Published:Updated:

நானே வழக்கு தொடருவேன்..! ஆளுநர் கிரண்பேடியை எச்சரித்த நாராயணசாமி

நானே வழக்கு தொடருவேன்..! ஆளுநர் கிரண்பேடியை எச்சரித்த நாராயணசாமி
நானே வழக்கு தொடருவேன்..! ஆளுநர் கிரண்பேடியை எச்சரித்த நாராயணசாமி

``புதுச்சேரியின் குடிமகனாக நானே ஆளுநர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவேன்” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருக்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்குச் செல்லும்போது தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் தங்கள் எதிர்ப்பைக் கடுமையாக பதிவு செய்து வருகின்றன. மாநிலத்தில் கவர்னர் ஆய்வு நடத்துவதற்கு அதிகாரமில்லை என தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கவர்னரின் ஆய்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி இருக்கிறார். நிலமை இப்படி இருக்க கவர்னர் பணி செய்வதை யாராவது தடுத்தால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி, கவர்னர் தன் அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது அவருக்கு இடையூறு விளைவித்தால் மட்டுமே குற்றமாக கருதப்படும். மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அவர் ஆய்வுக்குச் செல்லும்போது, அரசியல் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்புடையதாக இல்லையெனில் அவர்கள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு.

இது எந்தவித குற்றத்திலும் அடங்காது. இந்த விஷயம் தெரியாமலும், புரிந்துகொள்ளாமலும் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அறிக்கையை விட்டிருக்கிறார்கள். அதை அப்படியே காப்பியடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கிரண்பேடி, அவரின் பணிக்கு இடையூறு செய்தால் அதற்கும் 7 ஆண்டு காலங்கள் சிறைத் தண்டனை எனக்கூறியுள்ளார். மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றும்போது ஆளுநர் என்ற பெயரில் முட்டுக்கட்டைகளைப் போடக்கூடாது. ஏற்கெனவே இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் கிரண்பேடிக்கு எதிராக முதல்வரின் செயலர் லட்சுமி நாராயணன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியின் குடிமகனாக நானே வழக்கு தொடருவேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார்.