Published:Updated:

‘‘இங்க இருக்கிறதுதான் கவர்மென்ட்!” - கூவத்தூரில் கொந்தளித்த அமைச்சர்கள்!

‘‘இங்க இருக்கிறதுதான் கவர்மென்ட்!” - கூவத்தூரில் கொந்தளித்த அமைச்சர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘‘இங்க இருக்கிறதுதான் கவர்மென்ட்!” - கூவத்தூரில் கொந்தளித்த அமைச்சர்கள்!

‘‘இங்க இருக்கிறதுதான் கவர்மென்ட்!” - கூவத்தூரில் கொந்தளித்த அமைச்சர்கள்!

கூவத்தூர்! அகில இந்திய மீடியாக்களும் குவிந்ததால் ஆல் இந்தியா டிரெண்டிங் ஆகிவிட்டது. தொடர் விசிட் அடித்துவந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளுக்கு முந்தைய தினம், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸில் எம்.எல்.ஏ-க்களுடன் தங்கினார். தொடர்ந்து 3-வது நாளாக கூவத்தூர் சென்ற சசிகலா, கடந்த 13-ம் தேதி இரவு எம்.எல்.ஏ-க்களுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக உருக்கமாகப் பேசினார். பின்பு, தினகரனுடன் ஆலோசனை நடத்தினார். அதே நேரம் கமாண்டோப் படையினரை கூவத்தூர் ஏரியாவில் குவித்தது போலீஸ். தீர்ப்பையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஏரியாவில் பதற்றம் கூடியது. மறுநாள், விடியற்காலை திரும்பிய திசையெல்லாம் காக்கிகள் நிரம்பியிருந்தார்கள். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையின் போக்குவரத்து முடக்கப்பட்டது. கூடவே 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்கள்.

‘‘இங்க இருக்கிறதுதான் கவர்மென்ட்!” - கூவத்தூரில் கொந்தளித்த அமைச்சர்கள்!

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், காவல் துறை அதிகாரிகளின் வாகனங்கள் ரிசார்ட்டினுள் நுழைந்தன. காவல் துறையினர், சசிகலாவை ரிசார்ட்டிலிருந்து கிளம்புமாறு சொல்ல... அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘உடனே புறப்பட முடியாது. ஒருமணி நேரம் கொடுங்கள்’’ என்றார். முந்தைய நாள் இரவில் நடத்திய ஆலோசனையில் எடுத்த முடிவின்படி ‘எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வுசெய்யலாம்’ என முடிவெடுத்தார்கள். அதனால், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை வரவழைத்துப் பேசினார் தினகரன். ரிசார்ட்ஸில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அங்கு, புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவளித்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்திட்டனர். அதன்பிறகு வெளியே வந்த எடப்பாடி... பத்திரிகையாளர்களிடம், ‘‘என்னைச் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எங்களிடம் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்” என்றார். அதன்பிறகு சசிகலா சொன்னதாக ஒரு செய்தியை மீடியாவிடம் சொன்னார் ஜெயக்குமார். “என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். நான் செய்ய வேண்டியதை எடப்பாடி பழனிசாமி செய்வார். கிராமந்தோறும் சென்று அம்மாவின் புகழைப் பரப்புங்கள். நான், விரைவில் இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருவேன்’’ என்பதுதான் சசிகலா சொன்ன மெசேஜ்.

‘‘எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ரிசார்ட்ஸைவிட்டு வெளியேறுங்கள்’’ என உத்தரவுப் போட்டது போலீஸ். ஆனால் ஒருசிலர் மட்டுமே வெளியேறினர். மற்றவர்கள், ரிசார்ட்ஸ்க்குள் புகுந்துகொள்ள... காவலர்கள், ஒவ்வோர் அறையிலும் சோதனை மேற்கொண்டனர். இதனால் அமைச்சர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. நவநீதகிருஷ்ணன் எம்.பி, “நாங்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘இங்க இருக்கிறதுதான் கவர்மென்ட்!” - கூவத்தூரில் கொந்தளித்த அமைச்சர்கள்!

அ.தி.மு.க-வை உடைக்க யாரோ சதி செய்கிறார்கள்.’’ எனப் பத்திரிகையாளர்களிடம் சொன்னார். இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி முத்தரசி, உள்ளே இருப்பவர்களை வெளியேறச் சொன்னார். இதனால் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘‘ஒரு நிமிடம் எனக்கு டைம் கொடுங்க... நான் பேசுறேன்’’ என்று சொன்ன முத்தரசி, “இங்கிருந்த எம்.எல்.ஏ ஒருவர் தப்பிச்சென்றிருக்கிறார். சென்னைக்குச் சென்று அவர் கொடுத்திருக்கும் புகாருக்குத்தான் நாங்க முக்கியத்துவம் கொடுக்கிறோம். ‘ரிசார்ட்டில் எங்களைக் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருக்கிறார்கள். அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள்’ என அவர் சொல்லியிருக்கிறார். அதனால், எல்லோரும் இங்கிருந்து வெளியேற வேண்டும்’’ என்றார். “யார் புகாரைக் கொடுத்தாரோ... அதனடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுங்க. சுதந்திரமாகத் தங்கிருக்கும் எங்களை ஏன் தொந்தரவு செய்றீங்க. இங்கேயிருப்பது கவர்மென்ட். ஒருநாளில் எல்லாம் போய்விடப் போகுதா? நாளைக்கு, எங்களிடம்தான் நீங்கள் பேசவேண்டும். இங்க எதற்கு இவ்வளவு போலீஸைக் குவிச்சிருக்கீங்க. எல்லோரையும் முதலில் வெளியேற்றுங்க. இல்லைனா, நடக்குறதே வேற” என அமைச்சர்கள் மிரட்டினர். அதற்கு முத்தரசி, ‘‘அவர், யாருன்னு பாருங்க’’ என்றார். ‘‘இன்னும் கொஞ்சநாள் பொறுங்க. நீங்க என்னகதி ஆகப் போறீங்கன்னு பார்க்கலாம்’’ எனப் பின்பக்கத்தில் இருந்தவர்கள் குரலை உயர்த்தினார்கள். இதனால் அந்த இடம் களேபரமானது. “நான் அடியாட்களைத் தேடிவந்தேன் எனச் சொல்லவில்லை. போலீஸை வெளியேற்றி விடுகிறேன்” என அமைச்சர்களிடம் சொன்னார் முத்தரசி. இதனால் ஒருசில போலீஸாரைத் தவிர... ரிசார்ட்டினுள் குவிக்கப்பட்டிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

இதற்கிடையே ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துவிட்டு கூவத்தூர் திரும்பினார்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர். எடப்பாடி பழனிசாமியுடன் எம்.எல்.ஏ-க்களை நிற்கவைத்து போட்டோ எடுப்பதற்காகப் புகைப்படக்காரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்றபோது, நாளிதழ் புகைப்படக்காரர் ஒருவர் அங்கிருந்த அ.தி.மு.க பிரமுகரால் தாக்கப்பட்டார். அவரை, மன்னிப்பு கேட்கக் கோரி ரிசார்ட்ஸ் வாயிலின் முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும் செய்தியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் சசிகலா போயஸ் கார்டனுக்குக் கிளம்பத் தயாராக இருந்தார். மீடியாவினர் போராட்டம் முடிந்தால்தான் சசிகலா வெளியேற முடியும் என்பதால், “பத்திரிகையாளரைத் தாக்கியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து கலைந்துபோக வேண்டும்” என கண்கள் கலங்கிய நிலையில் பத்திரிகையாளர்களிடம் கெஞ்சினார் செங்கோட்டையன். “அடித்தவரே மன்னிப்புக் கேட்டால்தான் நாங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம்’’ என்றனர். பிறகு, தாக்கியவரே வந்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கலைந்துசென்றனர். இரவு 9.30 மணிக்கு அமைச்சர்களின் வாகனங்கள் புறப்பட்டன. அதன்பின்னே சசிகலா, தனது வாகனத்தில் போயஸ் கார்டனுக்குப் புறப்பட்டார்.

சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்புவந்த சில நிமிடங்களிலேயே கூவத்தூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவர் கிளம்பும்வரை அந்தப் பகுதியில் மின்சாரம் வரவே இல்லை. இதனால், கிராமம் முழுக்க இருள் சூழ்ந்திருந்தது.

இருள், இந்த சமூகத்துக்கு எதையோ சொல்லுகிறது!

- பா.ஜெயவேல்
படங்கள்: அ.குரூஸ்தனம்