Published:Updated:

பன்னீருக்குத்தான் மக்கள் ஆதரவு! - புள்ளிவிவரம் காட்டுகிறார் பாக்யராஜ்

பன்னீருக்குத்தான் மக்கள் ஆதரவு! - புள்ளிவிவரம் காட்டுகிறார் பாக்யராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீருக்குத்தான் மக்கள் ஆதரவு! - புள்ளிவிவரம் காட்டுகிறார் பாக்யராஜ்

பன்னீருக்குத்தான் மக்கள் ஆதரவு! - புள்ளிவிவரம் காட்டுகிறார் பாக்யராஜ்

மிழக அரசியலில் ‘தெறி’ கிளப்பியிருக்கிறது ‘சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்’ மோதல். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கும் இயக்குநர் பாக்யராஜிடம் பேசினோம்.

பன்னீருக்குத்தான் மக்கள் ஆதரவு! - புள்ளிவிவரம் காட்டுகிறார் பாக்யராஜ்

‘‘ஜெ. மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் அமரவைத்ததை மறந்து கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்துகிறார்களே?’’

‘‘முதல்வர் என்று அவரைப் பொறுப்பில் உட்கார வைத்துவிட்டு, சக அமைச்சர்களே அவரை மட்டம் தட்டுவதும், டெல்லியில் அவமதிப்பதுமாகத் தொடர்ந்ததை பொதுமக்களே அறிவார்கள். மாலை போட்டு மரியாதைச் செலுத்தி கடைசியில் பலி கொடுப்பதுபோல் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதெல்லாம் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

யாரையும் எடுத்தெறிந்து பேசும் குணமோ, தூக்கிப் போடுகிற அலட்சியமோ ஓ.பி.எஸ்-ஸிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அனை வரையும் அனுசரித்துப் போகிற இவரைப் போன்றவர்களால்தான் கட்சியைச் சிதறாமல் பாதுகாத்துக் கொண்டு செல்ல முடியும்.’’

‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உதாரணத்துக்கு சொல்கிறேன்... ஜல்லிக்கட்டு விவகாரத்தில், கடைசி நேரத்தில், பிரதமர், ‘என்னால் ஒன்றும் செய்யமுடியாது. எல்லாம் கோர்ட்டில் இருக்கிறது’ என்று கை விரித்ததும் எனக்கும் கோபமாகிவிட்டது. அப்போது, மோடி என்ற காளையை மக்கள் அடக்குவதுபோல் ஒரு கார்ட்டூன் போட்டேன். ஆனால், அதன்பிறகு அதே மோடி, ‘நீங்களே ஒரு அவசரச் சட்டம் இயற்றுங்கள்’ என்றுகூறி அதற்கான ஆலோசனைகளையும் கூறி ஆக்கபூர்வமாக செயல்பட்டார். உடனே, நாங்களும் போன வாரம் போட்ட கார்ட்டூனை குறுக்காகக் கோடு கிழித்து அடித்தாற்போன்று போட்டு, ‘நாங்கள் இதுமாதிரியான கார்ட்டூன் போட்டதற்காக வருந்துகிறோம்’ என்று எழுதியதோடு, மோடி - ஓ.பி.எஸ். இருவருக்கும் பூச்செண்டு கொடுப்பது போல் கார்ட்டூன் போட்டோம். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அரசியல் சூழல் மாறுகிறபோது நமக்கும் மனநிலை மாற்றங்கள் நிகழும். அதேபோன்ற ஒரு நிலையாகத்தான் ஓ.பி.எஸ்-ஸின் இந்த முடிவைப் பார்க்கிறேன். மற்றபடி இதில் அரசியல் கட்சியினரின் தூண்டுதலோ சதியோ இருப்பதாகத் தெரியவில்லை.’’

‘‘தி.மு.க-வின் தூண்டுதலால்தான் ஓ.பன்னீர்செல்வம் இப்படிச் செயல்படுகிறார் என சசிகலா தரப்பினர் சொல்கிறார்களே...?’’

‘‘இதில் தூண்டிவிடுவதற்கு என்ன இருக்கிறது? வெறுமனே இதைத்தான் அவர்கள் குற்றச்சாட்டாக சொல்லிக்கொண்டிருக்க முடியும். இவர்களே இத்தனை பேர் சேர்ந்துகொண்டு ஓ.பி.எஸ் என்ற ஒரு தனிமனிதரை பிடித்து வைத்துக் கொண்டு இத்தனை நாளும் குட்டிக்கொண்டு இருந்தார்களே....  அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அப்படியே இவரைத் தூண்டி விடுவதால் அவர்களுக்குத்தான் என்ன லாபம்? இப்போதைய சூழலில், ஓ.பி.எஸ்-ஸே இன்னமும் தன்னை நிரூபிக்க வேண்டிய காலகட்டத்தில்தானே நின்றுகொண்டு இருக்கிறார்!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பன்னீருக்குத்தான் மக்கள் ஆதரவு! - புள்ளிவிவரம் காட்டுகிறார் பாக்யராஜ்

‘‘சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கான பலம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கிறதா?’’

‘‘சட்டம் வேறு; நியாய தர்மம் வேறு. நியாயப்படி பார்க்கப்போனால், மக்கள் ஆதரவு என்பது 98 சதவிகிதம் ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் இருக்கிறது. ஆனால், சட்டம் என்று வரும்போது ‘129  எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எங்களிடம் இருக்கிறது. நான் மெஜாரிட்டி காண்பிக்கிறேன்’ என்று அந்த அம்மா சொல்கிறார். ஆனால், ‘அந்த 129  எம்.எல்.ஏ-க்களையும் தேர்வுசெய்து அனுப்பிய மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?’ என்ற நியாய தர்மத்தையும் பார்க்க வேண்டும். சட்டத்தை மட்டும் பார்த்துவிட்டு நியாய தர்மத்தை ஒதுக்கிவிட்டால், என்ன ஆகும்? இப்போது மெரினாவில் இளைஞர்கள்கூடி போராட்டம் நடத்தினார்களே... அதுமாதிரிதானே ஆகும்?’’

‘‘அ.தி.மு.க-வின் கடந்த கால அரசியல் நிலைமைகளோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியுமா?’’

‘‘எம்.ஜி.ஆர் மறைந்ததும் இதேபோல்தான் நடந்தது. ஆர்.எம்.வீ அணியா, ஜெயலலிதா அணியா, என்று மோதிக்கொண்டார்கள். எம்.எல்.ஏ-க்கள் எங்கேயும் ஓடிப்போய்விடக் கூடாது என்று அனைவரையும் கும்பலாக இழுத்துக்கொண்டுபோய் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள் ஆர்.எம்.வீ அணியினர். கூடவே, என்னையும் வந்து அழைத்தார்கள். ஆனால், ‘எம்.ஜி.ஆர் இறந்து பத்து நாட்களுக்குள் இப்படி யெல்லாம் சண்டைபோட்டு அசிங்கப்படுத்தாதீங்க... நியாயமா பொதுக்குழுவைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்துவோம். ஜெயிப்பவருக்குப் பொறுப்புக் கொடுப்போம்’ என்று பேசினேன். யாரும் கேட்கவில்லை. ‘இல்லை இப்போதே இதற்கு முடிவு எடுத்தாகவேண்டும்’ என்று கட்டாயப் படுத்தினார்கள். ‘சரி அப்படியென்றால், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவைப் பொறுப்பில் அமரவைத்தால் மக்கள் உள்பட யாரும் எதிர்க்க மாட்டார்கள்’ என்று சொன்னேன். இதேபோல், ஜெ. தரப்பிலிருந்து அரங்கநாயகம் வந்து என்னிடம் ஆதரவு கேட்கும்போதும், ‘பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கலாம்’ என்றுதான் ஆலோசனை சொன்னேன். ஆனாலும் அன்றைக்கு மெஜாரிட்டியான பொதுமக்களின் ஆதரவு என்பது ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது. அதன்பிறகு அவர்தான் கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புக்கும் வந்தார். ஆக, மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் பக்கம்தான் ஜெயமாகும்’’ என்று ‘பஞ்ச்’ வைத்து முடித்தார் பாக்யராஜ்!

- த.கதிரவன்