மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!

சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!

எஸ்.ஏ.எம்.பரக்கத்அலி

‘மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்’ இனி ‘சசிகலா ஜாதகம்’ என உருமாறுகிறது. ‘‘மன்னார்குடியினர்னு இனி சொல்லாதீங்க...’’ என்ற மன்னை மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்கிறோம்!

சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!

1996-ம் ஆண்டின் பிற்பகுதி. அமைதியாக இருந்தது போயஸ் கார்டன். வேதா நிலையத்தின் உள்ளே இருக்கும் மீட்டிங் ஹாலில் நீள்வட்ட டேபிளைச் சுற்றி 15-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். டேபிள் முழுக்க கேஸ் கட்டுகள். சன்னமான குரலில் முணுமுணுத்தபடியே இருக்கும் வழக்கறிஞர்கள், அடிக்கடி வாசலை நோக்கிப் பார்வையைத் திருப்பியபடியே இருக்கிறார்கள். திடீரென கதவு திறக்க, உள்ளே நுழைகிறார் ஜெயலலிதா. அத்தனை பேரும் எழுந்து வணக்கம் வைக்கிறார்கள். நடுநாயகமான இருக்கையில் அமர்கிறார் ஜெயலலிதா.

வளர்ப்பு மகன் திருமணம், ஊழல்கள், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் என 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய சம்பவங்கள், அரசியல் பக்கங்களின் முக்கியமான அத்தியாயங்கள். சுடுகாட்டுக் கூரை, கலர் டி.வி, செருப்பு, டான்சி, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், நிலக்கரி இறக்குமதி, டிட்கோ-ஸ்பிக் பங்குகள், பிறந்த நாள் பரிசுகள், வருமானவரிக் கணக்கு, சொத்துக் குவிப்பு என வரிசையாக வழக்குகள் பாய்ந்தன. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்ற அத்தனை பேரும் இ.பி.கோ-வின் செக்‌ஷன்களைத் தாங்கி நின்றார்கள். அதற்காகவே ஆட்சியை இழந்து நின்றார் ஜெயலலிதா. ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைத்தார்.

சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!

இந்த வழக்குகளை எல்லாம் எப்படி சமாளிக்கலாம் என்பதற்காகத்தான் போயஸ் கார்டனில் வழக்கறிஞர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் ஜெயலலிதா. ஒவ்வொரு வழக்கறிஞரும், தங்களைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் ஒருசில வார்த்தைகள் பேசினர். அந்த வழக்கறிஞர்களுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அவர் ஜெயலலிதாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார். அறிமுகப் படலம் முடிந்தபிறகு, ‘‘யார் யார் என்னென்ன வழக்குகளை எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை ஆலோசித்துச் சொல்லுங்கள்’’ என்றார் ஜெயலலிதா.  

வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராக கருத்துகளை முன்வைத்தார்கள். மேஜையின் இன்னோர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், ‘‘சவாலான வழக்குகளைக் கையாளும் பிரபல வழக்கறிஞர்கள்கூட ஜெயிக்கக் கூடிய வழக்குகள் மீதுதான் கண் பதிப்பார்கள். இது சாதாரண வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஜெயிக்கக் கூடிய டான்சி வழக்கை நான் எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார். அத்தனை பேரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அந்த வழக்கறிஞர், என்.ஜோதி. ஜெயலலிதா ஆச்சர்யத்தோடு பார்த்தார். ‘‘அரசு நிலத்தை முதல்வரே வாங்கியதாகச் சொல்லி டான்சி வழக்கைப் போட்டிருக்கிறார்கள். இதை வைத்து என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முடியும் என தி.மு.க-வே நம்பிக் கொண்டிருக்கும் வழக்கு அது. அந்த வழக்கில் எப்படி ஜெயிக்க முடியும் என நம்புகிறீர்கள்?’’ எனக் கேட்டார் ஜெயலலிதா. ‘‘டான்சி வழக்கு ரொம்ப சிம்பிளான வழக்கு. நாம் ஜெயிப்பதற்கான நிறைய ஸ்கோப் இருக்கிறது’’ என அடித்துச் சொன்னார் ஜோதி. ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்’’ எனக் கேட்ட ஜெயலலிதா, தனது பக்கத்தில் இருந்த பி.ஹெச்.பாண்டியனை எழுப்பிவிட்டு அங்கே ஜோதியை அமர வைத்தார்.

சசிகலா ஜாதகம் - 17 - கார்டனில் ஜொலித்த ஜோதி!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் புரட்டிய ஜோதி, அதை ஜெயலலிதாவிடம் காட்டினார். ‘‘கேரளா பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சர்க்குலர் ஒன்றை அனுப்பி, ‘அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும்’ எனச் சொன்னது. ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டபோது ஓரமாகப் போய் நின்று கொண்டார்கள். ‘ஜெகவோ மதத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள். தேவனை மட்டுமே வழிபடுவோம். தேசிய கீதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், என் பிள்ளைகள் அதைப் பாட மாட்டார்கள். அது எங்கள் மதத்துக்கு எதிரானது’ என அந்த பிள்ளைகளின் தந்தை பிஜு இம்மானுவேல் பள்ளிக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பள்ளி நிர்வாகம் ஏற்காமல், மாணவர்களைப் பள்ளியைவிட்டு நீக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரளா அரசு வெற்றி பெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் பிஜு இம்மானுவேல் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தேசிய கீதம் பாடம் வேண்டும் என கேரளா அரசு சொன்னது சட்டம் அல்ல. அது சுற்றறிக்கைதான். நன்னடத்தை விதி, சட்டம் ஆகாது’ என பிஜு இம்மானுவேலுக்குச் சாதகமாக 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்ப்பளித்தது’’ எனச் சொல்லி முடித்த ஜோதி, ‘‘அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலை அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது எனச் சொல்ல முடியுமா? அரசு நிலத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது என்பது நன்னடத்தை விதிதான். அது சட்டம் அல்ல. அதனால் டான்சி வழக்கில் நாம் ஜெயிக்க முடியும்’’ என்றார் ஜோதி.

அவர்தான் பிறகு ஜெயலலிதாவின் வழக்கறிஞராக மாறினார். டான்சி வழக்கை ஜெயித்துக் காட்டினார். இதனால் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்ட ஜோதியையும் விட்டுவைக்கவில்லை மன்னார்குடியினர்.

கார்டனில் ஜொலித்த ஜோதிக்கு என்ன நேர்ந்தது?

(தொடரும்)