Published:Updated:

“சசிகலாவுக்கு பழைய வரலாறுகள் தெரியாது!”

பன்னீர்
News
பன்னீர்

- பளிச் பன்னீர்!

தோ திருமண வீடுபோல இருக்கிறது தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு. திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் கூட்டமாக அ.தி.மு.க தொண்டர்கள். ஆட்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். வீட்டின் பின்புறம் சமையல் நடக்கிறது. இடையிடையே காபி - டீ சப்ளை. புதுப்புது விருந்தினர்கள் வருவதைப் போல சட்டமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் வருகிறார்கள். யார் வந்தாலும் வரவேற்பு பலமாக இருக்கிறது. கூட்டத்துக்குள் பிதுங்கி வெளியில் வருகிறார் பன்னீர்.

‘‘அம்மா வாழ்க!”, ‘‘பன்னீர் வாழ்க!”, ‘‘பன்னீர்செல்வம்தான் எங்கள் பொதுச் செயலாளர்”, ‘‘ஓ.பி.எஸ்-தான் எங்கள் சி.எம்” என்று முழக்கங்கள் கேட்கின்றன. கிரீன்வேஸ் சாலை முழுக்கவும் அகில இந்திய மீடியாக்களின் வேன்கள் வந்துகுவிகின்றன. தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவின் மீடியாக்களே பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி என்ன மாதிரியான மனநிலையில் நீங்கள் சென்றீர்கள்?”

‘‘அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தியானம் செய்யவே நான் சென்றேன். ஆனால், நான் பட்ட அவமானங்கள் என்னை மீறி பல வார்த்தைகளைச் சொல்லவைத்தன. முதலமைச்சராக பதவியேற்ற இரண்டு மூன்று தினங்கள் கழித்து மற்றவர்களால் உருவாக்கப்பட்ட அவமானத்தை, கட்சியின் நலன் கருதி, ஆட்சியின் நலன் கருதி இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்தேன். கட்சிக்கோ, ஆட்சிக்கோ சின்ன பங்கம்கூட வந்துவிடக் கூடாது என்பதற்காக அதையெல்லாம்  தாங்கிக்கொண்டு, ஒவ்வொரு அவமானத்தையும் பொறுமையாக சகித்துக்கொண்டு என் உள்ளேயே ஜீரணித்து முழுங்கிக்கொண்டு இருந்தேன். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட அந்த நிகழ்வுகளால் வேதனையில் துடித்தேன். அந்த மனநிலையோடு தான் அம்மா நினைவிடம் சென்றேன்.”

“சசிகலாவுக்கு பழைய வரலாறுகள் தெரியாது!”

‘‘என்ன மாதிரியான அவமானங்கள் அவை?”

‘‘அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது பரிந்துரையில் அமைச்சர்களாக்கப்பட்டவர்கள், எனது அமைச்சரவையில் எனக்குக் கீழ் இருந்து, எனக்கு எதிராகவே பேசினார்கள். அமைச்சர் உதயகுமார், என்னை ‘முதலமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும்’ என்றார். இதுபற்றி கட்சித் தலைமைக்குச் சொன்னேன். இதெல்லாம் தவறு  என்று மூத்த அமைச்சர்களிடமும் பேசினேன். அவர்கள், ‘நீங்கள்தான் முதல்வர், உங்கள் மனது நோகும்படி செயல்பட மாட்டோம்’ என்று கூறினார்கள். அப்படிச் சொல்லிவிட்டு மதுரை சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ, அங்கே எனக்கு எதிராகப் பேசுகிறார். அவரும் உதயகுமார் சொன்னதையே சொன்னார். கட்சியின் முன்னணியினர்கள் சிலர், ‘பொதுச்செயலாளர் பதவி வகிப்பவர்களே, முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்று தொடர்ந்து பேசினார்கள். பதவியை ராஜினாமா செய்ய எப்போதுமே ரெடியாக இருந்த என்னை நம்பாமல், எனக்குத் தெரியாமல் சில விஷயங்கள் அரங்கேறின. இதுதான் காரணம்.”

‘‘அரசியலில் அவமானங்கள் சகஜம்தானே?”

‘‘முதலமைச்சருக்கே தெரியாமல், சொல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியதை விட வேறு என்ன அவமானம் வேண்டும்? இது சகஜமானது அல்ல.

மக்களுடைய நலன்களை தீர்மானிக்கக்கூடிய மிக உயர்ந்த பொறுப்புள்ள பதவியில் உட்கார வைத்துவிட்டு, என்னுடன் இருக்கின்ற சக அமைச்சர்களைவைத்து அந்தப் பதவிக்கு, அதற்குரிய கண்ணியத்துக்கு சட்டமரபுகளை எல்லாம் மீறி அவர்கள் கருத்துகள் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது சரியா? இந்தப் பதவியை நான் விரும்பி ஏற்கவில்லை. நான் முதல்வர் பதவி வேண்டாம் என்றுதான் சொன்னேன். கட்டாயப்படுத்தி அவர்கள்தான் கொடுத்தார்கள். முதலமைச்சர் ஆக்கி அவமானப்படுத்துவது அல்லவா இது? எப்போதும் விலகத் தயாராகத்தான் இருந்தேன். இதனை சக அமைச்சர்கள் மூலமாகச் சொல்ல வைப்பது முறையா? தலைமைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவன் என்று தெரிந்தும் இப்படி செய்துவிட்டார்களே என்பதுதான் இதற்கு அடிப்படை.”

‘‘இதைப் பற்றி சசிகலாவிடம் சொன்னீர்களா?”

“சசிகலாவிடம் இதைப் பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை. வேண்டியவர்களிடம் சொன்னேன். கூப்பிட்டுக் கண்டித்ததாக எனக்குத் தகவல் தந்தார்கள். கண்டித்தேன் என்று சொன்ன பிறகும்கூட அந்த அமைச்சர்கள் அதே தவற்றைத் திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தார்கள். அதை எண்ணும்போது அதற்கு ஊக்கம் தந்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாதா?”

‘‘சசிகலா தரப்பால் வளர்க்கப்பட்டவர்தான் பன்னீர். அம்மாவிடம் அறிமுகம்செய்து வைத்ததே நாங்கள்தான் என்று அவர்கள் சொல்கிறார்களே?”

‘‘அவர்களுக்கு வரலாறு தெரியாது!

1977-ம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க-வில் இருக்கிறேன். பெரிய குளம் 18-வது வார்டு பிரதிநிதி, வார்டு செயலாளர் என்று என்று எனது கட்சிப்பணி, தொடங்கியது. 1984-ம் ஆண்டு பெரியகுளம் சட்டன்றத் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சலீம் என்பவருக்கு மாற்றுவேட்பாளராக என்னைத்தான் அறிவித்து இருந்தார்கள். அந்த அளவுக்கு சிறுவனாக இருந்த என்மீது நம்பிக்கை வைத்து, சலீம் என்னை மாற்றுவேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வைத்தார். பின்னர், என்னுடைய பணியைப் பாராட்டி, அம்மா என்னை பெரியகுளம் நகரச் செயலாளராக அறிவித்தார். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியை இழந்த மூன்று மாதம் கழித்து உள்ளாட்சி தேர்தல் வந்தது.  தேர்தலில் நிற்க பலரும் விரும்பாத சூழ்நிலையில், நகர செயலாளர் என்ற முறையில் நானே கேட்டு பெற்று நகர்மன்ற தேர்தல்களத்தில் நின்றேன். எந்தவித நிதி ஆதாரத்தையும் மற்றவரிடம் கேட்டுப் பெறாமல், வாக்காளர்களைச் சந்தித்து, அம்மாவின் கொள்கை கோட்பாடுகளைச் சொல்லி ஓட்டு ்கேட்டேன். அன்று இருந்த 104 நகராட்சித் தலைவர்களுக்கான இடங்களில் 8 பேர் மட்டுமே ஜெயித்தனர். அதில் நானும் ஒருவன். அரசியலுக்கு வந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் வேட்பாளராக அம்மாவால் அறிவிக்கப்பட்ட தினகரன் சார் அவர்கள் (இப்படித்தான் அவர் அழைக்கிறார்!) அங்கு களம் இறங்கினார். அதற்கு முன் தினகரன் சாரை நான் பார்த்தது கிடையாது. அவருக்கு முழு ஒத்துழைப்புடன் நகரச் செயலாளர் என்ற பொறுப்பில், அவருடன் அந்தத் தொகுதி முழுதும் சென்று பணியாற்றினேன். அவர் என்னுடைய பணிகளை எல்லாம் கூர்ந்து கவனித்து, அம்மாவிடம் சொல்லுகின்ற நிலையில் அன்று அவர் இருந்ததால், என்னைப் பற்றி அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். 2000-ம் ஆண்டு மாவட்டச் செயலாளர் பதவியை அம்மா தந்தார்கள். 2001-ல் சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதி வேட்பாளராக அம்மா என்னை அறிவித்தார்கள். எனது தொகுதிக்கே வந்து அம்மா பிரசாரம் செய்து என்னை ஜெயிக்க வைத்தார்கள். வருவாய்த் துறை அமைச்சராக ஆனேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு அம்மாவுக்கு சோதனை வந்தபோது, தமிழக முதலமைச்சராக அம்மாவால் நியமனம் செய்யப்பட்டேன். இதுதான் 2001-வரை எனது வரலாறு. இதற்குப் பிறகு என்னுடைய அரசியல் பயணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். கட்சியில் இணைந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான். தினகரன் சார் உள்ளிட்டவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஆனால், 1977-ல் இருந்து அ.தி.மு.க-வில் நான் இருக்கிறேன். இந்தப் பழைய வரலாறுகள் அவர்களுக்குத் தெரியாது.”

‘‘சசிகலாவை ஏன் எதிர்க்கிறீர்கள்?”

‘‘நான் அரசியலில் எந்தப் பதவிக்கும் வரமாட்டேன் என்று அம்மாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தவர் சசிகலா. தனது குடும்பத்தினர் அம்மாவுக்குத் துரோகம் செய்துவிட்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தவர் சசிகலா. அவர் முதலமைச்சர் பதவிக்கு எப்படி தகுதியானவராக இருக்க முடியும்? தனது குடும்பத்தினர் துரோகம் செய்தவர்கள்தான் என்பதை சசிகலாவே ஒப்புக்கொண்டார். இத்தகைய துரோக சக்திகளிடம் ஆட்சியும் கட்சியும் போகலாமா?”

‘‘ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கே சந்தேகம் இருக்கிறதா?”

‘‘நாடு முழுவதும் பொதுமக்கள் மனதில் இந்த சந்தேகம் இருக்கிறது. அதைப் போக்கும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. என்னைக்கூட அம்மாவைப் பார்க்க விடவில்லை. எனவே, அதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அது நிச்சயம் அமையும்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சசிகலாவுக்கு பழைய வரலாறுகள் தெரியாது!”

‘‘உங்களை இயக்குவது தி.மு.க என்று சசிகலா தரப்பு குற்றம்சாட்டுகிறார்களே?”

‘‘அம்மாவின் விசுவாசி நான். அவரின் கொள்கை, கோட்பாடுகள்படிதான் நான் நடப்பேன். அவர் காட்டிய வழியைவிட்டு கடுகுமுனை அளவுகூட பிசகமாட்டேன். அ.தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும் நினைப்பதைத்தான் நான் செய்வேன். என்னை யாரும் இயக்கவில்லை. இது அ.தி.மு.க-வின் பிரச்னை!”

‘‘ஸ்டாலினைப் பார்த்து சிரித்தீர்களாமே?”

‘‘மனிதர்கள் மட்டுமே மாண்பை அறிவார்கள்!”

‘‘மத்திய அரசோ, பி.ஜே.பி-யோ உங்களை மிரட்டுகிறதா?”

‘‘இது பொய். நான் அவர்கள் ஆதரவை இதுவரைக் கேட்கவில்லை. அம்மாவின் உண்மை விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள். அவர்கள் இப்போது இருக்கும் இடம் வேண்டுமானால் எங்கோ இருக்கலாம். ஆனால், அம்மாவால் உருவாக்கபட்ட என்னை அவர்கள் ஆதரிப்பார்கள். அவர்களைவைத்து பலத்தை நிரூபிப்பேன்!”

‘‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு உங்களது வேண்டுகோள் என்ன?”

‘‘ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் மனசாட்சி உண்டு. அந்த மனசாட்சிப்படி அவர்கள் வாக்களித்து அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் புரட்சித் தலைவிக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!”

- எஸ்.முத்துகிருஷ்ணன்,  அ.சையது அபுதாஹிர்.
படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன்