Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

சசிகலா
சசிகலா

சசிகலா

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

‘‘ஆமாம்! ஆமாம்! அப்படித்தான் சொல்கிறார்கள்...’’ என்று யாரிடமோ போனில் பேசியபடி பரபரப்பாக எதிரில் வந்து தரிசனம் தந்தார் கழுகார். ‘சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு’ குறித்த நமது நிருபர்களின் கட்டுரையைப் படித்தவர், ‘‘ஒன்பதே நாட்களில் தங்கள் கனவு சிதையும், சாம்ராஜ்யம் சரியும் என சசிகலா எதிர்பார்த்திருக்க மாட்டார்’’ என்றார்.

‘‘கடந்த 5-ம் தேதி சட்டமன்ற அ.தி.மு.க தலைவராகத் தேர்வான நிமிடத்திலிருந்தே அவரிடம் உற்சாகம் கரை புரண்டு ஓடியதே’’ என்றோம்.

‘‘ஆமாம்! ஆனால் அவர் முழுமனதாக இந்த முடிவில் இல்லை என்கிறார்கள். மன்னார்குடி குடும்பத்தினர் அவசரம் காட்டியதன் விளைவு இது. ‘நாம் அமைதியாக இருந்திருந்தால், நீதிமன்றம் இவ்வளவு வேகம் காட்டியிருக்காது, இந்த அவமானமும் ஏற்பட்டிருக்காது’ என்று தீர்ப்புக்குப் பிறகு கோபத்தோடு அவர் சொன்னாராம். தீர்ப்புத் தகவலை அவரிடம் சொல்வதற்கே மன்னார்குடி உறவுகள் தயங்கியிருக்கின்றன.’’

‘‘ஓஹோ!’’

‘‘சொல்லப்போனால் இப்படி ஒரு தீர்ப்பை சசிகலா எதிர் பார்த்தார் என்றே சொல்லலாம். டெல்லியிலிருந்து வழக்கறிஞர்கள் சொன்ன தகவல்கள் எதுவும் உற்சாகம் தருவதாக இல்லை. ‘எதற்கும் தயாராக இருங்கள்’ என்றே சொல்லப்பட்டதாம். அதனால், தீர்ப்புக்கு முதல் நாள் திங்கள்கிழமை, ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என தகவல்கள் போயஸ் வட்டாரத்தில் பரப்பப்பட்டன. அன்று மூன்றாவது நாளாக அவர் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை சந்திக்கக் கிளம்பினார். அதற்கு முன்னதாக ஒரு ஆம்புலன்ஸ் கூவத்தூர் சென்றது. போயஸ் கார்டனிலிருந்து கிளம்பி காரில் ஏறிய சசிகலாவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. ஆனாலும் செயற்கையான சிரிப்பை வரவழைத்துக்கொண்டு வழியில் பொதுமக்களை சந்தித்தார். கூவத்தூரில் திடீரென சில வீடுகளுக்குள்ளும் நுழைந்து மக்களோடு பேசுவது போல பயணத்திட்டம் வகுக்கப்பட்டது. அன்று இரவு சசிகலா அங்கேயே தங்கினார். தீர்ப்பு வெளியானதும், குழப்பத்தில் எம்.எல்.ஏ-க்கள் வெளியில் கிளம்பிவிடக்கூடும் என்ற பயம் இருந்தது. அவர்களை கட்டுக்குள் வைப்பதற்காக சசிகலா அங்கேயே தங்கினார். ஆனால், முந்தின நாட்கள்போல அவர் எம்.எல்.ஏ-க்களுடன் பேசவில்லை. பெண் எம்.எல்.ஏ-க்களுடன் தனியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போதும்கூட அவரிடம் இயல்பான உற்சாகம் இல்லை.’’

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

‘‘கடைசி நேரத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி இருக்கின்றனரே?”

‘‘சசிகலா கூவத்தூர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் அங்கிருந்து தப்பித்து வந்தார். மாறுவேடத்தில் வந்ததாக அவர் சொன்னார். செம்மலை மறுநாள் காலை வந்தார். சரவணனைத் தொடர்ந்து வேறு யாரும் போய்விடக்கூடாது என்பதற்காக, இரவோடு இரவாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

‘‘திங்கள்கிழமை இரவு முதல் கூவத்தூரில் திடீரென பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டதே... ஏனாம்?’’

‘‘கூவத்தூரிலிருந்து வெளியேறி பன்னீர்பக்கம் சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன், திங்கள்கிழமை நள்ளிரவு டி.ஜி.பி அலுவலகம் சென்றாராம். அங்கு நைட் டியூட்டியில் இருந்த டி.எஸ்.பி-யிடம், ‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள். இதற்கு நானே நேரில் பார்த்த சாட்சி. உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் மீட்க வேண்டும்’ எனப் புகார் கொடுத்தாராம். அதோடு, ‘நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கவர்னர் மாளிகைக்குப் போவேன்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் இரவோடு இரவாக டி.ஜி.பி-க்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக மூன்று ஐ.ஜி-க்கள், 11 எஸ்.பி-க்கள் தலைமையில் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. ஆனால்,
அவர்கள் யாரிடமோ ஆலோசனை செய்துவிட்டு, தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள்.’’

‘‘இனி என்ன ஆகும்?’’

‘‘இந்த இதழ் வெளியாகும் நேரத்தில், சசிகலா உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையில் இருக்கலாம்; அல்லது பெங்களூரு சென்று சரணடையலாம். எதுவும் நடக்கும். அதேநேரம், இந்தத் தீர்ப்பால் மன்னார்குடி குடும்பத்தினர் பின்வாங்கவும் இல்லை. சசிகலாவின் மகுடத்தை யார் தலையில் சூட்டலாம் என அவசர ஆலோசனைகள், தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே தொடங்கிவிட்டன. கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி என இருவரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ஆனால், ‘வேறு யாரையும் அமர வைத்து, இன்னொரு பன்னீர்செல்வத்தை நாமே உருவாக்கி விடக்கூடாது. நம் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் முதல்வர் பதவி ஏற்கலாம்’ என மன்னார்குடி உறவுகள் தரப்பிலிருந்து நெருக்கடி தரப்படுகிறது. ஆனால், ‘யாரைப் பரிந்துரைப்பது’ என்பதில், அவர்களுக்குள் ஏகப்பட்ட மோதல் நடந்ததாம். ‘ஜெயலலிதாவால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனை முன்னிலைப்படுத்தினால், எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்காது. பன்னீர் பக்கம் சென்றிருக்கும் கட்சிக்காரர்களைக் கூட இழுக்கும் சக்தி படைத்தவர் அவர்’ எனச் சிலர் சொன்னார்களாம். ஆனால், அவர்மீதான வழக்குகளில் ‘நான் சிங்கப்பூர் குடிமகன்’ என அவரே நீதிமன்றத்தில் சொல்லியிருப்பதால், ‘தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் சம்மதிப்பாரா?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது! குடும்பத்துக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதோடு, ‘இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் ஒருவரை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்வதே பாதுகாப்பானது’ எனச் சட்ட நிபுணர்கள் சொன்ன யோசனையும் பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக கவர்னர் மாளிகைக்குத் தகவலும் அனுப்பப்பட்டது.’’

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

‘‘ஓஹோ! எம்.எல்.ஏ-க்களுக்கு ஏகப்பட்ட கவனிப்புகள் செய்துவிட்டு, கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விடுவார்களா என்ன?”

‘‘ஆமாம்! இந்தக் களேபரத்தால் எம்.எல்.ஏ-க்கள் காட்டில் மழை. அவர்களை சொகுசு விடுதியில் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள் என்பதை வைத்து மட்டும் சொல்லவில்லை. எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் சசிகலா தரப்பும் பன்னீர் தரப்பும் பணமழையால் குளிப்பாடடுகிறார்கள். ‘பன்னீர்செல்வம் கோஷ்டிக்கு தாவினால் ஒரே செட்டில்மென்ட். சசிகலா கோஷ்டிக்குத் தாவினால் முதலில் அட்வான்ஸ். பிறகு செட்டில்மென்ட்...’ என்று ரகசிய விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டில் எது சரிப்பட்டுவரும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ-கள் ‘பூவா... தலையா’ போட்டுப்பார்த்து வருகிறார்கள். கூவத்தூர் ரிசார்ட்ஸுக்கு இரண்டாவது முறையாக பிப்ரவரி 12-ம் தேதியன்று மாலை சசிகலா சென்றபோது, ஒரு டெம்போ டிராவலர் வேன் சென்றுள்ளது. அதில்தான், லக்கேஜ்கள் இருந்ததாம். சசிகலா தரப்பு எம்.எல்.ஏ-களுக்கு முதல்கட்ட அட்வான்ஸாக ஒரு சி. வினியோகிக்கப்பட்டதாக பன்னீர்செல்வம் தரப்பினர் சொல்கிறார்கள். இதேபோல், பன்னீர்செல்வத்திடம் தற்போதுள்ள எம்.எல்.ஏ-கள் தவிர புதிய வரவாக நிறைய பேரை இழுக்கப் பணம் ரெடி பண்ணி வைத்திருப்பதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இருதரப்பிலும் 135 எம்.எல்.ஏ-களுக்கும் தலைக்கு 10 கோடி ரூபாய் நிர்ணயித்திருக்கிறார்கள்.”

‘‘இவ்வளவு கரன்சியைத் திரட்டி விட்டார்களா?”

‘‘சர்வ சாதாரணமாகத் திரட்டப்படுகிறது. பசை உள்ள துறைகளை வைத்திருக்கும் முன்னணி அமைச்சர்களின் பங்களிப்பும் இதில் அதிகமாம். கொங்கு மண்டல கோட்டைப் பிரதிநிதி ஒருவர் தன் பங்கிற்கு சில எம்.எல்.ஏ-களுக்கு தங்க பிஸ்கட்டுகளைத் தந்து குஷிப்படுத்தினாராம். நாமக்கல், சேலம் ஏரியாக்களைச் சேர்ந்த கோட்டைப்பிரதிநிதிகள், மேலும் பல எம்.எல்.ஏ-களுக்குப் புது கரன்சியைக் காட்டி அசத்தினார்களாம்.”

‘‘சசி தரப்பு போலவே பன்னீர் தரப்பும் பணம் தருகிறதா?”

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

‘‘சசிகலா குடும்பத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் மூன்று தொழில் அதிபர்கள் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்களாம். ஒருவர் மணல் மனிதர். இன்னொருவர் மலை மனிதர். மற்றொருவர் லாட்டரி மனிதர். மூவரும் இந்தப் பக்கம் பணம் திரட்டிக் கொடுக்கிறார்களாம். ‘இதுவரை அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தோம். எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்குத் திருப்தி வரவில்லை. இனியாவது அவர்களது ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று அவர்கள் மூவரும் சொல்லி இந்தக் காரியத்தில் இறங்கி இருக்கிறார்களாம்.”

‘‘கூவத்தூர் மனிதர்களுக்குப் போய் சேர்ந்துவிட்டதா?”

‘‘சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-களை, ரிசார்ட்ஸ் செல்வதற்கு முன்பாக தனது வீட்டுக்கு அழைத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்கிறார். அப்போதே அவர்களின் தற்போதைய வீட்டு முகவரி, தகவல் தொடர்பு நபர் பெயர், போன் எண்களைக் கேட்டு வாங்கினர். எதற்கு என்று கேட்டபோது, ‘ஒரு கடித பார்சல் தருவதற்காக’ என்றார்களாம். சட்டென்று எம்.எல்.ஏ-களுக்குப் புரிந்துவிட்டது. நான்காவது நாளே, அட்வான்ஸ் பட்டுவாடா ஆனதாம். மேலும் மேலும் வந்துகொண்டே இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்களாம். அதனால்தான் எந்தக் கவலையும் இல்லாமல் எம்.எல்.ஏ-க்கள் ஹாயாக இருக்கிறார்கள். ‘எங்கிருந்து பணம் வருகிறது... எங்கே கை மாறுகிறது...’ என்றெல்லாம் உன்னிப்பாக வருமானவரித் துறையினர் கவனித்து வருகிறார்கள். பழைய நோட்டுகளுக்குப் புதிய நோட்டை யார் மாற்றித்தருகிறார்கள் என்று வலைவீசித் தேடிவருகிறார்கள். சென்னையின் முக்கியப் புள்ளிகளை காரில் மறைமுகமாகப் பின்தொடர்வது, போன் உரையாடலைக் கண்காணிப்பது என்று இறுக்கிவருகிறார்கள். இதனால், சசிகலா கோஷ்டி புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.”

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

‘‘இதே நெருக்கடிதானே பன்னீர் கோஷ்டிக்கும் இருக்கும்?”

‘‘அதுதான் இல்லை. பன்னீர் கோஷ்டியினர் சுதந்திரமாக உலா வருகிறார்கள். வருமானவரித் துறையினரும் கண்டும்காணாமல் இருக்கிறார்கள். வெளிமாநில வங்கிகளில் எங்கே போனால், பழைய நோட்டுக்குப் புதுநோட்டு கிடைக்கும் என்றெல்லாம் க்ளூ கொடுத்து அனுப்புகிறார்கள் மத்திய அரசின் சில அதிகாரிகள்.”

‘‘ஏழுநாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை தலைமைச் செயலகம் வந்தாரே பன்னீர்?’’

‘‘ஆமாம்! முதல்வர் 12 மணிக்கு வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அதே நேரத்துக்கு ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்குள் என்ட்ரி கொடுக்க... அங்கி்ருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். ஸ்டாலின் நேராக தனது அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார். அதே நேரம் 12 மணிக்குக் கிளம்ப வேண்டிய ஓ.பி.எஸ், கிளம்பாமல் வீட்டிலேயே இருந்தார்.’’

‘‘ஓ.பி.எஸ்-ஸை சந்திக்கத் திட்டமிட்டரா ஸ்டாலின்?’’

‘‘அப்படித் திட்டமில்லை என்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், அவர் எந்த நோக்கமும் இல்லாமல் திடீரென தலைமைச்செயலகம் வரவேண்டிய அவசியம் இல்லை. அதுவும், முதல்வர் வரும் நேரம் அறிந்தேதான் வந்துள்ளார். முதல்வர் வந்திருந்தால், அவரை சந்திக்கும் திட்டமும் ஸ்டாலினிடம் இருந்துள்ளது. ஆனால், முதல்வர் தாமதமாக வந்ததால், அதற்குள் ஸ்டாலின் கிளம்பிவிட்டார்” என்றபடி பறந்தார் கழுகார்.

படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன், அ.குரூஸ்தனம், தே.அசோக்குமார்

உளவுத்துறைக்குப் புதுத் தலைமை!

ளவுத்துறைக்குப் புதிய ஐ.ஜி-யாக டேவிட்சன் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு காவல்துறையின் நலவாழ்வு பிரிவின் ஐ.ஜி-யாக இவர் இருந்தார். அது ‘டம்மி’ பதவி. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் சூடுபிடித்தபோது, அது தொடர்பான சில வேலைகளை ஸ்பெஷல் அசைன்மென்ட்டாக இவரிடம் ஒப்படைத்தார், உளவுத்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன். அதைக் கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்ததற்கான பரிசுதான், உளவுத்துறை ஐ.ஜி. நியமனம். இதற்கு முன்பு ஜெயலலிதா காலத்திலும், இதே பதவியில் இருந்தவர்தான் டேவிட்சன். தற்போது, உளவுத்துறை ஐ.ஜி. பதவியில் இருந்து மாற்றப்பட்ட சத்தியமூர்த்தி ஒரு சாந்தசொரூபி. அதனாலேயே தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவரே ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டார். முக்கியமான பதவியைக் காலியாக வைத்திருக்கக்கூடாது என்ற காரணத்தால், அந்த இடத்துக்கு டேவிட்சனை நியமித்துவிட்டனர்.

அட்டர்னி ஜெனரல் அட்வைஸ்!

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் பொங்கி எழுந்த நிமிடத்திலிருந்து, கவர்னர் வித்யாசாகர் ராவ் பக்கம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் திரும்பியிருந்தது. ‘கவர்னர் இவரிடம் ஆலோசனைக் கேட்டார்’, ‘இப்படி அறிக்கை அனுப்பினார்’ என புதுப்புது தகவல்கள் வந்துகொண்டிருந்தன. ‘கவர்னர் அனுப்பிய அறிக்கை’ என போலி அறிக்கை ஒன்றைக்கூட உலவ விட்டார்கள். இந்தநிலையில், ‘மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகியின் ஆலோசனையை கவர்னர் கேட்டார்’ என்பது மட்டும் உறுதி ஆகியுள்ளது. ‘‘எப்படியும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்துவிடப் போகிறது. அதன்பின் இந்த வாரத்திலேயே சட்டமன்றத்தைக் கூட்டி, ஆட்சிக்கு உரிமை கோரும் இரண்டு தரப்பையும் தங்கள் பலத்தை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என ஆலோசனை வழங்கியிருக்கிறார் ரோதகி.

மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியது, உத்தரப் பிரதேச ஆட்சிக்காக கல்யாண் சிங்கும் ஜெகதாம்பிகா பாலும் மோதிக்கொண்ட விவகாரத்தை. கடந்த 98-ம் ஆண்டு உ.பி முதல்வராக இருந்த கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்தார், மாநில கவர்னர் ரொமேஷ் பண்டாரி. இதைத் தொடர்ந்து ஜெகதாம்பிகா பால், பிப்ரவரி 21-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். மூன்றே நாட்களில், ‘கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி காட்ட, ஜெகதாம்பிகா பால் பதவி விலகினார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனபோது, ‘அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்புக்கும் வாய்ப்புத் தர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஆட்சி சிக்கல்கள் வரும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பே முன்னுதாரணமாகக் காண்பிக்கப்படுகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், இந்தத் தீர்ப்பைக் காட்டியே காங்கிரஸ் ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு