Published:Updated:

அம்மா சமாதியில் தற்கொலை செய்த காவலர் அருண்ராஜின் குடும்பத்தினர் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

அம்மா சமாதியில் தற்கொலை செய்த காவலர் அருண்ராஜின் குடும்பத்தினர் இப்போது எப்படி இருக்கிறார்கள்?
அம்மா சமாதியில் தற்கொலை செய்த காவலர் அருண்ராஜின் குடும்பத்தினர் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

``அவன் ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டான். அதுக்கு என்ன காரணம்னு மட்டுமாவது இந்த அதிகாரிங்க கண்டுபுடிச்சு சொல்லணும். இல்லன்னா உண்மை தெரியாம நானும் எம்பொஞ்சாதியும் ஏங்கி ஏங்கியே மூச்ச விட்டுடுவோம்யா”

டந்த மார்ச் மாதம் நான்காம் தேதி, அதிகாலை ஐந்து மணி இருக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக் காவலர் அருண்ராஜ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளாகத் தொலைக்காட்சி வழியே பிக் ப்ரேக்கிங் செய்தியாகத் தமிழக மக்களைச் சென்று சேர்ந்தது அந்தத் துயரச் சம்பவம். அதிர்ந்து போனார்கள் அருண்ராஜின் குடும்பத்தினர். கண்ணீர் விட்டுக்கதறி அழுதார்கள். துடிதுடித்தார்கள். ஆனால், அருண்ராஜ் இறந்து மூன்று மாதங்களைத் தாண்டியும் அவர் தற்கொலைக்குப் பின்னுள்ள காரணத்தை மட்டும் இன்னும் அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஓரிரு நாள்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்த அந்தத் தற்கொலைச் சம்பவம் மூன்று மாதங்களுக்குள்ளாக அடங்கி ஒடுங்கிவிட்டது. தற்போது அருண்ராஜின் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர் தந்தை மலைராஜனைத் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு பேசினோம். 

``தம்பி, யாரு பேசுறது” என்றவரின் குரல் ஏனோ இறுகிப்போயிருந்தது. விகடனிலிருந்து பேசுகிறோம் என்றதும் சட்டென விசும்பி அழ ஆரம்பித்துவிட்டார். ``அய்யா, நானே உங்க ஆபீஸுக்கு வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன்யா. ஆனா, அடிபட்டக் கால வெச்சுக்கிட்டு வெளியில நடந்து போறதே சிரமமா இருக்கும்போது எப்புடிய்யா மெட்ராஸு வர வந்து போக முடியும். அதான் சிவனேனு இருந்துட்டேன். ஆனா, பாருங்க அந்தக் கடவுளா பாத்துத்தான் உங்களையே எனக்கு போன் போட வெச்சிருக்குறான்யா. மாருலயும் தோளுலயும் தூக்கி வளத்த என் சிங்கத்தை துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையாக்கிட்டு ஒடிஞ்சு போயி உக்காந்துருக்கோம்யா. யாருட்ட சொல்லி அழுறது, அவன் சாவுக்கு யாருக்கிட்ட நீதி கேட்டுப் போறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தோம்யா. நல்ல வேளைக்கு நீங்களே கூப்புட்டுட்டீங்க” ஆசை மகனை இழந்த துக்கத்திலிருந்து இன்னும் முழுவதுமாக அவர் மீளவில்லை. கண்ணீர் விட்டு அழுதபடியேதான் நம்மிடம் பேசுகிறார். 

``எங்கப்பாரு காமராசர் காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில பிடிப்பா இருந்தவரு. அதனாலதான் நானும் என்னோட மூணு மகன்களுக்கும் பன்னீர்செல்வம், சத்யமூர்த்தி, அருண் ராஜீவ்காந்தின்னு பேரு வெச்சு அழகு பாத்தேன்; எங்க அண்ணனும் அவருடைய பிள்ளைகளுக்கு அப்படித்தான் பெயர்வைத்தார். அருண்தான் மூணாவது மகன். கடைக்குட்டிங்கிறதுனால அவனுக்கு எப்பவுமே அதிகமா செல்லம் கொடுத்து வளத்தோம். அவனே அருண் ராஜீவ்காந்திங்குற பேர சுருக்கி அருண்ராஜின்னு வெச்சிக்கிட்டான். தங்கமான பையன். தாய், தகப்பன் மேலயும் கூடப் பொறந்த அண்ணனுங்க மேலயும் அம்புட்டுப் பிரியமா இருப்பான். எப்பவும் துறுதுறுன்னு இருக்குறவன். பி.ஏ முதல் வருஷம் படிக்குறப்போவே குடும்பச் சூழ்நிலைய மனசுல வெச்சிக்கிட்டு எக்ஸாம் எழுதி போலீஸ் வேலைக்குப் போயிட்டான். 2013 ல வேலைக்குப் போனவன் நாலு வருஷமா சென்னையில தனியாத்தான் இருந்தான். தெனமும் வீட்டுக்குப் போன் போட்டு அவன் அம்மாக்கிட்டயும் என்கிட்டயும் பேசிடுவான். ரெண்டு நாளு லீவு கெடைச்சாக்கூட மதுரைக்குக் கௌம்பி வந்துடுவான். ஊருக்கு வந்ததும் அவன் அம்மா மடியிலதான் தலை வெச்சுப் படுத்துத் தூங்குவான். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்குறவன். நாம போலீஸ் வேலை பாக்குறோம்ங்கிற மெதப்பே அவன்கிட்ட இருந்தது கிடையாது. அன்னைக்கு ராத்திரிகூட என்கிட்ட போன்ல பேசிட்டுத்தான் வேலைக்குப் போனான். ஆனா, மறுநாள் காலையில அவன் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு தகவல் வருது. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. என் மனைவி பொன்னழகு கதறித் துடிச்சா. அழுது புரண்டோம். இதோ, முழுசா மூணு மாசம் உருண்டு ஓடிடுச்சு. இப்போ வரை அவன் எதுக்காகச் செத்தாங்கிற உண்மை தெரியாம அழுதுட்டு மட்டும்தான்யா இருக்குறோம்” வெடித்து அழ ஆரம்பித்தவரைச் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தோம். 

``மன்னிச்சிடுய்யா, நான் அழுது உன்னையும் தர்மச் சங்கடத்துக்கு ஆளாக்குறேன். எனக்கு வேற என்ன பண்றதுன்னே தெரியலய்யா. வேலைக்கெல்லாம் ஒழுங்காப் போற பையன். சம்பளம் வாங்கினதும் கரெக்டா வீட்டுக்கு அனுப்பி வெச்சிடுவான். வேல பாக்குற இடத்துல ஊருக்குப் போகணும்னு சொல்லி அடிக்கடி லீவு கேப்பான். மத்தபடி அவனுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததில்லய்யா. நான் காங்கிரஸ் கட்சியில மதுரை தெற்கு மாவட்ட துணைத் தலைவரா இருக்கேன். ஆனாலும்கூட, அவனுக்கும் மத்த பசங்களுக்கும் ஜெயலலிதா அம்மாவத்தான் புடிக்கும். அம்மா நினைவிடத்திலேயே எனக்கு டியூட்டி போட்டுருக்காங்கப்பான்னு சொல்லி சந்தோஷப்பட்டவன் கடைசி மூச்ச அங்கேயே விட்டுட்டானேய்யா. டியூட்டியில இருக்கும்போது செத்துருக்கான். ஆனா, அவனுக்காக இந்த அரசாங்கம் எந்தக் கைமாறும் பண்ணலை. அவனை அடக்கம் செய்யுறதுக்கு மட்டும் 50 ஆயிரம் கொடுத்தாங்க. மத்தபடி போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருந்தோ, அரசாங்கத்துல இருந்தோ வேறு எந்த உதவியும் பண்ணலைய்யா. அதுகூட பரவாயில்லய்யா. ஆனா, இப்போ வரை ஒரு வார்த்தை நாங்க எப்படி இருக்குறோம்னுகூட யாரும் விசாரிக்கலைய்யா. நான் இத்தனை வருஷமா விசுவாசமா இருந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க கூட கை விரிச்சிட்டாங்க. 

அவன் சாவுக்குக் காரணம் பணிச்சுமையா இல்ல மேலதிகாரிங்களோட டார்ச்சரான்னு இப்போ வரை தெரியல. ஏதோ ஒண்ணு நடந்துருக்கு. அதை எல்லாருமா சேர்ந்து மூடி மறைக்கப் பாக்குறாங்க. பொன்னழகு பையனையே நெனைச்சுக் கிறுக்குப் புடிச்ச மாதிரி ஆகிட்டா. அவனோட துணிகளை எடுத்துப் போட்டு துவைக்கிறதும் மடிச்சு வைக்கிறதுமா இருக்கா. மூத்த மகன் அவன் மனைவியோட செட்டில் ஆகிட்டான். ரெண்டாவது மகன் அருணையே நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தான். இப்பதான் அவனும் ஹைதராபாத்ல வேலை பார்க்கப் போயிருக்கான். அருண் அரசாங்க வேலையில இருக்கும்போதே செத்துப் போயிருக்குறான். அவன் ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டான். அதுக்கு என்ன காரணம்னு மட்டுமாவது இந்த அதிகாரிங்க கண்டுபுடிச்சுச் சொல்லணும். இல்லன்னா உண்மை தெரியாம நானும் எம்பொஞ்சாதியும் ஏங்கி ஏங்கியே மூச்ச விட்டுடுவோம்யா” என்று வேதனையோடு கதறுபவரின் வார்த்தைகள் நம்மைச் சுடுகிறது.

``என் தம்பி இதுவரை எந்த ஊர் வம்புக்கும் போனதில்ல. நாங்க படிச்சிக்கிட்டு இருக்கும்போது குடும்பச் சூழ்நிலையை மனசுல வெச்சு படிப்பைக்கூட பாதியிலேயே நிறுத்திட்டு வேலைக்குப் போனவன் அவன். வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் போலீஸ் மேமேனஜ்மென்ட் மூலமா டிகிரி படிச்சான். அப்போக்கூட அவனை எக்ஸாம்ஸ் எதுவும் எழுத விடாம தடுத்துருக்காங்க. எங்க அப்பாவுக்கு கால்ல ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியிருந்தது. அதுக்காக நாங்க பணம் ரெடி பண்ணிட்டு இருந்த நேரத்துலதான் இப்படிப் பண்ணிட்டான். எங்க குடும்பச் சூழ்நிலை அவனுக்கு நல்லாவே தெரியும். அடிமட்டத்துல இருந்து நாங்க கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வந்துட்டு இருந்தோம். அண்ணன் நீ மேற்கொண்டு படி. இப்போதைக்கு நம்ம குடும்பத்தை நான் காப்பாத்துறேன்னு சொல்லி எனக்கு நம்பிக்கை கொடுத்தவன். நிச்சயமா அவன் வேணும்னே தற்கொலை பண்ணியிருக்க மாட்டான். என்ன கஷ்டம் வந்தாலும் அதை முகத்துல காட்டாதவன். சிரிச்சிட்டேதான் இருப்பான். ஆனா, கடைசியில அவனோட முகத்தைக்கூடப் பாக்க முடியாத பாவியாகிட்டோமே” என்று புலம்பியபடியே கண்ணீர் விட்டு அழுகிறார் சத்யமூர்த்தி.   

காவலர் பணியிலிருக்கும்போதே மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அருண்ராஜ் மரணத்தின் பின்னணியை காவல்துறையும் அரசும் வெளியே கொண்டுவருவதோடு அவர் குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரணத்தை வழங்கவும் முன்வர வேண்டும். மௌனம் கலைக்குமா அரசு?

அடுத்த கட்டுரைக்கு