Published:Updated:

``மாநில சுயாட்சி”!- ஆளுநரின் அதிரடியும்... தி.மு.கவின் அடிநாதமும்

``மாநில சுயாட்சி”!- ஆளுநரின் அதிரடியும்... தி.மு.கவின் அடிநாதமும்
``மாநில சுயாட்சி”!- ஆளுநரின் அதிரடியும்... தி.மு.கவின் அடிநாதமும்

தி.மு.க தொடங்கப்பட்ட காலத்தில், அதன் அடிநாதமாக விளங்கியது மாநில சுயாட்சி. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தி.மு.க ஆட்சிக்கு வந்ததில், `மாநில சுயாட்சி' என்ற தி.மு.க-வின் கோஷத்துக்கும் பெரும்பங்கு உண்டு. ஆனால், அந்த மாநில சுயாட்சி கொள்கையை கருணாநிதி அவ்வப்போது ஞாபகப்படுத்தி வந்தாலும், அதைக் கொண்டுவரும் எந்தச் செயலாக்கத் திட்டமும் தி.மு.க-விடம் இல்லாமல் இருந்தது. அதற்குக் காரணம் தி.மு.க-வுக்கு அந்தளவுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை.

ஆனால், இப்போது ஆளுநர் பன்வாரிலால் தமிழக ஆட்சியை மறைமுகமாக ஆட்டுவிக்கும் சக்தியாக மாறிவரும் சூழ்நிலையில், மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளது தி.மு.க. அந்தக் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், `மாநில சுயாட்சி எங்கள் உரிமை' என்று உரக்கக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிக்காகச் சென்ற ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட முயன்ற தி.மு.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதைக் கண்டித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. `ஆளுநரின் ஆய்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு தி.மு.க உட்பட பல்வேறு கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சட்டசபையில் திங்கள் அன்று இதுகுறித்துப் பேசுவதற்காக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அனுமதி கோரினார். ஆனால், அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். அதனால், தி.மு.க-வினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``ஆளுநர் நேற்றைக்கு அவருடைய செயலாளர் மூலமாக பத்திரிகைகளுக்கு ராஜ்பவனிலிருந்து செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறார். அதிலே, `ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகளை யாராவது தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் ஆய்வு நடத்துவதைத் தடுத்தால் 7 ஆண்டு காலம் சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய வகையில் வழக்கு போடப்படும்' என்றெல்லாம் மிரட்டல் தொனியிலே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏழாண்டு அல்ல... ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமென்று சொன்னால்கூட மாநில சுயாட்சி கொள்கைக்காக தி.மு.க-வினர் தயாராக இருக்கின்றனர். அண்ணா, கருணாநிதி வகுத்துத் தந்திருக்கக்கூடிய மாநில சுயாட்சி கொள்கை வெற்றி பெற, அதை நிலை நிறுத்திட எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது” என்றார். 

மேலும், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், `திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த நேரத்தில், தமிழ்நாடுதான் மாநில சுயாட்சிக்காக முதன்முதலில் இந்தியாவிலேயே தீர்மானம் கொண்டு வந்தது. கருணாநிதி, முதலமைச்சராக இருந்த நேரத்திலேதான், மத்திய-மாநில உறவுகள் குறித்து முதன் முதலில் நிபுணர் குழு அமைத்து, விரிவான அறிக்கை ஒன்று அவையிலே வெளியிடப்பட்டது. இந்த ஆட்சிக்கு முன்பு வரை மாநிலத்தில் பொறுப்பில் இருந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி, இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த நேரத்திலும் அரசினுடைய உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுத்ததாக வரலாறு இல்லை. 

இதே சட்டமன்றத்தில், விதிகளையே சஸ்பெண்ட் செய்து மாநில ஆளுநர் பற்றி விவாதம் நடத்தி, `ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அவைக்குறிப்பிலே தெளிவாக இருக்கிறது என்பதையெல்லாம் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டியும் சபாநாயகர், ஆளுநரின் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்க அனுமதியளிக்காதது கண்டிக்கத்தக்கது' என்று குறிப்பிட்டிருந்தார். 

மாநிலத்தில் சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. ஆளுநரின் அதிகாரத்துக்காக இப்போது இந்தக் கோரிக்கையை தி.மு.க வலுவாக முன்வைத்திருந்தாலும், இதற்கு முன்பு மத்திய அரசின் அதிகாரக் குவியலைத் தடுப்பதற்காகவே இந்தக் கோரி்க்கையை முன்வைத்துள்ளது தி.மு.க. 

விடுதலைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன் பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒருதேசமாகப் பாவித்து அதிகாரத்தை மத்திய அரசின் கரங்களிலே வைத்துக்கொண்டது. குறிப்பாக மாநில அரசுகளை நினைத்த நேரத்தில் ஆட்டுவிக்க வசதியாக 356 வது பிரிவை காங்கிரஸ் கட்சி லாகவமாகக் கையாண்டது. இது காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் அப்போது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட்கள் ஆண்டுவந்த கேரளா மாநிலத்தில் 356 வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியை அகற்றியது நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி. அப்போதே மாநில சுயாட்சியின் கோரிக்கைக்கு வலு சேர ஆரம்பித்தது. 

தி.மு.க ஆட்சிக்கு வந்த 1967 ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், முக்கிய அம்சமாக மாநில சுயாட்சி என்ற திட்டத்தை அண்ணா அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த அண்ணா, சட்டசபையில் பேசும் போது ``மத்திய – மாநில அரசுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றிய மறு சிந்தனை தேவை என்பதை, இப்பேரவை அறியும். இதுவரை வரி பங்கீடு, அதிகார வரம்பு, திட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிலே கிடைத்துள்ள அனுபவம், கசப்பு நிரம்பியதாக இருப்பதை எவரும் மறுத்திட இயலாது. இந்தக் கசப்பு நீங்கிடவும், கனிவு கிடைத்திடவுமான முறையில் தொடர்புகள் அமைந்திட வழி காண்பது உடனடிப் பிரச்னையாகியிருக்கிறது.” என்று பேசினார். 

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி, மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய ராஜமன்னார் குழுவை நியமித்தார். அந்தக் குழு மூன்று ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு வழங்கிய அறிக்கையில், `மத்திய – மாநில – பொது அதிகாரப் பட்டியலில் மாற்றங்கள் வேண்டும். மாநிலங்களுக்கிடையே கவுன்சில் அமைக்க வேண்டும். நிதிப் பகிர்வு, திட்ட கமிஷன் சுயமான அமைப்புகளாக இருக்க வேண்டும். ஆளுநர் பதவி ஒழிப்பு, பிரிவு 356 நீக்கம்' எனப் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தது. 

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நிஜலிங்கப்பா, என்.டி.ராமராவ், காஷ்மீரில் ஃபருக் அப்துல்லா உள்ளிட்டவர்கள் மாநில சுயாட்சி குறித்து தனித்தனியாக மாநாடுகளை நடத்தினார்கள். குறிப்பாக ஃபருக் அப்துல்லா, ஸ்ரீநகரில் நடத்திய மாநாட்டின் முடிவில் `ஸ்ரீநகர் பிரகடனம்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மத்திய அரசின் கையில் போக்குவரத்து, நாணயம் அச்சிடுதல், பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தகவல் தொடர்புத் துறை போன்றவற்றை மட்டும் வைத்துக்கொண்டு பிற துறைகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு குறித்து எழுந்த தொடர் சர்ச்சைகளால் இந்திரா காந்தியின் ஆட்சியில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனும் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதில் பல பரிந்துரைகள் மாநில அரசின் தன்னாட்சி குறித்த திட்டங்களாகவே இருந்தன. ஆனால், இத்தனை ஆண்டுகள் மாநாடுகள், திட்டங்கள், அறிக்கைகள் என அனைத்தும் செயல்படுத்தப்பட்டும் மாநில சுயாட்சி என்ற எண்ணம் இதுவரை ஈடேறவில்லை. 

மத்திய அரசில் தி.மு.க  பலமாக இருந்தபோதும்கூட, சுயாட்சி குறித்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தும் எந்த முயற்சியையும் கருணாநிதி எடுக்கவில்லை. `மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்று அண்ணா சொன்ன வார்த்தையை மட்டும் தி.மு.க இப்போதும் பயன்படுத்தி வருகிறது. ஆனால், அந்தச் சொல்லை செயலூட்டமாக்க தி.மு.க எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. 

இந்த நிலையில், கருணாநிதி அரசியல் வாரிசாக அறியப்படுகின்ற ஸ்டாலின், இப்போது ஆளுநரின் அதிரடியால் மாநில சுயாட்சி கோரிக்கையை மீண்டும் கையில் எடுத்துள்ளார். ஆனால், அவருடைய தந்தை இந்தக் கொள்கையை ஆரம்பத்தில் தூக்கிப் பிடித்ததும், அதன்பிறகு படிப்படியாக அதை நீர்த்துப்போகச் செய்ததும் ஸ்டாலினுக்குத் தெரியாமல் இருக்காது. இந்த மாநில சுயாட்சி கோரிக்கைக்காக அப்போது போராடிய என்.டி.ராமராவ், எஸ்.ஆர் பொம்மை, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ஆட்சி 356- பிரிவினால்தான் கலைக்கப்பட்டது. ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதால், ஆட்சியைக் கவிழ்க்கிறார். இதற்காகவே நாங்கள் மாநில சுயாட்சியை வேண்டுகிறோம் என்று குரல் கொடுத்தார்கள். இப்போது அதே ஆளுநர் விவகாரத்தை வைத்துக் கருணாநிதியின் வாரிசான ஸ்டாலின், மாநில சுயாட்சி கோரிக்கையை முன்வைக்கிறார். நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஸ்டாலின் இந்தக் கோரிக்கைக்கு வலு சேர்ப்பாரா என்றக் கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது!