Published:Updated:

தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்!

தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்!
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்!

சிங்கப்பூர் சிட்டிசன் துணைப் பொதுச்செயலாளர் ஆன கதை

“பன்னீர்செல்வம் யாரால் உச்சத் துக்கு வந்தாரோ, அவரையே பன்னீருக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டுள்ளார் சசிகலா” என, துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ரீ என்ட்ரி ஆனதற்கு முன்னுரை தருகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையமாக சசிகலா குடும்பம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால் கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான தினகரனை 1999 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. தேர்தலில் வென்று எம்.பி ஆன தினகரனுக்கு அதன்பிறகு அசுர வளர்ச்சிதான். ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் ஆனார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும், ராஜ்ய சபா எம்.பி ஆக்கப்பட்டார். கட்சியின் பொருளாளர் பதவியில் அமர்ந்து உச்சத்துக்குச் சென்றார். இந்த செல்வாக்கைப் பார்த்துவிட்டு, தினகரன் பக்கம் கட்சியினர் திரண்டார்கள். தமிழகம் முழுவதும் இவர் கைகாட்டும் நபர்களே பதவியைப் பெற முடிந்தது.

தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்!

ஆனால், இது எல்லாம் 2009-ம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதியோடு மோதியதால் கார்டனில் இருந்து இவர் விரட்டியடிக்கப்பட்டார். பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். ராஜ்ய சபா எம்.பி. பதவி முடிவுக்கு வந்தது.

அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டதால், பெங்களூரில் கட்டுமானத் தொழிலில் கவனம் செலுத்தியவர், கட்சியினரைச் சந்திப்பதைக்கூட தவிர்த்து வந்தார். 2011-ம் ஆண்டு டிசம்பரில் சசிகலாவை ஜெயலலிதா கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டியபோது தினகரனையும் சேர்த்தே நீக்கினார். ஜெயலலிதா மறையும் வரையில் கட்சிக்குள் வரமுடியாத தினகரன், ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டபோது வந்து நின்றார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் கார்டனுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட தினகரன், அதன்பிறகு சசிகலாவுடன் வலம் வந்தார். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சியைக் கட்டுப்படுத்த தினகரனை அருகில் வைத்துக்கொள்ள விரும்பினார் சசிகலா. தினகரனும் தன் அரசியல் விளையாட்டை ஆரம்பித்திருந்தார். தினகரன் கை ஓங்குவதை அறிந்த  அ.தி.மு.க-வினர், அவரை வட்டமிட்டார்கள். அதில் சிலருக்குக் கைமேல் பலன் கிடைத்தது. சசிகலாவினால் அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பலர், தினகரனின் ஆதரவாளர்கள்.

இடையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரான சசிகலா, ஜெயிலுக்குப் போவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பு தினகரனை கட்சியில் சேர்த்ததோடு, ஒரு மணி நேரத்தில் துணைப் பொதுச்செயலாளராக நியமித்து, கட்சியை அடுத்து வழிநடத்தும் பொறுப்புக்கும் கைகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

கார்டனிலும் கட்சியிலும் தினகரனும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன் டாக்டர் வெங்டேஷும் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்த்த சசிகலாவின் மற்ற உறவுகள், “மாமனும், மச்சினனும் மட்டும்தான் உங்களுக்கு வேண்டுமா?” என சசிகலாவிடம் புகைந்தனர்.

ஆனாலும், அவர்கள்தான் போயஸ் கார்டனில் எல்லாமுமாக இருக்கிறார்கள் என்பது உண்மை. பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வெங்கடேஷ் முரட்டுத்தனமாகக் கேட்டபோது, தினகரன் தன் வழக்கமான பேச்சால் பன்னீரிடம் கையெழுத்து வாங்கினாராம். பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியபோது, அவர் பக்கம் எம்.எல்.ஏ-க்கள் கரைசேர விடாமல் தடுப்பணை அமைத்தது தினகரன்தான். கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் விஜயபாஸ்கரையும், ராஜேந்திர பாலாஜியையும் அனுப்ப முடிவானதும், கட்சியினர் சிலர், “மூத்த நிர்வாகிகளை அனுப்பலாமே” என்றார்கள். உடனே தினகரன், “இந்தப் போட்டி, பொறாமையை விடுங்க’’ எனச் சொல்லியிருக்கிறார்.

சசிகலா குடும்பத்தினர் கட்சியைக் கைப்பற்றியதில் கீழ்மட்டத் தொண்டர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ‘பன்னீர் பிரிந்து போனதற்குக் காரணமே தினகரனும் வெங்கடேஷும்தான்’ என அவர்கள் புலம்புகிறார்கள். இதில் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் ஒத்துப்போகிறார். ‘‘நம் கண்ணை நாமே குத்திக்கொள்வதுபோல இருக்கிறது’’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் தினகரன், வெங்கடேஷ் இருவரிடமும்தான் முதலில் ஆலோசனை நடத்தினார் சசிகலா. தினகரனை முதல்வராக்கலாம் எனப் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், அவரின் குடியுரிமை விவகாரம் தடுத்தது. கடைசியில் ‘‘முதல்வர் பதவியை மூத்த அமைச்சருக்குக் கொடுப்போம். கட்சிப் பதவியை நம் குடும்பம் வைத்திருக்கட்டும். ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்’’ எனப் பேசி முடிவானதாம். “கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றால் தினகரனுக்குப் பொறுப்பு கொடுங்கள்” என சசிகலாவிடம் கட்சி சீனியர்கள் சிலரே சொன்னார்களாம். அதன் பிறகுதான் தினகரனுக்கு அதிகாரமிக்கத் துணைப் பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டது.

‘‘குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்’’ என நடராசன் சொன்னார். அது உண்மைதான்!

- அ.சையது அபுதாஹிர்
படம்: ஆ.முத்துக்குமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குற்றப் பின்னணி தினகரன்!

காபிபோசா மற்றும் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் ஏற்கெனவே சிறை சென்றவர் தினகரன். சமீபத்தில் அவருக்கு அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இன்னும் இரண்டு அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.