Published:Updated:

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... “ஹலோ எம்.எல்.ஏ... எப்படி இருக்கீங்க?”

சசிகலா
சசிகலா

சசிகலா

கூவத்தூர் சொகுசு விடுதியில்  அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என ஒரு தரப்பு சொல்கிறது. அவர்கள் விரும்பித்தான் தங்கியிருக்கிறார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. இந்நிலையில், தமிழகம் முழுக்க நம் நிருபர் படை துடித்துக் கிளம்பி, எம்.எல்.ஏ-க்களிடம் பேசி, அவர்களின் கருத்தை அறிய முயன்றது. சிலர் லைனுக்கு வந்தார்கள். சிலரின் உறவினர்கள் போனை எடுத்துப் பேசினார்கள். சாம்பிளுக்கு சிலரின் பேச்சுகள் இங்கே...

பாலகிருஷ்ணா ரெட்டி, (கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர், ஓசூர்): “இதென்னங்க கேள்வி! இயக்கம் எங்க இருக்கோ, பொதுச்செயலாளர் எங்க இருக்காரோ அங்குதான் நான் இருப்பேன்.’’

ராஜேந்திரன், (பர்கூர்): “அவர் சென்னையில இருக்கார். அரசியல் நிலைப்பாடுகளைக் குடும்பத்துல பகிர்ந்துக்க மாட்டார். மற்றபடி அவர் எங்களிடம் போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவருடைய முடிவு எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்றார், அவருடைய மைத்துனர் சரவணன்.

பழனியப்பன், (பாப்பிரெட்டிப்பட்டி):
“என்னன்னு தெரியல சார். அது அவருடைய முடிவு. இந்த இக்கட்டான சூழல்ல நாம ஏன் பேசிக்கிட்டு? நானே ஒரு வாரமா அவர்கிட்ட பேசல சார்’’ என்று முடித்துக்கொண்டார், அவருடைய அண்ணன் வெள்ளியங்கிரி.

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... “ஹலோ எம்.எல்.ஏ... எப்படி இருக்கீங்க?”

சந்திரசேகர், (மணப்பாறை): ‘‘சந்திரசேகருக்கு நிழலாக வலம்வந்த பலர் ஓ.பி.எஸ் அணிக்கு மாறிவிட்டதால், அவர் குழப்பத்தில் இருந்தார். அவரை சசிகலா ஆதரவாளர்கள் அலேக்காக உள்ளே தூக்கிச் சென்ற வீடியோ வைரல் ஆனது. இப்போது அவர் என்ன முடிவில் இருக்கிறார் எனத் தெரியவில்லை’’ என்றார்கள் அவரது உறவினர்கள்.

ரெங்கசாமி, (தஞ்சை): ‘‘அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் எல்லோரும், சின்னம்மாவின் விசுவாசிகளாகத்தான் இருப்பார்கள். அவரை முதலமைச்ச ராக அமர வைப்பதற்கு, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஒன்றாக இருக்கிறோம்.’’

காமராஜ், (உணவுத்துறை அமைச்சர், நன்னிலம்):
‘‘சின்னம்மா முதலமைச்சராக வேண்டும். சின்னம்மா, அ.தி.மு.க-வை வழிநடத்த வேண்டும் என தொண்டர்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ், கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்.’’

விஜயபாஸ்கர், (போக்குவரத்து துறை அமைச்சர், கரூர்): “அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். யார் பக்கம் செல்ல இருக்கிறார் என்பதை நான் சொல்லி, அவருக்குத் தெரிய வேண்டியதில்லை” என்றார், அவரது மனைவி விஜயலட்சுமி.

கீதா, (கிருஷ்ணராயபுரம்): “இப்போது வரைக்கும் என் மனைவி சின்னம்மாவோடுதான் இருக்கார். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார், அவருடைய கணவர் மணிவண்ணன்.

ஓ.எஸ்.மணியன், (கைத்தறித்துறை அமைச்சர், வேதாரண்யம்): “எல்லோரையும் அரவணைத்துச் செல்ல ‘சின்னம்மா’ ஒருவரால்தான் முடியும். கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம் இருக்கின்ற சின்னம்மா பக்கமே என்றும் நாங்கள் துணையாக இருப்போம்.”

சேவூர் இராமச்சந்திரன், (அறநிலையத் துறை அமைச்சர் ஆரணி): “சின்னம்மாவுக்குத்தான் அப்பா ஆதரவு அளித்து வருகிறார். கழகத்தின் பொதுச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்வி எழுந்தவுடன் அப்பாவும், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மாவட்டம் மாவட்டமாக சென்று சின்னம்மாவுக்கு ஆதரவு திரட்டிவந்தது அனைவருக்குமே தெரியும். தற்போது அப்பா கூவத்தூரில் தான் இருக்கிறார்” என்றார் அவருடைய மகன் விஜய்.

பன்னீர்செல்வம், (கலசப்பாக்கம்): “நான் கூவத்தூர் விடுதியில் இருக்கிறேன். எம்.எல்.ஏ-க்களை மிரட்டுவது போன்று வெளிவரும் செய்தியெல்லாம் சுத்தப் பொய். சின்னம்மாவை முதல்வர் ஆக்கியே தீரவேண்டும் என்ற முடிவை எடுத்து, அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் இங்கு தீவிரமாக செய்து வருகிறோம்.’’

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... “ஹலோ எம்.எல்.ஏ... எப்படி இருக்கீங்க?”

சத்யா, (பண்ருட்டி): “எங்களைக் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பது பொய்யான குற்றச்சாட்டு. சின்னமும், கொடியும் எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். அதனால், சின்னம்மாவுக்குத்தான் என் ஆதரவு.’’

வி.டி.கலைச்செல்வன், (விருத்தாசலம்): “எங்களை யாரும் கடத்தவும் இல்லை, அடைத்து வைக்கவும் இல்லை. அம்மா கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி இது. அதை தி.மு.க.விடம் அடகுவைக்க துடிக்கிறார் பன்னீர்செல்வம். சின்னம்மாவை முதல்வராக்காமல் இந்த இடத்தைவிட்டு நான் வர மாட்டேன்”.

முருகுமாறன், (காட்டுமன்னார்கோயில்): ‘‘என்னைக் கடத்தவும் இல்லை, சிறை வைக்கவும் இல்லை. என் சொந்த விருப்பத்தில் என் பெயரில்தான் இந்த விடுதியில் ரூம் எடுத்துத் தங்கியிருக்கிறேன். சின்னமும், கொடியும் எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.”

குமரகுரு, (உளுந்தூர்பேட்டை):
“பொதுச் செயலாளராக சின்னம்மாவை முன்மொழிந்தவர் களில் அப்பாவும் ஒருவர். சின்னம்மாவை அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஒரு மனதாகத்தான் சட்டமன்றக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்” என்றார், அவருடைய மகன் நமச்சிவாயம்.

என்.ஜி.பார்த்திபன், (சோளிங்கர்):
“பன்னீர்செல்வத்துக்குக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. சின்னம்மாவை முதல்வராக்கக் கூடாது என்ற அசைன்மென்ட்டை அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். கூவத்தூர் விடுதியில் எந்த கெடுபிடியும் கிடையாது.”

ரவி, (அரக்கோணம்): “நான் அரக்கோணத்தில் தான் இருக்கிறேன். கட்சியினரையும் மக்களையும் சந்திக்கிறேன். கட்சியையும் ஆட்சியையும் சின்னம்மா அவர்கள்தான் வழிநடத்துவார்கள். எம்.எல்.ஏ-க்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.”

ஜெயந்தி பத்மநாபன், (குடியாத்தம்): “யாரும் கட்டாயப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்படவில்லை. நான் என் மனைவியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அம்மா வளர்த்த கட்சியும் அதன் சின்னமும் சின்னம்மாவிடம் இருக்கிறது. அவர் பின்னால்தான் அனைத்து எம்.எல்.ஏக்களும் இருப்பார்கள்” என்றார், அவருடைய கணவர் பத்மநாபன்.

ராஜலட்சுமி, (சங்கரன்கோவில்): ‘‘கட்சியை வழிநடுத்தும் சின்னம்மா பக்கமே நான் எப்போதும் இருப்பேன். கட்சிக்கு துரோகம் செய்தால்தான் எனக்குப் பதவி கிடைக்கும் என்றால் எனக்கு அது தேவையே இல்லை.’’

செல்வ மோகன்தாஸ் பாண்டியன், (தென்காசி): ``எங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் ஒன்றாக தங்கி இருக்கிறோம். எனது தென்காசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பலரும் என்னிடம் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளை யும் கேட்டே நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன்.

ஆர்.டி.ராமச்சந்திரன், (குன்னம்):‘அம்மாவின் வழிதோன்றலில் வந்தவர்தான் சின்னம்மா. அவருக்குத்தான் எனது முழு ஆதரவு.’’

தாமரை ராஜேந்திரன், (அரசு கொறடா, அரியலூர்):
‘‘இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கட்சியையும் சின்னம்மாவையும் பழிவாங்கிவிடலாம் என்று சில கயவர்கள் நினைத்துச் செயல்பட்டுகொண்டிருக்கிறார்கள். நான் முழுமனதோடு சின்னம்மாவை ஏற்றுக்கொள்கிறேன்.’’

ராமஜெயலிங்கம், (ஜெயங்கொண்டம்): ‘‘பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் 118 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆட்சி கவிழ்ந்தால் யாருக்கு லாபம்? தி.மு.க-வுக்குத்தானே! இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் விலைபோய்விட்டார் என்பதை.’’

பழனி, (ஸ்ரீபெரும்புதூர்): ‘‘நான் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கி இருக்கிறேன். யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை.’’

கோதண்டபாணி, (திருப்போரூர்): ``எங்களை யாரும் கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை. வீடு மாமல்லபுரத்திலேயே உள்ளதால் நான் என் வீட்டுக்குச் சென்று வருகிறேன்.’’

டாக்டர் முத்தையா, (பரமக்குடி): ‘‘தன்னோட சுய விருப்பத்தின் பேரிலேயே அவர் அங்கு தங்கியிருக்கிறார். அவரது ஆதரவு என்றைக்கும் சின்னம்மாவுக்குத்தான்’’ என்றார், முத்தையாவின் உதவியாளர் சாகுல்.
பெரியபுள்ளான் என்ற செல்வம், (மேலூர்): ‘‘எங்களுக்கு எப்போதும் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் கேட்போம். நாங்கள் சுதந்திரமாகத்தான் ஹோட்டலில் இருக்கிறோம். யாரும் பயப்படவேண்டாம்.’’

கதிர்காமு, (பெரியகுளம்): ‘‘என் கணவர் யாருக்கு ஆதரவு என்று தெரியவில்லை. அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று தற்போது ஓய்வெடுத்து வருகிறார்’’ என்றார், அவருடைய மனைவி ஜெயா.

- நமது நிருபர்கள்
படங்கள்: அ.குரூஸ்தனம்

அடுத்த கட்டுரைக்கு