Published:Updated:

எக்குத்தப்பு எடப்பாடி! - சக்கரை மூட்டை To சி.எம். நாற்காலி

எக்குத்தப்பு எடப்பாடி! - சக்கரை மூட்டை To  சி.எம்.  நாற்காலி
பிரீமியம் ஸ்டோரி
News
எக்குத்தப்பு எடப்பாடி! - சக்கரை மூட்டை To சி.எம். நாற்காலி

ஓவியம்: ஹாசிப்கான்

ஜெயலலிதா மறைந்த நிமிடங்களில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முதல் வரிசையில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் கலகக்குரல் எழுப்பியப் பிறகு... உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் கனவைச் சிதைக்க...  இப்போது, முதல்வர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யார்?

``நெடுங்குளம் கன்னங்கூட்டம் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் பங்காளிகள் மூன்று பேரை ஈட்டியால் குத்திக் கொன்று அந்த சமூகத்துக்கே அவப்பெயர் வாங்கிக் கொடுத்தார். அந்த இளைஞன்தான் பின்னாளில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி. சொந்த சமூகமே அன்று அவருக்குப் பெண் கொடுக்கத் தயங்கியது. ஆனால், இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்.’’ இதுதான் எடப்பாடி வட்டாரத்தில் அவர் பற்றி சொல்லும் அறிமுகம்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் இருக்கும் நெடுங்குளம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் - தவுசாயம்மாள் தம்பதிக்கு ரஞ்சிதம், கோவிந்தராஜ், பழனிசாமி என மூன்று பிள்ளைகள். கடைக்குட்டிதான், எடப்பாடி பழனிசாமி. இவருடைய மனைவி, ராதா. ஒரே மகன் மிதுன். மருமகள் திவ்யா.

எக்குத்தப்பு எடப்பாடி! - சக்கரை மூட்டை To  சி.எம்.  நாற்காலி

பழனிசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருந்தது. அதில், அண்ணன் கோவிந்தராஜ் விவசாயம் செய்ய, பழனிசாமி அவருக்கு ஒத்தாசையாக இருந்தார். ஆங்காங்கே வெல்லம் காய்ச்சுபவர்களிடம் சென்று வெல்லம் வாங்கி... அதை சித்தோடு, பூதப்பாடி, அந்தியூர் உள்ளிட்ட ஏரியாக்களுக்கு எடுத்துச் சென்று, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் கிடைக்கும். இதனால் இவருக்கு, ‘சக்கரை மூட்டை’ என்ற புனைப் பெயரும் உண்டு.

 உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான கோபால், ‘‘இவன் நம்ம பையன். உனக்கு விசுவாசமாக இருப்பான்’’ என்று பழனிசாமியைக் கூட்டிச் சென்று அப்போது ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய செங்கோட்டையனிடம் அறிமுகம் செய்துவைத்தார். அதையடுத்து, சிலுவம்பாளையம் கிளைக் கழகச் செயலாளராக ஆனார் பழனிசாமி. 

பழனிசாமி குடும்பத்துக்கும், அவர்களின் பங்காளிகளுக்கும் இடத்தகராறு இருந்துவந்தது. இந்தத் தகராறு முற்றியபோது, பழனிசாமியும் அவருடைய அண்ணன் கோவிந்தராஜும் மற்றும் சிலரும் சேர்ந்து, பங்காளிகளான சோமசுந்தரம், கருப்பண்ண கவுண்டர், துரை ஆகிய மூன்று பேரை ஈட்டியால் குத்தினர். சம்பவ இடத்திலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருப்பண்ண கவுண்டரும், துரையும் சில நாட்களில் இறந்துவிட்டனர். இதில், முதல் குற்றவாளியாக பழனிசாமியின் பெயர் பதிவுசெய்யப்பட்டது. போலீஸுக்குப் பயந்து பழனிசாமியும் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் தலைமறை வானார்கள். பழனிசாமியின் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முத்துசாமி, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். எனவே, அவர் தயவை நாடினார்கள். அதன்மூலமாக சமரசத்துக்கு ஏற்பாடு நடந்தது. பழனிசாமி தரப்பு விட்டுக்கொடுக்க முன்வந்தது. அதையடுத்து, இவர்கள் மீதான வழக்கை பங்காளிகள் வாபஸ் வாங்கினர்.

ஆனாலும், இது அழியாத கறையாகப் படிந்தது. ‘இவர்கள் குடும்பத்துக்குப் பொண்ணு கொடுக்கக் கூடாது’ என்று எடப்பாடி எட்டுப்பட்டி கவுண்டர்களும் முடிவெடுத்தனர். பழனிசாமிக்கு சொந்த ஊரில் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால், தேவூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராதாவைத் திருமணம் செய்தார். அவர், செங்கோட்டையனுக்கு உறவினர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெ. அணி - ஜா. அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து, 1989 தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட பழனிசாமிக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார், செங்கோட்டையன். சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றிபெற்றார். அதன்பின் அவருக்கு கிடுகிடு வளர்ச்சிதான். 1990-ல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளராக ஆனார் பழனிசாமி. 1991 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அப்போது, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பனுக்கு நெருக்கமானார். சேலத்தில் வீடு, கார், சொத்துக்கள் என பழனிசாமியின் பொருளாதார கிராஃப் உயரத்தொடங்கியது.

 1996 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட பழனிசாமி, தோல்வியடைந்தார். அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அர்ஜுனனிடம் வழங்கப்பட்டது. 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் ஆனார். திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, பழனிசாமி எம்.பி ஆனார். வாஜ்பாயின் 13 மாத கால மத்திய அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். பின்னர், 1999-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

 ஜெயலலிதா, 2000-ம் ஆண்டு, கட்சியில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். ஒருங்கிணைந்த சேலம் புறநகர் மாவட்டத்தை சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு என இரண்டாகப் பிரித்து, கிழக்கு மா.செ-வாக மஞ்சனி முருகேஷனையும், மேற்கு மா.செ-வாக செம்மலையையும் நியமித்தார். ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த பழனிசாமி, சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எனப் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

2001 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், பழனிசாமிக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்தத் தருணத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. எடப்பாடி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு அப்போது எடப்பாடி நகரச் செயலாளராக இருந்த மணியை அ.தி.மு.க., தலைமை அறிவித்தது. அதனால், ஜெ. பேரவைத் துணைத் தலைவராக இருந்த முருகேசனை நிற்க வைத்து, மணியைத் தோற்கடித்தார் பழனிசாமி. இது ஜெயலலிதா கவனத்துக்குச் சென்றதும், பழனிசாமி வகித்து வந்த மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியைப் பறித்தார்.  

அதன்பின், செங்கோட்டையனுக்கு வெண்சாமரம் வீசி வந்ததால், 2003-ம் ஆண்டில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த செங்கோடன் நீக்கப்பட்டு, பழனிசாமி நியமிக்கப்பட்டார். அதன்பின் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்தார் பழனிசாமி. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். தொடர் தோல்விகளால், 2007-ல் இவரிடம் இருந்த மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு,        எஸ்.கே.செல்வத்திடம் தரப்பட்டது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, 2010  இறுதியில் சசிகலாவின் உறவுவட்டத்தில் ராவணனைப் பிடித்து மீண்டும் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றார் பழனிசாமி. அதிலும், ரெண்டாவது லட்டும் சேர்த்துக் கிடைத்தது. அதாவது, சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக இருந்ததை மீண்டும் ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றி, புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனார். மூன்றாவது லட்டு, 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் கிடைத்தது. அது, சசிகலா குடும்பத்து உதவியுடன் கிடைத்த அமைச்சர் பதவி.  

அமைச்சர் ஆன பிறகு, அ.தி.மு.க-வின் ஐவர் அணியில் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். சமீபத்தில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு நடந்ததை அடுத்து பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அப்போது, ‘அடுத்த குறி எடப்பாடி பழனிசாமி’ என்று பரவலாகப் பேசப்பட்டது. 

அரசியல் அரிச்சுவடியே தெரியாத ஆரம்பக் காலத்தில் இவருக்காக உதவி செய்த கோபால், சண்முகம், பாலாஜி, கருணாநிதி போன்றவர்களை ஆரம்பக் கட்டத்திலேயே பழனிசாமி ஒதுக்கினார். எம்.எல்.ஏ-வாக இருந்த காலகட்டங்களில் இவர் கூடவே விசுவாசிகளாக இருந்த எடப்பாடி முன்னாள் நகரச் செயலாளர் மணி, எடப்பாடி தொகுதிச் செயலாளர் பெருமாள், எடப்பாடி மீனவர் பிரிவுச் செயலாளர் சுரேஷ் போன்றவர்களை அமைச்சர் ஆனதும் கழற்றிவிட்டார். சிலரை அவமானப்படுத்தி அடித்ததாகவும் குமுறல்கள் எழுந்ததுண்டு. தனக்கென புதியதாக அதிகார வட்டம் ஒன்றையும் வளர்த்துக்கொண்டார்.

ஐவர் அணியில் ஓர் அமைச்சர் என்ற தகுதிக்கு உயர்ந்தபிறகு பழனிசாமியிடம் நிறைய மாற்றங்கள். தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு தொகுதிக்குள் எந்தப் பிரச்னைக்கும் சென்றதில்லை. ஆனால், அவருடைய அண்ணன் கோவிந்தராஜ் பெயர், பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், அமைச்சரின் அண்ணன் வீட்டருகே சைக்கிளில் இருந்து இறங்காமல் சென்றார் என்பதற்காக அவரைக் கட்டிப் போட்டு அடித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

எக்குத்தப்புக்காரர்கள்தான் அரியணையில் அமர்வார்களா?

- வீ.கே.ரமேஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz