மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!
பிரீமியம் ஸ்டோரி
News
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!

எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி, படம்: சு.குமரேசன்

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!

எம்.ஜி.ஆரின் இறுதி ஆட்சிக் காலத்தில் நடந்த எரிசாராய ஊழல் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதனை விசாரிக்க மத்திய அரசு, ரே கமிஷனை அமைத்தது. அந்த கமிஷனில் எம்.ஜி.ஆர் சார்பாக ஆஜரானவர் கே.சுப்பிரமணியம். ஏற்கெனவே ஹண்டே தேர்தல் வழக்கு தொடர்பாக வாதாடியவர். அந்த கே.சுப்பிரமணியம், பிறகு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்.

நடராசனும் சுப்பிரமணியமும் தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். அதனால் சுப்பிரமணியத்தை நடராசனுக்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு வேண்டிய சட்ட உதவிகளை சுப்பிரமணியம்  செய்து வந்தார். ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டில்தான் சுப்பிரமணியத்தின் வீடு இருந்தது. ஆரம்பக் காலத்தில் நடராசனும் சசிகலாவும் இவர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் வருவார்கள். அப்போது வி.என்.சுதாகரன் சின்ன பையன். இவர், போயஸ் கார்டனில் இருந்து முக்கியமான பேப்பர்களை சைக்கிளில் அடிக்கடி எடுத்து வந்து சுப்பிரமணியத்திடம் கொடுத்துவிட்டுப் போவார்.  சில காலம் கழித்து சிவப்பு கலர் மாருதி காரில் நடராசனும் சசிகலாவும் வந்து போனார்கள். ஏன்... ஜெயலலிதாவே சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார். ஒரு கட்டத்தில் உயில் ஒன்றை எழுதி அதை ‘நிறைவேற்றாளர்’ என்ற பொறுப்பில் கே.சுப்பிரமணியத்தை நியமித்ததாகவும் சொல்வார்கள். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக மாறியிருந்தார்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ‘ஜானகி அணி’, ‘ஜெ அணி’ என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனால், 1989 சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களைப் பிடித்தது. ஜானகி அணிக்கு ஓர் இடம்தான் கிடைத்தது. இதனால் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஒன்றிணைந்தது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. அதை வாங்கிக் கொடுத்ததில் சுப்பிரமணியம் பெரிய பங்காற்றினார். அவருக்குத் தேவையான உதவிகளை நடராசனும் சசிகலாவும் செய்து கொடுத்தனர். ஜானகி அணியில் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தமும் ஜெயலலிதாவும் சேர்ந்து கையெழுத்துப் போட்ட மனுவை ரெடி செய்து,  அதைத் தேர்தல் கமிஷனிடம் கொடுத்தார் சுப்பிரமணியம். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திலேயே, மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்தலுக்குள் இரட்டை சிலை சின்னத்தை வாங்கிவிட துரிதமாக வேலை பார்த்தார்கள். தேர்தல் கமிஷனில் ஆஜர் ஆவதற்காக சேடப்பட்டி முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ மரூர் தர்மலிங்கம் உட்பட அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் பலரையும் டெல்லி அழைத்துச் சென்றார் சுப்பிரமணியம். பலருக்கும் அதுதான் முதல் விமானப் பயணம். டெல்லியில் இறங்கியபோது விமானத்தில் கோளாறு ஏற்பட, பலரும் உயிர் பயத்தில் உறைந்து போனார்கள். அந்த நிர்வாகிகளை ஒருவழியாக தேர்தல் கமிஷனின் முன்பு ஆஜர்படுத்தி சின்னத்தை வாங்கினார்கள். ‘‘ஒரு கட்சியின் சின்னம் என்பது குழந்தையைப் போல. அதை முடக்கிய நானே அதைத் திரும்பத் தருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். முடக்கப்பட்ட தேர்தல் சின்னம், மீண்டும் ஒன்றுபட்ட கட்சிக்குக் கிடைப்பது தேர்தல் கமிஷனின் வரலாற்றில் இது முதல்முறை’’ எனச் சொன்னார் அப்போது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த பெரி சாஸ்திரி. அதன்பின் ‘அ.தி.மு.க-வின் சட்ட மூளை’ ஆனார் சுப்பிரமணியம்.

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 16 - விரட்டப்பட்ட சட்ட மூளை!

ஜெயலலிதா, 1991-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோது சுப்பிரமணியம், அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். முதல்வராக இருந்த அந்தக் காலகட்டத்தில்தான் காவிரிக்காக கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா. அப்போது அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார் அவர். அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும் என தன் சகாக்களிடம் ஜெயலலிதா சொல்லியிருந்தார். அப்போதுதான் டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கினார். அது, அவரின் அரசியல் வாழ்க்கையில் புயலாக மாறியது. அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் 2001 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. ஆட்சியில் அமர்ந்தும் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. ‘டான்சி நிலத்தை வாங்க வேண்டாம்’ என சுப்பிரமணியம் அட்வைஸ்  செய்தார். அவர் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை சொல்வதை சசிகலா ரசிக்கவில்லை. சசிகலா பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம்தான் அந்த நிலத்தை வாங்கியது. ‘ஜெயலலிதாவுக்கு ஆலோசனை சொல்வதாக இருந்தாலும் பக்கத்தில் இருக்கிற மன்னார்குடியினர்தான் சொல்ல வேண்டும்’ என நினைத்தார்கள். விளைவு சுப்பிரமணியத்தை சீண்ட ஆரம்பித்தார்கள்.

சுப்பிரமணியம் போன்றவர்களின் கார்கள் மட்டுமே போயஸ் கார்டன் உள்ளே அனுமதிக்கப்படும். ஒரு சமயம் அவர் ஜெயலலிதாவைப் பார்க்கப் போனபோது, உள்ளே நிறுத்தப்பட்ட அவரின் காரை எடுத்து வெளியே விட்டார் டி.டி.வி.தினகரன். வெளியே வந்த சுப்பிரமணியம், காரைக் காணவில்லை எனத் தேடியிருக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு ஜெயலலிதா வெளியே வந்து விசாரித்தார். உடனே தினகரன், ‘‘உங்கள் பாதுகாப்பு கருதி காரை நான்தான் வெளியே விட்டேன்’’ எனச் சொன்னார். தினகரனைத் திட்டிய ஜெயலலிதா, ‘‘சாரிடம் மன்னிப்பு கேள்’’ எனச் சொல்ல, தினகரன் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அடுத்தடுத்து மன்னார்குடியினரின் அத்துமீறல்கள் தொடரவே, ஒதுங்கிப் போனார் கே.சுப்பிரமணியம்.

(தொடரும்)