Published:Updated:

ஜெ. மரணம்... - “விசாரணை கமிஷனை சந்திக்கத் தயார்!” - சசிகலா சவால் பேட்டி

இரா.சரவணன் - படம்: கே.கார்த்திகேயன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெ. மரணம்... - “விசாரணை கமிஷனை சந்திக்கத் தயார்!” - சசிகலா சவால் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம், எம்.எல்.ஏ-க்கள் எப்போது வேண்டுமானாலும் அணி மாறலாம் என்கிற சூழலில் பிப்ரவரி 12-ம் தேதி சசிகலாவைச் சந்தித்தோம்.
 
கட்சியினர் மத்தியில் கடந்த ஒரு வாரமாக முழங்கத் தொடங்கியிருக்கும் சசிகலா, இதுவரை எந்தப் பத்திரிகைக்கும் மனம் திறந்து பேசியதில்லை. ‘அ.தி.மு.க-வை ஆட்டிப்படைக்கும் சக்தி’யாகச் சொல்லப்பட்ட காலத்திலும், கார்டனில் இன்-அவுட் எனப் பரபரப்பான காலகட்டத்திலும் அவர் மீடியா முன்பு வந்ததே இல்லை. 

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் தொடங்கி, முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் இப்போதைய சூழல் வரை சசிகலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்கள் மிக மிக அதிகம். ஆன்லைன் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை எதிரொலிக்கும் பலவிதமான கேள்விகளுக்கும் பதில் கேட்டு நாம் சசிகலாவைச் சந்தித்தோம்.

சசிகலா நம் பேட்டிக்கு ஒப்புதல் வழங்கியபோது நேரம் இரவு 10:15. கட்சி நிர்வாகிகள் அப்போதும் போயஸ் கார்டனின் வேதா நிலைய வாசலில் பரபரப்பாக இருக்கிறார்கள். வீட்டின் உள்ளே அபூர்வமாக உறவுகள் யாருமற்ற சூழல். உதவியாளர் நந்தகுமார் நம்மை அழைக்க, உள்ளே நுழைகிறோம். “வாங்க…” என்கிறார் சசிகலா. முகத்தில் கொஞ்சம்கூடப் பரபரப்பு இல்லை. அவ்வளவு நிதானம்.


“இப்படியொரு நெருக்கடி உங்களைச் சூழும் என நினைத்தீர்களா?”

“நிச்சயமாக. இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியும். காரணம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இறந்தப்ப, இதே நெருக்கடி ஏற்பட்டது. ஜானகி அம்மாவைச் சந்திச்சு அக்காவுக்காகச் சில விஷயங்களைப் பேசி, எந்தப் பிரச்னையும் இல்லாம சுமுகமாக்கிடணும்னு நான் நினைச்சேன். அதைச் செய்யுறதுக்குள்ள கட்சி ரெண்டா உடைஞ்சிடுச்சு. அம்மா திடீர்னு மறைஞ்சப்ப, அந்த மாதிரி கட்சிக்கு ஏதும் ஆகிடக் கூடாதுங்கிற எச்சரிக்கை, எனக்குள்ள இருந்துச்சு. கட்சியை உடைக்க, அரசியலுக்கு அப்பாற்பட்ட நிறையப் பேர் செயல்படும் நேரம் இது. அந்த அபாயத்தை என்னால் யூகிக்க முடிஞ்சது. அதனால்தான் அந்த இரவு நேரத்திலேயே பன்னீர்செல்வம் உள்ளிட்டவங்களைப் பதவி ஏற்புக்கு ரெடி பண்ணச் சொன்னேன். ‘நீங்கதான் பதவி ஏற்கணும்’னு அப்போ அமைச்சர்கள் சொன்னாங்க. ஏன்... இப்போ முதலமைச்சராக இருப்பவரும் என்னைத்தான் பதவி ஏற்கச் சொன்னார்.

அம்மாவின் இழப்பைத் தாங்க முடியாம நான் தத்தளிச்ச நேரம். அடுத்த அடியை எடுத்து வைக்கக்கூட என்னால் முடியாத நிலை. அம்மா கட்டிக்காத்த கட்சியைக் காப்பாத்திடணும்கிற எண்ணம் மட்டும்தான் இருந்துச்சு. பதவி ஏற்பைத் தள்ளிப்போட்டிருந்தா, அப்பவே கட்சிக்கு எதிரான வேலையில் பலரும் இறங்கியிருப்பாங்க. ஒரு கட்சியை உடைக்க, எப்படியெல்லாம் என்னவெல்லாம் சதி பண்ணுவாங்க, துரோகம் செய்வாங்கன்னு என்னோட 33-வது வயசுலேயே அம்மாவுக்குப் பக்கத்தில் நின்னு பார்த்திருக்கேன். அதற்கெல்லாம் இடம் கொடுத்துடக் கூடாது என்பதால்தான், அந்த நேரத்தில் எல்லா வேலைகளையும் முடுக்கிவிட்டேன். பழைய அனுபவம் தந்த எச்சரிக்கை அது!”

“அவ்வளவு எச்சரிக்கையா இருந்தும், முதலமைச்சர் பன்னீர்செல்வம் எப்படி உங்களுக்கு எதிராகக் கிளம்பினார்?”

“அந்த விஷயத்தில் நான் தோற்றதா நினைக்கலை. ஒருத்தர் மேல் நான் வெச்ச நம்பிக்கையை அவரே தோற்கடிச்சுக்கிட்டார். இக்கட்டான நேரத்தில் ரெண்டு முறை அம்மா அவரை முதலமைச்சர் ஆக்கினாங்க. அந்த நம்பிக்கையில் `அடுத்த முதலமைச்சர் யார்?' என்ற கேள்வி வந்தப்ப, நான்தான் பன்னீர்செல்வம் பெயரைச் சொன்னேன். பலருக்கும் அதில் உடன்பாடு இல்லைங்கிறது எனக்குத் தெரியும். ஆனால், அது கட்சிக்கு இக்கட்டான நேரம். அம்மாவோட நம்பிக்கையைத்தான் அவர் இப்போ பொய்யாக்கிட்டார். இந்த மாதிரி துரோகம் எல்லாம் எனக்குப் புதுசு இல்லை. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொடுக்குது. கையில் ஒட்டியிருக்கும் தூசை ஊதிட்டுப் போற மாதிரி, இந்தத் துரோகங்களை எல்லாம் ஊதித் தள்ளிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்!”

“ஜெயலலிதாவை அப்படியே பிரதிபலிப்பதுபோல் நடை உடை, பாவனை என ஒரே நாளில் அனைத்தையும் மாற்றியிருக்கிறீர்கள். அவர் அமர்ந்த நாற்காலி, அவர் பயணித்த கார் என அப்படியே அவரைப் பின்பற்றுகிறீர்களே… இவையெல்லாம் ஏன்?”


“இத்தனை வருஷங்களா அவர் ஒருத்தரைத்தானே நான் பின்பற்றினேன். ஒருவரை மாதிரி நடை, உடை, பாவனைகளை அமைச்சுக்கிறது சுலபம். ஆனால், குணத்திலும் வகுத்துக்கொண்ட கொள்கையிலும், வாழ்க்கைமுறையிலும், அணுகும் பக்குவத்திலும் ஒருவரை அப்படியே பின்பற்றுவதுதான் கஷ்டம். நான் என்னைப் பெற்ற தாயை ‘அம்மா’ என அழைத்த நாள்களைவிட, அம்மாவை ‘அக்கா’ என அழைத்த நாள்கள்தான் அதிகம்.

1988-லிருந்து நான் அம்மாகூட இருக்கேன். என்னோட 29-வது வயசுல இருந்து என் மொத்த வாழ்க்கையையும் அவங்களுக்காக அர்ப்பணிச்சிருக்கேன். ‘தாயாக இருந்து சசிகலா என்னைக் கவனித்து வருகிறார்’னு சிமி கரேவால் எடுத்த பேட்டியிலேயே அம்மா சொல்லியிருக்காங்க. வாழ்க்கை முழுக்க அவர் ஒருத்தரை மட்டுமே பின்பற்றி வாழ்ந்த நான், நடை, உடை, பாவனையிலும் அவரைப் பின்பற்றுவதில் தவறே இல்லைனு நினைக்கிறேன். அம்மாவோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாதுனு எனக்குத் தெரியும். ஆனாலும், எனக்கு முன்மாதிரியாகவும் முகவரியாகவும் இருந்த அவங்களோட அடையாளங்களை நான் சுமக்கிறப்ப, அவங்களோடு சேர்ந்து நிற்கிற மாதிரி உணர்கிறேன்.”

ஜெ. மரணம்... - “விசாரணை கமிஷனை சந்திக்கத் தயார்!” - சசிகலா சவால் பேட்டி

“ஜெ. சிகிச்சையில் இருந்தபோது, புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ வெளியிட்டிருக்கலாமே... அப்படி வெளியிடாததால்தானே ஜெ. மரணம் குறித்த சர்ச்சைகள் பெரிதாகின?”

“அம்மாவைப் பொறுத்தவரைக்கும் அவங்களோட இமேஜை ரொம்பப் பார்ப்பாங்க. எங்க வீட்டு ஆட்களா இருந்தாலும், அம்மாவை உடனடியா நினைச்ச நேரத்தில் பார்த்துட முடியாது. அவங்க ரெடியாகி வந்த பிறகுதான், பார்க்க முடியும். செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ போறோம். 24-ம் தேதி சாயங்காலமே அவங்க குணமடைஞ்சு,  உட்கார்ந்து நல்லா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ காவிரி விவகாரத்தில் நம்ம வழக்குரைஞர், நீதிமன்றத்தில் ரிப்போர்ட் சமர்ப்பிக்கவேண்டிய நேரம். நான் அது சம்பந்தமா அம்மாவிடம் சொன்னேன். ‘காவிரி விவகாரத்தில் என்னோட பாய்ன்ட்ஸையும் சேர்க்கணும். இந்த ரெக்கார்ட்ஸ்தான் கோர்ட்ல பேசும்; நமக்கான பங்கீட்டை நியாயமா பெற்றுத்தரும். அதனால் நீ அதிகாரிகளை இங்கே வரச் சொல்லு’னு அம்மா சொன்னாங்க. உடனே அதிகாரிகளை வரவெச்சேன். அம்மா சொல்லச் சொல்ல தலைமைச் செயலாளர் நோட் பண்ணிக்கிட்டார். அட்வகேட் ஜெனரல் அரை மணி நேரம் தாமதமா வந்தார். எல்லாம் நல்லபடியா முடிஞ்சப்ப, ‘அம்மா நல்லா டிக்டேட் பண்ணினாங்க. இது சம்பந்தமா ஜெயா டிவி-யில் அம்மாவோட வீடியோ வெளியிடலாமே’னு அதிகாரிகள் என்கிட்ட கேட்டாங்க. நான் அம்மாகிட்ட இதைச் சொல்லி, ‘ஜெயா டிவி-யை வரச் சொல்லவா?’னு கேட்டேன். ‘இன்னும் ஒரு வாரத்துல முழுசா குணமாகிடுவேன். நான் டிஸ்சார்ஜ் ஆனதுக்கு அப்புறம் கொடுத்துக்கலாம்’னு அம்மா சொல்லிட்டாங்க. என்கிட்ட மட்டும் இல்லை; அங்கே இருந்த அதிகாரிகளும் அதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தாங்க. அதனால் வீடியோ எடுக்க முடியாமப்போச்சு.”

“அன்றைக்கு சரி, ஜெ.யின் உடல்நிலை குறித்து மாறுபட்ட பல செய்திகள் பரவியபோதாவது புகைப்படங்கள் வெளியிட்டிருக்கலாமே?”

“ `அம்மா'னு சொன்னாலே உத்தரவுதான். அவர் உத்தரவு போடாமல், என்னால் எதையும் செய்ய முடியாது. அப்போலோவில் அட்மிட்டான 75 நாள்களில் டிசம்பர் 4-ம் தேதி தவிர்த்து மற்ற நாள்களில் அம்மா தன் முழு நினைவோடுதான் இருந்தார். சிகிச்சையில் இருந்தப்பவும் அவர் சொல்லவேண்டிய விஷயங்களைச் சொல்லிட்டுதான் இருந்தார். அவர் சிகிச்சை சம்பந்தமா பரப்பப்பட்ட எல்லா வதந்திகளும் அவருக்கு நல்லா தெரியும். அவர் எப்பவுமே போட்டோஸ் எடுக்கும் விஷயத்தில் ரொம்பக் கவனமா இருப்பார். அது அவரோட சுபாவம். போட்டோஸ், வீடியோன்னெல்லாம் இல்லாம சீக்கிரமே டிஸ்சார்ஜ் ஆகி தன்னோட கார்ல, ரெட்டை விரலைக் காட்டியபடி புன்சிரிப்போடு மக்களைச் சந்திக்கணும்கிறதுதான் அவர் எண்ணம். அந்த நேரத்தில் ‘அம்மா குணமானால் போதும்’கிற மனநிலையில்தான் இருந்தேன். அதனால போட்டோஸ் பற்றியெல்லாம் யோசிக்க என்னால முடியலை.”

“மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களைக்கூட ஜெ.யைச் சந்திக்க நீங்கள் அனுமதிக்காதது நியாயமா?”


“நீங்க சொல்ற தலைவர்கள் எல்லாரும் சாதாரணமானவங்களா? நான் திரும்பிப் போகச் சொன்னா, போயிடுவாங்களா? டாக்டர்ஸ் சொன்ன காரணம் நியாயமானதா இருந்ததால்தானே, அவங்க திரும்பிப் போனாங்க. இதை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவே சொல்லியிருக்காரே… கூடவே, ‘அப்போலோவில் முறையான சிகிச்சை நடந்தது. இதில் சர்ச்சை கிளப்புவது நியாயமே இல்லை’னும் அவர் சொல்லியிருக்கார். அப்போலோ டாக்டர்ஸ் மட்டும் இல்லாமல், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்ஸ், லண்டனில் இருந்து ரிச்சர்ட் பெய்ல், சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள்னு எல்லாரும் சேர்ந்துதான் அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. நோய்த்தொற்று காரணமாத்தான் யாரும் அம்மாவைப் பார்க்க முடியலையே தவிர, நான் தடுத்தேன்னு சொல்றதுல அர்த்தமே இல்லை. மருத்துவ நடைமுறைகள் தெரிஞ்சவங்க இப்படிச் சொல்ல மாட்டாங்க!”

“நீங்களாவது ஜெ.யைப் பார்த்தீர்களா?”

“ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அம்மாவுக்கு இருந்த பெரிய பிரச்னை கிருமித்தொற்று. வெளியிலிருந்து வரும் நபர்கள் மூலமாகக் கிருமித்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாதுங்கிறதுல டாக்டர்ஸ் ரொம்பக் கவனமா இருந்தாங்க. அதனால யாருமே அனுமதிக்கப் படலை. மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய SEPSIS தொற்றிலிருந்து மீண்ட பிறகுதான் தனி அறைக்கு அம்மாவை மாற்றினாங்க. அம்மா நல்ல நினைவோடு இருந்தப்பக்கூட அவரைச் சந்திக்க டாக்டர்ஸ்கிட்ட நான் அனுமதி கேட்கவேண்டியிருந்தது. ரொம்ப அவசியமான நேரத்தில், அம்மாவோட அனுமதியும் டாக்டர்ஸோட அனுமதியும் கிடைச்சப்பதான், நானே உள்ளே போக முடிஞ்சது. அதுவும் முகத்தில் சுவாச முகமூடி, கையில் கிளவுஸ் எனக் கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான எல்லா ஏற்பாடுகளுடனும்தான் போனேன்.”

“ `ஜெயலலிதா டி.வி பார்த்தார்' என்றெல்லாம் சொல்லப்பட்டதே… உண்மையில் அவர் பேசுகிற அளவுக்கு நலமானாரா?”

“லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பெய்ல்கிட்ட அம்மா இங்கிலீஷ்ல பேசினாங்க. கிருமித்தொற்று சரியான நேரத்தில் அவர் நல்லா பேச ஆரம்பிச்சுட்டார். அவர் ரூமில் டிவி வெச்சுக்கொடுத்தேன். அவருக்குப் பிடிச்ச பழைய பாடல்களைக் கேட்டார். நிம்மதியா ஓய்வெடுத்தார். ஜெயா டிவி-யில் அவர் விரும்பிப் பார்க்கும் `அனுமன்' தொடரை நான் ரிக்கார்ட் பண்ணிவெச்சிருந்தேன். அதைப் பார்த்தார். ஆனா, டிசம்பர் 4-ம் தேதி எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. டாக்டர்ஸ் போராட்டம் பலன் கொடுக்காமல் போயிடுச்சு.”

“ஜெயலலிதா மரணத்துக்கு நீங்கதான் காரணம் என்ற அளவிலான நீண்ட குற்றச்சாட்டுகளை எப்படித் தாங்கிக்கொண்டீர்கள்?”

(கண் கலங்குகிறார்.) “என்னோட நிலை யாருக்கும் வரக் கூடாது. இழப்பையும் பழியையும் காலம் எனக்கு ஒரே நேரத்தில் கொடுத்திடுச்சு. இப்ப நினைச்சாலும் என்னால் தாங்க முடியலை. அவ்வளவு வேதனை.
எத்தனையோ பழிகளையும், அவதூறான வார்த்தைகளையும், பொய்களையும் என்னோட வாழ்க்கையில் கடந்திருக்கேன். ஊடகங்களும் வரைமுறை இல்லாமல் என்னைக் கொடூரமாக சித்திரிச்சிருக்காங்க. அப்போதெல்லாம் ‘அரசியல்னா இப்படித்தான் இருக்கும்’னு ஒரே வரியில் அம்மா எனக்கு ஆறுதல் சொல்வாங்க. எல்லா வேதனைகளுக்குமான முற்றுப்புள்ளியா அவங்க வார்த்தை என்னை ஆறுதல்படுத்திடும். ஆனா, இப்போ அவங்களும் இல்லை. ஒரே நாள்ல என்னோட மொத்த உலகமும் காணாமல் போயிடுச்சு.

ஜெ. மரணம்... - “விசாரணை கமிஷனை சந்திக்கத் தயார்!” - சசிகலா சவால் பேட்டி

இவ்வளவு வேதனையான நேரத்துலதான் அம்மா மரணம் சம்பந்தமா என் மேல நிறையப் பழி விழுந்துச்சு. அம்மா மேல வெச்சிருந்த அன்பால் அம்மாவோட இழப்பைத் தாங்கிக்க முடியாம, மக்கள் பேசுறதா நினைச்சுதான் அதை எல்லாம் தாங்கிக்கிட்டேன். அது அவங்களோட பரிதவிப்பு. ஆனா, அரசியல்ரீதியா மனசாட்சியே இல்லாமல் கட்சியை உடைக்கிற நோக்கத்தில் சிலர் பரப்பிய பழிகளைத் தாங்க முடியலை.

தலைவர் எம்.ஜி.ஆர் இறந்தப்ப, அம்மாவை அரசியலைவிட்டே விரட்ட எவ்வளவோ சதி நடந்துச்சு. எம்.ஜி.ஆர் உடலுக்குப் பக்கத்துலகூட அம்மா நிற்கக் கூடாதுன்னு சிலர் திட்டம் போட்டாங்க. அப்போ சிட்டி கமிஷனரா இருந்த ஸ்ரீபால் என்கிட்ட வந்து ‘ரொம்ப எச்சரிக்கையா இருங்க. உங்க மேல தாக்குதல் நடத்தப்போறாங்க’னு சொல்லிட்டுப் போனார். ஏதோ நடக்கப்போகுதுன்னு மட்டும் புரிஞ்சது. ராணுவ வண்டியில் எம்.ஜி.ஆர் உடலை ஏற்றினப்ப, ராமலிங்கம் என்பவர் அம்மாவைத் தாக்கினார். பின்னாடி நின்ன ஜேப்பியார், அம்மாவைக் குத்தினார். அப்போ டி.டி.வி.தினகரன் சின்னப் பையன். அம்மாவை அடிக்கிறதைப் பொறுக்க முடியாமல் தினகரன், ஜேப்பியார் கையைப் பிடிச்சுக் கடிச்சான். மனசாட்சியே இல்லாமல் என்னை ஷூ காலால் மிதிச்சாங்க. இப்போ நினைச்சாலும் நெஞ்சை அடைக்கிற வேதனை அது.

எங்க டிரைவர் திடீர்னு காணாமல்போக, அப்போ என் தம்பி திவாகரன்தான் காரை வேகமா ஓட்டிக்கிட்டு வந்து எங்களை கார்டனுக்கு அழைச்சுட்டு வந்தான். இதே வீட்டுவாசல்ல அம்மா சாஷ்டாங்கமா விழுந்து அழுதாங்க. என்னால் அம்மாவைத் தேற்றவே முடியலை. அப்போ எங்க வீட்ல ராஜம்னு ஒரு சமையல்கார அம்மா இருந்தாங்க. அவங்களைக் கூப்பிட்டு தண்ணி கொண்டுவரச் சொல்லி, உள்ளே தூக்கிட்டுப் போனோம்.
‘நான் அரசியலைவிட்டே போறேன்’னு அம்மா நொந்துபோய்ப் பேசினாங்க. ‘உங்களை அரசியலைவிட்டு விரட்டணும்னு யார் நினைச்சாங்களோ… அவங்க முன்னாடிதான் நீங்க நின்னு காட்டணும்’னு நான் அக்காகிட்ட சொன்னேன். எம்.ஜி.ஆர் சாவில் தலைக்குப்புற விழுந்தவங்க நாடே நிமிர்ந்து பார்க்கிற அளவுக்கு தலைநிமிர்ந்து நின்னாங்க. அன்னிக்கு அக்காவுக்குச் சொன்ன வார்த்தைகளை இன்னிக்கு எனக்கு நானே சொல்லிக்கிறேன். அநியாயப் பழியாலும் துரோகத்தாலும் என்னை வீழ்த்த நினைச்சவங்களோட திட்டம் பலிக்கவே பலிக்காது. அதுக்கு நான் இடம்கொடுத்திட மாட்டேன்!”

“ஜெ.யின் அண்ணன் மகள் தீபா உங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து?”


“அம்மாவுக்கு ஆயிரம் கண்கள். எந்தச் செய்தியும் அவருடைய காதுக்கு எட்டிடும். யார் நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாது. எப்போதுமே அம்மாவை யாரும் நிர்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது. முடிவெடுக்கிற விஷயத்தில் அவர் யாரோட தலையீட்டையும் விரும்ப மாட்டார். உறவுக்காரங்க விஷயத்திலும் எல்லா முடிவுகளும் அவர் எடுத்தவைதான்!”

“தி.மு.க-வின் செயல் தலைவர் பதவியை எட்ட மு.க.ஸ்டாலின் எவ்வளவு போராட்டங்களைக் கடந்திருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், அடிப்படை உறுப்பினர் டு பொதுச்செயலாளர் என நீங்கள் திடீர் உச்சம் அடைந்திருப்பது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?”

“தி.மு.க-வில் நடந்திருப்பது எல்லாருமே எதிர்பார்த்த ஒண்ணுதான். ஆனா, அம்மாவோட மரணம் யாருமே எதிர்பார்க்காதது. `திடீர் உச்சம்'கிற வார்த்தைக்குப் பின்னால இருக்கிற போராட்டங்களும் கஷ்டங்களும் நிறைய. ரொம்பச் சாதாரணமா இப்படியொரு கேள்வியைக் கேட்டுட்டீங்க. புரட்சித் தலைவர் காலத்துல இருந்து நான் அம்மாகூட இருக்கேன். அவங்களோட எல்லா பணிகளுக்கும் உதவியா இருந்திருக்கேன். கழகச் செயற்குழு உறுப்பினரா அம்மா என்னை அறிவிச்சப்ப, அது சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிட்டேன். கட்சிக்காரங்களோட மனக்கருத்துகளை அப்படியே அம்மாகிட்ட வந்து சொல்வேன். கட்சி, ஆட்சி எது சம்பந்தமான விஷயங்களிலும் அம்மா என்கிட்ட கலந்து பேசுவார். என் மனதில் தோணுகிற விஷயத்தை அப்படியே சொல்வேன். ஆனாலும், அவர் மனசுக்கு எது சரின்னு படுதோ, அதைத்தான் அவர் செய்வார்.

2011-ல் தேர்தல்ல தே.மு.தி.க உள்ளிட்ட ஏழு கட்சிக் கூட்டணியைப் பேசி முடிக்கிற பொறுப்பையே அம்மா எனக்குக் கொடுத்தாங்க. டே நைட்டுக்குள்ள மொத்தமும் பேசி முடிச்சேன். கம்யூனிஸ்ட்டுகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடிக்கிறப்ப அதிகாலை 2 மணி. அந்தக் கூட்டணியில் இருந்த எல்லாருக்குமே இது தெரியும். வெளியே இதை எதுவும் பேசாததால், ஒருத்தர் கஷ்டமேபடலைன்னு ஆகிடுமா? அரசியல், தனிப்பட்ட விஷயங்கள்னு எப்பவும் அம்மாவோட உத்தரவுகளை நிறைவேற்றுகிற ஆளா இருந்திருக்கேன். புரட்சித் தலைவர் இறந்தப்ப எப்படி ஆயிரம் வலிகளோடு அம்மா தனி மனுஷியா, தைரியமா இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாத்தினாங்களோ…  அந்தக் கடமை அவர் வழி வந்த எனக்கும் இருக்கு. இப்பகூட நானாக எந்தப் பொறுப்பையும் கேட்கலை. இது கோடிக்கணக்கான தொண்டர்களோட கோரிக்கை!”

“ `ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறாரே?''

“ `அம்மாவின் மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை'னு இப்போ வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்கார் பன்னீர்செல்வம். அதே நேரம் அவரே `விசாரணை கமிஷன் அமைப்போம்'னு சொல்றார். அமைக்கட்டும். எத்தனை விசாரணை கமிஷன்கள் வேண்டுமானாலும் அமைக்கட்டும். தான் வகித்த முதலமைச்சர் பதவியைக்கூட தாரைவார்த்துக் கொடுத்து, எந்தத் தலைவி இப்படி ஒரு உயரத்துக்கும் புகழுக்கும் உயர்த்தினாரோ… அந்தத் தலைவியோட மரணத்தில் சர்ச்சை இருப்பதாக விசாரணை கமிஷன் அமைக்கிறார் பன்னீர்செல்வம். அவரோட நன்றியுணர்வு அவ்வளவுதான். என்னைப் பழிவாங்குவதாக நினைத்து, அவர் அம்மாவோட மரணத்தை அசிங்கப்படுத்துறார். அவர் எந்த விசாரணை நடத்தினாலும் அதை எதிர்கொள்ள நான் தயார். எனக்கு அதில் துளியளவும் பயமோ, தயக்கமோ இல்லை. ஆனால், பன்னீர்செல்வம் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துபோவார்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. அம்மாவோட ஆன்மா அவரை ஒருபோதும் மன்னிக்காது!”

“ஜெ. மரணம் குறித்து தொடர்ந்து மக்கள் மத்தியில் நீடிக்கும் சந்தேகங்களுக்கு விடை காணக்கூட இந்த விசாரணை கமிஷன் அறிவிப்பு உதவியாக இருக்குமே?”

“அம்மா இறந்தப்ப என் மீது பரப்பப்பட்ட பழிகளும் அவதூறுகளும் நிறைய. அதையெல்லாம் தாங்கவே முடியாது. ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்ல நான் நினைக்கலை. என்னோட உண்மையான பாசம் அம்மாவுக்குத் தெரியும். அது போதும்னு நினைச்சேன். யார் விசாரணை கமிஷன் அமைச்சாலும் என் மேல் சொல்லப்பட்ட எல்லா அவதூறுகளுக்கும் அப்போ விடை கிடைக்கும்.

ஒருவிதத்தில் பன்னீர்செல்வம் எனக்கு உதவிதான் பண்றார். அம்மா சிகிச்சை விஷயத்தில் எல்லாப் பழிகளையும் துடைக்க விசாரணை கமிஷன் பெரிய உதவியாக இருக்கும். ஆனா, அதுக்காக `அம்மாவோட மரணத்தையே கொச்சையாக்கும் இந்த விஷயங்கள் தேவையா?'ங்கிறதுதான் என்னோட ஆதங்கம். அம்மாவோட மரணத்தில் உள்ள சந்தேகங்களைக் களையத்தான் பன்னீர்செல்வம் விசாரணை கமிஷன் அமைக்கிறார்னா, அதை ஆட்சியில் உட்கார்ந்த உடனேயே செய்திருக்கலாமே! ரெண்டு மாசம் வரைக்கும் யோசிச்சுக்கிட்டு இருந்தாரா? என்னைப் பழிவாங்குறதுக்காக அம்மாவோட மரணத்தையே அசிங்கப்படுத்த அவர் துணிஞ்சுட்டார். அவர் விசாரணை கமிஷன் அமைக்கிறதா சொல்றது சந்தேகங்களைத் தீர்க்க இல்லை, சந்தேகங்களைச் சித்திரிக்க!”

“ஸ்டாலினைப் பார்த்து பன்னீர்செல்வம் சிரித்ததை நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரோ ‘ஸ்டாலினைப் பார்த்துச் சிரிப்பது தவறா? மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்புதானே…’ எனச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்தில் நியாயம் இருப்பதாகத்தானே தெரிகிறது?”

“எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துச் சிரிக்கிறதுதான் நாகரிகம்னு சொல்ற பன்னீர்செல்வம், அம்மா உயிரோடு இருந்தப்ப ஏன் அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்கலை? அம்மாவும் நானும் ஜெயில்ல இருந்தப்பவும் பன்னீர்செல்வம்தானே முதலமைச்சரா இருந்தார். அப்போ தவறிக்கூட எதிர்க்கட்சி ஆட்களைப் பார்க்கவோ, சிரிக்கவோ செய்யலையே. மனிதர்கள் சிரிக்கத்தானே செய்வார்கள்னு சொல்ற பன்னீர்செல்வம், இவ்வளவு காலமாக என்னவா இருந்தார்? மனித அவதாரம் திடீர்னுதான் வந்ததா?

நாலு நாளா நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்குமான வித்தியாசமே எனக்குத் தெரியலை. நான் டிவி-யில் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். ‘அம்மா இருக்கிறப்ப நடக்கிற சட்டசபை மாதிரி இப்போ இல்லை. அவர் எல்லாத்துக்கும் அவங்ககிட்ட கெஞ்சுறார்’னு எங்க ஆள்கள் பலரும் என்கிட்ட சொன்னாங்க. ஒருநாள் ‘நாங்க உங்களுக்குத் துணையா நிற்போம்’னு துரைமுருகன் பேசிய பேச்சுதான் என்னை ரொம்ப யோசிக்கவெச்சுடுச்சு. ‘எங்ககிட்ட 89 எம்.எல்.ஏ இருக்காங்க. நீங்க உடைச்சுக்கிட்டு வாங்க. நாங்க சப்போர்ட் பண்றோம்’கிற மாதிரி இருந்துச்சு அவரோட பேச்சு. அம்மா இருந்த காலத்தில் இதே துரைமுருகன் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வந்திருக்கா? ‘உங்களுக்குத் துணையா நாங்க இருக்கிறோம்’னு பன்னீர்செல்வத்தைப் பார்த்து துரைமுருகன் சொன்னதும், அதுக்கு அவர் பதில் சொல்லாம அமைதியா இருந்ததும்தான் எங்களை ரொம்ப யோசிக்கவெச்சது. ‘பெரும்பான்மையான பலத்துடன் இருக்கும் எங்களுக்கு உங்க ஆதரவு எதுக்கு?’னு துரைமுருகனைப் பார்த்து பன்னீர்செல்வம் கேட்டிருந்தா, நாங்க அவரையே தொடரவிட்டிருப்போம்!”

“ராஜினாமா கடிதம் கேட்டுத் தரக்குறைவாக நடத்தியதாக பன்னீர்செல்வம் சொல்லும் குற்றச்சாட்டு குறித்து?”

“யாருமே எதிர்பார்க்காத நிலைமையில், `அம்மா மறைஞ்சப்ப அடுத்த முதலமைச்சர் யாரு?'ங்கிற கேள்வி வந்தது. அடுத்த நொடியே நான் சொன்னது பன்னீர்செல்வம் பெயரைத்தான். அந்த அளவுக்கு நான் காட்டிய நம்பிக்கைக்குத்தான் இன்னிக்கு அவர் நன்றிக்கடன் காட்டுறார். எவ்வளவு இக்கட்டான நேரமா இருந்தாலும் நமக்கு யார் உண்மையா இருப்பாங்கன்னு நல்லா யோசிச்சுச் செயல்படணும்கிற பாடத்தை நான் இப்பதான் கத்துக்கிட்டேன். அம்மாவை இழந்த துயரம் என்னோட கண்ணை மறைச்சிடுச்சு. அதுக்கான அறுவடைதான் இப்போ நடக்கிற துரோகம். தரம் என்கிற வார்த்தையைச் சொல்றதுக்கான தகுதிகூட பன்னீர்செல்வத்துக்குக் கிடையாது. சிரிச்சுக்கிட்டே கழுத்தை அறுக்கிற விஷயத்தில் அவர் கைதேர்ந்தவர்ங்கிறது இப்போ கடைக்கோடி தொண்டர்களுக்கும் வெட்டவெளிச்சமாகிடுச்சு”

“கமல், சீமான், ஆர்யா, சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் மெரினா போர்க்கொடியைப் பாராட்டியிருக்கிறார்களே?”

“ `நம்மை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற அளவுக்கு ஒருத்தர் நடிக்கிறாரே!'னு அவங்க பன்னீர்செல்வத்தைப் பார்த்து வியந்திருப்பாங்க. பன்னீர்செல்வம் நடத்துறது எல்லாம் நாடகமே தவிர, போர்க்கொடியோ... புரட்சியோ இல்லை!”

“ஆனாலும் நடிகர் கமலின் வலைதளக் கருத்து உங்களுக்கு எதிரான முன்னெடுப்பை ஏற்படுத்துவதுபோல் இருக்கிறதே… அதற்கு உங்களின் பதில்?”

“கமல் ஒரு நல்ல நடிகர். ரசிகர்களுக்கு எப்படி சில படங்கள் பிடிக்கும், சில படங்கள் பிடிக்காமல் போகுமோ… அந்த மாதிரி அ.தி.மு.க ஆட்சியோட செயல்பாடுகளில் சில விஷயங்கள் கமலுக்குப் பிடிக்காமல்போயிருக்கலாம். அதை அவரோட கருத்தா அவர் வெளியிட்டிருக்கலாம். அது அவரோட உரிமை. அவர் மட்டும் அல்ல… கடைக்கோடிக் கிராமத்தில் இருந்துகூட நெட்ல நமக்கு எதிராகச் சிலர் பேசலாம். நம்ம மேல தவறு இல்லைங்கிறபட்சத்தில் அதை எல்லாம் நினைச்சு மனசைப் போட்டு வருத்திக்காமல் போய்க்கிட்டே இருக்கணும். கமல் தொடங்கி கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லோருக்கும் கருத்துச் சொல்ற உரிமை இருக்கு. ஆனா, எல்லோருக்கும் பதில் சொல்றது அவ்வளவு சாத்தியம் இல்லை!”

“பெரும்பாலும் ஜெயலலிதா மீது அதிருப்தி இருந்தாலும் அவருக்கு எதிராக யாரும் அவ்வளவு சீக்கிரம் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால், உங்களுக்கு எதிராக சினிமா, அரசியல், பொதுத் தளங்களில் இருக்கும் பலரும் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கிறார்களே?”


“எப்பவும் நம்மள நூறு சதவிகித மக்களும் ஒருசேர நின்னு ஆதரிப்பாங்கன்னு நாம நினைக்க முடியாது. ஆதரவு, எதிர்ப்பு, விமர்சனம், பாராட்டு, பழி, பாவம்னு எல்லாமும்தான் இருக்கும். அம்மா எந்தவித எதிர்ப்புமே இல்லாமல் ஆட்சி நடத்தியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனா, அந்த நிலைக்கு வர, அவரும் நிறைய எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்திருக்கார். துரோகங்களும் சதிகளும் என்னைச் சுற்றி நடக்கிறப்ப எல்லாம், ‘அம்மாவும் இதே மாதிரிதானே பல துரோகங்களைச் சந்திச்சிருக்காங்க’னு நினைச்சு என்னை நானே வலிமையாக்கிக்குவேன். எதிர்ப்பே இல்லாம வெறுமனே கிடைக்கிற வெற்றிமேல எனக்கு பெரிய ஈர்ப்பு இல்லை!” 

“அவைத்தலைவர் மதுசூதனன் தொடங்கி பல எம்.பி-க்கள், முன்னணி நிர்வாகிகள் என வரிசையா ஓ.பன்னீர்செல்வத்திடம் போறாங்க. இந்த நெருக்கடியில் இருந்து கட்சியை எப்படிக் காப்பாற்றப்போகிறீர்கள்?”


“இந்த மாதிரி நெருக்கடி எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். பல பேர் இதுக்கு முன்னாலேயே இது மாதிரி செஞ்சிருக்காங்க. இவ்வளவு காலமா நிழல் கொடுத்த, அடையாளம் கொடுத்த கட்சிக்குத் துரோகம் செய்யலாமானு அவங்க மனசாட்சி நினைக்காமப்போயிடுது. இப்போ பன்னீர்செல்வத்துக்குத் துணையாக நிற்கிற நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன்னு அம்மாவால் கட்டம் கட்டப்பட்டவங்கதான் அத்தனை பேரும். மொத்தத்துல துரோகிகளோட கூட்டணியைத்தான் பன்னீர்செல்வம் அமைச்சிருக்கார்!”

“ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதும் இந்தக் குற்றச்சாட்டில் வராதா?”

“உறவுகள் யாருக்கும் எந்த முக்கியத்துவமும் நான் கொடுக்கலையே. கட்சிப் பதவிக்கோ, அதிகாரத்துக்கோ உறவினர்ங்கிற ஒரு தகுதியை வெச்சுக்கிட்டு யாராவது வந்திருக்காங்களா? கட்சியில் கஷ்டப்பட்டாதான் பலன். யாரை எங்கே வெக்கணும்னு அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்தவங்களைக்கூட அவர் மன்னிச்சிருக்கார். அவங்களுக்கு எல்லாம் திரும்பவும் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கார். யாரை மன்னிக்கணும், யாரை மன்னிக்கவே கூடாதுங்கிறதையும் அவரோட வாழ்ந்த ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்திருக்கேன்!”

“ஜெயலலிதா இறந்தபோது அவர் உடலைச் சுற்றி உங்களுடைய உறவினர்கள் நின்றது பலரையும் முகம் சுளிக்கவைத்ததே?”

“அம்மாவோட மறைவால் நான் நிலைகுலைஞ்சு நின்ன நேரம் அது. ராஜாஜி ஹாலில் நான் கண்ணீரோடு நின்னப்ப அம்மாவோட ஞாபகம்தான் எனக்குள்ள முட்டிமோதிச்சே தவிர, வேற எந்தச் சிந்தனையும் இல்லை. மறுபடியும் அம்மா எழுந்து வந்துட மாட்டாங்களான்னு நான் ஏங்கினேன். அந்த நேரத்தில் நான், யாரையும் அந்த இடத்துக்கு வரக் கூடாதுன்னு எப்படிச் சொல்ல முடியும்? ஒரு துக்கம் நடக்கிறப்ப பிடிச்சவங்களும் வருவாங்க… பிடிக்காதவங்களும் வருவாங்க. அந்த இடத்துல பாரபட்சம் பார்க்கக் கூடாது. அம்மாவுக்கு எதிரா என்னென்னவோ செஞ்ச தி.மு.க-க்காரங்களும்தான் அன்னிக்கு வந்தாங்க. பிரபலம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சினு எதையும் பகுத்துப்பார்க்கிற மனநிலை அப்போ இல்லை. எல்லோரும் அம்மாவுக்காக வந்தவங்கன்னுதான் நினைச்சேன்.”

“ `உங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க அதிகாரத்துக்கு வர மாட்டாங்க' என்ற உறுதியை, உங்களால் கொடுக்க முடியுமா?”

``நான் பேச ஆரம்பிச்ச நாளிலிருந்து சொல்லிக்கிட்டிருக்கேன். கழகத்தில் இருக்கிற எல்லாருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு எந்தப் பாரபட்சத்தையும் நான் பார்க்க மாட்டேன். யாராக இருந்தாலும் கட்சியில் குறுக்குவழியில் உயரத்துக்கு வர முடியாது. உழைச்சாத்தான் வளர்ச்சி!”

“அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை சொகுசு ஹோட்டலில் அடைத்துவைத்து, அவர்கள் சுயமுடிவு எடுக்க முடியாதபடி தடுத்தது நியாயமா?”

“யாரையும் யாரும் அடைச்சுவெக்கலை. நான்தான் அவங்க எல்லாரையும் பத்திரிகைக்காரங்க முன்னாலேயே நிறுத்தி கேட்டுக்கச் சொன்னேனே… எப்படியாச்சும் அ.தி.மு.க-வை உடைச்சுட முடியாதானு திண்டாடுற தி.மு.க-தான் இப்படித் திட்டமிட்டுப் பரப்புது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசிப் படியவைக்கவும், துரோகத்துக்கு இரையாக்கவும் தி.மு.க-வோட ஆட்களால் முடியலை. இந்த மாதிரி விஷமிகள்கிட்ட விலைபோயிடக் கூடாதுனு தங்களுக்குள்ள கலந்து பேசி எங்க கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஒரே இடத்தில் இருக்காங்க. அவ்வளவுதான்.”

“சசிகலானு சொன்னாலே தடாலடியானவர்; பல கோடி ரூபாயைக் குவித்து வைத்திருப்பவர்னு ஒரு பார்வை இருக்கே?”

“ஆபீஸ்ல வேலைபார்க்கிற பல பேரில் ஒருத்தர் திறமையானவரா இருந்தா, அவருக்கு எதிரா சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதே மாதிரிதான் அரசியலிலும். இந்த மாதிரியான விமர்சனங்களை எல்லாம் நாம சட்டை பண்ணிக்கிட்டு இருந்தா, நாம எந்த வேலையும் செய்ய முடியாது. சொல்றவங்க எதையாச்சும் சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க. நாம அதைக் கடந்து போய்ட்டே இருக்கணும். பெங்களூரு ஜெயில்ல வலியோடு இருந்த நேரம். ‘எதை அடைஞ்சோம்கிறது முக்கியம் இல்லை. எதைக் கடந்தோம்கிறதுதான் முக்கியம்’னு அப்போ அம்மா சொன்ன வாக்கியம் அப்படியே நெஞ்சுக்குள்ள இருக்கு. எல்லாத்தையும் கடந்து போய்க்கிட்டே இருக்கணும்!”  

“ ‘போயஸ் கார்டனின் ஆயாம்மா… ஆகலாமா சி.எம்-மா?’ எனப் பொதுவெளியில் மிகக் கடுமையான விமர்சனம் பேசப்படுகிறதே, அதை எப்படித் தாங்கிக்கொள்கிறீர்கள்?”


(சற்று நேரம் யோசிக்கிறார்) “ஆயாம்மானு சொல்லப்படுற விமர்சனம் எனக்கு எதிரானது மட்டும் இல்லை. ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் எதிரா பேசப்படுற அநியாயம். பெண்கள்னு சொன்னாலே சமையல் வேலை பார்க்கத்தான் சரிப்படுவாங்கன்னு நினைக்கிற மனப்பான்மை அது. இந்த மாதிரி தரம் தாழ்ந்த விமர்சனங்கள் என்னை இன்னும் வலிமையாக்குமே தவிர, வருத்தப்படுத்தாது.

ஒருத்தரோட பிறப்பை வெச்சும் அவர் பார்க்கிற தொழிலைவெச்சும் எடை போட்டுப் பேசுவது தவறு. ஆயாம்மா வேலை பார்க்குற ஒருவர், அரசியலை நோக்கி வர்றார்னா... அதைப் பாராட்டணுமே தவிர, பழிக்கக் கூடாது!”
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு