸ்டர் கழுகு: சசிகலாவைப் பார்க்காமல் கடிதம் கொடுத்த பன்னீர்!

டந்த 6-ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மறைந்த ராமஜெயத்தின் மகள் ஸ்ரீஜனனி – டாக்டர் விவேக் திருமண விழா. திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரியில் பிரமாண்டமாக நேரு நடத்தினார். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பிறகு நேரு இல்லத்தில் நடக்கும் முதல் விழா என்பதால் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தார் நேரு.

‘தி.மு.க நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் கட்சிக் கொடியை மட்டும் கட்டுங்கள், கட்-அவுட்டுகள் வைக்க வேண்டாம்’ என ஸ்டாலின் போட்ட உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, எங்கும் கட் அவுட்டுகளை வைக்கவில்லை. ஆனால், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் முதல் திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வரை 15 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலை முழுக்க தி.மு.க கொடிகளைக் கட்டி அசத்தியிருந்தார் நேரு.

பேராசியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், ஜி.கே.வாசன், கி.வீரமணி, தா.பாண்டியன் என பலரும் வந்திருந்தனர். திருமணத்தில் பேசிய ஸ்டாலின் ஒரு கதை சொன்னார்... ‘‘இந்தியாவில் ஒரு ஓட்டுக்கு, மூன்று முதல்வர்களைச் சந்தித்த வரலாறு தமிழகத்தையே சேரும். ஒரு பெரிய ஆறு இருக்கிறது. அதில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். ஆற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல, ஒரு பெரிய மாமரம் இருந்தது. மக்கள் அதன்மீது நடந்துபோய் வந்தார்கள். சில வருடங்களில் ஆறு வற்றிப்போனதால், மக்கள் ஆற்றுக்குள் இறங்கி நடந்தார்கள். ஒருநாள் திடீரென ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது. அப்போது மாமரம் மாயமாகிப்போனது. அந்த மரம் குறித்து அனைத்தும் மர்மமாகவே இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் மக்கள், அதே பகுதியில் இருந்த சின்ன மரம் ஒன்றில் ஏறி பயணித்தார்கள். கொஞ்சதூரம் போனபிறகுதான் ‘அது மரம் இல்லை, முதலை’ என்பது தெரிய வர... அதில் ஏறியவர்கள் பதறியபடி கதறினார்கள். அப்போது அக்கரையில் இருந்தவர்கள், ‘ஒரு படகு வரும், அதில் ஏறி வருகிறோம். அப்போது நீங்கள் உயிரோடு இருந்தால் நாங்கள் காப்பாற்றுகிறோம்’ என்றார்கள். இதை எதனோடும் பொருத்திப் பார்க்க வேண்டாம்’’ என்று பன்ச் வைத்து முடித்தார் ஸ்டாலின்.