Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார், வீ.சதீஷ்குமார்

கழுகார் பதில்கள்!

பி.எம்.சூர்யா பழனியப்பன், புதுக்கோட்டை.

? ஆட்சியில் அ.தி.மு.க இருந்தும்கூட எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்தப்படவில்லையே?


! நீர் என்ன மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறீர்? கடந்த டிசம்பரில் இறந்த புரட்சித் தலைவியையே மறந்துவிட்டார்கள்.

30 ஆண்டுகளுக்கு முந்தைய டிசம்பரில் இறந்த புரட்சித் தலைவரை எப்படி ஞாபகம் இருக்கும்? முகநூலில் சரண் என்பவர் ஒரு பதிவுப் போட்டு இருந்தார்: ‘கட்சியில், ஆட்சியில் அல்ல... ஆட்டோ ஸ்டாண்டுகளில் புரட்சித் தலைவர் வாழ்கிறார்’.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ப.பாலா என்ற பாலசுப்பிரமணி, பாகாநத்தம்.

? சசிகலாவின் பேரத்தில் தீபா பணிந்துவிட்டால் அவரை நம்பி இருக்கும் தொண்டர்களின் கதி?


! பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில்தான் தீபா செயல்பட்டு வருகிறார். அவரது குடும்பத்துக்குள் புகுந்து கலைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை அது நடந்தால், தீபாவின் அரசியல் பயணம் தொடங்கவே தொடங்காது. இப்போது தீபாவை நம்பி இருக்கும் தொண்டர்கள், தீபாவின் ஆதரவாளர்கள் அல்ல... சசிகலா எதிர்ப்பாளர்கள். சென்னை முதல் குமரி வரை பல்வேறு ஊர்களில் ஜெயலலிதா, தீபா படம் போட்டு பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதற்கும் தீபாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தாங்களே தன்னெழுச்சியாகச் செய்கிறார்கள். தீபா அரசியல் கட்சி ஆரம்பிக்காவிட்டால் நஷ்டம் இவர்களுக்கு இல்லை. சசிகலாவின் எதிர்ப்பாளர்களாக யாரை அவர்கள் நம்புகிறார்களோ, அவர்களோடு சேர்ந்துவிடுவார்கள்.

கழுகார் பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு மாணவர்கள் கற்றுக்கொடுத்த பாடம் என்ன?


! லட்சியத்தில் வெல்லும் வரை போராடுவது. காலையில் கைதாகி மாலையில் விட்டுவிடுவார்கள் என்று தெரிந்தபிறகு போராட்டத்தில் பெயர் கொடுக்கும் அரசியல் பிரமுகர்கள் உள்ள நாடு இது. ‘சாப்பாடு, தூக்கம் என்று எந்தக் கவலையும் இல்லாமல் இறுதி வரை போராடுவதுதான்’ மாணவர்கள் கற்றுக் கொடுத்தப் பாடம்.

கழுகார் பதில்கள்!

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

? தீபா, அரசியலுக்கு வரத் தயங்குவது ஏன்?


! தயக்கம் இல்லை, பயம்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

? ‘சசிகலாவைத் தவிர ஜெயலலிதாவைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமை கிடையாது’ என்கிறாரே நடராசன்?


! தன்னையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா?

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

? கட்சியைவிட்டு ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களே இப்போது சிலரை நீக்குகிறார்களே. இது காலக்கொடுமைதானே?


! காலக்கொடுமை ஒன்றே ஒன்றுதான் நடக்கிறதா? ‘அக்காவுக்குத் துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எனக்கும் வேண்டாதவர்கள்தான். அக்காவுக்கு எதிரான உறவுகளை நான் துண்டித்துவிட்டேன்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்த சசிகலாவுடன்தான், அவரது உறவுகள் மொத்தப் பேரும் இருக்கிறார்கள். ‘அரசியலில் ஈடுபடும் எண்ணமோ, பதவிக்கு வரவேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் இல்லை’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்த சசிகலாதான் இப்போது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர்.

பன்னீர்செல்வத்தைப் பதவி விலக வைத்துவிட்டு, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இவரைத்தான் தேர்ந்தெடுத்தும் உள்ளார்கள். இந்தக் காலக் கொடுமையை என்ன சொல்வது?

தான் கொடுத்த வாக்குறுதியைத் தானே கடைப்பிடிக்காதவர் என்பது மட்டுமல்ல, ஜெயலலிதாவைப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தே ஏமாற்றியவர் சசிகலா என்பதுதான் உண்மை.

எம்.வான்மதி, எடப்பாடி.

? மெரினாவிலும் அலங்காநல்லூரிலும் போலீஸ் எடுத்த நடவடிக்கை?


! என்றாவது ஒரு நாள் மாடு முட்டும்!

கழுகார் பதில்கள்!

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

? எம்.ஜி.ஆர் கூறிய ‘அண்ணாயிஸம்’ பற்றி சசிகலா குரூப் அறியுமா?

! அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘மன்னாரிஸம்’தான்.

தீ.அசோகன், திருவொற்றியூர்.

? ‘நான் தமிழ்ப் பொறுக்கிதான். ஆனால், டெல்லிக்குச் சென்று பொறுக்க மாட்டேன்’ என்று கமல் சொல்லி இருக்கிறாரே?


! சமீபகால கமலின் ‘விஸ்வரூபம்’ இது! குரலற்றவர்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கட்டும் கமல்.

கழுகார் பதில்கள்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

? ஓர் அவசரச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வர முடியும் என்றால் பொங்கலுக்கு முன்பே கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்தி இருக்கலாமே?


! ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இத்தனை லட்சம் பேர் போராடினால்தான் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வருகிறது. அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. நீதிமன்றமும் அதற்கு உடனடித் தடை விதிக்க மறுக்கிறது. முதலிலேயே தமிழக அரசு இப்படி ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து இருந்தால், மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்குமா, நீதிமன்றமும் சும்மா இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சாந்தான்வெளி க.இரத்தின மாணவன், கருப்பம்புலம்.


? மத்திய பட்ஜெட்டால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு மாற வாய்ப்புள்ளதா?


! நீட்டி முழக்கும் அளவுக்கு பட்ஜெட்டில் ஏதாவது இருந்ததா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!